2009க்கு பின்னரான இலங்கை தீவின் அரசியல் அதன் கடந்த காலம் போன்று இனப்பிரச்சினையை மையப்படுத்தியதாக நகர்ந்து செல்கிறது. செப்டம்பர்-08 (2025) ஜெனீவாவில் தொடங்கிய 60வது மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இலங்கை தீவின் அரசியலை கொதிநிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஈழத்தமிழர் மீது மனித உரிமை சார்ந்து இழைக்கப்பட்ட அநீதிக்கான விசாரணைக்கு நியாயாதிக்கம் வழங்கவும் அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கும் மனித உரிமை பேரவையும் அதன் அனுசரணை வழங்கும் நாடுகளும் கடந்த 16 வருடங்களாக முயன்று வருகின்றன. அக்காலபகுதி முழுவதும் இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை மூலம் ஈழத்தமிழர் இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தையும் தாம் வழங்க தயாராக இருப்பதாக கூறி வருகின்றது. அதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஏற்று அணுகிவருகின்றன. இக்கட்டுரையும் உள்ளக பொறிமுறையை ஏன் ஈழத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை முன்வைப்பதாக அமைக்கப்படுகிறது.
உள்ளக பொறிமுறை என்பது இலங்கை தீவின் அரசியல் அமைப்பு வரைபுக்குள் முன்வைக்கப்படும் சட்ட மற்றும் ஒழுங்கு சார்ந்த நியாயாதிக்க செய்முறையாக புரிந்து கொள்ளப்படுகிறது. இலங்கை தீவில் சுதந்திர காலப்பகுதியில் இருந்து இத்தகைய உள்ளக பொறிமுறை ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்ட அனைத்து இன அழிப்புகளையும் படுகொலைகளையும் கேள்விக்கு உட்படுத்தாது செயல்பட்டது மட்டுமன்றி அத்தகைய அழிப்புகளுக்கு உதவியுமுள்ளது என்பதும் ஈழத்தமிழரின் புரிதலாக அமைந்துள்ளது. அவ்வகையான ஓர் உள்ளக பொறிமுறையின் மீது நம்பிக்கை கொள்வது எப்படிச் சாத்தியமாகும். ஈழத்தமிழர்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்ளக பொறிமுறை நியாயத்தை வழங்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. அதற்கான காரணத்தை ஆழமாக தேடுதல் வேண்டும்.
முதலாவது இலங்கையின் அரசியல் அமைப்பு பெரும்பான்மை இனத்தின் நலன்களை மட்டுமே பிரதிபலிப்பதாக உள்ளது. அரசியல் அமைப்பின் அதிகார கட்டமைப்பு நிர்வாக அணுகுமுறைகளும் நியாயாதிக்க செய்முறைகளும் பெரும்பான்மை இனத்தின் அதிகார வர்க்கமும் அதனை பாதுகாக்கும் முப்படைகளையும் பௌத்த மதத்தையும் அதன் அணிகலன்களையும் பேணுகின்ற செய்முறையோடு யாப்பின் வரைவுகள் முன்னுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பௌத்த மதத்திற்கு சிங்கள மொழிக்கும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கும் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற கட்டமைப்புக்கும் முக்கியத்துவம் வழங்கியிருகிறது. பெரும்பான்மை மக்களுக்கு வழங்கியுள்ள எத’தகைய முக்கியத்துவமும் ஏனைய சிறுபான்மை தேசியங்களுக்கோ அவர்கள் பின்பற்றும் மதத்திற்கோ மொழிக்கோ வழங்கப்படவில்லை. இலங்கை தீவை ஒரு பல்லின சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நாடாக இனங்காட்டத் தவறியிருக்கிறது. அரசியலமைப்பின் உள்ளடக்கம் முழுவதும் அதன் சட்டங்களும் சரத்துக்களும் முழுமையாக தென்னிலங்கை அதிகார வர்க்கத்தின் நலன்களுக்கு மட்டும் இசைந்து கொடுக்கும் அல்லது முதன்மைப்படுத்தும் முறைமையாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் சிறுபான்மை தேசியங்களுக்கு சட்டத்திருத்தத்தில் முன்னுரிமை கொடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்தாத அரச இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
இரண்டாவது 1948ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த அனைத்து இனப்படுகொலைகளுக்கும் குழுக்களாக தனியன்களாக மற்றும் தனியான இராணுவ அணிகளாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தும் விதத்தில் நியாயாதிக்கத்தின் போக்கு காணப்படுகிறது. அதன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கான தண்டனைகளின்றியும் விசாரணைகளில் உண்மை தன்மைகள் இன்றியும் நீதி செய்முறை முன்னெடுக்கப்படாமலும் அநீதி இழைக்கப்படுகிறது. மாறாக அத்தகைய குற்றச்செயல் என்பதை குற்றமாக கூட கருதாத நிலை ஒன்றை இலங்கைத் தீவின் நியாயாதிக்க மன்றுகள் கொண்டிருக்கின்றன. அது ஈழத்தமிழருக்கு மட்டும் அத்தகைய நியாயாதிக்கும் பலவீனப்பட்டதென்று கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது. மாறாக சிங்கள இளைஞர்களுக்கும் ஜே.வி.பி.க்கும் எதிராகவும் அத்தகைய அநீதி அரங்கேற்றப்பட்டிருந்தது. இது ஜே.வி.பி. இன் ஆட்சியிலும் அதே வடிவம் பின்பற்றுவதற்கான ஒரு செய்முறை ஒன்றையே அரசாங்கம் ஜெனீவாவில் நிகழ்த்தியுள்ளது.
