இந்தியத் தேர்தல் களம் ஈழத்தமிழருடனான உறவை எப்போதும் பயன்படுத்தும் மரபைக் கொண்டுள்ளது என்பது தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட காலத்திலும் போhக்காலத்திலும் தமிழகம் மட்டுமல்ல புதுடில்லியும் தேர்தல் களத்தை தமக்கு சாதகமாக்குவதற்கு ஈழத்தமிழர் அரசியலை பயன்படுத்தியது. அதன் உச்ச வளர்ச்சியை 2009 காலப்பகுதியில் கண்டு கொள்ள முடிந்தது. தற்போது கச்சதீவு அரசியலை மீளவும் தேர்தல்கால வியூகமாக கட்சிகள் கையாண்டுவருகின்றன. பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாததென்றை தேர்தல் மேடைகளில் முதன்மைப்படுத்தும் தரங்குறைந்த அரசியலை காணமுடிகிறது. ஈழத்தமிழரது அரசியலில் வாக்குகளை பெறமுயலும் தமிழக-இந்திய கட்சிகள் தேர்தலுக்கு பின்னான நகர்வுகளில் துயரகரமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. இக்கட்டுரையானது இலங்கை -இந்திய கடல்பகுதியின் முக்கியத்துவம் ஈழத்தமிழரது அரசியலில் எத்தகைய பங்கினை கொண்டுள்ளது என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தேசவிரோத செயலை செய்யுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இவ்விரு கட்சியினரும் தமிழ் நாட்டின் உயிர் நாடியான கச்சதீவைத் துண்டித்து வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்துள்ளனர். திரைமறைவில் செய்த வரலாற்றுத் தவறை மன்னிக்க முடியாது. அவர்கள் செய்த செயலுக்காக தமிழக மீனவர்கள் தண்டிக்கப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தேர்தல்கால பிரச்சாரம் மட்டுமே எனக்கடந்து செல்ல முடியாது. காரணம் இத்தகைய கடல் பகுதியே ஈழத்தமிழரது அரசியலின் இருப்பும் பலமுமாகும். கச்சதீவு மட்டுமல்ல பாக்கு நீரிணை, இராமர் பாலம், என்பன ஈழத்தமிழரது அரசியலுடன் பின்னிப்பிணைந்தது. அதனை முழுமையாக தெரிந்து கொள்வது அவசியமானது.
கச்சதீவு இந்திய தேசத்தின நிலப்பரப்புக்குரியதே. கச்சதீவுடன் ராமேஸ்வரம் மற்றும் 13 மேற்பட்ட தீவுகள தமிழகத்துடன் சேர்ந்தே இருந்தது. தமிழக ராமநாதபுர சமஸ்தானங்களுக்குரியதாகவே பிரித்தானியர் காலத்தில் காணப்பட்டது. இது 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. தமிழகத்திலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் கச்சதீவு அமைந்துள்ளது. இது 1974 முதல் இலங்கை-இந்திய நட்புறவினால் இலங்கைக்கு கைமாற்றப்பட்டது.
முதலாவது, தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 14.4 கடல் மைல் அல்லது 27 கிலோமீட்டர் தொலைவிலான பாக்கு நீரிணையினால் இலங்கையும் இந்தியாவும் பிரிக்கப்பட்டிருகிறது. இதனை இலங்கையை கைப்பற்றி ஆண்ட அனைத்து அந்நிய சக்திகளும் சரிவரப் பயன்படுத்திக் கொண்டனர். இலங்கைத் தீவை தனித்துவமான கடல்சார் நலன்களுக்கான அரசாக பிரித்தானியர் முதன்மைப்படுத்திக் கொண்டனர். ஈழத்தமிழர் தமிழகத்திற்கு அண்மையில் தமது இருப்பிடத்தை கொண்டதனால் பாக்கு நீரிணை தொப்புள் கொடி உறவுக்கான தொடுவாயின் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய பாக்கு நீரிணைக்கூடாகவே சோழப் பேரரசு இலங்கைத் தீவைக் கைப்பற்றியது. 1500 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்பட்ட அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டதை அழித்து பொலநறுவையை தலைநகராக மாற்றியதை சிங்கள-பௌத்தவர்கள் வரலாற்றில் முக்கிய விடயமாகும்.
