அரசியல் கட்டுரைகள்

ஈரான்-இஸ்ரேல் போர் சாத்தியமானதா?

மேற்காசியப் பிராந்தியம் பாரிய மனித அழிவுகளுக்கு தயாராவதாகவே தெரிகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் பாலஸ்தீனர்களை மட்டுமல்ல பிராந்திய நாடுகளின் சதாரண அராபியர்களையும் அழிவுக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளதாகவே தென்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் முக்கியஸ்தர் இஸ்மாயில் ஹலியின் மூன்று மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டமை மேலும் ஹமாஸ் தீவிரவாதத்தின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் போரின் ஆரம்பகாலங்களைவிட தற்போது இஸ்ரேலியத் தாக்குதலும் ஹமாஸ் அமைப்பின் பிரதான தளபதிகள் கொல்லப்படுவதும் அதிகமாக உள்ளது. அதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கோ அல்லது தெற்கு காஸா மீதான தாக்குதலை நிறுத்துவது பற்றியோ கவனம் கொள்ளாது என்பது தெளிவாகத் தெரிகிறது. மறுபக்கத்தில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் போல் அமெரிக்கா அதட்டிக் கொண்டாலும் அதன் உண்மையான வடிவம் தற்போது தெரிந்துள்ளது. ஆனாலும் ஈரான்-இஸ்ரேல் போர்ப் பதற்றம் மேற்காசியாவை உலுக்குவதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் ஈரான்-இஸ்ரேல் போரின் வாய்ப்புக்களை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையெட்டி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதாக இப்பகுதியில் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டது. அமெரிக்க-இஸ்ரேல் முறுகலானது வெறும் ஏமாற்று மட்டுமே என்பது கூறப்பட்டது போல் தற்போது தெரியவந்துள்ளது. ஈரான் தனது சிரியாவில் அமைந்துள்ள தூதரகம் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று தெரிவித்ததுடன் அமெரிக்காவை விலகியிருக்குமாறு கேட்டுக் கொண்ட அறிவிப்பு வெளியான பின்னர் இரும்புக் கவசம் போல் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் எனத் பைடன் தெரிவித்துள்ளார். இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக முன்வைத்த அனைத்து கருத்துக்களும் போலியானதை பைடன் உறுதிப்படுத்தியிருந்தார். ஏறக்குறைய அமெரிக்காவே இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய பங்காளி. இஸ்ரேலை பாதுகாப்பது அமெரி;க்காவும் மேற்கு நாடுகளும் அவற்றின் நேட்டோ இராணுவ அமைப்பும் என்பது போர் தொடங்கியதிலிருந்து உணரக் கூடியதாக அமைந்திருந்தது. இஸ்ரேலை சாடுவது உணவுப் பொதிகளை வீசுவது போர் நிறுத்தத்திற்கு உழைப்பது போன்ற பலவிடயங்களை திட்டமிட்டே மேற்கு பிரயோகிக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் உண்மை வடிவத்தை மறைப்பதற்கே அத்தகைய உத்திகளை அவ்வப்போது வெளிப்படுத்துகிறது மேற்குலகம்.

இரண்டாவது, அமெரிக்க ஜனாதிபதி தனது பிரஜைகளை இஸ்ரேலின் அனைத்துப் பிரதேசங்களிலும் நடமாடக் கூடாதென தடைவித்தித்துள்ளது. காரணம் ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்கப் பிரஜைகள் இன்னுமே விடுதலை செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொண்டிருப்பதுடன் போரின் இலக்கு அமெரிக்கர்களும் என்பது அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரிந்துள்ள விடயமாகவே உள்ளது. அதனால் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதிலும் போரில் அமெரிக்காவின் பங்கையும் பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவது, ஈரான் இஸ்ரேலுடன் போர் புரியக் கூடிய இராணுவ வலிமையுரைடயதாக உள்ளதா என்பது பிரதான கேள்வியாகவே உள்ளது. தற்போது இஸ்ரேல் என்பது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ உட்பட்ட மேற்குலகத்துடன் இஸ்ரேலை எதிர் கொள்ளும் திறன் ஈரானுக்கு உண்டா என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். வெறுமையாகவே இஸ்ரேலுடன் மோதுவதே கடினமான இலக்காக அமைவதுடன் ரஷ;சியா மற்று சீனா போன்ற நாடுகள் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவு போன்று ஈரானுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்பது கடந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் கண்டு கொள்ளக் கூடிய விடயமாகவுள்ளது. எனவே ஈரான் தனித்தே போரை எதிர் கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். அத்தகைய போர் ஈரான் கூறுவது போல் அல்லது நேரடி போரை இஸ்ரேலுடன் மேற்கொள்ள போவதாக ஈரானிய அதியுயர் தலைவர் எச்சரித்துள்ளார். அதே நேரம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் தமது மண்ணில் இஸ்ரேல் தாக்குதலை ஏற்படுத்தாதவரை இஸ்ரேலுடன் போருக்கு ஈரான் போகாது எனத் தெரிவித்துள்ளார்.

