அரசியல் கட்டுரைகள்

கொழும்பில் அமையவுள்ள இந்துசமுத்திர பாதுகாப்பு நிலையம் இலங்கைத் தீவின் பாதுகாப்புக்கானதே?

தென் இலங்கை அரசியலின் இருப்பென்பது அதன் தந்திரோபாயத்தின் நகர்வுகளிலேயே உள்ளதாக இப்பகுதியில் பலதடவை வலியுறுத்தியுள்ளது. அத்தகைய தந்திரத்தின் மூலமே இலங்கைத்தீவின் அரசியல் செயல்பூர்வமானதாக நகர்கிறது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் நெருக்கடிகளை எதிர்கொள்வதும் அதனை வெற்றி கொள்ள முனைவதும் வழமையான அரசியலாக இயங்குகிறது. அத்தகைய போக்கில் ஈழத்தமிழர் மட்டுமல்ல இந்தியாவும் ஏனைய வல்லரசுகளும் தென் இலங்கை ஆட்சியாளரின் நலன்களுக்குள் அகப்பட்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவ்வகையான நடவடிக்கையில் ஒன்றாகவே இந்துசமுத்திர பிராந்தியத்திற்கான பாதுகாப்பு தலைமையகத்தினை இலங்கையில் நிறுவுவதற்கான தீர்மானம் ஒன்றினை இந்துசமுத்திர பிராந்திய நாடுகள் மொறீசியஸ்ல் கூடிய மகாநாட்டில் முன்னெடுத்துள்ளன. இக்கட்டுரை தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்துசமுத்திர பிராந்திய அரசியலில் ஈடுபடுவதன் மூலம் உள்நாட்டரசியலை வெற்றி கொள்ளும் உபாயத்தினை புரிந்து கொள்ள முயலுகிறது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா முன்வைத்த பிரேரணையை மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் அங்கீகரித்தன. இந்தியா ஆபிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்புதலளித்தன. அதன் பிரகாரம் இந்துசமுத்திர நாடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையை மையமாகக் கொண்டு செயல்பட இந்துசமுத்திர நாடுகள் தீர்மானித்துள்ளன. இத்தகைய இந்துசமுத்திர பாதுகாப்புத் தலைமையகம் ஜனவரி மாதம் 2024இல் பண்டரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நிறுவப்பட்டு பின்னர் கொழும்பில் நிரந்தர கட்டிடத் தொகுதியில் நிலையம் தனது பணிகளை மேற்கொள்ள நிறுவப்படும் எனவும் முடிபுகள் எட்டப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமல்ல அதன் அண்டை நாடுகளுக்கு மிக முக்கியமான உயிர்நாடி என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் (19.12.2023) தெரிவித்துள்ளார். இலங்கை சமீபத்தில் எதிர் கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது எனவும் தெரிவித்தார். இது அயல் நாடுகளுக்கு சிறந்த செய்தியை வெளிப்படுத்துகின்றது என்றார்.

இந்த இரு செய்திகளும் இந்துசமுத்திர பிராந்தியம்சார் கருத்துநிலை அரசியலாகவே உள்ளது. இந்துசமுத்திரமே இலங்கையின் அரசியல் பலமாகும். இந்துசமுத்திரத்தை மையப்படுத்தியே இலங்கையின் இருப்பு மட்டுமல்ல உலகளாவிய வல்லரசு நாடுகளது கவனத்தை குவித்துவைத்துள்ளது. தவிர்க்க முடியாது இலங்கை அரசியலோடு உலகளாவிய அரசியல் கலக்க வேண்டிய நிலையிலுள்ளது. இதுவே இலங்கை ஆட்சியாளருக்கான பலமாகும். அது பொருளாதார நெருக்கடியாயினும் அரசியல் நெருக்கடியாயினும் உலக நாடுகள் இலங்கையின் ஆட்சியாளர்களை பாதுகாப்பதில் கவனம் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. 1971ஆம் ஆண்டு தென் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆயுதப் போராட்டமும் 2009இல் வடக்கு கிழக்கில் நடைபெற்று முடிந்த ஆயுதப் போராட்டமும் உலக நாடுகளின் ஆதரவுடனேயே சாத்தியமானது. அதற்கான அடிப்படை இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கைத் தீவு அமைந்திருந்தமையே காரணமாகும். அதன் நீட்சியாகவே இந்துசமுத்திர பாதுகாப்பு நிலையம் கொழும்பில் திறப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தென் இலங்கை ஆட்சிக்கு கிடைக்கவுள்ள சாதகமான நிலைகளை விரிவாக நோக்குவது பொருத்தமானதாக அமையும்.

ஒன்று, இந்துசமுத்திர நாடுகளை இலங்கை நோக்கி ஈர்ப்பதில் இந்துசமுத்திர பாதுகாப்பு நிலையம் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உதவப்போகிறது. காரணம் பொருளாதார நெருக்கடியைக் கடந்து அரசியல் ரீதியான நெருக்கடியை இலங்கைத் தீவு எப்போதும் எதிர்நோக்குகிறது. உள்நாட்டு அரசியலைவிட பிராந்திய சர்வதேச அரசியல் சக்திகளின் தலையீட்டை எதிர்கொள்ளும் நிலை தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதனை தவிர்ப்பதென்பது கடினமான இலக்காகவே உள்ளது. தவிர்க்க முடியாத அமைவிடத்தில் இலங்கைத் தீவு காணப்படுகிறது. எப்போதும் இலங்கை மீதான அரசியலில் உலகளாவிய சக்திகள் கவனம் கொள்ள முடியும் என்ற நிலையைப் புரிந்துள்ள தென் இலங்கை அதனைத் தவிர்ப்பதற்கே முனைகிறது. அதற்கான கூட்டுக்களையும் அணிகளையும் பலப்படுத்துவதுடன் அவற்றின் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைத் தீவின் இருப்பினை பாதுகாக்க முனைகிறதாகவே தெரிகிறது.

