உலகளாவிய அரசியலில் ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது தேர்தல் வெற்றி அதிகம் பேசுபொருளாக உள்ளது. மேற்குலகம் வகுத்த அனைத்து அரசியலையும் தகர்த்;து தனித்துவமான தேர்தல் வெற்றியை பெற்ற போதும் ஜனநாயகமற்ற செயலாகவே கருதப்படுகிறது. 87 சதவீத வாக்குகளால் வெற்றி என்பது ஜனநாயகத்தின் பலவீனமாகவே தோன்றுகிறது. ஆனால் மேற்குலகம் சிலாவிக்கும் ஜனநாயகத்தின் சுவடுகளை ஹாஸா-இஸ்ரேல் போரிலும் தரிசிக்க முடிகிறது. ஜனநாயகம் என்பது தேர்தல் வடிவம் மட்டுமல்ல. அது அரசியலைக் கடந்து பொருளாதாரம் சமூகம் பண்பாடு என்ற தளத்தில் விரிந்த கருத்தியலாகும். ஆதனை உலகளாவிய தளத்தில் அரசியல் தலைவர்கள் தமக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதையே கண்டு கொள்ள முடிகிறது. ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் மட்டுமல்ல மேற்குலக ஜனநாயக வாதிகளும் அதற்கு விரோதமாகவே இயங்குகின்றனர். மேற்குலகத்தின் ஜனநாயக முகத்தின் கோரவடிவம் ஹமாஸ்-இஸ்ரேல் போரில் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. மேற்குலகம் இஸ்ரேலியருக்கு சார்பாக ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கு எதிராக நகர்த்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
ஹமாஸ்-இஸ்ரேல் போர் (07.10.2023) தொடங்கிய காலம் முதல் அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் அன்ரனி பிளிங்கனின் மேற்காசிய விஜயம் ஆறாவது(21.03.2024) தடவையாக தற்போது நிகழ்ந்துள்ளது. எகிப்தின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலாளர் அராபிய நாட்டுத் வெளிவிவகார அமைச்சுக்களுடன் 26.03.2024 இல் சவுதியரேபியாவில் உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் பாலஸ்தீன அதிகாரப் பிரதேசத்தின் மூத்த தலைவர்களையும் சந்தித்து உரையாடத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரதானமாக ஹமாஸ்-இஸ்ரேலிய போரை நிறுத்துவதற்கான நகர்வுகளையே (27.03.2024)அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தின் கீழ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்பதுடன் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்த்தீன் கைதிகளை மீட்க்கும் பரஸ்பர கைதிப்பரிமாற்றத்தையும் உரையாடத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காஸாவுக்குள் (Rafah) நுழைந்துள்ளமை குறித்து ஹமாஸ் மற்றும் உலகநாடுகள் எச்சரித்துவரும் நிலையில் இத்தகைய நகர்வை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார செயலாளரது மேற்காசிய விஜயத்தின் பிரதான நோக்கமாக மூன்று விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்று, ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்துவது. குறிப்பாக ராபா பிராந்தியத்தில் 1.5 மில்லியன் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு இஸ்ரேல் தொடக்கியுள்ள போர் பல மில்லியன் மக்களை கொல்லும் நிலையை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு உணவினை ஓராயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் பட்டிணிச்சாவு நிகழ்வதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. மருந்து, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வழங்க முடியாது இஸ்ரேல் தடுத்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. எனவே தற்போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடும் நோக்குடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பேச்சுக்களை நிகழ்த்துவதாக தெரியவருகிறது.
இரண்டு, இரு தரப்புக்களுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது. குறிப்பாக இஸ்லாமிய மக்களின் புனித நாளான ரமள்ளானின் காலப்பகுதியில் அத்தகைய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை முற்றாக நிராகரித்திருந்தது. அதனால் அத்தகைய புனித நாட்களில் மக்கள் தமது மதக்கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீளவும் போர்நிறுத்தம் பற்றிய உரையாடலை பிளிங்கன் தொடக்கிவருகிறார்.
