தமிழ் பொது வேட்பாளர் இலங்கை தீவின் அரசியலில் பாடிய மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார். கொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளர் ஒரு குறியீடாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் அத்தகைய அடையாளப்படுத்தல் இலங்கைத் தீவின் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலயும் அதனை அடிப்படையாகக் கொண்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் ஒழுங்கு முறைகளையும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் எண்ணங்களையும் புதிய திசைக்கும் நகர்த்தியுள்ளது. பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களின் அரசியல் நடைமுறை தமிழ் மக்களது ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் தேசியத்தையும் கட்டமைப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய முயற்சிக்கு நெருக்கடி உள்ளாக்கும் விதத்தில் பொதுக் கட்டமைப்பில் உள்ள அங்கம் வகிக்கும் கட்சிகள் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் அழைப்பை ஏற்றமை அதிக அதிர்ப்பியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது இக்கட்டுரையும் அத்தகைய குழப்பத்தின் அடிப்படை எண்ணங்களை தேடுவதாக உள்ளது.
பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திட்ட பின்னர் சில அரசியல் கட்சிகள் (மூன்று) தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் அழைப்பை ஏற்று உரையாடச் சென்றமை தமிழ் மக்கள் மத்தியில் அதிகமான அதிருப்த்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் அத்தகைய கட்டமைப்பில் ஒருங்கிணைந்த ஐக்கிய மன்றம் முன்வைத்த வாதங்கள் எல்லாவற்றையும் அக்கட்சிகள் உடைத்துவிட்டதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இத்தகைய விவாதங்கள் மத்தியில் இரண்டு மிகப் பிரதானமான நியாயப்பாடுகள் இருக்க முடியும் என்று கருத்து முதன்மைப்படுத்தப்படுகிறது. அதனை சற்று விரிவாக அவதானித்தல் அவசியமாகும்.
முதலாவது, அரசியல் கட்சிகளின் அடிப்படையில் கட்சிகளுடைய நலன்களை கருத்தில் கொண்டு கட்சியின் உறுப்பினர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியாக பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை அழைக்கப்பட்டபோது கலந்து கொண்டு உரையாடுவது தவறான புரிதலாக கொள்ள முடியாது என்று விவாதிக்கப்படுகிறது. காரணம் அரசியல் கட்சிகள் தமது எல்லைக்குட்பட்ட விதத்திலும் இலங்கை அரசியலுக்குள் தேர்தல் அரசியலோடும் அதன் நியதிகளோடும் பயணிப்பவர்கள். தென் இலங்கை அரசியலில் அதிகம் தங்கியிருப்பவர்கள். அதனால் அதிக முடிவுகளை நோக்கி அவர்கள் பயணிப்பது அதற்கான ஒரு உரையாடலை உருவாக்குவதும் தவறான அணுகுமுறையாக கொள்ள முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். அது ஒரு ஜனநாயக உரிமையாகக் கூட விவாதிப்பவர்கள் உண்டு. தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் விதத்தில் தனது வரைபுகளையும் உரையாடல்களையும் கொண்டுள்ளது. அதை கடந்து அவர்கள் பொது வேட்பாளர் என்ற தளத்தில் வடக்கு கிழக்கில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகின்றன எண்ணத்தோடு அத்தகைய உடன்பாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.
இரண்டாவது, தமிழ் பொது வேட்பாளர் என்பது குறியீட்டுக்காகவே அக்கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டவர்கள். அத்தகைய நிலையில் இருந்து அவர்கள் இன்னுமே விலக்காத நிலை காணப்படுகின்றது. தென் இலங்கையில் வெற்றி கூட்டணி எதிலும் அக்கட்சிகள் ஒப்பமிடாத வரையும் அக்கட்சிகள் பொதுக்கட்டமைப்பின் அங்கமாகவே காணப்படுகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் சார்ந்த எண்ணம் சரியானதாகவே அக்கட்சிகள் கருதுவதாக கொள்ள முடியும். ஆனால் தென் இலங்கை வேட்பாளர் ஒருவரது வெற்றிக்கு ஒப்பம் இடுவார்களாயின் அதற்கான விளைவுகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். அதே நேரம் இத்தகைய சந்திப்புக்களை தமிழ் பொது வேட்டபாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யவதற்கு வாலய்ப்பினைக் கொடுப்பார்களானால்; பொது கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பொதுச் சபையோடும் சேர்ந்து பயணிப்பது என்பது நெருக்கடிக்குரிய விடயமாக அமையும்.
