உலக நாடுகளின் அவை என கருதப்படும் ஐக்கிய நாடுகள் சபை தனித்து மேற்கு நாடுகளின் சபை என்பதை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ரஸ் ரஷ்யா உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து ஐ.நா.சபையில் நிறைவேற்றியுள்ளார். ரஷ்யா போன்றே மேற்கு நாடுகளும் போரைத் தூண்டுகின்ற தரப்பாக உள்ளன. ஆயுததளபாடங்களை பாரியளவில் உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா போன்று போரை நிகழ்த்தும் நாடுகளாகவே உள்ளன. ஆனால் ஐ.நா.சபையின் தீர்மானம் எப்போதும் போன்று மேற்குலகத்திற்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபை என்பதைவிட அமெரிக்க நாடுகள் சபை என அழைப்பது பொருத்தமானதாகவே உள்ளது. இக்கட்டுரையும் உலகம் மீண்டும் ஒரு பனிப்போர் காலத்திற்குள் நுழைகிறதா என்ற சந்தேகத்திற்கு விடை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது கடந்த 22.02.2023 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ைரன் தலைநகரான கீவ் நகருக்கு திடீர் விஜயம் செய்தமை கவனிக்கத்தக்கதாகும். பைடனது விஜயம் ரஷ்யாவை சீண்டுவதாக அமைந்திருப்பதுடன் அமெரிக்கா தனது அணியை அடையாளம் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. நான்கு நாள் விஜயமாக போலந்துக்கு வருகை தந்த ஜோ ைபடன் இரகசியமாக உக்ரைன் தலைநகருக்கு சென்றிருந்தமையும் கீவ் நகரில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் நடமாடியதும் பின்பு உக்ரைன் மக்களது போராட்டத்தை பாராட்டி பைடன் உரையாற்றியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தொடர்ந்து ஆயுததளபாடங்களை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை வழங்கப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய பைடனது நகர்வுகள் உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராடத் தூண்டுவதாகவே அமைந்திருந்தது. அதன் மூலம் அமெரிக்க நலன்களை நிறைவேற்றுவதாகவே பைடனது உரையின் உள்ளடக்கம் காணப்பட்டது. அதாவது அமெரிக்காவுக்காக உக்ரைன் மக்கள் கொல்லப்படுவதை பைடன் உறுதிப்படுத்துவது போலவே தென்பட்டது. பைடனின் உக்ரைன் விஜயத்தை பற்றிய கருத்தை வெள்ளைமாளிகை வெளியிடும் போது உக்ரைனின் ஜனநாயகம் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் அசைக்க முடியாத மற்றும் நிலையான அர்ப்பணிப்பை பைடனின் விஜயம் உணர்த்துவதாக உள்ளது. ஆனால் உக்ரைனை விட்டு 80 இலட்சம் உக்ரைனியர்கள் வெளியேறியுள்ளனர். ரஷ்யா லூஹான்ஸ் டொன்ஸ்க் கொசான் மற்றும் ஸபோரிஹியா ஆகிய பிரதேசங்களை தன்னுடன் இணைத்துள்ளது. 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிராந்திய விஸ்தரிப்பு கிழக்கு ஐரோப்பாவுக்குள் நேட்டோவின்’ பெயரால் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் இறைமைக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் ரஷ்யா முடக்கப்பட்டுள்ளது எனக்கூறலாம். வெள்ளைமாளிகை குறிப்பிடுவது போல் அல்லாது உக்ரைன் சிதைந்துள்ளதாகவே தெரிகிறது.
