அரசியல் கட்டுரைகள்

இலங்கை-இந்திய உறவின் மையமாக கொழுப்பின் கிழக்கு முனையம் மாறியுள்ளதா?

இலங்கை -இந்திய உறவு புவிசார் அரசியல் உறவாகவே நோக்கப்பட வேண்டியது. இலங்கையின் அனைத்து அரசியல் போக்குகளுக்கும் இந்தியா மையப்புள்ளியாகவே உள்ளது. இதனால் இந்தியாவைக்கடந்து பூகோள அரசியல் பெறுமானத்தை நோக்கி இலங்கை நகர்வது கடினமானதாகவே உள்ளது. ஆனாலும் இலங்கை பூகோள அரசியல் முனைப்புக்களை முன்கொண்டு இந்தியாவை கையாள முனைவதும் அது பின்பு நெருக்கடியைத் தருவதுமாக இலங்கையின் அரசியல் இருப்பு காணப்படுகிறது. அத்தகைய குழப்பமிக்க அரசியல் களத்திற்குள் இலங்கை இந்திய உறவு நகருவதனைக் காணமுடிகிறது. குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் பொறுத்து ஏற்பட்டுள்ள களத்தை தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் கட்டமைப்புக்கும் விருத்திக்குமான நடவடிக்கைகளை இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் மேற்கொள்வதற்கான உடன்படிக்கை 2015இல் இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இந்தியா கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது முன்னெடுத்துவரும் நகர்வுகள் உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் சர்வதேச அங்கீகாரத்தை கொண்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் கைவிடப்படுவதென்பது இரு நாட்டுக்குமான தீர்மானங்களை பொறுத்தது. ஏதாவது ஒரு நாடு அத்தகைய தீர்மானத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டால் உடன்படிக்கை உறுதியானது தவிர்க்க முடியாததாகும். அந்த வகைக்குள்ளேயே கிழக்கு முனையம் தொடர்பான உடன்படிக்கை காணப்படுகிறது. அதுமட்டுமன்றி கொழும்புத் துறைமுகத்தின் தென் பகுதி சீனாவுக்குரியதாக உடன்பாட்டின் பிரகாரம் அமைவதனால் இந்தியா அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. இதற்குப் பின்னாலுள்ள பிரதான அரசியலாக இந்திய-சீனப் போட்டி அமைந்துள்ளது. இலங்கை சீனாவுக்கா இந்தியாவுக்கா என்ற இழுபறியின் பிரதிபலிப்பாகவே கொழும்புத் துறைமுகத்தின் அல்லது நிதி நகரத்தின் அபிவிருத்தி அகப்பட்டுள்ளது.

உடன்பாட்டின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதில் ஏன் தற்போதைய அரசாங்கத்திற்குள் குழப்பம் நிலவுகிறது. அத்தகைய குழப்பம் காரணம் என்ன என்பது பிரதான கேள்வியாகும். அதிலும் இலங்கையின் ஜனாதிபதி துறைமுக தொழில் சங்கங்களை அழைத்து தெளிவாக கிழக்கு முனையத்தின் 49சதவீதம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமுரியது எனவும் இலங்கைக்கு 51சதவீதம் என்பதன் பின்பும் ஏன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 100சதவீதமும் இலங்கைக்கே உரியது எனவும் அந்நிய நாடுகளுக்கு கொழும்புத் துறைமுகம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார். அதிலும் துறைமுகத்தொழில் சங்கங்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்திலும் வைத்து அத்தகைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பட்ட தகவலை வெளிப்படுத்துவது தொழில் சங்கங்களையும் மக்களையும் திருப்திப்படுத்தவே என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனைக் கடந்து வேறு சில விடயங்களும் கிழக்கு முனையத்தில் காணப்படுகிறது. அவற்றை விரிவாக நோக்குவோம்.

ஒன்று, இத்தகைய முரண்பாட்டையும் குழப்பத்தையும் வெளிப்படுத்துவதென்பது இலங்கை ஆட்சியாளரின் இராஜதந்திரமாகவே தெரிகிறது. இதுபோன்ற தந்திரோபாய மரபுடனேயே இலங்கையின் கடந்த கால அரசியல் நகர்ந்துள்ளது. குறிப்பாக 1987இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கை இந்திய உடன்பாட்டினை நெருக்கடியின் நிமித்தம் மேற்கொள்ள முயன்றபோது அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாஸா ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இந்திய-இலங்கை உடன்படிக்கை பற்றி காரசாரமான எதிர்வினைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமன்றி இலங்கையின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமிழரது தீர்வு விடயத்தில் மட்டுமல்ல இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையிலும் ஒரே வகையான இயல்பையே கடைப்பிடித்து வந்துள்ளன. அதாவது ஆளும் கட்சி நட்புறவை பலப்படுத்த அல்லது ஆளும் கட்சிக்குள் ஒருசாரார் நட்புறவை பலப்படுத்த இன்னோர் பிரிவினர் அதற்கு முற்றிலும் எதிரான முரண்பட்ட போக்கினை கடைப்பிடிப்பதனைக் காணமுடிகிறது. அதிலும் முக்கியமாக இந்தியா தொடர்பான உறவிலேயே அத்தகைய போக்கினை கொண்ட மரபான இராஜதந்திரத்தை இலங்கை ஆட்சியாளார்கள் பின்பற்றி வருகின்றதைக் காணமுடிகிறது. இதனையே கிழக்கு முனையத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் சகோதரர்கள். இருவருக்குள்ளும் எந்த முரண்பாட்டு கொள்கையும் கொண்டிருக்காதவர்கள். இதில் மட்டும் ஏன் முரண்படுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். அப்படியாயின் இது முரண்பாடு கிடையாது. இது ஒரு தந்திரேபாய நகர்வாகவே தெரிகிறது. இந்தியாவுக்கு இந்த முரண்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டு கைவிடச் செய்தல். அதாவது கிழக்கு முனையத்தை இந்தியா பெற முடியாத நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துதல். அதற்கு வலுவான காரணமாக தொழில் சங்கங்களை முன்நகர்த்துதல்.

