இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த துயரத்தை கடந்த 42 வருடங்களாக கடந்திருக்கும் ஈழத்தமிழரின்; வரலாறு அதிகம் பேசப்படுகிற காலப்பகுதியாக சமகாலப்பகுதி உள்ளது. அத்தகைய வரலாற்றின் தடங்களில் 1983 ஜூலை இனக் கலவரம் ஓர் அம்சம் மட்டுமே அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இலங்கைதீவின் நிலம் தமிழர்களின் இரத்தத்தால் உறைந்திருக்கிறது. அத்தகைய துயரத்தின் வடுக்களை நினைவு கொள்ள ஈழத் தமிழர் ஒவ்வொரு ஆண்டும் கறுப்பு தினமாக அதனை தமது வாழ்வோடு இணைந்த ஓர் அங்கமாக கருதுகின்றனர். மீள முடியாத வலிகளை சுமந்த இனத்தின் துயர நாளே கறுப்பு ஜூலையாகும். அது மட்டுமல்ல அதைப் போன்று ஆயிரக்கணக்கான படுகொலைகளை ஈழத்தமிழர் மீது நிகழ்த்திய ஆட்சியாளர்களும் அதற்கு துணைபோன தென் இலங்கை மக்களும் இன்னுமே ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாகவோ இலங்கை தீவில் சமமாக வாழ்வதற்கான இனமாகவும் கருதாத துயரம் ஆழமான வலிகளை தந்திருக்கின்றது. இக்கட்டுரையும் தென்னிலங்கை 1983 ஜூலை இனக் கலவரத்தின் போது வெளிப்படுத்திய மனோநிலையை தேடுவதாக உள்ளது.
முதலாவது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சூளுரைத்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நிராயுதபாணியாக இருந்த தமிழ் மக்கள் மீது போரைத் தொடக்கினார். இனப்படுகொலையின் துயர் யாழ்ப்பாணம் சென். பற்றிக் கல்லூரியில் இருந்து தொடங்கியது என வரலாற்றாசியர் மு.திருநாவுக்கரசு குறிப்பிடுகின்றார். சென். பற்றிக் கல்லூரியில் நிகழ்ந்த களியாட்டு விழாவில் சீருடை தரிக்காத பொலீசார் பாடசாலை மாணவிகளையும் பெண்களையும் கேளிக்கை உட்படுத்த முயன்ற போது பொதுமக்களால் பொலிஸார் தாக்கப்பட்டனர். அதனை அடுத்து போர் பிரகடனம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்தனா தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வை தூண்டுகிற விதத்தில் செயல்பட்டார். இதனை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவ தொடர் அணி ஒன்றின் மீது யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய தாக்குதலில் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்து தென் இலங்கை முழுவதும் தமிழருக்கு எதிரான இனக் கலவரம் தீவிரமடைந்தது. ஏழு நாட்கள் நீடித்த கலவரத்தில் சுமார் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஓர் இலட்சத்தி ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் தமது உடமைகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். பாரிய அழிவுகளையும் சிதைவுகளையும் தென்னிலங்கையில் இராணுவம், பொலீஸார், குண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி தமிழர் மீது தாக்குதலை நிகழ்த்தினர். இத் தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்திய அப்போதைய ஆட்சியாளர்கள் தமிழர்களை அழித்தொழிக்க தீர்மானித்தனர். 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது. அத்தகைய பிரகடனம் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரமாக அமைந்திருந்தது. அதனை எதிர்கொள்ள முடியாத தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இனக் கலவரத்தை தூண்டுவதன் மூலம் தமிழரை அடக்கி ஒடுக்குவதற்கு திட்டமிட்டனர். அதன் விளைவாக எழுந்த இனப்படுகொலையானது இலங்கையின் வரலாற்றில் பிரிக்க முடியாத வரலாறாக மாறியது. ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையோடு சேர்ந்து வாழ்வதற்கு அல்லது அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் பண்பாட்டு முறைகளையும் சமமாக பங்கீடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியதன் விளைவு பிரிந்து செல்லுதல் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விட தென் இலங்கை ஆட்சியாளரும் மக்களும் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற ஆணையை பலக்காரத்தின் மூலம் நிறுவினர். ஆட்சியும் ஆட்சியின் அதிகார வர்க்கங்களும் தமிழர்களுக்கு எத்தகைய அதிகாரமும் வழங்காது அவர்களது நிலங்களையும் பண்பாட்டையும் மரபுகளையும் அழிப்பதன் மூலம் இலங்கை தீவை ஓர் இனத்தின் தீவாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டனர். இதன் விளைவு ஆயுதப் போராட்டமும் தென் இலங்கைக்கு எதிரான அதிகார போராட்டமாகவும் அமைந்திருந்தது.