மூன்று, இரு நாட்டுச் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீட்பதற்கான உரையாடலை முன்னெடுப்பதும் பிளிங்டனின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும். அதில் அமெரிக்கப் பிரஜைகளும் உண்டென்பது கவனத்திற்குரியது. பணயக்கைதிகளை மீட்பதற்கான முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்ட போதும் நடைமுறைச் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டு;ளளது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவுக்குள் நுழையும் தறுவாயில் இஸ்ரேலிய தரப்பு பணயக்கைதிகளை மீட்பதையே பிரான நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இதுவரை அத்தகைய நடைமுறை எதுவும் சாத்தியமாகாமை இஸ்ரேலியத் தரப்புக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் நெருக்கடியாகவும் சவால்மிக்க அம்சமாகவும் உள்ளது. இதுவே ஹமாஸ்-இஸ்ரேலியப் போரின் பிரதான அம்சமாகத் தெரிகிறது.
ஆனால் ஹமாஸ்-இஸ்ரேலியப் போர் முடிபுக்குவருவதென்பதைக் காட்டிலும் போரை நகர்த்துவதில் இஸ்ரேல் அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளது. அதனை நிராகரிக்க முடியாத அமெரிக்காவும் போரை நிகழ்தும் போக்கிலேயே செயல்படுகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் அமெரிக்கா போரை நிறுத்த முயல்வதாகவே தெரியும். ஆனால் நடைமுறையில் அமெரிக்கா போரை பாதுகாத்து வருகிறது. அதிலும் இஸ்ரேலின் போர் வாய்ப்புக்களை பாதுகாப்பதில் கவனம் கொண்டே செயல்படுகிறது. அதனை விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது, இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிரான போரில் வெல்வது இஸ்ரேல் எவ்வளவு முக்கியம் எனக்கருதுகிறதோ அதேயளவு முக்கியத்துவத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. அதுவே அமெரிக்காவின் மேற்காசிய அரசியலின் இருப்பைப் பாதுகாக்கும் திறனைத்தரும். மேற்காசியாவின் அரசியலில் இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவின் நிரந்தர நட்பைக் கொண்ட நாடு. 1947 முதல் தற்போது வரை இருநாட்டுக்கும் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அது மட்டுமல்லாது அமெரிக்காவின் மேற்காசியா பொறுத்த கொள்கையில் இஸ்ரேலே மையமான தேசமாகவுள்ளது. ஏனைய நாடுகளை மிரட்டவும், கட்டுப்படுத்தவும் இஸ்ரேலே ஆதார தேசமாகும். இஸ்ரேலை வைத்துக் கொண்டு அமெரிக்காவின் இழுவிசைக்குள் அராபிய நாடுகளை கையாளுகிறது. இதனால் இஸ்ரேல் தோற்றுவிடக் கூடாது என்பதில் அக்கறையும் முனைப்பும் அமெரிக்காவுக்கள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகளை அராபிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. ஒரு போதும் பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பதற்காக பேச்சுக்களை அமெரிக்கா நிகழ்த்தவில்லை.
இரண்டாவது, ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கும் வரை மேற்காசியாவிலிருந்து அமெரிக்க வெளியேறும் நிலையிலேயே இருந்தது. ஈரான் மட்டுமல்ல சவுதியரேபியா, கட்டார், எகிப்த்து போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்தின. சவுதியரேபியா ஈரானுடன் கைகோர்க்கும் அரசியலை சீனா , ரஷ;சியா முன்னெடுத்திருந்தன. ஆனால் ஹமாஸ்-இஸ்ரேல் போர் அத்தகைய அராபிய ஐக்கியத்தை தகர்த்தது. மீளவும் அமெரிக்காவின் அரசியல் மேலோங்கத் தொடங்கியது. கடந்த ஆறுகட்ட விஜயங்களிலும் அனேகமானவை பிளிங்டன் அராபிய நாடுகளின் தலைவர்களுடனே உரையாடியுள்ளார். போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய போதும் அனேகமான விஜயங்கள் நேரடியாகவே அராபிய நாடுகளையும் அதன் தலைவர்களையும் நோக்கியதாக அமைந்திருந்தது. அதன் மூலம் மேற்காசியாவில் அமெரிக்கா ஓர் அரசியல் வெளியை மீளவும் திறந்துள்ளது. அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டே அராபிய நாட்டுத் தலைவர்கள் போரை முடிபுக்கு கொண்டுவர முடியுமென கருதுகின்றனர். அதாவது போர் நகர்த்தும் அமெரிக்காவுடனேயே போரை முடிபுக்கு கொண்டுவரும் உரையாடலை அராபியத் தலைவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். அமெரிக்காவை கடந்து அராபியத் தலைவர்கள் செயல்பட முடியாத பூட்டுக்களை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் விதித்துவருகின்றன.