இரண்டாவது, தொழில்சங்கங்களது போராட்டம் வலுவான எதிர்ப்புவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் தொழில்சங்கங்கள் வலுக்குன்றிய நிலையில் இலங்கையில் மட்டும் மிகப்பலமான தொழில்சங்கங்களைக் காண முடிகிறது குறிப்பிடத்தக்கது. அதிலும் துறைமுகத் தொழில் சங்கங்கள் வலுவானதாக உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய அரசாங்கத்தின் துறைமுக நகர்வுகளை எல்லாம் தீர்மானிக்கும் வலிமை தொழில் சங்கங்களுக்குரியதாகவும் தொழில் சங்கங்களில் நிபந்தனைகளை அங்கீகரிக்கும் அரசாங்கமாகவும் இந்த இடத்தில் தற்போதைய அரசாங்கம் காணப்படுவதென்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய விடயமாகும். இவை எல்லாம் சாத்தியமானவையா என்பது பிரதான கேள்வியாகும். அல்லது திட்டமிட்டு சாத்தியப்படுத்தப்படுகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இலங்கையில் அனேக தொழில் சங்கங்கள் தமக்கான கோரிக்கைகளுடன் பேராட்டம் நடாத்தி வருகின்றன. அவை அனைத்தும் தேர்தல் காலத்தில் மட்டும் கவனிக்கப்படும் நிலை ஒன்றுள்ளது. ஆனால் கிழக்கு முனையம் தொடர்பில் மட்டும் தொழில் சங்கங்களது போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் நிலை அதீதமாக காணப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினைக் கூட தொழில்சங்கங்கள் கட்டுப்படுத்தும் வலிமை காணப்படுகின்றன. அப்படியாயின் வேறு நாட்டின் பின்புலத்துடன் அந்த தொழில் சங்கங்கள் இயங்குகிறதா என்ற சந்தேகம் ஊடகப்பரப்பில் ஏற்படுத்தப்படுகிறது.

மூன்றாவது, பௌத்த தேரர் பத்திரமுல்லே சீலரத்ன இலங்கையின் பிரதமரை சந்தித்த பின்பே ஊடகங்களுக்கு இந்தியாவின் இலவச தடுப்பூசியையும் கிழக்கு முனையத்தையும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். பிரதமரது ஆரோக்கியம் பற்றியும் அவருடன் மூன்று மணித்தியாலங்கள் தாம் செலவளித்தது பற்றியும் அவர் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அப்படியாயின் பௌத்த தேரர்களது கிழக்கு முனையம் தொடர்பான எதிர்பின் பின்புலம் தெளிவாகத் தெரிகிறது. இதனையே இலங்கையின் வரலாற்றில் அனேக காலங்களின் பதிவுகளாகக் காணமுடிகிறது. இதன் மிக உச்சமான கட்டமாக பண்டாரநாயக்காவின் காலப்பகுதியை அடையாளப்படுத்தலாம். அதன் இன்னோர் கட்டமாகவே தற்போதைய நகர்வு அமைந்துள்ளது.

நான்காவது, இவ்வாறு தொழில் சங்கங்களையும் பௌத்த பிக்குமாரையும் அரசாங்கத்திற்குள் இருந்து எதிர்ப்பினைக் காட்டுபவர்களது முடிபுகளைக் கொண்டு கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காது செயல்பட ஆளும் தரப்பு முனைகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்றும் இந்தியாவினது நிறுவனங்களாலேயே கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் கூறிக் கொண்டு அதனை அமுல்படுத்த முடியாத இக்கட்டினை ஏற்படுத்துகிறது. அதில் பிந்திய அபிவிருத்தியாக கிழக்கு முனையத்திற்கு பதில் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான நகர்வினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவம்ச தெரிவித்துள்ளார். அதே நேரம் இலங்கைக்கான இந்தியா தூதுவர் கோபால் பாக்லோ 03.02.2021அன்று திடீர் விஜயமாக இலங்கையின் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துள்ளார். அதுபற்றி இந்த பத்திரிகையின் இணையத்தளச் செய்தியின் பிரகாரம் கிழக்கு முனையம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை இலங்கை அரசாங்கம் இரத்து செய்த மறுநாள் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அதில் ஜப்பான், இந்தியா இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு முனையம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என இந்தியா வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

எனவே கிழக்கு முனையத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்காது வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. ஆனால் ஒரு தலைப்பட்சமாக உடன்பாட்டை இரத்து செய்வது இலகுவான விடயமாக தெரியவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளது. அதாவது உடன்படிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அத்தகைய நிலைப்பாடாகும். எனவே இரு தரப்பின் இழுபறிக்கான மையமாக கிழக்கு முனையம் மாறியுள்ளது. இதன் பிரதிபலிப்புகள் வடக்கு கிழக்கிலும் ஜெனீவாவிலும் வெளித்தோன்ற வாய்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)