அரசியல் கட்டுரைகள்

இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையும் ஈழத்தமிழர் அரசியலும்?

இலங்கையின் அரசியல் பரப்பு தவிர்க்க முடியாது இந்தியாவின் எல்லைக்குள் அகப்பட்டுள்ளது. அத்தகைய புவிசார் அரசியல் அமைவிடத்தினால் இரு நாடுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நலன்களில் இலங்கைத்தீவும் இலங்கையின் நலன்களுக்குள் இந்தியாவும் பரஸ்பரம் உறவு கொள்ளும் நிலை காணப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடந்த இரு தடைவ ஆட்சிக்காலத்தை அவதானிக்க முடிந்தது. தற்போது மூன்றாவது காலப்பகுதிக்குள் நுழைந்துள்ள கூட்டணி அரசாங்கம் இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவை கைக்கொள்ள முனைகிறது என்பதை 20.06.2024 இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சரது நகர்வு வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரது இலங்கை வருகையால் எதிர்பார்க்கப்படும் அரசியலும் என்பதாக அமையவுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சரது வருகையின் முக்கியமான உரையாடல்கள் இலங்கையின் பொருளாதாரம் சார்ந்ததாக அமைய வாய்ப்புள்ளதென ஊடகங்கள் அதிகம் குறிப்பிட்டுள்ளன. கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகங்களும் வடக்கு கிழக்கில் வெளியாகும் தமிழ் ஊடகங்களும் அத்தகைய எதிர்பார்க்கையையே அதிகம் வெளிப்படுத்தியுள்ளன. ஜெய்சங்கரது விஜயம் அரசியல் முக்கியத்துவத்தை விடுத்து பொருளாதார உறவுக்கான நகர்வாக அமையும் என்பது பொதுவாகவே தெரிகிறது. குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் சார்ந்தும் வடக்கின் தீவுப்பகுதி சார்ந்தும் அத்தகைய அணுகுமுறை தென் இலங்கை ஆட்சியாளர்களுடனான உரையாடலில் விளங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலிசப்ரியும் அதனையே அதிகம் கோடிகாட்டியுள்ளார். இந்தியாவின் முதலீடுகள் பல இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வேலைத்திட்டங்களை தற்போதைய நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்துவது அவரது வருகையின் பிரதான நோக்கமாக அமையும் எனத் தெரிவித்தார் சப்ரி. மேலும் அடுத்துவரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை உறுதிப்படுத்துவதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடனும் ஜெய்சங்கரது விஜயம் அமைந்துள்ளது எனவும் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகையின் பிரதானமான நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவம் உடையதென விவாதிப்பதுவும் உண்டு. குறிப்பாக இலங்கைத்தீவில் நிகழவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் காலப்பகுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் வருகையானது அதற்கான முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது கொடுக்கும் என்பது அவதானிக்கக் கூடியது. ஆனாலும் அத்தகைய அரசியல் முக்கியத்தவம் எதுவாக அமையும் என்பது பிரதான கேள்வியாகவே உள்ளது. அதனை விரிவாக நோக்குவது பொருத்தமானது.

