அரசியல் கட்டுரைகள்

இலங்கைத்தீவின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் கவனம் ஏன் அதிகரித்துவருகிறது?

இந்தியா இலங்கைத் தீவில் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் காலங்கள் முழுவதும் இலங்கையின் நெருக்கடிகாலமாகவே அமைந்திருக்கிறது. வரலாற்றுக் காலத்தைவிட சுதந்திர இலங்கையின் காலம் முழுவதும் இந்தியாவே இலங்கையின் ஐக்கியத்தை ஒருமைப்பாட்ரைட இறைமையை பாதுகாத்துள்ளது. அதில் போர்க்காலம் அல்லது ஆயுதக்கிளர்ச்சிகள் இலங்கையில் எழுச்சியடைந்திருந்த காலம் முழுவதும் இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியுள்ளது. இடைப்பட்ட காலங்களில் இந்தியா இலங்கை ஆட்சியாளர்களின் நடைமுறைசார் அணுகுமுறையை தோற்கடிக்க எதிரிடையான நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளது. ஆனால் போர்க்காலத்தில் எவ்வகையான மீளாய்வுகளை இலங்கை இராணுவத்துடன் மேற்கொண்டதோ அதேயளவான முக்கியத்துவத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான திட்டங்களை மீளாய்வு செய்வதில் கவனம் கொள்கிறது. இவ்வாறு இந்தியா இலங்கைத் தீவுக்குள் அதீதமான முக்கியத்துவத்தை கொண்டிருக்க முயல்வதை விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகும்.