இரண்டாவது, இத்தகைய பாக்கு நீரிணையே ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்தின் மையப்பகுதியாக அமைந்திருந்தது. இலங்கையின் கடற்படையினால் துரத்தப்படும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தப்பிக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதங்களைக் கடத்தவும் ஆட்களை பயிற்சிக்கு கொண்டு செல்லவும் பின்னர் மீள புலத்திற்கு கொண்டுவரவும் பாக்குநீரிணையே உதவியது. காரணம் பாக்குநீரிணைக்கு அப்பால் இந்திய கடற்படையின் பாதுகாப்பிற்கு உட்படுதல் என்பது ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது. இலங்கையில் ஏற்பட்ட வன்முறைக்காலங்கள் முழுவதும் ஈழத்தமிழ் அகதிகள் தப்பிச் சென்றதும் பாதுகாப்பு கிடைத்ததும் பாக்குநீரிணையினால் என்பதை நிராகரித்துவிட முடியாது. அத்தகைய கடலே ஈழத்தமிழது அரசியல் இருப்பை பாதுகாத்தது. அத்தகைய கடலை விட்டு பிரிந்து தனித்துவமானதாக ஈழத்தமிழ் அரசியல் பயணிக்க முயன்ற போது துயரங்களையும் அழிவுகளையும் எதிர்கொண்டனர். தமிழகத்தில் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டம் தங்கியிருந்த போது போராட்டத்தின் வளர்ச்சியும் நிலைத்திருப்பும் சாதகமானதாக அமைந்திருந்தது.
மூன்றாவது, தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஈழத்தமதிழருக்கும் இந்தியாவுக்குமான முரண்பாட்டை திட்டமிட்டே வளர்ச்சியடையச் செய்தார்கள். இந்தியாவின் பாதுகாப்பை தமிழர்கள் கொண்டிருக்காது தடுப்பதே தென் இலங்கை ஆட்சியாளர்களது நோக்கமாக உள்ளது. அத்தகைய முரண்பாட்டின் எதிரெலியே ஈழத்தமிழரது இருப்பு நெருக்கடிக்குள்ளாக வழிவகுத்தது. இதன் மூலம் பாக்குநீரிணையை ஈழத்தமிழரிடமிருந்து பறித்தெடுப்பதுடன் இந்தியாவின் தயவிலேயோ ஒத்துழைப்பிலேயோ ஈழத்தமிழரது அரசியல் இயங்குவிடக் கூடாது என்பதில் தென் இலங்கைத் தரப்பினர் அனைவரும் கருத்தில் கொண்டுள்ளனர்.
நான்காவது, தென் இலங்கை ஆட்சியாளரது இந்திய எதிர்ப்புவாதம் ஈழத்தமிழர் மீதான தாக்குதலாகவே அமைந்தள்ளது. அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையில் இந்தியா மீதான அச்ச உணர்வே காரணமாகும். அதனை முன்னிறுத்திக் கொண்டே வடக்கு கிழக்கையும் பாக்குநீரிணையையும் இலங்கை-இந்தியக் கடற்பரப்பையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர்.இதனை வெற்றி- கொள்ளும் வெளியுறவுக் கொள்கையையே இலங்கை ஆட்சியாளர் இந்தியா பொறுத்து பிரயோகித்து வருகின்றனர். எல்லாச் சூழலிலும் இந்தியாவை அரவணைப்பது போல் காட்டிக் கொள்வதும் ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிப்பதுவும் மரபான வெளியுறவாக காணப்படுகிறது. அத்தகைய கொள்கையில் ஈழத்தமிழர் எதிர்ப்புவாதத்தை இந்தியாவுக்கு எதிரானதாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். ஆனால் அதனை இந்தியாவுக்கு நேரடி எதிர்ப்புவாதமாக