அரசியல் கட்டுரைகள்

இலங்கை -இந்திய உறவு பிராந்தியப் பாதுகாப்புச் சார்ந்து எச்சரிக்கப்படுகிறதா?

இலங்கைத் தீவின் அரசியல் இருப்புக்கான வாய்ப்புக்களை கட்டமைப்பதிலும் உருவாக்குவதிலும் தென் இலங்கை ஆட்சியாளர்களிடம் தனித்துவமான ஒற்றுமை உள்ளதென இப்பகுதி பலதடவை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரவர்க்கம், மகாசங்கங்கள், புலமையாளர்கள் மற்றும் ஆளும் எதிர் கட்சியினர் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக அரசை பாதுகாக்கும் செயல்பாட்டில் இயங்குகின்றனர். அத்தகைய நகர்வில் ஒன்றாகவே இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான குழுவொன்றின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பர் பாத்பைண்டர் அறக்கட்டளையின் இணையவழிக் கலந்துரையாடலில் இந்தியாவின் பாதுகாப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவ்வாறே கடந்த 22.12.2023 இலங்கைக்கான புதிய இந்தியாத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது பதவியை ஏற்றுள்ளார். அவர் அதிகம் இந்தியாவின் பாதுகாப்புச் சார்ந்து தொழில்படுவார் என்ற எண்ணம் காணப்படுகிறது. இக்கட்டுரை இலங்கை-இந்திய உறவில் ஏற்படவுள்ள களநிலைகளை தேடுவதாக அமையவுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பினை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள எம்.ஜே.அக்பர் இலங்கையும் பிராந்தியத்திலுள்ள ஏனைய சுதந்திர நாடுகளும் கொள்கை முடிபுகளை எடுக்கும் போது அண்டை நாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையானது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது எனவும் இலங்கையும் சுதந்திரமான கருத்துக்களைக் கொண்ட சுதந்திரமான நாடு என்பதை சுட்டிக்காட்டிய அக்பர் முடிவெடுப்பதில் இந்தியாவின் பாதுகாப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதே நேரம் இந்தியாவின் புதிய தூதுவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறப்பான நட்பை மேலும் வளர்ப்பதே இந்தியாவின் பிரதான நோக்கம் என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். எரிசக்தி வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பலதுறைகளில் இலங்கையுடன் உறவை பேண இந்தியா விரும்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுபக்கத்தில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனா தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து உரையாடியதுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வ ஜகதீப் தங்கரை சந்தித்து இலங்கை-இந்திய உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பேசியுள்ளானர். ஐந்து வருடங்களுக்கு பின்னர் இத்தகைய தூதுக்குழுவொன்று இந்தியா வருகை தந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை ஏன் இலங்கைத் தரப்பு தற்போது மேற்கொண்டுள்ளது என்பது பிரதான கேள்வியாகும். மறுபக்கத்தில் இந்தியத் தரப்பின் பிரதான நோக்கம் எதுவாக தற்போதுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரு நாடுகளின் நலன் ஓரிடத்தல் சந்திப்பதே இரு நாட்டுக்குமான உறவாகும். இலங்கையின் சபாநாயகர் இலங்கையின் உண்மையான நட்பு நாடு இந்தியா என விழித்துள்ளார். அப்படியாயின் சீன எத்தகைய நட்பு நாடு என்ற கேள்வி இயல்பானதாகும். இதற்கான புரிதலை விரிவாகத் தேடுதல் வேண்டும்.