29.03.2024 புதுடில்லியில் இலங்கை-இந்திய தரப்புக்களுக்கிடையே இரு தரப்பு பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதில் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ராவின் அழைப்பில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு பொறுத்து ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானியுமான சாலக ரத்நாயக்க உட்பட்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவினர் கலந்து கொண்டனர். இதன் போது வினய் குவாத்ராஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலைக்கு திரும்பியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் மூலோபாய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இணக்கம் எட்டப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் இயலுமை இரு நாடுகளுக்கும் உள்ளதெனத் தெரிவித்தார். அதன் போது சாலக ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கியதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்தியாவுடன் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலின் போது இரு நாட்டுகளுக்குமிடையிலான இருதரப்புத் திட்டங்களை கவனம்செலுத்துவதுடன் ஒவ்வொரு காலாண்டிலும் அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா போர்காலத்திலும் கடற்படை விமானப்படை மற்றும் ஆயுததளபாடங்கள் குறித்தும் தாக்குதல் திட்டங்கள் குறித்தும் செயற்கைக்கோள்கள் மூலம் இலங்கை அரசாங்கத்தின் படைகளுக்கு உதவியதாக விமர்சனங்கள் தமிழகத்திலும் ஈழத்தமதிழர் மத்தியிலும் உண்டு. அது மட்டுமல்லாது அக்காலப்பகுதியிலும் அதன் பின்பும் பல ஆய்வுக்கட்டுரைகளும் நூல்களும் இந்திய-இலங்கை போர் ஒத்துழைப்புப் பற்றிய வெளிவந்துள்ளது. இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை முடிபுக்குக் கொண்டுவர உதவியுள்ளதாகவே விமர்சனங்கள் அமைந்திருந்தன. அதற்கான ஆதராங்களும் இல்லாமலில்லை. அதனை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மட்டுமல்லாது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகவே தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. அதாவது விடுதலைப்புலிகளுடனான போரின் வெற்றிக்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமானது என்று குறிப்பிட்டார். அதனை ஆளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அப்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தியா தற்போது போர் வெற்றிக்கான உத்தியை எப்படி இலங்கைத் தீவில் திட்டமிட்டு ஒத்துழைப்பு வழங்கியதோ அவ்வாறே பொருளாதாரத்திலும் ஈடுபாடுகாட்ட ஆரம்பித்துள்ளது. ஏன் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என இந்தியா கருதுகிறது என்பது பிரதான கேள்வியாகும். தென் இலங்கைக்கு இருக்கும் தேவைகளைக் கடந்து இந்தியாவுக்கு இலங்கைத் தீவின் பொருளாதார பாதுகாப்பு ஏன் முக்கியமானது. அதனை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது, இலங்கை மீதான சர்வதேச சக்திகளது தலையீடு பொருளாதாரம் சார்ந்ததாகவே அதிகம் அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் இலங்கையின் பொருளாதார பலவீனத்தை கருத்தில் கொண்டே தலையீட்டை மேற்கொள்கின்றன. சீனாவின் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மீதான தலையீடு வளர்ச்சியடைவதற்கு ஏனைய நாடுகளின் அணுகுமுறையே அடிப்படைக்காரணமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் நோர்வே போன்ற நாடுகளிடமே இலங்கை முதலில் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கான நகலை வழங்கியது. அனைத்து நாடுகளும் அதில் கவனம் கொள்ளத்தவறியதன் விளைவாகவே சீனாவின் திட்டமாக மாறியதுடன் அதுவே 99 வருட குத்தகைக்கானதாக மாறியுள்ளது. இத்திட்டத்தை இந்தியா மேற்கொள்ள முனைந்திருந்தால் நடைமுறையில் சீனாவின் தலையீடு பிராந்தியத்தில் அதீதமானதாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் இலங்கைத் தீவிலேனும் சீனாவின் தலையீடு தவிர்க்க முனைந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பினை இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் தவறவிட்டார்கள் என்பதற்கு அப்பால் இந்தியாவின் அன்றைய பொருளாதார நிலையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனாலும் அதனை தக்கவைத்திருக்க வாய்ப்பிருந்தது. இந்திய ஆட்சியாளரும் கொள்கைவகுப்பாளர்களும் பிராந்தியத்தின் தூரநோக்காக அதனை கருத்தில் கொள்ளவில்லை. இந்தியாவின் பிராந்திய சர்வதேச அதிகார மையமாக இந்துசமுத்திரம் காணப்பட்ட போதும் அதன் மீதான இந்திய அணுகுமுறை தோல்விகரமானதாகவே உள்ளது. அதாவது இந்தியா சமுத்திர அரசியலில் (Oceanic Politics) தோல்வியையே எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை மீpறி சீனாவும் அமெரிக்காவும் இந்துசமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வகை செல்வாக்கு வளர்ச்சியடைய இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையே காரணமென கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதற்கான வாய்ப்பினை தற்போது அதிகரிக்க வைத்துள்ளது. இதனால் இந்தியா அதிகம் இலங்கையை தனது பொருளாதார வலயத்திற்குள் இணைக்க முயலுகிறது. அதன் ஓரங்கமாகவே எட்கா உடன்படிக்கை திட்டமிடப்படுகிறது.

இரண்டாவது, இந்தியாவின் அயல்நாடுகள் பொறுத்த வரையறுக்கப்பட்ட சகார் திட்டத்தில் மாலைதீவு பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் அதிக நெருக்கடியை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளன. அதனால் மட்டுமன்றி இலங்கையின் முக்கியத்துவம் கருதி அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா அக்கறையோடு செயல்படுகின்றது. இலங்கையை இழந்துவிடக் கூடாது என்பதில் அதிக விட்டுக் கொபடுப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே பொருளாதாரத்தை வாய்ப்பான விடயமாக கருதுகிறது. தொடர்ச்சியாக மீளாய்வுகளை மேற்கொள்வதன் மூலம் பிற சக்திகளின் நகர்வுகளையும் திட்டங்களையும் இலகுவில் கண்காணிக்க முடியுமென இந்தியா கருதுகிறது. இதன்வாயிலாக இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென இந்தியா கணிப்பிடுகிறது. இலங்கைத் தீவின் வடக்குடனான இணைப்பினை (Connectivity) அதிக பொருளாதார குறிக்காட்டிக்கூடாக நகர்த்த முனைகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விடுத்து பொருளாதார விருத்திக்கூடாக மக்களின் எண்ணங்களை மாற்ற முடியுமென இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியாவும் கருதுகிறது. அதனையே அதிகமாக கருத்தில் கொண்டு வடக்கு கிழக்கை இந்தியாவுடன் பொருளாதாரமாக இணைப்பதில் கவனம் கொள்கிறது. இந்தியாவின் பிந்தியதும் நிலையானதுமாக அமையக்கூடியது இராமர்பாலம் இந்திய-ஈழத்தமிழர் உறவுடன் பிணைப்பினைக் கொள்வதில் உள்ள நெருக்கத்தைவிட இலங்கைத் தீவுடனான உறவாகவே இணைப்பினை இருதரப்பும் கருதுகிறது. இராமர்பாலம் முதல் மன்னார் தீவிலிருந்து திருகோணமலைக்கும் கொழும்புக்குமான இணைப்பினை சமதளத்தரில் ஏற்படுத்தும் திட்டத்தை இரு அரசுகளும் உரையாடிவருகின்றன.

