அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் பொறுத்து தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளை ஈழத்தமிழரசியல் தரப்பு பின்பற்றுகிறதா?

இலங்கை-இந்திய உறவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாதென இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 20ஆம் திகதி(2021.10.20) இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நோக்கோடு திறக்கப்படும் நிகழ்வு இரு நாட்டுக்குமான கலாசார உறவை மையப்படுத்தி அத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து குஷிநகர் விமான நிலையத்துக்கு பயணம் செய்யும் முதலாவது விமானம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷா தலைமையில் 100பிக்குகள் சகிதம் தரையிறங்கியது. இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். அசோகச்சக்கரவர்த்தியின் வாரிசுகள் வெள்ளரசுக்கிளையை இலங்கைக்கு கொண்டு வந்தது போல் ராஜபக்ஷாவின் வாரிசுகள் இந்தியாவுடனான பௌத்த கலாசார உறவை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சமகாலத்தில் பலமடைந்து செல்லும் இலங்கை-இந்திய உறவு ஈழத்தமிழர் பக்கம் எத்தகைய போக்கினை கொண்டுள்ளது என்பதை அளவிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1990களில் சாமுவல் ஹன்றிங்டன் குறிப்பிட்டது போல் இனிவரும் உலகானது நாகரீகங்களின் மோதலால் கட்டமைக்கப்படுமென குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கை-இந்திய உறவு அத்தகைய கலாசார நெருக்கத்தையும் விரிசலையும் அவ்வப்போது எதிர்கொண்டு வந்தாலும் சமகாலத்தில் பௌத்த கலாசாரத்தின் பெருமைகளூடாக இந்தியாவை கையாள்வதில் வெற்றி கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக சீதா எலிய-பாபர் மசூதி நெருக்கமும் குஷிநகர் பௌத்த நாகரீக நெருக்கமும் சமகாலத்தில் புதுடில்லி-கொழும்பு உறவை பலப்படுத்தியுள்ளது. புதுடில்லி-கொழும்பு உறவு கலாசார பிணைப்புகளுக்கு உள்ளால் கட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மறுபக்கத்தில் இந்தியாவோடு நெருக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டிய ஈழத்தமிழர்கள் தூரநோக்கில்லாத அரசியல் உத்திகளால் தொடர்ச்சியான விரிசல்களை ஏற்படுத்த முனைகின்றார்கள். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பின்னரான ஈழத் தமிழர் இந்திய உறவு அதிக ஆரோக்கியமில்லாத பயணத்தையே உருவாக்கி உள்ளது. இந்திய தரப்பும் தமிழக தரப்பும் ராஜீவ் காந்தியின் மரணத்தை ஈழத்தமிழருடைய அரசியலில் நெருக்கடிமிக்க திருப்புமுனையாக கருதுகின்றார்கள். ஆனாலும், புதுடில்லியுடன் ஒப்பிடுகின்ற போது தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழருடனான உறவை பேணி வருவதில் அதீத கரிசணை கொள்கின்றார்கள். ஆனால் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் அத்தகைய பொறுப்புவாய்ந்த பணியை செய்வதில் தவறுவதனையே கடந்த காலத்தில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியில் புதுடில்லியுடனான உறவை நெருக்கடிமிக்கதாக ஆக்கியதில் தமிழரசியல் தலைமைகளின் அதீத பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டு இந்திய இராஜதந்திர மட்டத்திலும் புலனாய்வாளர்கள் மத்தியிலும் உண்டு. இதேபோன்ற நிலையே தமிழரசியல் தலைமைகளின் அண்மைய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். அதனை விரிவாக நோக்குதல் வேண்டும்.

