தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளை திருப்திப்படுத்துவதில் தொடர்ச்சியான கவனத்தை கொண்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவியேற்ற பின்னர் ஜெனிவா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவை கையாளும் பொறிமுறையை முதன்மைப்படுத்தி இருந்தார். இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் இத்தாலி விஜயம் மற்றும் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் ஒரு இராஜீக செய்முறையாக மேற்கினை கையாளும் உத்தியை கோடிட்டு காட்டுகிறது. இக்கட்டுரை பிரதமரின் இத்தாலிய விஜயமும் அவர் அங்கு ஆற்றிய உரையின் தொனிப்பொருளின் முக்கியத்துவத்தையும் தேடுவதாக உள்ளது.
பிரதமர் இலங்கையின் பாரிய நெருக்கடி நிலவுகின்ற சூழலில் இத்தாலிக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஜி-20 நாடுகளின் சர்வமத மாநாட்டில் ஆரம்ப உரையினை ஆற்றியுள்ளார். அவரது விஜயத்தை எதிர்த்து தமிழர்கள் உரிமை சார்ந்த விடயத்தை முன்னிறுத்துகின்ற போது சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடியை காரணமாக முன்வைத்து எதிரான போராட்டங்களை இத்தாலியில் நிகழ்த்தியுள்ளனர். ஆனாலும் உள்நாட்டில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் உரையாடலை எதிர்கொள்ளும் விதத்திலும், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் எற்பட்டிருக்கும் அதிருப்தியை முடிவுக்கு கொண்டுவரும் விதத்திலும் பிரதமரின் இத்தாலி விஜயம் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. அதிலொரு முழுமையான வெற்றியை பெறாவிட்டாலும் அதற்கான புறச்சூழலை மாநாட்டில் அவர் ஆற்றிய உரை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் ஒரே தேசம் என்ற எண்ணத்தோடு எதிர்காலத்தில் ஒற்றுமையும் சகவாழ்வும் எம்மத்தியில் ஏற்படுவது அவசியமானதென அவரது உரையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. இதனூடாக இலங்கை வேறுபாடற்ற முரண்பாடில்லாத ஒரே தேசம் என்பதனையும் அதற்குள் ஒருமைப்பாட்டோடு வாழ்வது அவசியமென்பதையும் கோடிட்டு காட்டியிருந்தார். அவரது உரையின் உள்ளடக்கத்தை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது அடிப்படையானதென செப்ரெம்பர்-11 தாக்குதலை நினைவுபடுத்தி பிரதமரது உரை அமைந்திருந்தது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதமாக கருதும் சூழலை பலப்படுத்துவதோடு ஜெனிவா கூட்டத்தொடர் அத்தகைய எண்ணங்களிலிருந்து விலக வேண்டும் என்பது அவர் தனது உரைக்கு ஊடாக முதன்மைப்படுத்தியுள்ளார். அத்தகைய பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தானில் முதன்மைப்படுத்திய அமெரிக்கா, தான் பயங்கரவாதம் எனக்குறிப்பிட்ட அதே குழுக்களோடு உடன்பாட்டை செய்தது மட்டுமன்றி அத்தகைய பயங்கரவாதக் குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்து தனது படையை விலக்கி கொண்டது என்பதையும் நினைவில் கொள்ளுதல் அவசியமாகும். அமெரிக்கர்களுக்கு 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகளாக விளங்கியவர்கள் 2021இல் ஆட்சியாளர்களாகவும், உடன்பாடு செய்யக்கூடிய அந்தஸ்துடையவர்களாகவும் மாற்றமடைந்துள்ள உலக ஒழுங்கை நினைவு கொள்ளுதல் அவசியமாகும்.