மூன்றாவது, இலங்கை உள்நாட்டு அரசியலின் விடயங்களில் இந்தியாவின் தலையீட்டை அதீதப்படுத்துவதற்கு பொருளாதாரத்தை குறிகாட்டியாகக் கொள்கிறது. அரசியலும் பொருளாதாரமும் தனித்தனியானது அல்ல. அவை இரண்டும் ஓரேதளத்தில் இயங்கும் வலுவான தேச நிர்மாண சக்திகள். அரசியல் பொருளாதாரம் தற்போது அரசியற் பொருளாதாரமாகவே இயங்குகிறது. இலங்கைத் தீவின் அரசியற் பொருளாதாரம் இந்தியத் தரப்பின் இருப்புக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஈழத்தமிழர் அரசியலில் மட்டுமல்ல தென் இலங்கையின் ஆட்சியாளர்களை மாற்றியமைப்பதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் இந்தியாவின் பங்கினையும் கருத்தில் கொள்ளும் போதே இந்தியாவின் நிலைப்பாடு உணரமுடிகிறது. இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் செல்வாக்கு நீக்கமற நிறைந்துள்ளதாகவே தெரிகிறது.

எனவே இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் இலங்கைத் தீவை இந்தியா தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து;ளளதாகவே தெரிகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதுடன் இலங்கைத் தீவின் புவிசார் பொருளாதாரம் மேலும் விருத்தியடைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இலங்கைத் தீவின் அரசியற்பொருளாதாரத்தில் இந்தியாவின் தலையீட்டை வலுப்படுத்தும் என்ற எதிர்பார்க்கை இந்தியத் தரப்பிடம் உண்டு. போரை எப்படி இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து வெற்றி கொள்ள உதவினதோ அவ்வாறே பொருளாதாரத்தையும் வெற்றி கொள்ள இலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் போரின் இறுதி வெற்றியை அடுத்து அதன் விளைவுகளை அதிகம் தனதாக்கிக் கொண்டது சீனா என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வகையாள நிலையை நோக்கியே இலங்கைத் தீவு நகர வாய்ப்புள்ளது. அதன் அணுகுமுறையும் கடந்தகால அனுபவமும் அதுவாகவே தெரிகிறது. ஆனால் தற்போதுள்ள பலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான பாய்ச்சல் மட்டுமேயாகும். அதனை பிராந்திய சர்வதேச தளத்தில் விருத்தி செய்ய தவறும் பட்சத்தில் அமெரிக்கா சீனாவினால் இலங்கைத் தீவு இந்தியாவிடமிருந்து மீட்கப்படும். அதனையே தென் இலங்கையின் தீவிர தேசிய சக்திகள் திட்டமிடுகின்றன. இந்தியாவின் பொருளாதா ஒத்துழைப்பினால் ஈழத்தமிழருக்கு ஏதும் சாத்தியமான வழிமுறை ஏற்படும் எனக்கருதுவது பலவீனமான அறிவியலின் தொகுப்பாகும்.

-போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.-

(நன்றி: தினக்குரல்)