அரசியல் கட்டுரைகள்

சங்குச்சின்னம் யாருக்கு உரித்துடையது?

2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கிலும் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையில் கட்சிகளும், சுயாதீன குழுக்களும் போட்டியிடுவதற்கான முன்னாயர்த்தங்களை மேற்கொண்டு வருகின்றன. வடக்கு-கிழக்கில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்கின்ற ஒரு பொதுக் குறியீடோடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அதிகமான குழப்பங்களையும் நெருக்கீடுகளையும் எதிர்கொண்டுள்ளது. தமிழ் மக்கள் பொதுச் சபை அண்மைய வாரங்களில் சில தீர்மானங்களை வெளிப்படுத்தி உள்ளது. அதன்பிரகாரம், ‘தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதில்லை என்றும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சின்னமாகிய சங்கினை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்றும்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையும் சங்கு சின்னம் தொடர்பில் எழுந்திருக்கின்ற வாத பிரதிவாதங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முன்வைக்க முயலுகிறது.

சங்கு சின்னம் யாருடையது என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுப்பப்படுகிறது. 2024ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தையும், கட்சிகளின் ஒருமைப்பாட்டையும் முன்னெடுத்துகின்ற விதத்தில்; ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஏழு தமிழ் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தலில் கணிசமான வாக்குகளை சங்கு சின்னத்தில் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு அமைந்திருந்தது. ஆனால் சங்கு சின்னம் என்பது தேர்தல் திணைக்களம் சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கிய சின்னமாகவே அமைந்திருந்தது. ஏற்கனவே சங்கு சின்னத்தை தென்னிலங்கையின் ஜாதிக ஹெல உறுமய கட்சி பயன்படுத்தி இருந்தது. அதன் பதிவு செயலற்ற நிலையிலேயே, சங்குசின்னம் சுயாதீன வேட்பாளர்களுக்கான சின்ன பட்டியலில் உள்வாங்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கப்பட்டிருந்தார். சுயேட்சை வேட்பாளருக்கான சின்ன பட்டியலிலிருந்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ப் பொது வேட்பாளரும் ஒரு சில அவரது ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து, சங்கு சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்துவது என கருதி பெற்றுக் கொண்டனர். அத்தகைய சின்னம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அதன் ஆறாவது சரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. ‘தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்படுபவர் மற்றும் அவரது தேர்தல் சின்னம் தமிழ் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இச்சின்னம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிந்தைய போக்குகளை அவதானிப்பது அவசியமானது ஆகும்.

முதலாவது, சட்டரீதியில் சங்கு சின்னம் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்கோ அல்லது தமிழ் மக்கள் பொதுச்பைக்கோ அல்லது தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. அது தேர்தல் திணைக்களத்தினால் தேர்தலை எதிர்கொள்ளுகின்ற சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்ட ஒரு சின்னமாகும். அதனால் சின்னத்தை மீளக்கோருவதும், தமிழ் மக்கள் பொதுச் சபைக்கு உரியது என்றும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குரியது என்றும் விவாதிப்பது சட்டரீதியில் பொருத்தமற்ற அம்சமாகும். ஆனால் தார்மீகரீதியில் பொதுச் சபையின் எண்ணத்துக்குட்பட்டு சங்க சின்னம் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினால் தமிழ் மக்களிடம் அதிகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. சங்கு சின்னத்தை நோக்கி சாதாரண தமிழ் மக்கள், ‘தமிழரின் அடையாளம் மற்றும் அதன் கீழ் எதிர்காலத்தில் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்றும் தேர்தலில் பங்களிப்பதற்கு சங்கு அவசியமானது என்றும்’ ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. 226,343 வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நோக்கி தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை இடும்போது சங்கச் சின்னத்தை தமது சின்னமாக கருதியுள்ளனர். இதனால் தவிர்க்க முடியாது தொடர்ச்சியாக சங்கு சின்னம் தமிழர்களுக்கு உரியதாக மாற்றப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். அதற்கு வலுவான இன்னொரு காரணம் தமிழ் மக்கள் நம்பி இருந்த தமிழ்த் தேசிய கட்சிகள் தமக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் பகைமையினாலும் ஒரு புதிய சின்னத்தை நோக்கி தமிழ் மக்கள் நகர வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளனர். அதேநேரம் உடன்படிக்கையின் பிரகாரம் அத்தகைய சின்னத்தை எந்த காரணம் கொண்டும் பொது நிலைப்பாட்டுக்குரிய குறியீடு என்ற எண்ணப்பாங்கில் இருந்து விலக்கிக்கொள்ள முடியாது என்பதும்; பொதுநல நிலைப்பாட்டில் உள்ள சூழலை நோக்கி கட்சிகளும் பொதுச் சபையும் கட்டமைக்கப்படுகின்ற போது மட்டுமே அது தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ள முடியும். ஆனால் தார்மீகரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சங்கு சின்னத்தை மீளவும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்வது என்பது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவாக உள்ளது. அதனால் சட்ட ரீதியாக கோரப்பட முடியாத நிலை இருந்தாலும், தார்மீகரீதியில் மக்கள் கோரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழ் கட்சிகள் தனித்து சில முடிவுகளை மேற்கொள்வது உடன்பாடுகளையும் நியாயப்பாடுகளையும் பொறுப்புகளையும் மீறுவதாகவே கருதப்படும்.