ஒன்று, இந்தியாவின் வெளியுறவு அமைச்சரது இலங்கை வருகை இது முதல்தடைவ அல்ல. இதற்கு முன்பும் ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் பலதடவை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பாரதீய ஜனதாக்கட்சியின் வெளியுறவில் அயல்நாடுகள் முதலிடம் என்ற சகார்த்திட்டத்தை அமுல்படுத்தும் விதத்தில் பல தடைவை இலங்கைத் தீவுக்கு வருகைதந்ததுடன் இலங்கையுடனான பொருளாதார தொழில்நுட்ப விஞ்ஞான ரீதியான மற்றும் மருத்துவ உறவைப் பலப்படுத்தம் விதத்தில் பல புரிந்துணர்வு உடன்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளனர். பிஜேபி அரசாங்கம் இலங்கையுடனான உறவை பலப்படுத்தவதில் முனைப்பான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அவை அனைத்தும் பொருளாதார ரீதியானதாகவே அமைந்துள்ளது. ஆனால் தெளிவாக ஒருவிடயத்தை உரையாட வேண்டும் பொருளாதாரம் ஒருபோதும் தனித்து இயங்கவதில்லை. அது அரசியல் பொருளாதாரமாகவே (Political Economy) இயங்குதிறன் கொண்டுள்ளது. அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பொருளாதாத்தை மையமாகக் கொண்டதே. இலங்கைத் தீவால் எந்தப் பொருளாதார இலாபத்தையும் ஒரு தேசம் பெறத்தவறினாலும் இலங்கைத் தீவின் அமைவிடமாகிய இந்து சமுத்திரத்தினால் அதிக பொருளாதார வாய்ப்பக்களை அடைய முடியும் என்பதே இலங்கைத் தீவுடனான உறவின் வலிமையாகும். அதனையே இந்தியாவும் முதன்மையாகக் கருதுகிறது. இலங்கைத்தீவால் எந்த நேரடி இலாபத்தை இந்தியா அடையாதுவிட்டாலும் இந்தியாவின் பொருளதாதார உதவியினால் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்தியாவுக்கு விரோதமான சக்திகளின் தலையீட்டுக்குள் இலங்கைத்தீவு சென்றுவிடாது தடுப்பதுமே பிரதான இலாபமாகும். அத்தகைய இலாபத்தை வல்லரசுகள் அனைத்துமே இலங்கைத்தீவில் அடைய முயலுகின்றன. இந்தியாவிடம் இலங்கைத்தீவு சென்றுவிடக் கூடாது என சீனாவும் மறுபக்கத்தில் அமெரிக்கா சீனாவிடம் இலங்கைத் தீவு அகப்பட்டுவிடக் கூடாது எனவும் போட்டிபோடுகின்றன. இத்தகைய இழுபறிக்குள் இலங்கைத்தீவ தனது அரசியல் இருப்பை பாதுகாத்து வருகிறது.

இதனூடாக இந்தியா இலங்கையில் தனது அதிகாரத்தை பொருளாதார ரீதியில் முன்னிறுத்திக் கொண்டு செயல்பட எத்தனிக்கிறது. அத்தகைய உறவில் ஒன்றாகவே ராமர் பாலம் பற்றிய உரையாடல் உள்ளது. ராமர்பாலம் பொருளாதார அர்தத்தில் அதிக முக்கியத்துவத்தை கொண்டடிருந்தாலும் தென் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அதிக அரசியல் பெறுமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே தெரிகிறது. அதற்கான ஒப்புதலை தென் இலங்கை வழங்குவதிலும் இந்தியா அதனை முழுமைப்படுத்துவதிலும் இரு நாட்டு உறவின் தனித்துவம் தங்கியுள்ளது. ஆனால் தென் இலங்கை எப்போதும் உடன்படுவதும் ஒப்புதலளிப்பதையும் உபாயமாகவே கொண்டுள்ளது. ஆனால் அதனை அமுல்படுத்துவதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் அவலத்தை பார்த்தால் அதனைக் கண்டு கொள்ள முடியும். இது இந்திய ஆட்சியாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் புரியாததென்று கிடையாது. இத்தகைய நிலையே ராமர்பாலத்திற்கும் ஏற்படும் என்ற புரிதல் பலதளத்தில் உண்டு. ஆனால் ராமர்பாலத்தின் முக்கியத்துவம் பொருளாதார ரீதியில் வலுவான அம்சம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் இலங்கைத் தீவின் பொருளாதார பலம் வலுவான நிலையை எட்டும் என்பது தெளிவான புரிதலுக்கு உட்பட்டதே. ஆதனால் ஏற்படப் போகும் அரசியலை தென் இலங்கை ஆட்சியாளர் குறைந்தபட்சம் ஏற்றுக் கொண்டாலும் ஏனைய தீவிர மதவாத அரசியல் சக்திகளது அணுகுமுறை ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி நியாயமானதே. அந்த சந்தர்ப்பத்திலேயே இந்தியாவை தென் இலங்கை பலதடவை சிக்க வைத்துள்ளது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 15 வருடங்களாக இந்தியாவால் 1987இல் மேற்கொண்ட அரசியல் உடன்பாட்டையோ சட்டரீதியாக ஏற்றுக் கொண்ட 13வது அரசியலமைப்பு சீர்திருத்தையோ அமுலாக்க முடியாதுள்ளது என்பதன் புரிதல் முக்கியமானது. இன்னுமே வெறும் பிரச்சார வடிவத்திலேயே 13இன் உள்ளடக்கம் காணப்படுகிறது. இதனைக் கடந்து இந்தியா இலங்கையுடன் எத்தகைய அரசியல் பொருளாதாரத்தை கைக்கொள்ள முடியும் என்பது சந்தேகமானதே.

