அரசியல் கட்டுரைகள்

இலங்கை-இந்திய அரசியல்-பொருளாதார-இராணுவ நலனுக்கானதே ஈழத்தமிழரின் அரசியல்?

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நட்புறவு நீண்டதும் நிலையானதும் ஆகும். சுதந்திர இலங்கையின் காலத்திலிருந்து இந்தியாவை கையாள்வதில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் சிறப்பான அணுகுமுறையை பின்பற்றி வந்துள்ளார்கள். 1987ஆம் ஆண்டு மாத்திரமே சில நெருக்கடிகளை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சந்தித்திந்தார்கள். ஆனால் அத்தகைய அனுபவத்தைக்கொண்டு அதற்கு பிந்தைய காலம் முழுவதும் இராஜதந்திரரீதியில் இந்தியாவை அணுகுவதில் மிகச்சிறந்தவர்களாக இலங்கை ஆட்சியாளர்கள் விளங்குகின்றார்கள். அதுவும் 2015ஆம் ஆண்டில் இந்தியா தொடர்பிலே ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ஆரோக்கியமான முறையில் இந்தியாவை இலங்கை ஆட்சியாளர்கள் கையாண்டு வருகிறார்கள். தற்போது சீனாவினுடான இலங்கையின் நெருக்கம் இந்தியா ஆட்சியாளர்களை தூண்டும் விதத்தில் புலமை தளத்திலும் கருத்துருவாக்கிகளும் இலங்கை ஆட்சியளார்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இந்தியாவும் தனது தென்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஆழ்கடல் பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்திலும் செயற்பட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்த தமிழ்தரப்பும் தமிழக அரசியல் தலைமையோடு இணைந்து பயணிக்கும் தமிழ்த்தரப்பும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைகின்றது. இத்தகைய நகர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் இலங்கை தரப்பு தனது வழமையான இராஜதந்திர உத்திகளை ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய-இலங்கை தரப்புகளிடையே நிகழும் இராஜதந்திர உரையாடலையும் அதன் விளைவுகளை தேடுவதாகவும் அமைய உள்ளது.

வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு, இந்திய பிரதி வெளிவிவகார அமைச்சர் வி.முரளிதரனின் ஈழத்தமிழர் தொடர்பான கருத்து, கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியின் வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதூர் சிங் மற்றும் இலங்கை கடற்படையின் தமிழக மீனவர் மீதான தாக்குதல் போன்றவை இலங்கை தரப்புக்க எதிரானதும் நெருக்கடிமிக்கதுமான அண்மைய சம்பவங்களாகும். இதுமட்டுமன்றி சீனாவின் இலங்கை மீதான கரிசனையின் அதிகரிப்பு இந்தியாவிற்கு அதிக நெருக்கீட்டை உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலும் ஏற்படுத்த ஏதொவொரு அணுகுமுறை ஒன்றை இலங்கை ஆட்சியாளர்கள் மீது ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் புதுடில்லி தள்ளப்படுகிறது. ஆனால் அத்தகைய அழுத்தம் தரும் எத்தகைய செயலையும் எத்தகைய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள முடியாத இராணுவ பொருளாதார, அரசியல் உறவுசக்குள் உள்ளது. இலங்கை தொடர்பான மாற்றங்களுக்குரிய காலத்தை இந்தியா கடந்து செல்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இலங்கையின் நடவடிக்கைகளும் அதிகரித்து கொண்டு வருகிறது.