நான்காவது, ஈரான் இஸ்ரேலுடன் நேரடிப் போருக்கு போவதற்கான வாய்ப்பு இல்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு பலகாரணங்கள் உண்டு. குறிப்பாக ஈரானின் இராணுபலம் இஸ்ரேலுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க் கூடியதல்ல. ஈரானிடம் நீண்டதூர ஏவுகணைகளும் நவீன தொழில்நுட்ப்பமுடைய ரோன்களும் மற்றும் விமானத் தாக்குதல் திறனும் இருந்த போதும் இஸ்ரேல் அதனை எதிர் கொள்ளும் திறனுடன் போரில் ஈடுபடுவதுடன் அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்புள்ளது. அதனால் இலகுவில் இஸ்ரேலை எதிர் கொள்ள முடியாத நிலை ஈரானுக்கு ஏற்படும்.அதனால் நேரடிப் போரை ஈரான் தவிர்க்கவே விரும்பும். அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் பிளிங்டனும் மேற்காசிய நாடுகளுடன் தொடர்ச்சியான உரையாடலை நடாத்திவருகிறார். அதாவது ஈரான்-இஸ்ரேல் போரை பிராந்திய நாடுகள் விரும்பவில்லை என்பதை முதன்மைப்படுத்திவருகிறார். அத்தகைய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா இஸ்ரேல் மீதான போரை தடுக்கும் எனவும் இரும்புக் கவசம் போல் பாதுகாக்கும் எனவும் தெரிவித்ததாக வெளிப்படுத்த பிளிங்டன் முனைகிறார். அமெரிக்காவின் இராஜதந்திர செய்முறையாகக் கூட அத்தகைய பைடனின் அறிவிப்புக்கு மதிப்பீடுகள் உள்ளன.

ஐந்தாவது, ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹிசைன் அமீர் அப்துல்லாகின் தெரிவித்த ஒரு கருத்து கவனத்திற்குரியது. அதாவது ஈரானின் மண்மீது தாக்குதல் நிகழ்த்தும்வரை இஸ்ரேல் மீது ஈரான் நேரடிப் போரை மேற்கொள்ளாது என்பதாகும். அதற்கான அடிப்படை ஈரானின் பலம் முழுவதும் அதன் தரையிலேயே குவிந்துள்ளது. அது ஒரு நீண்ட நிலத் தொடர்ச்சியையும் வலுவான புவிசார் இஸ்லாமிய அரசியலையும் கொண்டது. அது மட்டுமன்றி இஸ்ரேலுடன் தரைத் தொடர்பையோ எல்லையையோ பகிராத நாடு என்ற வகையில் அதன் இருப்பு தனித்துவமானது. ஈரானின் அரசியல் புவியியலே அதன் பாதுகாப்பாகும். ஈரானின் புவிசார் அரசியலைவிட அதன் அரசியல் புவியியலே வலுவானது. அதனால் இஸ்ரேலிய தாக்குதல் மட்டுமல்ல அமெரிக்காவின் தாக்குதலும் அதிக நெருக்கடியை ஈரானில் எதிர்கொள்ளும். ஏற்கனவே ஈரானில் 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சிறந்த அனுபவம் உள்ளது. ஈராக்குடனான வெற்றியும் அதன்வழியே ஈரானுக்கு ஏற்பட்டதென்பது மறுக்க முடியாதது.

ஆறாவது, ஈரானின் இஸ்ரேல் மீதான போர் ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சிக்குழுக்கள் மூலமே நிகழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் அத்தகைய மூன்று குழுக்களுக்கும் ஈரானின் ஆதவு உள்ளதாகவே தெரிகிறது. அத்தகைய ஆயுதக் குழுக்களை முன்னிறுத்தியே ஈரான் இஸ்ரேல் மீதான போரை நிகழ்த்துவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதுகின்றன. அது மட்டுமன்றி அத்தகைய குழுக்களுக்கான ஆயுததளபாட வினியோகத்தை ரஷ்சியா மற்றும் சீனா வழங்குவதாகவும் இஸ்ரேல் மீதான போர் சர்வதேச பரிமாணம் கொண்டதாக விவாதிக்கப்படுகிறது. ரஷ்சியா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா என்பன இப்போருக்கான ஆயுததளபாட வினியோக சக்திகள் என்ற அடிப்படையிலேயே இஸ்ரேலும் மேற்குலகமும் செயல்படுகின்றன. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவது போன்று அல்லது மேற்குலகம் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பது போன்று ரஷ்சியா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஹமாஸ் அமைப்புக்கோ ஏனைய கிளர்ச்சிக் குழுக்களுக்கோ ஆதரவு வழங்காது.

எனவே இஸ்ரேல்-ஈரான் பதட்டம் போராக மாறுவதற்கான நகர்வுகளை இழந்துவருகிறது. அத்தகைய உத்தியை ஈரான் மேற்கொள்வதே ஈரானுக்கு பாதுகாப்பானது. இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு போகுமாயின் ஈரானின் பலம் காணாமல் போவது மட்டுமல்ல மேற்காசியாவில் வலுவான அரசின் இருப்பே காணாமல் போய்விடும். அதனைத் தக்கவைப்பதே தற்போது ஈரானுக்கு அவசியமானது. இஸ்ரேலும் மேற்குலகமும் இலகுவில் தோற்கடிக்க முடியாத சக்திகள். அதனை எதிர்கொள்வதென்பது இராணுவ பலத்தில் மட்டுமல்ல புலனாய்விலும், பின்வாங்கலிலும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதிலுமே தங்கியுள்ளது. அதனை ஈரான் தக்கவைக்கும் உத்தியை வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய ஈரானின் பலம் ஈரானின் அரசியல் புவியியலிலே உள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினகரன்)