இரண்டாவது, கல்விக்கொள்கைகளும் திட்டமிடல்களும் தேசத்தின் ஒருமைப்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பிரதமர் தனது உரையில் முன்மொழிந்தார். இலங்கை இனத்தாலும், மதக்கூறுகளாலும் பிளவுண்டிருக்கும் பின்புலத்தை சரிசெய்ய வேண்டுமென்பதே அவரது உரையின் சாரமாகும். அத்தகைய நடவடிக்கையை கல்விக்கொள்கையின் திட்டமிடலூடாக சாத்தியப்படுத்த முடியுமென்ற வாதங்களை அவரது உரை வெளிப்படுத்தி இருந்தது. ஆனால் உலக ஒழுங்கிலும் தேசியங்களின் நிர்ணயத்திலும் ஒருமைப்பாடு என்பது தனித்துவங்களை அங்கீகரிப்பதனூடாகவே சாத்தியமடைந்துள்ளது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலும் மதத்தால், இனத்தால், மொழியால் பல நூறு ஆண்டுகளாய் மோதிக்கொண்ட தேசியங்கள் தமக்கான சுயநிர்ணயத்தை உத்தரவாதப்படுத்திய போது அந்த தேசங்களின் ஒருமைப்பாடு உத்தரவாதப்படுத்தப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு என்பது மரபுகளையும், பாரம்பரியங்களையும் உதறித்தள்ளிவிட்டு வெறுந்தேசியங்களுக்கு பின்னால் அடிமைப்படுவதனால் ஏற்படுவது அல்ல. அத்தகைய உலகத்தின் மையப்புள்ளியில் இருந்து கொண்டு அத்தகைய அம்சத்தை நிராகரிப்பது என்பது இலங்கையின் மட்டுமல்ல உலகத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியதாகவே பார்க்க தூண்டும்.
மூன்றாவது, இலங்கையின் இன்றைய சூழலில் அவசியமானதாகவும், பலப்படுத்தப்பட வேண்டியதொன்றாகவும் சர்வதேச ஒத்துழைப்பு காணப்படுகிறதென பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒத்துழைப்பின் அவசியப்பாடே இன்று இலங்கைக்குள்ள பிரதான சவாலாகும். கடந்த காலத்தில் சீனாவோடு அது கொண்டுள்ள நெருக்கமான உறவும் ஒத்துழைப்பும் மேற்கு நாடுகளுடனான முரண்பாட்டை பலப்படுத்தியது. இத்தகைய முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் செயற்பட வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. அதனாலேயே கோவிட் நெருக்கடியையும் மற்றும் பொருளாதமார பலவீனத்தையும் கடந்து சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டிய நோக்கோடு பிரதமரது இத்தாலிய பயணமும் உரையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதங்களை ஒன்றினைப்பது, இனமொழி கூறுகளை ஒன்றினைப்பது என்பதை கடந்து சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவது அவசியமானதாக உணரப்பட்டுள்ளது.
நான்காவது, மேற்கு நாடுகளை நோக்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் தனது உரையில் முதன்மைப்படுத்தியுள்ளார். இலங்கை மட்டுமன்றி ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் கோவிட் தொற்றினாலும் அது ஏற்படுத்திய இடராலும் ஒட்டுமொத்த பொருளாதார பலம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதனை மீட்டெடுத்தல் என்பது வளர்ந்த நாடுகளின் கடன் மற்றும் நன்கொடை போன்ற விடயங்களில் தங்கியிருக்கின்றது என்பதை அவரது உரையின் சாரம் வெளிப்படுத்துகிறது. இதுவொரு வகையில் சீனாவின் கடனில் தொடர்ந்தும் இயங்க முடியாது என்பதன் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.