குறிப்பாக, இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதற்கான திட்டம் ஒன்றுடன் புதுடில்லிக்கு வருகை தர இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை இந்தியாவுடனான வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புக்கள், மதரீதியிலான பரிமாற்ற திட்டங்கன் போன்ற விடயங்களை மையமாக கொண்டு மிலிந்த மொறகொட இந்தியாவை அணுக உள்ளதாக அவ்ஊடகம்செய்தி வெளியிட்டுள்ளது. மிலிந்த மொறகொட தலைமையில் விசேட குழுவொன்று புதுடில்லியை அணுக இருப்பதாகவும் அக்குழுவில் இந்தியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக்கா கடுறு கமுவ புதுடில்லி, சென்னை, மும்பை அகிய நகரங்களில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலய தூதுவர்களை உள்ளடக்கிய குழுவானது இந்தியாவை அணுகுவதற்கான திட்டங்களை ஆவண வடிவில் தயாரித்துள்ளது. இதனை முன்னிறுத்தியே இலங்கை-இந்திய தரப்போடு உரையாட இருப்பதாகவும் இந்தியா கொழும்பு கிழக்கு முனையத்தை வழங்க மறுத்ததால் ஏற்பட்ட விரிசலை புதிய திட்டம் சரிசெய்யும் என்றும் அவ்ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இந்திய வர்த்தக மற்றும் கடலியல் உறவின் பலம் எப்படியுள்ளது என்பதை அவதானிப்பது அவசியமானது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தக உறவு எவ்வகை தனித்துவத்தை கொண்டிருக்கின்றது என்பதுவும் அது ஒருவகையிலான வர்த்தக இராஜதந்திரம் (Commercial Diplomacy) என்றும் இலங்கை தரப்பு கருதுகிறது. அதாவது, இந்தியாவின் சார்க் நாடுகள் மத்தியில் மிகப்பலமான வர்த்தக கூட்டாளியாக கொண்டுள்ளது. இலங்கை ஏறக்குறைய 1.3பில்லியன் இந்திய நுகர்வாளர்களை கொண்ட சந்தையை இந்திய மாநிலங்களுக்கிடையிலே பெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மிகப்பலமான வர்த்தக உறவை இருநாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே இந்தியாவிலிருந்து பாரிய முதலீடுகளை இலங்கை கொண்டிருப்பதோடு இலங்கை-இந்திய எண்ணெய் ஒத்துழைப்புக்கான (LIOC) உடன்பாடுகளை குறிப்பிடத்தக்க வர்த்தக ஒத்தழைப்புக்கான நடவடிக்கைகளாக உள்ளன. திருகோணமலையை அண்டிய சீனன் குடாவில் நிறுவப்பட்டுள்ள 99 சதவீதமான எண்ணெய் டாங்கிகளில் 15இனை இந்தியா இயக்குகிறது. இலங்கை முழுவதுக்கும் நூற்றுக்கு மேற்பட்ட டுஐழுஊ நிலையங்களை இந்தியா இயக்கி வருகிறது. ஏனைய சார்க் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆழமான வர்த்தக உறவை இந்தியா இலங்கையுடன் மேற்கொண்டு வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட வரி அளவுத்திட்டத்தின் கீழ் இருவழி வர்த்தக உறவை இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கடல் பாதுகாப்பு உபாயம் மிகப்பலமானதாக காணப்படுகிறது. இதன்மூலம் இலங்கையின் பிரதான துறைமுகங்களையும் இறங்குதுறைகளையும் பொருளாதார ரீதியிலும் சந்தை அடிப்படையிலும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதிலும் கரிசனை கொள்கிறது. அதுமட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் காணப்படும் கடல்வழி பாதைகளை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்வதோடு ஆசியாவிலேயே கொழும்புக்கும் மும்பைக்குமிடையிலான வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலுமானதுமான கப்பல் பரிமாற்றங்களை இருதரப்பும் கையாண்டு வருகிறது. இந்தியாவின் 43வீதமான கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியமானது எனவும் இந்தியா கொழும்பு துறைமுகத்தினூடாகவே கணிசமான ஏற்றுமதியை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்குமிடையில் கடற்பாதுகாப்பு தொடர்பிலான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதெனவும் இது இருநாட்டு உறவில் முக்கிய பங்காற்றுகிறதெனவும், இது இலங்கையின் கடற்படை பாதுகாப்பையும் வர்த்தரீதியிலான நெருக்கத்தையும் பிராந்திய பாதுகாப்பையும் இந்தியாவிற்கு ஏற்படுத்தி கொடுக்கக்கூடியதென கூறப்படுகின்றது.

இதுமட்டுமன்றி இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் கடற்பயன்பாட்டுக்கு உட்படும் படகுகள், கப்பல்கள், விசைப்படகுகள் போன்றவற்றின் கட்டுமானங்கள் கோவாவில் இயங்கும் ளூip லயசன டுவுனு என்ற அமைப்பினூடாகவே இலங்கை பெற்றுக்கொள்வதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு இருநாடுகளுக்கிடையில் நிலவும் கடற்பயிற்சிகள், ஒத்திகைகள் இரு நாட்டுக்குமான கடற்பாதுகாப்பு ஒத்தழைப்பாக கருதப்படுகிறது. இவற்றை அடிப்படையாக கொண்டு அவதானிக்கும் பட்சத்தில் இருநாட்டக்குமான கடற்பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு என்பன அதிகரித்துள்ளத என:றும் கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இரு நாடுகளும் பல உடன்படிக்கைகளை மெற்கொண்டு வருகின்றதென தெரிய வருகிறது.

