அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதியின் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தமிழரசியலின் இராஜதந்திர செய்முறைக்கான வாய்ப்பாகுமா?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா ஐ.நா பொதுச்செயலாளருடனான சந்திப்பில் இலங்கையின் தேசிய பிரச்சினைகக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமையானது, தென்னிலங்கை அரசியலிலும் ஈழத்தமிழரசியல் களத்திலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழரசியல் களத்தில் எழுந்துள்ள வாதங்களை முறையாக பகுப்பாய்வு செய்வதும், சரியான முடிவினை எடுப்பதும் ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவசியமானதொன்றாகும். இக்கட்டுரையும் ஜனதிபதியின் அழைப்புக்கு ஈழத்தமிழரசியல் களத்தில் எழுந்துள்ள விவாதங்களை பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்வதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி, பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் உடனான சந்திப்பில், இலங்கையின் பிரச்சினைகளை உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். இக்கருத்து ராஜபக்ஷா அரசாங்கத்தின் வழமையான நிகழ்ச்சி நிரலிலிருந்து முழுமையாக வேறுபட்டதொரு உரையாடலாகும். தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றின் அழைப்பின் பேரில் உரையாற்ற சென்றவேளை இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை தேசவிரோத செயல் எனச்சுட்டிக்காட்டியிருந்தார். அதுமட்டுமன்றி தற்போதைய ஆட்சியிலும் கடந்த மார்ச் மாதம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்த நீண்டதொரு பட்டியலை கறுப்புப்பட்டியலாகவும் அறிவித்திருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேச பொது அரங்கில் புலம்பெயர் சமூகத்தை அழைத்திருப்பது கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது. உடனடியாக புறந்தள்ளுவதோ நிபந்தனைகளின்றி வரவேற்பதுவோ ஈழத்தமிழரின் அரசியலுக்கு பொருத்தமானதாக அமையுமென எதிர்பார்க்க முடியாது. இக்கருத்து மாற்றத்துக்கான காரணங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டு ஆயுதப்பாராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர் அரசியல் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தியமையில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்கு அளப்பெரியதாகும். இவர்களின் பலத்திலேயே எதிர்கால நகர்வுகள் அமைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. சர்வதேச சமூகத்தினரை இலங்கைத் தமிழர் பக்கம் பார்க்க வைக்கக்கூடிய கைங்கரியத்தை இன்றைய நிலையில் செய்யக்கூடியவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே ஆவார். இவர்களின் கையில் ஈழத்தமிழர்களின் இருப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்பதுவும், ஈழத்தமிழர் அரசியல் உள்நாட்டு பொறிமுறையையும் பிராந்திய பொறிமுறையையும் கடந்து சர்வதேச பொறிமுறை அரசியலாக 2009இற்கு பின்னர் பரிணாமம் பெற்றுள்ளது. இதுவே இன்றைய இலங்கை ஆட்சியாளர்களுக்கு எழுந்துள்ள சவாலாகும். அதேநேரம் சர்வதேச நலன்களோடு ஈழத்தமிழர் அரசியல் பின்னிப்பிணைக்கப்பட்டதொன்றாக உருவெடுத்துள்ளது. சர்வதேசத்திடமிருந்தும் இப்பிரச்சினையை விலக்கி கொள்ள வேண்டுமென, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தளத்திலிருந்தும் இப்பிரச்சினைக்கான முடிவினை அடைய வேண்டுமென தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய நோக்கு நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் புலம்பெயர் அமைப்புக்களுடான உரையாடலுக்கான அழைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய அழைப்பை ஈழத்தமிழரின் அரசியல் நலனை மையப்படுத்தி அணுகுவது புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்குரிய பணியாகும். அதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, சர்வதேச அரசியலில் பேச்சுவார்த்தை என்பது ஓர் இராஜதந்திர செய்முறையாகும். அரசுகளை எதிர்கொள்ளவும் அவர்களது இலக்குகளை அடையவிடாது தடுக்கவும் பேச்சுவார்த்தை மூலம் ஓர் சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அக்காலப்பகுதியை கடந்து செல்ல முயல்வதே பேச்சுவார்த்தையின் உள்ளார்ந்த நோக்கங்களாகும். உலகில் நிகழ்ந்த அதிகமான பேச்சுக்கள் முறிவடைந்தும் தோல்வியடைந்தும் போயுள்ளது. மிகச்சொற்ப அளவிலான பேச்சுவார்த்தைகளே குறிப்பிட்ட சக்திகளின் நோக்கத்தை எட்ட உதவியுள்ளது. அத்தகைய பொறிமுறைக்குள் தான் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் உபாயங்கள் அமைந்திருக்கும் என்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நன்கு தெரியும். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பேச்சுவார்த்தைகள் ஈழத்து தமிழ் தலைமைகளுக்கும் ஈழத்து சிங்கள தலைமைகளுக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால் ஒரு பேச்சுக்களும் ஈழத்தமிழர்களின் இலக்கை வென்றெடுக்க உதவவில்லை. மாறாக குழப்பங்களும் முறிவுகளும் போர்களுமே நிகழ்ந்துள்ளது. ஆனால் இத்தகைய அனுபவத்துக்காக பேசுவதை தவிர்ப்பது என்பது ஈழத்தமிழ் தரப்பின் இராஜதந்திர செய்முறையின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே அமையும். 2009களுக்கு பின்னர் ஈழத்தமிழர்களிடம் உரையாடல் என்ற உபாயம் மட்டுமே வலுவானதாக உள்ளது. எனவே உரையாடல் அவசியமானது.