ஒன்று, தென் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நகர்வு இந்தியாவின் இலங்கை பொறுத்த நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதாகும். இந்தியாவை எதிர்க்க முடியாத நிலை ஏற்படும் போது இந்தியாவிடம் சரணடைவதாகும். அதன் மூலம் இந்தியாவை வெற்றி கொள்வதாகும். இந்தியாவை வெற்றி கொள்ளல் என்பது இலங்கைத் தீவின் நலன்களை தக்கவைத்தல். அதிலும் தென் இலங்கையின் நலன்களைப் பாதுகாத்தலாகும். தற்போது அத்தகைய இருப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தென் இலங்கை தரப்புக்கள் அனைத்தும் கருதுகின்றன. ஜனாதிபதி தோர்தலில் இந்தியாவின் ஒத்துழைப்பு தென் இலங்கைக்கு தேவையாக உள்ளது. அதனால் அத்தகைய ஒத்துழைப்பினை பெறுவதன் அவசியப்பாட்டை உணர்ந்துள்ள தென் இலங்கை அதற்கான முனைப்புக்கள் அனைத்தையும் சாத்தியப்படுத்திவருகிறது. இமாலய பிரகடனத்தை அங்கீகரித்ததன் மூலம் மேற்குலகத்தின் ஒத்துழைப்பினை பெற்றது போல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசியதன் மூலம் இந்தியாவின் ஆதரவை திரட்ட முனைந்துள்ளது. இது மறைமுகமாக தமிழ் மக்களின் ஆதரவை தனது பக்கம் திரட்ட முனைகிறதாகவே தெரிகிறது. குறிப்பாக தமிழ் தரப்பு தமக்கான தனி வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி தனது ஒற்றுமையையும் இறைமையையும் உலகத்திற்கு வெளிப்படுத்த முனையும் தறுவாயில் தென் இலங்கையில் அதிக போட்டி நிலவும் சூழலில் தமிழ் மக்களது ஆதரவு ஜனாதிபதிக்கு தேவைவயாக உள்ளது. ஆனால் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையும் அதற்கான நடவடிக்கைகளும் இந்தியாவை மட்டுமல்ல ஈழத்தமிழரையும் திருப்திப்படுத்தவில்லை. மாறாக வெறுப்புணர்வையே அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரது ஆதரவு ஏற்கனவே உள்ள அனுபவத்தின் பிரகாரம் சஜித் பிரேமதாஸாவுக்கே உள்ளதாக தெரிகிறது. ரணில்விக்கிரமசிங்ஹா போட்டியிட்டால் சிறிய அளவிலான ஆதரவு மட்டுமே தமிழரிடம் நிகழுமே அன்றி முழுமையாக எதிர்பார்ப்பது போல் ஆதரவு நிகழ்ந்துவிடும் எனக்கூறிவிட முடியாது. தெற்கை மையமாகக் கொண்ட தமிழர்களும் மேட்டுக்குடி தமிழர்களும் ரணில்விக்கிரமசிங்ஹாவை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம். ஏனைய பெரும்பான்மைத் தமிழர்கள் எதிர்த்து வாக்களிக்கும் நிலை காணப்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கு தமிழர் தனித்து ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவதை ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. எதுவாயினும் தமிழர் பகிஸ்கரிப்பதை விடுத்து குமார் பொன்னம்பலத்திற்கு வாக்களித்தது போல் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதுவே தமிழர் இறைமையை உறுதிப்படுத்தும். தமிழரின் தேசியமும் இறைமையும் தமிழ் கட்சிகளால் முதன்மைப்படுத்துவது அறிவியல் ரீதியிலானது என்றால் பகிஷ்கரிப்பை விடுத்து தமிழ் மக்களது இறைமையை வெளிப்படுத்த வேண்டும். இறைமைக்காக போராடும் ஒர் இனம் தேர்தலை பகிஷ்க்கரிப்பதன் மூலம் வெளிப்படுத்த முடியாது. பகிஷ்கரிப்பு என்பது எதிர்பே அன்றி ஜனநாயக அரசியலின் பிரதிபலிப்பல்ல. விடுதலைப் புலிகள் காலத்தில் நிகழ்ந்த பகிஷ்கரிப்பு அரச இறைமைக்கான பலத்துடன் நிகழ்த்தப்பட்டது. ஜனநாயக அரசியல் மக்கள் இறைமைக்கான அரசியல்.

இரண்டு, அமெரிக்கா உட்பட மேற்குலகம், மகாசங்கங்கள் மற்றும் மொட்டுக் கட்சியினர் என அனைவரும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் பூரண ஆதரவாளராக உள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுமையான வெளிப்பாட்டை இதுவரை வெளிக் காட்டவில்லை. இந்தியாவுக்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மீது முழுமையான நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் தவிர்க்க முடியாது ஆதரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கான பேரம்பேசலை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதுகிறது. அதுவே பாதுகாப்புச் சார்ந்த முக்கியத்துவத்தை முன்னாள் வெளியுறவின் இராஜாங்க அமைச்சரது கருத்துக்கூடாக வெளிப்படுத்தியுள்ளது. எந்த அடிப்படையிலும் பதவியில் இருக்கும் போது தெரியப்படுத்தாத விடயங்களை பதவியிலிருந்து விலகிய பின்னர் குறிப்பிடுவதாக குற்றச்சாட்டு இருந்தாலும் பாத்பைண்டர் என்பது சீனாவின் நிதி அனுசரணையில் மிலிந்த மொறகொடவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அத்தகைய அமைப்பில் பாதுகாப்புச் சார்ந்த கருத்தினை முன்வைப்பதென்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகவே தெரிகிறது. சீனக்கப்பலின் வருகையை தற்காலிகமாக இலங்கை நிறுத்தியுள்ளதென்பது இந்தியாவுக்கு தெரிந்து கொள்ள முடியாத விடயமல்ல. அதனால் இந்தியாவின் பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கைக் தீவுக்குள் நுழையும் அனைத்து சீன நகர்வுகளையும் கையாளுவதே இந்தியாவின் நோக்கமாக தெரிகிறது. சீனக்கப்பல்களது வருகை தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் நிறைவு பெற்ற பின்னர் நிலைமை மாற்றமடையும் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மேற்குலகத்தின் நண்பன் மட்டுமல்ல சீனாவின் நலன்சார் நண்பன் என்பதையும் இந்தியா புரிந்து வைத்துள்ளது. அதனால் எச்சரிக்கையுடன் நகர முனைகிறதாக தெரிகிறது. ஆனால் இவை அனைத்தும் காலதாமதமான நகர்வாகவே தெரிகிறது. ஏனெனில் சீனா இலங்கைத் தீவுக்குள் முழுமையாக தலையீட்டை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் அனைத்து துறைகளிலும் சீனாவின் பிரசன்னம் நிலவுகிறது. இந்தியா காலதாமதமாக விழித்துக் கொண்டது என்பதைவிட தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை விழிப்படையாது கையாண்டனர் என்பதே யதார்தமானதாகும். மீண்டும் அதற்கான நகர்வையே தென் இலங்கை இந்தியா மீது பிரயோகிக்க முனைகிறது.