எனவே இதனை அவதானிக்கும் பேர்து இலங்கை- இந்தியா ஒப்பந்தம் பலமாக உள்ளது என்றும் தமிழ் அரசியல் தலைமைகளும் அதன் ஆர்வலர்களும் கருதுவது போல் பகைப்புலமானது இல்லை எனவும் தெளிவாகின்றது. எனவே அதன் விளைவுகள் ஈழத்தமிழர்களின் அரசியலில் எவ்வகையில் தாக்கத்தை தரும் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானதாகும்.

முதலாவது, இலங்கை-இந்திய நட்புறவு ஈழத்தமிழரினை நேரடியாக பாதிக்கும் விடயமாகவே அமைந்துள்ளது. அதாவது, இந்திய ஆட்சிமுறையில் காணப்படும் இலங்கையுடனான நெருக்கம் தமிழர்களின் இருப்பையும் அவர்களது பாதுகாப்பையும் இந்தியாவில் தங்கியிருப்பதன் எண்ணப்பாட்டையும் முற்றாகவே நிராகரிக்கிறது. எனவே மீள மீள இந்தியாவையெ நோக்கி ஈழத்தமிழர் ஈர்க்கப்படுவது அல்லது தங்கியிருப்பது ஆபத்தான விளைவகளை மீண்டும் எற்படுத்த முற்படும்.

இரண்டாவது, வர்த்தகமும் சந்தையையும் மையப்படுத்திய உலக அசைவானது இந்திய இலங்கை நலன்களுக்கும் பொருத்தமானதாக அமையும். கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்க மறுத்ததன் பிரதிபலிப்பால் இந்தியா அதிருப்தியடைந்ததேயன்றி ஈழத்தமிழருக்கு அரசியல் உரிமை வழங்கவில்லை என்பதற்காக இந்தியா இலங்கை மீது அதிருப்தி கொள்ளவில்லை. அதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தக உறவுகள், கடலியல் ஒத்துழைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கரிசனை இந்தியாவுக்கு உண்டு. அதனை நிராகரித்து ஈழத்தமிழர் அரசியல் மீது இந்தியா ஒருபோதும் அக்கறை கொள்ளும் என்பது பலவீனமான அறிவியல் பார்வையாகும்.

மூன்றாவது, ஈழத்தமிழரை சீனாவிற்கு எதிரானவர்களாக மாற்றி அதன்மூலம் இந்தியா இலங்கைத்தீவு மீதான நலனை அடைந்துகொள்ள முயலுகிறது. இலங்கைத்தமிழர்கள் இந்தியாவையும் சீனாவையும் ஒரேஅளவீட்டில் வைத்த கணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்த கால அனுபவம் ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது, மிலிந்த மொறகொட போன்ற இராஜதந்திரிகள் சீனாவுக்கு ஆதரவான கருத்துக்களை முதன்மைப்படுத்தம் பாத் பைன்டர் போன்ற அமைப்புக்களை நடாத்திகொண்டு இந்தியாவின் உயர்ஸ்தானிகரான பணியாற்ற முடியுமென்ற கருத்துநிலை இலங்கையின் இராஜதந்திர ரீதியிலான உத்திகளை வெளிப்படுத்துவதோடு அரசியல் முரண்பாட்டை முதலீட்டின் ஊடாகவும் வர்த்தக ஒத்துழைப்பினூடகவும் கையாள முடியுமென்ற உத்தியை தந்துள்ளது.

எனவே, இந்தியா இலங்கையுடனான நட்பறவு கடல்ரீதியிலும் வர்த்தரீதியிலும் மிகப்பலமானது. அதற்கான உடன்பாடுகளும் ஒத்தழைப்புக்களும் அதிகமானவை. இந்தியாவை ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் புலம்பெயர் தமிழரும் எத்தகைய முயற்சிகொண்டு நகர்த்த முயன்றாலும் அத்தகைய நகர்வகள் அனைத்தும் ஸ்தம்பித்த போவதுடன் இந்திய நலன்களுக்குள்ளும் இந்திய ஆட்சியாளர்களமு; உயர்வர்க்க தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் இனமாகவே தமிழர்கள் காணப்படுவார்கள். கடந்த காலம் முழுவதும் புதுடில்லியின் நலனுக்காக தமிழர்கள் கையாளப்பட்டார்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே கையாளப்படுவார்கள்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)