June 25, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயமும் பிராந்திய அரசியலும்!

நாடுகளுக்கிடையிலான உறவு சர்வதேச உறவாக கருதப்பட்டாலும் அதற்குள் நிகழும் அரசியல் விடயங்கள் சர்வதேச அரசியலாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. உலக ஒழுங்கானது அரசியல்- பொருளாதார-இராணுவ காரணிகளால் மாற்றம் அடைந்துவருகிறது. மீண்டும் ஒரு உலக ஒழுங்குக்கு தயாராகும் நாடுகளும் அவற்றின் அணிகளும் புதிய கூட்டுக்களையும் உறவுகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஹென்றிகீசிங்கரது சீனப்பயணம் ஒன்றாகவும் மறுபக்கத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 7இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்திய விஜயம் இன்னென்றாகவும் கெர்ளளப்பட வேண்டும். இத்தகைய இரு பயணங்களும் உலகளாவிய அரசியலில் அதிக முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது. ஹென்றிகீசிங்கரது இரகசிய பயணம் தந்த விளைவை இப்பகுதி ஏற்கனவே விவாதித்துள்ளது. இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் விளைவை தேடுவதாக அமையவுள்ளது.

அரசியல் பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படும் அடம்ஸ் சிமித்தின் 1776இல் Inquiry into the Nature and causes of the Wealth of Nation என்ற அவரது நூலில் உழைப்புத்தான் செல்வத்தின ஊற்று எனவும் விலைப் பொறிமுறையே சந்தையையும் வர்த்தகத்தையும் வழிநடத்துகின்றது எனவும் விவாதித்தார். அத்தகைய சிந்தனையே இன்றுவரை உலப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக விளங்கியது. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது அரையாண்டில் தேசிய பாதுகாப்பும் (National Defense) தேசத்தின் செல்வமாக மாறிவிட்டது. இன்றைய உலகத்தின் மிகப் பிரதான சக்தியாக தேசிய பாதுகாப்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கான அணிகளும் புதிய அமைப்புகளும் விண்வெளி கட்டமைப்புக்களும் தேசங்களின் செல்வத்தை பாதுகாக்கும் அடிப்படைகளாக விளங்குகின்றன. அதற்கான உத்தியை முதன்மைப்படுத்தும் நோக்கிலேயே வல்லரசுகளும் அவற்றின் இராணுவ கூட்டுக்களும் கட்டமைக்கப்படுகிறது. தேசத்தின செல்வமாக
வாணிபவாதம் கருதிய வர்த்தகமும் நிலமும் என்ற கருத்தை அடம்சிமித் விலைப்பொறிமுறைக்கு மாற்றினார். அதனை கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் இலாபம் எனும் பொறிமுறைக்குள்ளால் உயிருள்ள, உயிரற்ற உழைப்பின் விளைவாக எழுந்த செல்வம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தினார். நிதி முதலீடுகளாலும், மூலதனமும் உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. அத்தகைய முதலீடுகளைப் பாதுகாப்பதில் கவனம் கொள்ளும் அரசுகள் தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்துகின்றது. அதனையே அமெரிக்கா இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அரண்களை கட்டமைக்க முயலுகிறது. தனது முதலீடுகளையும் நிதி மூலங்களையும் பாதுகாக்கும் நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள முனைகிறது. அதன் ஓர் எத்தனமாகவே இந்தியாவுடனான உறவை அமெரிக்கா பலப்படுத்த முனைகிறது. சீனாவுடன் எடுத்த முயற்சி முழுமையான வெற்றியை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றே தோன்றுகிறது. அதனடிப்படையில் இந்தியாவுடனான அமெரிக்க உறவு பிராந்திய தளத்தில் மட்டுமல்ல உலகளாவிய தளத்திலும் அதிக மாற்றத்தை ஏற்படுத்த விளையுமா என்ற கேள்வி யதார்தமாகவே உள்ளது. அதனை விரிவாக நோக்குவோம்.

ஒன்று, இந்தியாவினது ரஷ்சியா தொடர்பான கொள்கையை கேள்விக்கு உட்படுத்தாது அமெரிக்கா நகர்கிறதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் சில முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்ட போதும் இந்தியப் பிரதமரது அமெரிக்க விஜயத்திற்கு பின்னர் அதற்கான விவாதங்களை அமெரிக்கத் தரப்பு கைவிட்டுள்ளதாகவே உணரத் தோன்றுகிறது. அதனடிப்படையிலேயே அமெரிக்காவுக்கு இந்தியாவின் இருப்பும் உறவும் அவசியமானதாக உள்ளது. இந்தியா முழுமையாக பாதுகாப்பதன் வாயிலாக பொருளாதார அடிப்படைகளை பேணமுடியுமென அமெரிக்கா கருதுகிறது. இந்திய-அமெரிக்கப் பொருளாதார உறவை மேலும் பலப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தற்போது எதிர் கொண்டுள்ள நெருக்கடியை கடக்க முயலுகிறது. இந்தியாவின் சந்தைகளைக் கடந்து இந்தியாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள முதலீடுகளை பாதுகாப்பதறட்கும் மேலும் முதலீகளை அதிகரிக்கவும் எடுக்கும் முயற்சியாகவே அமெரிக்காவின் நகர்வு உள்ளது.