மூன்றாவது, உள்ளக பொறிமுறை ஊடாக சாதாரண சிங்கள மக்களையும் சிங்கள இளைஞர்களையும் படுகொலை செய்ததைக்கூட ஜே.வி.பி.யினுடைய ஆட்சியில் விசாரிக்கப்பட முடியாதுள்ளது. தனது படுகொலைகளையும் அழிப்புகளையும் நியாயப்படுத்துகின்ற அதிகார வர்க்கமாக ஜே.வி.பி மாறிவிட்டது. இத்தகைய படுகொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் அதிகார வர்க்கம் கூறும் நியாயம் இலங்கை தேசியத்தின் பாதுகாப்பும் இறைமையும் ஒருமைப்பாடும் என்பதாகும். அதனையே முன் நிறுத்தி அதிகார வர்க்கம் படுகொலைகள் இனப்படுகொலைகள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் ஊழல்களையும் ஆக்கிரமிப்புகளையும் நியாயப்படுத்தி வருகிறது. அரசும் அரசாங்கமும் அதன் எல்லைக்குட்பட்ட மக்களின் நலனுக்கானது என்பது அறிவுபூர்வமாகவும் நியாயாதிக்குட்பட்ட விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைபாகும். அதனை ஒரு தரப்பு ஆதிக்கம் செய்வது என்பது இலங்கையின் அரசியலமைப்பு வரைபில் உள்ளடக்கமாகும். 1953,1958,1983 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பாரிய இன அழிப்பு நடவடிக்கைக்கு எத்தகைய நியாயாதிக்கமும் உள்ளக பொறிமுறையால் சாத்தியப்படுத்த முடியவில்லை. அவ்வாறு ஜே.வி.பி. அரசாங்கம் குறிப்பிடுவது போல் அதே அரசியலமைப்பு வரைவுக்குள் இருந்து கொண்டு அதே வகையான மேலாதிக்க மனோநிலையில் செயல்பட்டுக் கொண்டும் உள்ளக பொறிமுறை நியாயாதிக்கத்தை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் என விவாதிப்பது சரியாதா என்ற கேள்வி முக்கியமானது. இதில் ஜே.வி.பி. அரசாங்கமே கடந்த காலத்தில் ஜேவிபி தோழர்கள் மீது 1972 மற்றும் 1989 களில் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் கூட அதனால் நியாயாதிக்கம் பெற முடியவில்லை. ஜே.வி.பி ஆட்சியை தனதாக்கி இருக்கிறதே அன்றி தனது தோழர்களுக்கும் தோழர்களை மையப்படுத்தி இருந்த போராட்டத்தின் இலட்சியத்திற்கும் எந்த அடிப்படையிலான் நியாயாதிக்கத்தையோ அதனால் வழங்கவோ முன்னெடுக்கவோ முடியவில்லை. அவ்வாறு ஜே.வி.பி.யின் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களின் இரத்தத்திலும் சதையிலும் என்புக்கூடுகளிலும் கட்டமைக்கப்பட்டதே ஜே.வி.பி. அரசாங்கம். அந்த மக்களுக்காக எத்தகைய நியாயாதிக்கத்தையும் அதனால் வழங்க முடியவில்லை. சிறந்த எடுத்துக்காட்டு பட்டலந்தவதை முகாம் தொடர்பிலான நியாயாதிக்கம். ஒரு சிறிய தண்டனையை கூட அதிகார வர்க்கத்தின் மீது ஜே.வி.பி. அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. அவ்வாறெனில் ஈழத்தமிழர் மீதான படுகொலைகளையும் வன்முறைகளை ஆக்கிரமிப்புகளையும் அதனால் எவ்வாறு நியாயாதிக்கத்துக்கு உட்படுத்த முடியும்.