வெளிப்படுத்தாது ஈழத்தமிழர் ஊடாக நகர்த்துவதில் கவனம் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒன்றாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் காணப்படுகிறது. இந்தியர்களுக்கும்-ஈழத்தமிழருக்குமான முரண்பாட்டை உருவாக்கி வளர்த்ததில் தென் இலங்கைச் சக்திகள் கவனம் கொண்டிருந்தனர். அத்தகைய முரண்பாடே ஈழத்தமிழரது இருப்பை நெருக்கடிக்குள் தள்ளியது. அதனை பாதுகாப்பதிலும்ட வளர்ப்பதிலும் அனைத்து தென் இலங்கை அரசியல் சக்திகளும் முனைப்பாக உள்ளனர். அதுவே தென் இலங்கையின் இருப்புக்குரியது மட்டுமன்றி இலங்கைத் தீவை தனித்துவமான அரசாக பாதுகாக்க உதவுகிறது. இத்தகைய முரண்பாட்டின் வடிவம் மகாவம்சத்திலிருந்து இன்றுவரை பேணப்படுகிறது. ஏனைய காலத்தைவிட ஆயுதப் போராட்ட காலம் அத்தகைய முரண்பாட்டை வலுப்படுத்துவதில் அதிக வாய்ப்பான காலமாக தென் இலங்கைக்கு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்டதுடன் தற்போதைய காலத்திலும் அதனை கடைப்பிடித்து வருவதில் முனைப்பாக இயங்குகிறது.
ஐந்தாவது, சமகால கடல்சார் அரசியலில் தீவுகள் தனித்துவமானவையாக விளங்குகின்றன. தீவுகள் பாதுகாப்பான இருப்பையும் ஆட்சியையும் அதிகம் கொண்டுள்ளன. இலங்கை தீவாக இருப்பதே அரசாக இருப்பதற்கான அடிப்படையாகும். பாக்குநீரிணையே இலங்கைத் தீவின் வலுவாகும். ஆனால் தற்போது பாக்கு நீரிணையின் ஒருபக்கம் தமிழகமும் மறுபக்கம் ஈழத்தமிழரும் இருப்பது இரு மக்களது இருப்புக்கும் தனித்துவமான பாதுகாப்பானது. இதனைக் குலைப்பதே தென் இலங்கையின் ஆவலாக உள்ளது. அதற்கான முகாந்திரங்களை உருவாக்குவதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஈடுபாடுடையவர்களாக விளங்குகின்றனர். இதனை கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழருக்கும் தமிழக மக்களுக்கும் உரியதாகும். அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் நலன்களுடன் மட்டுமே பயணிக்கிறார்கள். அதனால் மக்களாக விழிப்படைவது அவசியமானது. அல்லது அத்தகைய விழிப்புடைய சக்திகளை அரசியலுக்குள் கொண்டுவருதல் வேண்டும்.
எனவே கச்சதீவு அரசியல் தேர்தலுக்கான உரையாடலாக கருதினாலும் அதன் இருப்பும் அமைவிடமும் தனித்துவமானது. அதனைப் பாதுகாப்பதென்பது தமிழகத்திற்கும்-ஈழத்தமிழருக்கும் உரியது. பாக்குநீரிணையை மையப்படுத்திய கடல் பகுதியானது ஈழத்தமிழரது அரசியல் இருப்பை பாதுகாத்தது. அதுவே ஈழத்தமிழரது அரசியல் போராட்டங்களுக்கும் துயரங்களின் போதெல்லாம் பாதுகாப்புக்கும் உதவியது. இந்த கடற்பகுதி அந்நிய சக்திகளுக்கு உரியதல்ல. ஈழத்தமிழருக்கும் தமிழகத்திற்குமானது. இப்பகுதியின் பாதுகாப்பு இரு கடல்சார் சமூகங்களின் நலனுக்கானது. அதன் கேந்திர முக்கியத்துவம் அந்த மக்களது நலனைப் பாதுகாப்பதற்கானதே. அதனை நோக்கி அரசுகள் நகர வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