இரண்டு, இந்தியாவின் ஆயுத இறக்குமதிக்கான தெரிவிலும் மாற்றம் செய்ய அமெரிக்கா முயலுகிறது. ஏறக்குறைய இந்தியாவின் ஆயுததளபாட இறக்குமதி ரஷ;சியாவிடமிருந்து மட்டும் பிரான்ஸ்ஸிலிருந்தும் மேற்கொள்ளப்படுகின்ற நிலையை மாற்றுவதற்கு அமெரிக்கா விரும்புவதாகவே தெரிகிறது. அதற்கான உரையாடல்களை அண்மையில் அதிகரித்துள்ளது. இந்திய அமெரிக்க வெளியுறவு மட்டத்தில் இது சார்ந்து அதிக உரையாடல்களை முதன்மைப்படுத்தியுள்ளது. ரஷ்சியாவிடமிருந்து 45 சதவீதமான ஆயுதளபாடங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடமிருந்து மீதியை கொள்ளவனவு செய்கிறது. இதில் 29 சதவீத ஆயுததளபாடங்களை பிரான்ஸ்ஸிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் மாற்றத்தை எட்டுவதற்கான நகர்வுகளை அமெரிக்கா அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகிறது.

மூன்று, சீனாவின் இந்தியாவுடனான எல்லை முரண்பாட்டை இராணுவ ரீதியில் கையாளவே அமெரிக்கா அதிகம் விரும்புகிறது. அதற்கு அமைவாகவே இந்தியாவுடனான உற்வை பாதுகாப்பதிலும் ரஷ்சிய-இந்திய உறவைத் தாண்டி அமெரிக்கா இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள முனைகிறது. அத்தகைய உத்திக்கு பின்னால் இருநாட்டினது வளர்ச்சியையும் முடிபுக்கு கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகவுள்ளது. மீளவும் அமெரிக்கா இலக்கம் ஒன்றை நோக்கி நகர முடியுமென கருதுகிறது. உலகளாவிய நிலையில் இலக்கம் ஒன்றினைத் தீர்மானிப்பது பொருளாதாரம் என்பது முடிபாகும். அதனடிப்படையில் 2079இல் சீனா, இந்தியா என்பனவே முதல் இரண்டு நிலையையும் எட்டும் உலகப் பொருளாதாரப் போக்கு நகர்வதாக சர்வதேச நாணயநிதியம் அறிக்கையிட்டுள்ளது. அதன் வடிவத்தை மாற்றுவதற்கான உத்திகளைக் கொண்டதாகவே அமெரிக்காவின் நகர்வும் திட்டமிடலும் அமைந்துள்ளது. இதனாலேயே முரண்பாடுகளைக் கடந்து அமெரிக்கா இந்தியாவுடன் நட்புறவை பேணமுனைகிறது. முதலீட்டையும் பொருளாதார வாய்ப்புக்களையும் தக்கவைப்பதென்பது இராணுவவாதத்தை நிலைநிறுத்துவதாகவே உள்ளது. அதனை நோக்கியே அமெரிக்காவின் ஜனாதிபதியின் இந்தியப் பயணம் அமையவுள்ளது.

நான்கு, ஜி-20 மகாநாட்டின் தலைமையை இந்தியாவுக்கு கிடைக்கும் போது அதனை மேற்கு நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இந்தியாவின் வாய்ப்புக்களும் மேற்குலகத்தின் வாய்ப்புக்களும் அதிகம் உரையாடப்பட்டது. இந்தியா திறந்த நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுடன் உறவை முதன்மைப்படுத்திக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியில் பிராந்திய,சர்வதேச பாதுகாப்பினை தக்கவைக்க முடியுமென அமெரிக்கா சார்ந்த மேற்குலகம் கருதுகிறது. பிரான்ஸ் அமெரிக்க உத்தியிலிருந்து விலகிக் கொண்டாலும் மேற்குலக நட்புக்களால் கட்டமைக்கப்பட்ட புவிசார் அரசியலைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும்.

ஐந்து, இந்தியாவை பொறுத்தவரை சீனாவுடனான உறவு அமெரிக்காவை கடந்து அமைதியான வழிமுறைக்கூடான பேணப்பட வேண்டுமென கருதுகிறது. தனது முழுமையான பொருளாதார இராணுவ வளர்ச்சியை அடுத்து சீனாவுடனான மோதலை எதிர்கொள்வதற்கு இந்தியா திட்டமிடுகிறது. அவ்வாறே அயல்நாடான இந்தியா சீனாவுக்கு அடுத்த நிலையில் எதிர்காலத்தில் வலுவடைகின்ற சூழலை அடைந்தாலும் மேற்குலகுடனான முரண்பாட்டையும் மேற்குலகத்தின் முழுமையான தோல்வியையும் உத்தரவாதப்படுத்திய பின்னரே இந்தியாவுடனான முரண்பாட்டை எதிர்கொள்ளலாமென சீனா கருதுகிறது. இதுவே அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய அடிப்படையாகும். சீனா, இந்தியா, ரஷ்சியா என்ற கீழைத்தேய அணி இலகுவில் இந்தியாவை கையாள்வதன் மூலம் தோற்கடித்து விடலாமென அமெரிக்கா கருதுகின்றது. அதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லையென்றே குறிப்பிட வேண்டும்.

எனவே, மேற்குக்கும்-கிழக்குக்கும் மத்திய அதிகாரம் கொண்ட சக்தியாக இந்தியா விளங்குகின்றது. இருதரப்பையும் சமதூரத்தில் நிறுத்த முயலும் இந்தியாவை ஜனாதிபதி பைடன் அமெரிக்காவுடனும் மேற்குடனும் பலமான உறவுக்குள் நகர்த்துவாரா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. பிராந்திய நலன், சர்வதேச நலன் என்ற அடிப்படையில் இந்தியாவின் இயல்பான நடுநிலைத்தன்மை அமெரிக்காவிற்கு நெருக்கடியானதாகவே அமைய வாய்ப்புள்ளது.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)