முதலாவது, ஈழத்தமிழ் மீனவர்களது கோரிக்கையும் போராட்டமும் நிஜாயமானது. 2009களுக்கு பின்னர் ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்திய மீனவர்களது நடவடிக்கை ஈழத்தமிழர்களது கடல் வளங்களை அழித்து இல்லாமலாக்கி வருவதுடன் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் அவர்களது இருப்பையும் நெருக்கடிக்கு தள்ளி வருகிறது. இதற்கெதிராக ஈழத்தமிழ் மீனவர் சமூகம் போராடுவது அதனை வெளிக்கொண்டு வருவது தவிர்க்க முடியாததாகும். இந்திய மீனவர்களின் வருகையும் வளங்களை அள்ளிச்செல்லும் நகர்வுகளும் செய்மதி காட்சிகள் மூலம் அடையாளம் காண முடியும். இத்தகைய நடவடிக்கை கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. தற்போது அதன் விஸ்தரிப்பு அதிகரித்துள்ளது. எனவே ஈழத்தமிழ் மீனவ சமூகம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து சென்று புதுடில்லியுடனும் சென்னையுடனும் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் உரையாடி அதற்கு தீர்வினை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் இது ஈழத்தமிழரின் அரசியலோடு பின்னிப்பிணைந்துள்ள விடயம். இவ்வாறான அரசியல் நடவடிக்கைகள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தூரநோக்குடன் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். அதனைவிடுத்து பேச்சுவார்த்தை மேசைகளிலும், இராஜதந்திரிகளையும் தூதுவர்களையும் சந்திக்கும் நேரங்களில் அதனை முதன்மைப்படுத்தாது செயற்படுத்தி விட்டு பின்னர் போராடுவதென்பது தனிப்பட்ட அரசியல் நலனை முன்னிறுத்துவதாக தோன்றுகிறது.

இரண்டாவது, தமிழரசியல் தலைமைகளின் இவ்வகை போராட்டம் தொடர்ச்சியாக அமைந்திருக்க வேண்டும். அதிலும் மீனவ சமூகத்தினரது நெருக்கடியை மையப்படுத்தி கடந்த காலத்தில் மேற்கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு-கிழக்கு மீன் வளங்களை கைப்பற்றுவதற்கு எதிராகவும் அத்தகைய போராட்டம் அமைந்திருக்க வேண்டும். மேலும் ஈழத்தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடந்த காலத்தில் நெருக்கடிகளை சந்தித்த போதெல்லாம் தமிழரசியல் தலைமைகள் அவர்களுக்காக போராடியிருக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் மௌனித்து விட்டு தற்போது போராடுவதென்பது பிராந்திய அரசியலில் மட்டுமன்றி ஈழத்தமிழ் அரசியல் எதிர்காலத்திலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்த முனைகிறது.

மூன்றாவது, இத்தகைய போராட்டம் கட்சியின் நலன்களையும் தனிப்பட்ட அரசியல் நலன்களையும் அடைய உதவக்கூடியதாக அமையும். இப்போராட்டத்தின் உடனடி விளைவுகளும் எதிர்பார்ப்புக்களும் அவ்வாறானதேயாகும். குறிப்பாக கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுதல், எதிர்வரும் தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றுதல், கட்சியினதும் தனிநபர்களதும் வீழ்ந்து போகும் அரசியல் செல்வாக்கை உயர்த்துதலும், எதிரணிகளை தோற்கடிப்பதுவும், கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை சரிசெய்வதுமென பல இலக்குகள் எட்டப்பட்டிருக்க முடியும். அதேபோன்று மீனவர்களது அடிப்படை பிரச்சினைகளையும் வெளியே கொண்டு வருவதற்கான ஒரு சூழலும் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஈழத்தமிழ் மீனவர்களது அடிப்படை பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் அவர்களாலும் மீனவ சங்கங்கங்களாலும் ஏனைய அமைப்புக்களாலும் முன்வைக்கப்பட்ட போதும் அதனை அரசியல் தரப்பு கடந்த சகாலத்தில் கண்டுகொள்ளாது விடுத்திருந்தது என்பதுவும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