இரண்டு, ஈழத்தமிழர் அரசியல் பற்றிய உரையாடலும் இந்திய வெளியுறவு அமைச்சரது வருகையுடன் முதன்மைப்படுத்தப்படுகிறது. அத்தகைய செய்முறை வழமையான அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே தெரிகிறது. கடந்த காலங்களில் இந்தியாவின் நகர்வுகள் எப்படியானதோ அதுவே தற்போதைய சூழலிலும் அமைய வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் பலமான அரசாங்கத்தை கொண்டிருந்த பிஜேபியினால் நிகழ்த்த முடியாதை தற்போது பலவீனமாக உள்ள நிலையில் சாத்தியப்படுத்தும் எனக்கணக்குப் போட முடியாது. அதற்காக இந்தியாவை நிராகரிப்பதல்ல வாதம். மாறாக இந்தியாவின் போக்கில் மாற்றம் நிகழவேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும். இலங்கைத்தீவின் அரசியல் இருப்பு இந்தியா சார்ததே. அதற்கான அடிப்படை இலங்கை-இந்திய புவிசார் அரசியலால் அல்லது அமைவிடத்தால் ஆனது. ஆதனை நிராகரித்துவிட்டு இலங்கைத் தீவின் அரசியலை கட்டமைப்பது கடினம். இது ஆயுதப் போராட்டத்தின் அனுபவமாகவே ஈழத்தமிழர் புரிந்துள்ளனர். இதனால் ஈழத்தமிழர் வடக்கு கிழக்கு அரசியலாக கட்டமைக்க வேண்டும் என்பதும் ஐக்கியமாக இருத்தல் வேண்டும் என்பதும் உணர்த்தப்படும் பாடமாகவுள்ளது. இந்தியாவுக்கும் அத்தகைய அரசியல் முதன்மையானது.

எனவே இந்திய வெளியுறவு அமைச்சரது வருகை தென் இலங்கையின் அரசியல் இருப்பை பலப்படுத்தும் நகர்வாக அமைவதோடு இந்தியாவின் அரசியல் பொருளாதார நலன்களை நிறைவு செய்வதாகவே உள்ளது. ஈழத்தமிழரை தொடர்ச்சியாக ஏமாற்ற முயலும் தென் இலங்கையை கையாள வேண்டிய பொறுப்பும் இந்தியாவுக்கே உண்டு. அதனை இந்தியா சாத்தியப்படுத்துமாக அமைந்தால் மட்டுமே இலங்கைத் தீவின் இந்திய நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு நீட்சிபெறவும் வாய்ப்புள்ளது. மாறாக கடந்தகாலங்களைப் போன்று தமிழ் தரப்புக்களுடனான சந்திப்புக்களுடன் முற்றுப்பெறுமாயின் எத்தகை விளைவையும் தமிழர் அரசியலில் அடைய முடியாது. இதனை தமிழ் அரசியல் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய தரப்புக்களை சந்திப்பதுதான் அரசியலாக உள்ளதே அன்றி மாற்றம் நிகழ்வதாக தெரியவில்லை. இந்தியா அழைத்த போது மௌனம் கொண்டவர்கள் சாக்குப் போக்கு சொன்னவர்கள் தற்போதைய சந்திப்புக்களில் எத்தகைய மாற்றத்தை எட்டப் போகிறார்கள் என்பது பிரதான கேள்வியாகும். ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சரை சந்திப்பதென்பது அல்ல முக்கியத்தவம் அத்தழைகய சந்திப்பால் தமிழர்களது அரசியலில் எத்தகைய மாற்றத்தை எட்டுவதென்பதே பிரதானமானது. காட்சிகளும் உரைகளுமல்ல அரசியல் செயல்களும் விளைவுகளுமே அரசியாகும். அதுவே வரலாறாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)