இரண்டாவது ஜூலை இனக் கலவரம் தென் இலங்கையில் கட்டவிழ்த்துவிட்ட போது தென் இலங்கையிலிருந்த மக்களின் மனோநிலை ஆட்சியாளர்களை விட அதீதமானதாக தென்பட்டது. கொலை செய்வது துன்புறுத்துவது மானபங்கபடுத்துவது உயிருடன் தீட்டு கொளுத்துவது என்றெல்லாம் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் தமிழ் மக்கள் திரட்டிய சொத்துக்கள் சூறையாடப்படுகிற போது தென்னிலங்கை மக்கள் கொண்ட மனோநிலையில் நடத்தையும் ஆச்சரியமானதாகவே அமைந்திருந்தது. ஆண்கள் பெண்கள் வயோதிபர் சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி கொலைகள் நிகழ்த்தப்படுகிற போதும் சொத்துக்கள் சூறையாடப்படுகின்ற போதும் தென்னிலங்கை மக்களின் மனோநிலை மிக மோசமானதாக தெரிந்தது. இது தமிழ் மக்கள் மீது அதிகார வெறி கொண்ட ஆணையை பிறப்பிப்பதாகவே தென்பட்டது. வடக்கு கிழக்குத் தவிர்ந்த பிரதேசங்களில் தமிழ் மக்கள் வாழ முடியாது என்ற நிலையை தென்னிலங்கை மக்கள் அப்போது ஏற்படுத்தினார்கள். பல்கலைகழகங்களிலும் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தஞ்சம் அடைந்தவர்களை கப்பலில் ஏற்றி வடக்கு கிழக்கு அனுப்பினர். ஏறக்குறைய ஈழத் தமிழர்கள் தென் இலங்கையோடு சேர்ந்து வாழ முடியாது என்ற மனோநிலையை தென் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களோடு சேர்ந்து வெளிப்படுத்தினர். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் எவ்வாறு இனப்படுகொலைக்கு திட்டமிட்டார்கள் என்பதையும் வழிநடத்தினார் என்பதையும் சிங்கள ஆய்வாளரான எல். பியதாசா என்பவர் மிகச் தெளிவாக Sri Lanka: The Holocaust and After என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறே இனக் கலவரத்தின் கொடூரத்தை படம்பிடித்த சிங்கள இடதுசாரியான கீர்த்தி பாலசூரியா முக்கியமான குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். ஜீலை இனக் கலவரம் தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களை பற்றியும் நடந்த கொடுமைகள் பற்றியும் சிங்கள புத்திஜீவிகளே அதிகம் வெளிப்படுத்தியுள்ளனர். கலாநிதி அதிகாரம் என்பவர் மகாவம்சத்தில் ஒரு பிரதியேனும் இல்லாமல் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும் அப்போது தான் இலங்கை தீவில் அமைதியும் சமாதானமும் சாத்தியப்படும் என்றார். ஆனால் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மகாவம்சத்தின் ஆறாவது தொகுதியை எழுதியுள்ளனர். 1978 ஆம் ஆண்டு இருந்து 2010 ஆம் ஆண்டு வரை மகாவம்சம் என்ற வரலாற்று நூலை நூற்றுக்கு மேற்பட்ட புலமையாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இவை உணர்த்தும் செய்திகள் பழமையான சிந்தனையிலிருந்து என்னுமே ஆட்சியாளர்களும் அதனை பின்தொடரும் மக்களும் புலமையாளர்களும் தங்களது மனோநிலையை மாற்றவில்லை என்பதை உணர்த்துவதாகவே தெரிகிறது.