நான்காவது, இவ்வகைப்போராட்டங்கள் தமிழரசியல் தலைமைகளால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் அது ஈழத்தமிழ் அரசியலில் எவ்வகை விளைவுகளை தரும் என்பது தூரநோக்குடன் கவனிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி ஈழத்தமிழ் நலன்களில் அதிக கரிசனைகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது கொழும்புக்கு எப்போதும் அதிக நெருக்கீடு தரக்கூடியதாகும். இதனால் கொழும்பு புதுடில்லியுடன் நெருக்கமான உறவை பேண வழிவகுத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழருக்கும் சென்னைக்குமான உறவு பலமாக ஆக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுவுடன் புதுடில்லியுடன் ஓர் ஆரோக்கியமான நெருக்கத்தை உருவாக்குவதற்கு சென்னையை பிரயோகிக்க வேண்டிய தேவை எழுந்திருந்தது. தேர்தல் முடிந்து சென்னையில் புதிய ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை அண்மிக்கும் காலப்பகுதி வரை தமிழகத்தோடு தமிழரசியல் தலைமைகள் நெருக்கமான உரையாடலையோ உறவையோ இதுவரை ஏற்படுத்தவில்லை. எனவே இத்தகைய சூழலில் ஈழத்தமிழரசியல் தலைமைகளின் போராட்டங்கள் தமிழகத்திற்கு எதிரானதாகவோ இந்தியாவிற்கு எதிரானதாகவோ காட்சிப்படுத்தப்படுமென்பது இயல்பான விடயமேயாகும்.

ஐந்தாவது, தமிழரசியல் தலைமைகள் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் சரியான முறையில் முன்னெடுக்கின்றார்களா என்ற உரையாடல் கட்சிக்குள்ளாவது அல்லது கட்சியின் கூட்டுக்குள்ளாவது உரையாடப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் போராட்டம் முடிந்த பிற்பாடாவது போராட்டத்தில் கலந்த கொள்ளாத தரப்புக்கள் அதற்கான நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது மௌனம் எல்லோரும் இத்தகைய போராட்டத்தை ஆதரிப்பதாகவே தெரிகிறது. அவ்வாறு நோக்கின்ற போது ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் எதிராக செயற்பட முனைகிறார்களா என்ற கேள்வி பொதுவெளியில் நியாயமானது. அவ்வாறாயின் ஈழத்தமிழர்களை அரசியல்ரீதியில் தனிமைப்படுத்தம் நடவடிக்கைகளாக கருதுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே தெரிகின்றது. இதன்மூலம் ஈழத்தமிழருக்கு எதிரான சக்திகளுக்கு தமிழரசியல் தலைமைகள் தொடரந்தும் சேவை செய்ய முயலுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஈழத்தமிழர்கள் 2009களுக்கு பின்னர் அரசியல்ரீதியில் அதிக நெருக்கடிகளை கொண்ட தேசிய இனமாக காணப்படுகின்றனர். அதிலும் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் பங்களிப்பும் ஒத்தழைப்பும் ஆதரவும் வழங்குகின்ற தமிழக மக்களையும் தமிழக அரசியல்தரப்புக்களையும் நிராகரிப்பது என்பது ஆபத்தான அரசியலாகவே தெரிகின்றது. இது மீளவும் 1990களை நோக்கி ஈழத்தமிழர்-தமிழக உறவை கட்டமைக்கப்போகின்றது. ஈழத்தமிழருக்கா தீக்குளித்த தமிழக உறவின் நிலையை கடந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுகின்ற போது ஏற்பட்டிருக்கும் இருமுனை இடைவெளி ஈழத்தமிழர்களின் அரசியல் எதிரகாலத்துக்கு பின்னடைவான ஒரு நகர்வாகவே மாற ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகள் ஈழத்தமிழருக்கு எதிரான சக்திகளுக்கு இலாபகரமாக அமையுமேயன்றி ஈழத்தமிழரின் அரசியலுக்கு நன்மை பயற்க்கும் விடயமாக அமையப்போவதில்லை.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)