மூன்றாவது, மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக ரஷ்சியாவும் சீனாவும் நகர்ந்த நிலையை முழுமயாக அகற்றும் அரசியலை ஹமாஸ்-இஸ்ரேலியப் போர் ஏற்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கதாகும். சிரியாவில் ரஷ்சியாவும் டிபூட்டியில் சீனாவும் கடல்படைத்தளங்களை கொண்டுள்ளன. அவற்றை விஸ்தரிப்பதில் இரு நாடுகளும் கவனம் கொண்டிருந்தன. இதில் சீனா தனது கடற்படையை ஏடன் வளைகுடாவிலும் தெற்கு இந்து சமுத்திரத்திலும் நிலைப்படுத்த கடந்த காலங்களில் முனைந்துள்ளது. அத்தகைய முனைப்புக்கான பொருளாதார வர்த்தக நகர்வுகளை மேற்காசியா நாடுகளில் ஏற்படுத்தும் நோக்கியே செயல்பட்டது. அதற்கு அமைவாகவே பிறிக்ஸ்10 மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு வங்கியின் திட்டங்களையும் அராபிய நாடுகள் பக்கம் திருப்பியிருந்தது. அவை அனைத்தையும் ஹமாஸ்-இஸ்ரேலிய போர் திசைதிருப்பிவிட்டது. போர் நீடிப்பதும் அதற்காக பிளிங்டன் உழைப்பதுவும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு தெரியாததொன்று கிடையாது. ஆனால் அமெரிக்காவை கடந்து செயல்படும் வலுவை அந்த நாடுகள் கொண்டிருக்காத வகையில் பிளிங்டன் செயல்படுகிறார். ரஷ்சியாவும், சீனாவும் மேற்காசியாவில் இருப்பினைக் கொண்டிருக்கலாமே அன்றி அதனால் ஒரு வலுவான அதிகார அரசியலை ஏற்படுத்த முடியாது அதற்கு அமைவாகவே அமெரிக்கா போரை முன்னிறுத்தி நகர்கிறது. சீனாவின் பாரிய நகர்வுகள் அனைத்தையும் ஹமாஸ்-இஸ்ரேலியப் போர் விழுங்கிவிட்டது என்றே கூறலாம்.
எனவே அமெரிக்க வெளியுறவு செயலாளரது அராபிய நாடுகளுக்கான விஜயம் பல உள்நோக்கங்களை கொண்டிருந்த போதும் அத ஒரு வெளிப்படையான அரசியல் நகர்வாகவே தெரிகிறது. அது முழுமையாக மேற்குலகத்தின் நலன்களுடன் மையப்படுத்தியது. மேற்காசியாவில் ஏற்பட்ட மாற்றங்களை காலதாமதப்படுத்தியதுடன் சீனா ரஷ்சியாவின் நகர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதற்கான வாய்ப்பினைக் கொடுத்துள்ள போர் நீட்டு நிலைப்பதற்கான வாய்புள்ளது. மேற்குலகத்தின் நலன்கள் நிறைவடையும் போது போர் நிறுத்தமும் போரும் முடிபுக்கு வரவாய்ப்புள்ளது. அது வரை மேற்குலகத்தின் வற்புறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்ற கோசத்துடன் பேச்சுக்களும் இராஜதந்திர நகர்வகளும் நிகழும். மனிதாபிமான உதவியின் பெயரால் மேற்கு தனது போலி முகத்தை மறைக்க முயலுகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா உள்ளன என்பது கவனத்திற்குரியதாகும். சமாதானம் எனக்கூறிக் கொண்டு அரசியல் செய்வதிலும் அந்த நாடுகளே முன்னிக்கின்றன.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