மூன்று, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையிலான தூதுக்குழுவின் பிரதான நோக்கம் இலங்கையின் பொருளாதார மற்றும் ஜனநாயக நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் இந்தியாவுடனான பொருளாதார உறவைப் பலப்படுத்துவதாகவே தெரிகிறது. ஆனால் அடிப்படையில் இந்தியாவுடனான அத்தகைய நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கைத் தீவில் இந்தியாவின் தலையீட்டை தவிர்ப்பதுடன் தனது விருப்புக்கு ஏற்ப இந்தியாவை கையாள முனைவதாகவே தெரிகிறது. பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் தலையீட்டை தவிர்க்கும் பிரயத்தனத்தை தென் இலங்கை முனைப்பாகக் கொண்டுள்ளது. வடக்கு கிழக்கின் அரசியல் பிரச்சினையை இந்தியா கையாள முனையக் கூடாது என்பதில் தென் இலங்கையின் கவனம் குவிந்துள்ளது. இந்தியா வடக்கு கிழக்கு அரசியலை கையாளுவதென்பது ஈழத்தமிழருக்கானதல்ல. இந்தியாவின் நலனுக்கானது. அதுவே இந்தியாவின் நிலைப்பாடுமாகும். அதனை தவறான கண்ணேட்டத்தில் கருதுவதே தவறானது. ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் ஈழத்தமிழரது நலனுக்கே இந்தியா செயல்படுவதாக பிரச்சாரம் செய்ய முயலுகின்றனர். இந்தியா இந்தியாவின் நலனுடன் பயணிக்கிறது. இந்தியாவின் நலனும் ஈழத்தமிழரது நலனும் ஒன்றோடொன்று சந்திக்கும் வாய்ப்பினை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே ஏற்படுத்த வேண்டும். அதனை மேற்கொள்ளாது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றோ தீர்வினைத பெற்றுத் தரும் என்றோ பிரச்சாரம் செய்வது பலவீனமான வங்குரோத்து அரசியலாகும்.

எனவே இந்தியாவினைப் பொறுத்து தென் இலங்கை அதிக உசார்நிலையை அடைந்துள்ளது. சீனக்கப்பலது வருகை ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் சாத்தியமாகும் நிலையில் இந்தியாவை கையாள முனைப்புக்காட்டி வருகிறது. தொடர்ச்சியாக இந்தியாவுடன் தொடர்பாடலையும் பொருளாதார உடன்பாடுகளையும் தென் இலங்கை மேற்கொண்டுவருகிறது. மறுபக்கத்தில் இந்தியாவும் தனது பாதுகாப்பு சார்ந்தும் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சார்ந்தும் கவனம் கொண்டுள்ளது. இது புவிசார் அரசியலில் மட்டுமல்ல பூகோள அரசியலிலும் ஏற்படக் கூடிய மாற்றங்களை மையப்படுத்தியதாக உள்ளது. இந்தியா புவிசார் அரசியல் சக்தியாகவும் தற்போது பூகோள அரசியல் சக்தியாகவும் உள்ளது. அதனால் இந்தியாவை கையாள வேண்டிய தேவை தென் இலங்கைக்கு அவசியமானதாக உள்ளது. இந்தியாவின் அணுகுமுறை இலங்கைத் தீவின் அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதை தவிர்பதே தென் இலங்கையின் எத்தனமாகவுள்ளது. எல்லாக் காலத்திலம் அதனை இலாவகமாக தென் இலங்கை மேற்கொள்வதில் வெற்றி கண்டுவருகிறது. ஆனால் தற்போது இந்தியாவின் பலம் புவிசார் அரசியலைக் கடந்து பூகோள அரசியல் நிலையை எட்டியுள்ளதென்பது தென் இலங்கையின் கையாளுகைக்கான நீண்ட பயணத்திற்கு வாய்ப்பாக அமையுமா என்பது கவனத்திற்குரியதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)