நான்காவது, ஈழத்தமிழரின் வாழ்விடமாகிய வடக்குக் கிழக்கு மீது ஜே.வி.பி. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிற்பாடு ஏற்பட்டு வரும் முறைமை மாற்றம் அரசியல் அமைப்பு சார்ந்து அதன் இலக்குச் சார்ந்தம் சாத்தியப் பாடான ஏதாவது ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கின்றதா என்ற கேள்வி ஈழத்தமிழரிடம் உண்டு. குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டம், அவசர காலச்சட்டம், நில ஆக்கிரமிப்பு இராணுவ குடியேற்றம், தமிழர்களின் நிலங்கள் மீது கலாச்சாரத்தையும் தொல்லியல் மரபுகளையும் முன்வைத்துக் கொண்டு நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கையை ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொண்டு இருக்கின்றதா என்ற கேள்வி உள்ளக பொறிமுறை வடிவத்தை உணர்ந்துகொள்ள போதுமானது. இவை எந்த அடிப்படையிலும் தடுத்து நிறுத்தப்படவில்லை. மாறாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல கோடி செலவுகளில் சாத்தியமற்ற அமுல்படுத்த முடியாத மாற்றங்களை உருவாக்க முடியாத செயற்பாடுகளுக்கான அறிவிப்புகளை அவ்வப்போது முன்வைத்து வருவதும் வடக்கு கிழக்கு நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்வதன் மூலம் உள்ளக பொறிமுறையை சாத்தியப்படுத்திவிடலாம் என கருதிவிட முடியாது. ஈழத்தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பே அவர்கள் மீதான அபிவிருத்தியையும் அதற்கான மாற்றங்களையும் தோற்றுவிக்க முடியும். மாறாக அந்த மக்கள் துயரங்களோடும் வலிகளோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற போது மாற்றத்தை பற்றி உரையாடுவது என்பது ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனத்தை அடையாளப்படுத்துவதாகவே தெரியும். நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டு தமிழ் மக்களின் நிலங்களில் காணப்படும் இராணுவ குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது, நில ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியாது மனித உரிமைகளை பேண முடியாது செயல்படும் அரசாங்கம் முன்னைய படுகொலைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நியாயத்தை உள்ளக பொறிமுறையினால் வழங்குவது எவ்வாறு சாத்தியமாகும்.
எனவே உள்ளக பொறிமுறை என்பது இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் நீட்சியாகவும் அத்தகைய பொறிமுறை சிங்கள-பௌத்த தேசியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்க்க முடியாத புரிதலாகும். அது இலங்கையின் அரசியல் அமைப்பு வரைவுகளுக்குள்ளால் முழுமையான இருப்பைக் கொண்டிருக்கிறது. எனவே தான் இத்தகைய உள்ளக பொறிமுறையை ஈழத்தமிழருக்கு நியாயத்தை வழங்காது என்பதை அனுபவங்கள் ஊடாகவும் கடந்தகால அழிப்புகளுக்கு ஊடாகவும் ஈழத்தமிழர்கள் கண்டுள்ளனர். அதனாலேயே உள்ளக பொறிமுறையை சாத்தியமற்ற என்ற விவாதத்தை முன்வைக்கிறார்கள். வலதுசாரி அரசாங்கங்கள், கலப்பு அரசாங்கங்கள், நல்லாட்சி அரசாங்கங்கள், அனைத்துமே அத்தகைய மேலாதிக்க மற்றும் பக்கச்சார்புடைய அரசியலமைப்பு வரைபுக்குள் ஈழத்தமிழருடைய இனப்பிரச்சினையை அடையாளம் கண்டது. அதே அளவீட்டுக்குள்ளால் இடதுசாரி அரசாங்கமும் இரு தடவை புரட்சியை இலங்கைக்கு ஏற்படுத்த முயன்று தோற்றுப்போன ஜே.வி.பி அரசாங்கமும் பின்பற்றுவதற்கு விளைகிறது. சுயநிர்ணயத்தின் முன்னோடிகள் இடதுசாரிகள். அவர்களின் வழித்தோன்றல்கள் எனக்கூறும் ஜே.வி.பி. இனரது உள்ளக பொறிமுறை எதனைக் குறிக்கிறது என்பது விவாதத்திற்குரியது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