இரண்டாவது, தமிழ்க் கட்சிகள் அதிலும் குறிப்பாக பொதுக் கட்டமைப்பில் இணைந்து பயணித்த ஏழு கட்சிகளில் ஐந்து கட்சிகளின் கூட்டு சங்கு சின்னத்தை தனதாக்கியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுச்சபையின் உடன்பாட்டின் பிரகாரமும், பொதுச்சபையின் அண்மைய முடிவு பொருத்தும் அத்தகைய செய்முறை தார்மீகரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கருதப்படுகின்ற நிலை நியாயமானதாகவே உள்ளது. ஆனால் சங்குச் சின்னம் மக்கள் கூறுவது போல் அல்லது அவர்கள் விளங்கிக் கொள்வது போல் தமிழர்கள் தமது அடையாளமாக அல்லது குறியீடாக கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றை கட்சிகள் துணையோடு செயற்பட்டு ஏனைய கட்சிகளோ அல்லது சுயேட்சை குழுக்களோ அதனை பாவிக்காத வகையில் கையாண்டிருப்பது கவனத்திற்குரியது. மறுவலமாக இச்சின்னத்தை பொதுக்கட்டமைப்பில் இருக்கும் பொதுச் சபை உறுப்பினர்கள் பொதுச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் இதனை பாவிக்க முடியாது என்ற கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் அது பாரிய நெருக்கடியை அக்கட்சிகளுக்கு ஏற்படுத்தும். தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என்ற நிலைப்பாட்டை முன்னுரிமை அளிப்பதாகவே பொதுச்சபை தொடர்ச்சியாக உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன. மக்களுடைய கோரிக்கைகள் கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் பங்களித்த அனைத்து நபர்களது முடிவுகள் அல்லது கருத்துக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதன்மைப்படுத்தி வருகிறது. அதனை பொதுக்கட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக பயணிப்பது என்றும் ஐக்கியத்தை பேணுவதென்றும் கூட்டாக முடிவுகள் எடுப்பது என்றும் பொருள் கொள்ள முடியும். அவ்வாறாயின் பொதுக்கட்டமைப்பு, பொதுச்சபையின் முடிவுக்கு அமைவாக செயல்பட வேண்டிய பொறுப்பாண்மைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறல் என்பது தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொதுச் சபையும் அரசியல் கட்சிகளும் உருவாக்கிய பொதுக் கட்டமைப்புக்கும் உரித்து உடையது.

எனவே பாராளுமன்றத் தேர்தலை பொதுக் கட்டமைப்பாக எதிர்கொள்வதற்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்ற சூழலில், சங்கு சின்னம் தமிழர்களுடைய அரசியல் கட்சிகளிடம் காணப்படுவதும் எதிர்கால தேர்தல்களில் அச்சின்னத்தை பாவிப்பது தொடர்பிலும் ஒரு தெளிவான முடிவுக்கு தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு நகர வேண்டும். அதற்கான ஆரோக்கியத்தை சமதரப்புகளாக விளங்குகின்ற பொதுச் சபையும் அரசியல் கட்சிகளும் தீர்மானத்துக்கு வர வேண்டும். சங்கு சின்னம் பொதுச்சபையின் பங்களிப்போடு குறியீடாக மாற்றப்பட வேண்டும். கட்சிகள் கோருவது போன்று அதனை கட்சிகளின் விருப்புகளுக்கு முடக்கி விட முடியாது. எனவே எதிர்காலத்தில் அதுக்கான தீர்மானங்களை முன்னெடுக்கின்ற போது அதனை பொதுச்சபையும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அமைத்திருக்கின்ற பொதுக் கட்டமைப்பினூடாக தீர்மானங்களை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்லுதல் பொருத்தமானதாகும்.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)