இரண்டாவது, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் ஜியின் ரஷ்யாவுக்கான பயணம் அமெரிக்காவுக்கு எதிரான அணியின் கூட்டை அடையாளப்படுத்துகிறதாகவே அமைந்துள்ளது.சீனாவின் வெளியுறவு அமைச்சரின் மொஸ்கோ பயணமும் உக்ரைன் போருக்கான ஆயுத தளபாடங்களை சீனா ரஷ்யாவுக்கு வழங்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான சூழல் போர் தொடங்கும் போதே அடையாளம்’ காணப்பட்டது. அதன் மூலம் ஏற்பட்டுள்ள சீன, -ரஷ்ய நெருக்கம் உக்ரைன் போரை நீடிப்பது மட்டுமன்றி அமெரிக்காவுக்கு எதிரான அணியினை பலப்படுத்துவதாகவே அமைய வாய்ப்புள்ளது.இதன் இன்னோர் அங்கமாகவே ஐ.நா முன்வைத்த ரஷ்யாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து சீனா வாக்களித்துள்ளது. ஏற்கனவே பலூன் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள உளவு அரசியல் அமெரிக்காவுக்கு நெருக்கடியைத் தந்தது போல் ரஷ்ய-, சீன நெருக்கமும் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி அதன் நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பைடனின் உக்ரைன் விஜயத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே வாங் ஜின்னின் மொஸ்கோ விஜயம் அமைந்துள்ளது. இவை இரண்டுமே இராஜதந்திர விஜயங்களாகவே நோக்கப்பட வேண்டும்.
மூன்றாவது, இந்தியாவினது நகர்வு ரஷ்ய, சீன அணியை மேலும் பலப்படுத்துவதுடன் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான நகர்வாகவே அமைந்துள்ளது. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் உக்ரைன் தரப்பு பல முயற்சியை எடுத்த போதும் இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காதது மட்டுமன்றி நடுநிலை வகித்ததன் மூலம் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளதையே காட்டுகிறது. இது மேற்குக்கு பெரும் ஏமாற்றமாகவே தெரிகிறது. அமெரிக்கா இந்தியாவுடன் கொண்டுள்ள அனைத்து உறவுகளாலும் ரஷ்ய-, இந்திய உறவை தகர்க்க முயன்ற போதும் எந்த நிலையிலும் சாத்தியமற்றதாகவே உள்ளது. தற்போது உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட நிலையிலும் இந்தியா நடுநிலை வகித்துள்ளது. ஏறக்குறைய 141 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்த போதும் இந்தியா உட்பட 32 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. நடுநிலை வகித்த நாடுகள் அனைத்துமே ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரித்ததாகவே கொள்ளப்படுகிறது. அது மட்டுமன்றி இந்தியா 23.02.2023 நடைபெற்ற ஜி-20 நிதி அமைச்சர்கள் மகாநாட்டில் தனது தலைமையைக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை பற்றிய விவாதத்தை தவிர்ப்பதுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை வேறு உரையாடலுக்குள் கொண்டுவர முனைகிறது. அது பற்றிய பேச்சுக்களை இந்திய உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்க திறைசேரி செயலர் ஜேனட்யெல்லர் உக்ரைன் போரில் ஏற்பட்ட அனைத்து விடயங்களுக்கும் ‘ரஷ்யாவை பொறுப்பேற்க வைப்பதில் நட்பு நாடுகளுடன் சேருவோம்” என்று கூறிய போதும் இந்தியா அத்தகைய உரையாடலில் ஆர்வம் காட்டாது செயல்பட்டதை மகாநாட்டில் காணக்கூடியதாக அமைந்திருந்தது.