ஐந்தாவது, நல்லிணக்கம் என்பது முரண்பட்ட பிரிவினருக்கிடையே நிலவும் உறவினை குறிப்பது என்று முன்னிலைப்படுத்திய பிரதமர், தனது உரையில் அன்பினால் மட்டுமே சமாதானத்தை அடைய முடியுமென குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பௌத்த மதத்தின் பெயராலும் சமாதானத்தின் பெயராலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமென சர்வமத மாநாட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். 2009களிலிருந்தே தமிழ் மக்கள் அவ்வாறான நல்லிணக்கத்தை அடைவதற்கே போராடிக்கொண்டு உள்ளனர். முள்ளிவாய்க்கால் துயரத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் சமாதானபூர்வமான ஒரு வாழ்வினை அடைவதற்கே கோரிக்கையையும் முன்மொழிவையும் அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். சகோதரத்துவத்தையும், சமத்துவதையும் தமிழ் மக்கள் எப்போதும் விரும்புகின்றனர். 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அதற்கான எந்த செயற்பாட்டையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இதுவரை ஏற்படுத்தவில்லை.
இதுமட்டுமன்றி பாலின சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு, காலாசார பிணைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் போன்ற விடயங்களை முன்னிறுத்தி மாநாட்டின் ஆரம்ப உரையை பிரதமர் நிகழ்த்தியிருந்தார்.
எனவே, 12.09.2021அன்று ஜி-20 சர்வமத மாநாட்டின் தொனிப்பொருளாக கலாசாரங்களுக்கிடையிலான சமாதானமும் மதங்களுக்கிடையிலான புரிதலும் என்ற அடிப்படையில் நிகழ்ந்திருப்பதோடு அதில் முதன்மை உரையாளராக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இலங்கையில் தமிழ்-சிங்கள முரண்பாடு, சிங்கள-இஸ்லாமிய முரண்பாடு, பௌத்த-இஸ்லாமிய முரண்பாடு, பௌத்த-கிறிஸ்தவ முரண்பாடு மற்றும் இந்து-கிறிஸ்தவ முரண்பாடு போன்றவற்றின் மத்தியில் இத்தாலியில் நிகழ்ந்த சர்வமத மாநாடு பெறுமதியான எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் யரென்று கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட இடர் போன்றே கடந்த காலங்களில் இடம்பெற்ற மத, இன, மொழி முரண்பாடுகளில் அதற்கான மூலகர்த்தாக்களையும் தேட வேண்டிய துயரம் இலங்கை தீவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பல்லின தேசியத்தை கொண்ட இலங்கை தீவு ஏனைய தேசியங்களை சிங்கள பௌத்த தேசியம் ஏற்றுக்கொள்ளாததன் பிரதிபலிப்பாகவே பல தசாப்தங்களாக முரண்பாட்டையும் மோதலையும் அனுபவித்து வருகிறது. எனவே அதனை முடிவுக்கு கொண்டு வருதல் என்பது தேசியங்களையும் தேசியங்களின் சுயநிர்ணயங்களையும் அங்கீகரிப்பதனூடாகவே சாத்தியப்பாடான சமாதானமும் சகவாழ்வும் உருவாகும். அதனை நோக்கி பிரதமரும் இவ்அரசாங்கமும் எதிர்காலத்தில் செயற்படுமாயின் ஒரு ஆரோக்கியமான சுபீட்சத்தை இந்நாடு அடைவதற்கான வாய்ப்பு உள்ளதென கூறலாம்.
ஆகவே அத்தகைய நோக்கங்களை பிரதமரது உரை இலங்கையில் எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுவும், அதேநேரத்தில் இத்தகைய உரைகளும் விஜயங்களும் மேற்கு நாடுகளை அந்த நாடுகள் முன்வைத்திருக்கும் நெருக்கடிகளையும் சரிசெய்வதாகவும் அமையும். அதனால் இலங்கைத்தீவுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஆட்சியாளர்களின் நலன்களை மேற்கினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் சரிசெய்யப்படுமேயன்றி வேறு எந்த மாற்றத்தை எட்ட முடியாததாகவே அமையும். பிரதமரை அடுத்து இலங்கையின் ஜனாதிபதி பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை மேற்கொள்ள இருப்பதும் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சரிசெய்வதற்கான உத்தியாக அமையுமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