மூன்றாவது தென் இலங்கை வேட்பாளர்களால் அழைக்கப்பட்ட போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சிவில் தரப்பினருக்கும் தனிப்பட்ட அழைப்புகளே முன்வைக்கப்பட்டது. அதனால் தனிப்பட்ட அழைப்புகள் என்ற அடிப்படையில் பொதுக் கட்டமைப்பு சாராத விதத்தில் அவர்கள் கலந்து கொள்வது நியாயமானதாகவே தெரிகின்றது. அவர்களுடைய நலன்களை பாதிக்கின்ற விதத்தில் அமைகின்ற இத்தகைய அழைப்பு தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குள் தமிழ் கட்சிகளின் அரசியல் காணப்படுகின்றது என்பது துயரமானதே. அதனால் தனிப்பட்ட அழைப்புக்கு மதிப்பளித்து கலந்து கொள்வது என்பது உத்தியாக கூட அக்கட்சிகள் கட்டமைத்திருக்க முடியும். கட்சிகள் என்ற அடிப்படையில் அத்தகைய உத்திகளை பயன்படுத்துவது நியாயமற்ற செய்முறை என்று விவாதித்துக் கொள்ள முடியாது.
மறுபக்கத்தில் தென் இலங்கை வேட்பாளர்களால் அழைக்கப்பட்டபோது அத்தகைய அழைப்பினை எவ்வாறு எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று விவாதங்கள் முன்வைக்கப்படுகிறன. அதன் அடிப்படையில்,
ஒன்று, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஐக்கியமாகவும் ஒருமைப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என்ற நோக்கோடு அத்தகைய அழைப்பினை பொதுகட்டமைப்பாக தவிர்க்க முயன்ற போது அதனை அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டிருக்க முடியும். அதற்கான அடிப்படைகளை பொதுக் கட்டமைப்பின் ஒப்பமிடுகிற போது எடுக்கப்பட்ட முடிவாகவும் அமைந்திருந்தது. அத்தகைய முடிவுக்கு பங்கம் விளைவிக்காத விதத்தில் பொதுக் கட்டமைப்பும் சிவில் தரப்புகள் எவ்வாறு அதனை எதிர்கொண்டது என்பதும் அதேபோன்று ஒர் அணுகுமுறையை குறித்த அரசியல் கட்சிகள் மேற்கொண்டு இருக்க வாய்ப்பு இருந்தது அத்தகைய வாய்ப்பினை அக்கட்சிகள் பயன்படுத்தி இருக்கக்கூடிய கால அவகாசமும் அதற்கான உரையாடலும் அதற்கான புரிதலும் பொதுக் கட்டமைப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது. தார்மீக அடிப்படையில் இத்தகைய உடன்பாட்டின் பின்னர் பொதுக் கட்டமைப்பில் கையெழுத்திடப்பட்ட பின்னர் அதனை மீறியிருக்க் கூடாது. இந்த அடிப்படையிலும் எந்த நோக்கத்துக்காக உடன்பாடு எட்டப்பட்டதோ அத்தகைய நோக்கத்தை நிறைவு செய்யும் விதத்தில் செயல்பட்டிருக்க வேண்டிய பொறுப்பாண்மை குறித்த அரசியல் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் அத்தகைய நிலையில் இருந்து அவர்கள் தவறு செய்திருப்பது எதிர்காலத்தில் அக்கட்சிகள் மீது மக்கள் கொள்ளுகின்ற அதிருத்தி தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்படக்கூடியதாக அமையும்.
இரண்டு, தென்னிலை வேட்பாளர்கள் எத்தகைய தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பது கடந்த 70 வருடங்களில் கண்டுகொள்ளப்பட்ட, அனுபவிக்கப்பட்ட அரசியல். அத்தகைய கோட்பாட்டு புரிதல் தவிர்க்க முடியாது எழுந்ததன் விளைவே தமிழ் பொது வேட்பாளர் என்ற குறியீடாகும். இதோ குறியீட்டுக்கு கட்டுப்பட்ட பின்னர் மீண்டும் தென்னிலங்கையில் உள்ள வேட்பாளர்கள் மீது நம்பிக்கை கொள்வதும் அவருடைய அழைப்பு ஏற்று உரையாடுவதும் நியாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத அம்சமாகவே காணப்படுகிறது. ஒரு நீண்ட நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை கருத்தில் கொள்ளாது வெறும் பொருளாதாரப் பிரச்சனையாகவும் கட்சிகளையும் தனி நபர்களையும் கையாளுகின்ற அரசியலாகவும் கருதுகின்ற தென்னிலங்கைச் சூழலானது தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் மட்டும் தீர்வினை வழங்கி விடும் என்று கருதுவது எந்த வகையில் நியாயத்தன்மை பொருந்தியது. இதனை ஏதாவது ஒரு தர்க்கத்தினால் நியாயப்படுத்த முடியுமா?