மூன்றாவது தம்மை சோசலிஸ்ட்டுகள் என்று அழைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்றிய தற்போதைய ஆட்சியாளர்கள் முன்வைக்கும் சமத்துவமும் சகோதரத்துவம் ஈழத்தமிழர் மீதான அரசியலாகவே தெரிகின்றது. காரணம் கடந்தகால வரலாறு முழுவதும் அவ்வகையான சொல்லாடலுக்குள்ளே ஈழத்தமிழரின் இன அழிப்புகள் அரங்கேற்றப்பட்டன. இத்தகைய சூழலில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சமத்துவம் சகோதரத்துவம் பற்றிய உரையாடல்களை அதிகம் பிரஸ்தாபிக்கின்றார்கள். இலங்கைத்தீவின் வரலாறு முழுவதும் சோசியலிசம் அல்லது சோசலிசவாதிகள், மதவாதிகள், தாராண்மைவாதிகள், ஜனநாயகவாதிகள், மிதவாதிகள், என்று அடையாளப் படுத்தப்படுத்தியவர்கள் அனைவரும் ஈழத்தமிழர் மீது நிகழ்த்திய துயரமான படுகொலைகளையும் வன்முறைகளையும் பட்டியலிட்டுக் கொள்வது கடினமானது. இதற்கு துணை போகும் வடக்கு கிழக்கில் உள்ள ஈழத்தமிழரின் சகோதர சமூகத்தினரும் அவர்கள் மீதான விமர்சனங்களும் தவிர்க்க இயலாது. வீரமுனை தமிழரின் பாரம்பரிய கிராமம் தொடக்கம் சத்துருக்கொண்டான் வரையும் கிழக்கு மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை நீண்ட பட்டியலில் அந்த சமூகத்தினரின் பக்கமும் வடிவமும் உண்டு என்பதுதான் இத்துயரத்தின் இன்னொரு அங்கமாகும். அதன் நீட்சியை களியாட்டங்களாலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது. அவ்வாறு கருதுகின்ற ஆட்சியாளரை கண்டு வெட்கப்பட வேண்டியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணம் செய்து மரக்கன்றுகளையும் பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதன் மூலம் ஓர் இனத்தின் கடந்தகால துயரங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று கருதுவது அபத்தமான அரசியலாகவே தெரிகிறது. அந்த இனத்தின் துயரத்தை நினைவு கொள்ள முடியாத களத்தை சோஸலிஸ்ட்டுக்கள் என்று கூறிக் கொள்பவர்கள்; திறந்து இருக்கிறார்கள் என்பதை அவதானிக்கும் போது அவர்களது போலிவேடம் தெரிகிறது. சோஸலிசத்துக்கும் இலங்கைக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது மட்டுமல்ல அதன் போலித்தனமான வரலாறும் ஈழத்தமிழருக்கு நன்கு தெரிந்ததொன்றே. உண்மையான சோசியலிஸ்ட்டுகள் பிறதேசிய இனங்களையும் அவற்றின் பண்பாடு பொருளாதார அரசியலை அங்கீகரிப்பதே முதன்மையும் அடிப்படையாகும். அதுவே ஒரு சோசியலிஸ்ட்டாக இருக்க தகுதியுடையதாகும். அத்தகைய புரிதலை நிராகரித்துவிட்டு தம்மை சோசலிஸ்ட்டுக்கள் என்று கூறிக்கொண்டு வரலாற்று நினைவுகளை கேளிக்கைக்கு உட்படுத்துவது அந்த மக்களை அவமதிப்பதாகும். துயரமான நாட்களில் துயரமான நிகழ்வுகளை சுமந்து கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் அதனை கேளிக்கைகளாக திட்டமிடுவது மிக மோசமானதும் அபத்தமானதுமான அரசியலின் பின்னூட்டலாகும். 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் தற்போது ஆட்சியாளர்கள் பங்காளிகளாகவும் பார்வையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை அவர்கள் தற்போது உறுதிப்படுத்துகின்றனர்.
எனவே, ஜூலை இனக் கலவரம் என்பது ஈழத்தமிழர் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு துயரமாகும். அத்தகைய துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இனம் கடந்தகாலத்தை நினைவு கொள்வது வரலாற்று நியதியாகும். தனது மூதாதையரையும் சந்ததியையும் மறந்து விட்டு ஈழத்தமிழரின் வாழ்வு இல்லை என்பதை நினைவில் கொள்வது போன்றதே கறுப்பு ஜூலை துயரமாகும். அத்தகைய துயரத்தை நினைவு கொள்ளுகின்ற நாட்களில் திட்டமிட்டு கேளிக்கையாக்குவதும் அத்துயரத்தை மறக்கச் செய்யலாம் என நினைப்பதுவும் தவறனதாகும். அதனை சமத்துவம் என்றும் சகோதரத்துவம் என்றும் விவாதிப்பது அதனைவிட வேடிக்கையானதாகும்.. ஜீலை இன கலவரத்தை விட அதிகமான கலவரங்களையும் படுகொலைகளையும் எதிர்கொண்ட ஈழத்தமிழரின் மனோநிலை மீளமுடியாத இருக்கின்ற சூழலை கொண்டாட்டங்களுக்குள்ளால் மாற்ற நினைப்பது ஜூலை இனக்கலவரத்துக்கு ஒப்பானதாகும். ஈழத்தமிழர் விடயத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் பாதையில் புதிய இடதுசாரி அரசாங்கமும் பயணிக்கிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