இரண்டு, இந்தியாவின் பலமான ஆட்சி சாத்தியமாகும் சூழல் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே தென்படுகிறது. அத்தகைய ஆட்சியின் இருப்பு சீனாவுடன் இலங்கைத் தீவு கொண்டுள்ள நெருக்கத்தினால் அதிக முரண்பாட்டினை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதுவும் இந்திய தேர்தலை அடுத்து அமையவுள்ள பலமான ஆட்சி நிச்சயமாக நெருக்கடியை இலங்கைத் தீவுக்கு கொடுக்க வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது. அதனை சரிவர அடையாளம் கண்டுள்ள தென் இலங்கை ஆட்சியாளர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. அதிலும் இந்தியா இலங்கையின் வடக்கு கிழக்குடன் கொண்டுள்ள நெருக்கம் புதிய திசையை நோக்கி செயல்பட முனைவதாகவே தெரிகிறது. அதனை வெற்றி கொள்ள இந்துசமுத்திர பாதுகாப்பு நிலையம் உதவக் கூடியதாக தெரிகிறது. இது இந்துசமுத்திரத்தை பாதுகாக்கிறதோ இல்லையோ இலங்கைத் தீவை இந்தியாவின் அணுகுமுறைகளிலிருந்து பாதுகாக்க உதவக் கூடியதே. ஆனால் இதில் ஒரு குழப்பம் ஏற்படலாம். அதாவது இந்தியாவும் அத்தகைய பாதுகாப்பு நிலையம் கொழும்பில் அமைய முன்மொழிந்துள்ள நாடுகளில் உள்ளடக்குகின்றது என்பதாகும். இதனை ஆபிரிக்காவிலோ அல்லது பிற ஆசியாவிலோ நிறுவ முனைவதற்கான உரையாடல் எழுவதற்கு முன்பே இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் முன்மொழிவை வெளிப்படுதிவிட்டார். அதனை இந்தியா எதிர்க்க முடியாது உடன்பாடு எட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாது இதனால் இந்தியாவுக்கு இலாபகரமான பகுதியும் ஒன்றுள்ளது எனவும் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் கருதுகின்றனர். காரணம் இலங்கைத் தீவில் சீனாவின் பிரசன்னத்தை குறைந்தபட்சம் கண்காணிக்க முடியுமெனவும் இந்து சமுத்திரத்தை பாதுகாக்கும் முனைப்பில் இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து பயணிக்க முடியுமெனவும் இந்தியத் தரப்பு கருதுகிறது. இது இலங்கைத் தீவின் மீதான நெருக்கத்தை சாத்தியப்படுத்த முடியுமென இந்தியா கணிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவை முழுமையாக செல்வாக்குச் செலுத்துவதே நோக்கமாகும். அத்தகைய முனைப்புடனேயே கடந்த எழுபது ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்திராகாந்தி கூட முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று தோற்றுப் போனதுடன் வடக்கு கிழக்கு மீதான ஈடுபாட்டை அதிகரிப்பதன் மூலம் தென் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த முடியுமென கணிப்பிட்டார். ஆனால் நடைமுறை தலைகீழானது. அத்தகைய கொள்கையே அவரது இருப்புக்கு நெருக்கடியாக அமைந்தது. அதுவே ராஜீவ்காந்தியின் அரசியலிலும் நிகழ்ந்தது. இந்தியாவின் கணிப்பீடுகள் எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் கடந்து கொண்டு செயல்படுகின்றனர். இது இலங்கை ஆட்சியாளர்களின் உபாயமாகவே தெரிகிறது.

எனவே இந்துசமுத்திர அரசியல் சுழிக்குள் வீழ்ந்து போயுள்ள அரசியல் தலைமைகளின் முன்பே அதனை வெற்றிகரமாக நகர்த்தும் தென் இலங்கை ஆட்சியாளர்களையும் கண்டு கொள்ள முடிகிறது. அதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கே அத்தகைய தந்திரம் வலிமையாக உள்ளது. அதனையே மீண்டும் ஒருதடவை நிறுவியுள்ளனர். மகிந்த ராஜபக்ஷக்களும் விடுதலைப் புலிகளும் இந்துசமுத்திர அரசியல் அலைக்குள் வீழ்ந்து மூழ்கிப்போக ரணில்விக்கிரமசிங்ஹா அதற்குள் தனது அரசியல் சாதனையை வெற்றிகரமாக அடைந்துவருகிறார். அத்தகைய முனைப்பில் ஒன்றாகவே இந்துசமுத்திர பாதுகாப்பு நிலையம் கொழும்பில் அமைவதற்கான முன்மொழிவாகும். இது இயற்கை சீற்றத்திலிருந்தும் அழிவுகளிலிருந்தும் இந்துசமுத்திரத்தை பாதுகாப்பதைக் கடந்து இலங்கைத்தீவின் அரசியலைப் பாதுகாப்பதாகவே தெரிகிறது. இதுவே ஈழத்தமிழர்களின் தோல்வியுமாகும். அதாவது இந்துசமுத்திர அரசியலைக் கண்டுகொள்ளாத ஈழத்தமிழரது அரசியல் அழிவையே தமிழ் மக்களுக்கு எச்சமாக்கியுள்ளது. இதுவே தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் ஈழத்தமிழர் அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)