மூன்று, இவ்வாறு கடந்த கால அனுபவங்களையும் வரலாற்றையும் கற்றுக் கொண்ட அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தரப்புகளான தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறு தமிழ் பொதுக் கட்டமைப்பிலும் அதே சமதூரத்தில் தென்னிலங்கை வேட்பாளருடனும் ஒத்துழைப்போடு பயணிப்பது என்பது அடிப்படையில் அரசியல் தருமத்துக்கும் நியாயத்துக்கும் விரோதமானது. அதிக விரோதமான செயலை நியாயத்தன்மை கொண்டதாக முதன்மைப்படுத்த முடியாது. இதனால் இத்தகைய செய்முறை சார்ந்த விவாதங்களில் பொதுமக்கள் அதிகமான அதிர்ச்சியோடு காணப்படுகின்றனர். அத்தகைய அதிருப்தி கட்சிகளை நோக்கியும் அதன் தலைவர்களை நோக்கியும் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கை வேட்பாளர் மீதான எந்தளவுக்கு நம்பிக்ககை இழக்கப்படுகிறதோ அதேயளவுக்கு அத்தகைய அதிர்ச்சி பங்கெடுத்த அரசியல் கட்சிகளின் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.
இதே நேரம் இத்தகைய பொதுக்கட்டமைப்பு முறையில் ஒப்பமிட்டு கொண்ட ஏனைய நான்கு கட்சிகளும் சிவில் தரப்புக்களும் தென் இலங்கையின் அழைப்பை சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டிய விதத்தில் செயல்படுகின்ற போக்கினை வெளிப்படுத்தி இருக்கின்றன. தென் இலங்கையின் அழைப்பை மீறாத விதத்தில் பொது கட்டமைப்பானது தெளிவான பதிலை வழங்கியிருந்தது. சிவில் அமைப்புகள் தென் இலங்கை அழைப்பை எதிர்கொள்ளும் உத்தியோடும் திராணியோடும் காணப்படுகின்றன. அது மட்டுமின்றி தமிழருடைய நலன்களை முன்னிறுத்திக் கொண்டு அத்தகைய தரப்புகள் செயல்படுகிறன. சிவில் தரப்புக்களோடு உடன்பட்டு கொண்ட கட்சிகள் அதனை மீறுவது என்பது நியாயமற்ற செய்முறையாகவே தெரிகிறது. பொது மக்களாலும் ஊடகப் பரப்பாலும் பார்க்கப்படும் தமிழ் சிவில் அமைப்புகளை பொறுத்தவரையில் அவை தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகவும் அதே நேரம் பொது கட்டமைப்பாகவும் தொழிப்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் இக்கட்டமைப்புக்குள் புதிய உறுப்பினர்களை உள்வாங்கவும் புதிய கட்சிககை இணைக்கவும் ஜனநாயகபூர்வமாக அவற்றை கையாளவும் முயலுகின்றனள. அவ்வாறு அத்தகைய அழைப்புகளை முன்வைப்பது போன்று பொது கட்டமைப்பிலிருந்து அதில் ஒப்பமிட்ட தரப்புகள் இருந்தும் அத்தகைய செய்முறையில் சேர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிற போது அத் தரப்புகள் தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற வகையில் வெளியேறுவதற்கான ஜனநாயக உரிமை அத்தரப்புகளிடம் ஒப்படைத்திருக்கிறன. எவ்வாறு பிற கட்சிகளையும் அமைப்புகளையும் உள்வாங்குவதற்கு பொதுக் கட்டமைப்பும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் திறந்து இருக்கின்றதோ அதேபோன்று இத்தகைய உடன்பாடுகளில் சேர்ந்து பயணிக்க முடியாத தரப்புகள் வெளியேறுவதற்கான அனுமதியும் இந்த பொதுக் கட்டமைப்பிடம் உண்டு. இது ஜனநாயக பூர்வமான உரிமைகளை ஏற்றுக் கொள்கின்ற கட்டமைப்பு என்ற அடிப்படையில் செயல்பட விரும்புகிறது. அதனை நோக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் பொதுக் கட்டமைப்பும் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு தனது இருப்பை பாதுகாத்துக் கொண்டு அதனுடைய அங்கத்துவத்தை சரி செய்வதும் மீளமைப்பதும் புதியவற்றை உள்வாங்குவதும் பொருத்தம் அற்றவற்றை வெளியேற்றுவதும் தவிர்க்க முடியாத செய்முறையாக மாறி உள்ளது. இதற்காக பொது கட்டமைப்பு காணாமல் போய்விட்டது என்றோ பொதுமக்கள் சபை முடிவுக்கு வந்துவிட்டது என்றோ விவாதிக்க முடியாது. அத்தகைய விவாதத்துக்கான எத்தகைய வாய்ப்புகளும் ஒப்படைக்கப்பட மாட்டாது. மாறாக ஆரோக்கியமான பயணத்தைச் செய்யக்கூடிய தரப்புகளோடு இணைந்து பயணிப்பதற்கான செய்முறையை பொதுமக்கள் சபையும் பொது கட்டமைப்பும் கொண்டிருக்கின்றது. அதனை மீறும் தரப்புக்களை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