நான்காவது, ரஷ்யா அமெரிக்காவுடன் 2010 களில் அணுவாயுத உற்பத்தியின் அளவை கட்டுப்படுத்துவதுடன் ஒவ்வொரு நாடும் மற்றய நாட்டின் அணுவாயுதங்களை சோதனை செய்வதாக மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளமை மீளவும் பனிப்போர் ஒன்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. அண்மையில் 21.02.2023 இல் மாஸ்கோவில் நிகழ்ந்த வருடாந்த உரையின் போது இந்த அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளியிட்டார். இதனை அமெரிக்கா கண்டித்திருப்பதுடன் இது ரஷ்யாவின் மிகப் பெரிய தவறு எனவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார். இதனால் ரஷ்யா அணுவாயுதங்களை உற்பத்தி செய்யவும் அதனை நவீனமயப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாகவே தெரிகிறது. இது ஜோ பைடனது உக்ரைன் விஜயத்திற்கான பதில் என பென்டகன் தெரிவித்துள்ளது. எதுவாயினும் உலகம் ஒரு ஆபத்தான அணுவாயுதப் போருக்கு தயாராவதை கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது. வடகொரியா சமீபகாலத்தில் பாரிய அளவிலான அணுவாயுத உற்பத்தியையும் அணுவாயுதத்தை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வருகிறது. சீனா தனது பாலைவனங்களில் இரகசியமாக அணுவாயுத உற்பத்தியை மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவ்வாறு ஈரானும் தனது அணுவாயுத ஆற்றலை அதிகரித்திருப்பதாகவும் யுரேனிய செறிவூட்டலை 84 சதவீதமாக அதிகரித்துள்ளமை அதன் அணுவாற்றல் திறன் அதிகரித்துள்ளதை காட்டுவதாகவும் உள்ளது. இவை அனைத்தும் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளுக்கு எதிரான கூட்டுநாடுகளது பலப்படுத்தலாகவே தெரிகிறது. அதாவது இரு முகாங்களது நகர்வுகள் உலகத்தை மீளவும் பிரிநிலைக்கு உட்படுத்தும் நடவடிக்கையாகவே காணப்படுகிறது.
ஐந்தாவது, ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை பிரிவின் செயலாளர் ஜோசப் பொரெல் தெரிவிக்கும் போது இத்தடை நான்கு ரஷ்ய வங்கிகளையும் ரஷ்யாவின் ஏற்றுமதி இறக்குமதியையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது 10வது தடையெனவும் வெளியுறவு அமைச்சர்களின் பிரசல்ஸ் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகைய தடைகளுக்கு பின்பே ரஷ்யப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகவும் ரஷ்ய ரூபிளின் பெறுமானம் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் உண்டு. இத்தகைய பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடனான பொருளாதா நெருக்கத்தை அதிகரித்துள்ளதுடன் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியின்மையால் ஐரோப்பா பாரிய நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
எனவே உலகளாவிய அரசியல் பொருளாதார இராணுவப் போக்கினை அவதானித்தால் மீளவும் ஒரு பனிப் போருக்கான களத்தை நோக்கி நாடுகளது நகர்வுகள் தென்படுகிறது. அத்தகைய பனிப் போர் 1945-,1990 காலப்பகுதி போன்றல்லாது அமையக்கூடியதாகவே தெரிகிறது. முன்னாள் சோவியத் யூனியன் போன்று தெளிவான சித்தாந்தப் போர் ஒன்றுக்கான திறவு கோலாக தற்போதைய போக்கு அமையவில்லை. மாறாக சுரண்டலுக்கும், சுரண்டலுக்குமான போராகவும், ஆக்கிரமிப்புக்கும் ஆக்கிரமிப்புக்குமான போராகவே அமைய வாய்ப்புள்ளது. இத்தகைய புவிசார் அரசியல் போரானது பூகோள அரசியல் போராகவே மாற்றம் அடையும் போது பிரிநிலையும் முகாம் வடிவமும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாற வாய்ப்பு உள்ளது. அப்போது தேசியங்கள் மற்றும் ஒடுக்குமுறை தேசியங்களது இருப்புக்கள் மீது செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரிக்கக் கூடியதாக அமைய சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் பொருளாதாத்திற்கான இராணுவ போர்கள் தவிர்க்க முடியாத உலகத்திற்குள் தேசியங்களது இருப்புக்கள் அகப்படும் நிலை வழமையான அரசியலாகவே அமையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