இரண்டாவது, இத்தகைய உரையாடல்கள் நிபந்தனைகளுக்கூடாக கட்டமைக்கப்படுதல் அவசியமானதாகும். அத்தகைய நிபந்தனை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடியதாகும். ஈழத்தமிழர்களை நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடியதாகவும் அமைதல் அவசியமாகும். அரசியல் பிரச்சினைகள் முதல் வாழ்வியல் பிரச்சினைகள் வரை இத்தகைய நிபந்தனைகளே முன்னிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளின் கண்களில் காணப்படும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் முன்னிறுத்தி ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்கான வாய்ப்பான விடயங்களை முன்னிறுத்த வேண்டும். போரை நிகழ்த்திய ஆட்சியாளர்களே அதற்கான பொறுப்பையும் தீர்வையும் முன்வைக்க வேண்டும். அத்தகையதொரு வாய்ப்பான காலம் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, உலகத்தை முன்னிறுத்தி அதன் இயல்பூக்கங்களூடாக செயற்படக்கூடிய நிபந்தனைகளை சாத்தியமாக்கி பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்.

மூன்றாவது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருடனான உரையாடலிலேயே இலங்கை ஜனாதிபதி அத்தகைய அழைப்பை முன்வைத்துள்ளார். எனவே நாடுகளை கடந்து நிறுவனங்களை மையப்படுத்தி நடுநிலைமைக்கான களத்தெரிவுகளை உருவாக்கி பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அதன் உப பிரிவுகள் மட்டுமன்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் அதனை சார்ந்திருக்கக்கூடிய நாடுகள் என்ற அடிப்படையில் நடுநிலைக்கான சக்திகளை அடையாளப்படுத்தி இலங்கை அரசாங்கத்தையும் புலம்பெயர் அமைப்புக்களையும் தரப்புக்களாக கொண்டு உரையாடலை ஆரம்பிப்பது ஈழத்தமிழரது அரசியலை ஆரோக்கியமான வெளியில் திறப்பதாக அமையும்.

நான்காவது, ஈழத்தமிழர்கள் பரப்பில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் தனித்தனியாக செயற்பட்டாலும், அவை அனைத்தும் ஒரே நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவையே ஆகும். அத்தகைய நோக்கத்தை இலக்காக கொண்டு உரையாடலுக்கான தீர்மானங்களை வரைபுகளை முன்வைத்து தெளிவான முடிவுகளோடு பேச்சுவார்த்தைக்கான களத்தை அணுகுதல் அவசியம். ஈழத்தமிழ் அமைப்புக்கள தனித்தனிய இயங்குவதென்பது தொடர்ச்சியாக பேணப்பட வேண்டியதொன்று. காரணம், இவை அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் உள்ளடக்கப்படுமாயின் புலம்பெயர் ஈழத்தமிழரின் தலைமையை கையாள விரும்பும் சக்திகள் இலகுவாக பயன்படுத்தி விட்டு போவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு. அதுமட்டுமன்றி பல தலைமைகள் சமவலுவோடு இயங்குகின்ற போது இலகுவில் அத்தகைய அமைப்புக்களை அழித்துவிட்டு போக முடியாது. புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்ககள் இணைத்தலைமைகளாய் இயங்குவது அவசியமாகும்.

ஐந்தாவது, பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியாவின் கரிசனை ஆரோக்கியமானதாகவே அமையும். காரணம், கடந்த காலத்தை போலன்றி இந்தியா மேற்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்தியாவின் நலன்களும் மேற்கின் நலன்களும் ஒன்றித்திருக்கின்ற ஒரு உலக ஒழுங்கு காணப்படுகின்றது. அதனால் இந்தியா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுடன் இலங்கை உரையாடுவதை நிராகரிப்பதை விடுத்து அதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்க வழிவகுக்கும். அதுமட்டுமன்றி இலங்கை ஆட்சியாளர்களும் இந்தியாவை விடுத்து மேற்கு நாடுகளுடன் இவ்விடயத்தை கையாள முயலுகின்ற போது இந்தியாவின் பக்கம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலமான நட்பு சக்திகளாகவே காணப்படுதல் வேண்டும். நிறுவனங்களை கடந்து நாடுகளின் பட்டியலில் பேச்சுவார்த்தை மேசையில் இந்தியாவையே புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்கள் முன்னிறுத்த வேண்டும். அதுவே இவ்அரசியலின் ஆரோக்கியமான பயணத்துக்கு உதவ கூடியது. அவ்வகை சூழல் ஒன்றுக்கான முன்னாயர்த்தங்களிலும் முடிவுகளிலும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் போலன்று ஈழத்தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் இந்தியாவை அணுசரித்து செயற்படுதல் அவசியமாகும்.

எனவே, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பு என்பது ஈழத்தமிழருக்கான இராஜதந்திர செய்முறைக்கு ஆரம்ப படியாகும். அதன்மூலம் ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினையை உலகமயப்படுத்தவும் நிறுவனமயப்படுத்தவும் அரசுகள் மத்தியில் உரையாடவும் ஒரு வாய்ப்பான சூழல் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதனை நோக்கி திட்டமிடல்களுடனும் உபாயங்களுடனும் நகர்வதும் அவசியமானதாகும். ஈழத்தமிழரின் யதார்த்தத்தை புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: ஈழநாடு 03.10.2021)