இலங்கை இனவாத அரசியலின் வரலாற்றில் 1983 ஆண்டு யூலை இனக்கலவரம் நிறைவு பெற்று 41 வருடங்களை கடந்துள்ளது. தமிழர் நிலம் எங்கும் அத்தகைய வரலாற்றுக் கொடுமையை நினைவு கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அத்தகை நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றை கடத்துவதுடன் துயரங்களை நினைவு கொள்வதாகவே நகர்கிறது. ஆனால் இத்தகைய படுகொலைக்க ளுக்கும் வன்முறைகளுக்கும் எத்தகைய பதிலீடும் வழங்கப்படவில்லை என்பது தெரிந்த விடயமே. தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் என்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் விஜயதாஸ ராஜபக்ஷh தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக (23.07.2024) பராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கொவிட்-19 தொற்றின் போது இஸ்லாமிய மக்களது ஜனாசாக்களை அடக்கம் செய்யாது தகனம் செய்ததற்காக அரசாங்கம் மன்னிப்புக் கோரியது. இலங்கையின் வரலாற்றில் முக்கிய சம்பவமாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் யூலைக்கலவரம் தமிழ் மக்களது அரசியலில் ஏற்படுத்தியுள்ள துயரத்தையும் அதன் சமகால நிலையையும் தேடுவதாக உள்ளது.
1983 ஆண்டு யூலை 23 திகதி விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் இராணுவ வாகனம் மீது மேற்கொண்டு தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலாக அன்றைய அரசாங்கமும் இராணுவமும் இணைந்து நாடெங்கும் பரவலாக வாழ்ந்த தமிழ் மக்கள் மீது இனவன்முறையை மேற்கொண்டனர். இத்தகைய இனவெறித் தாக்குதலில் தமிழர்கள் வெட்டியும், அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டனர். தமிழர்களது சொத்துக்கள் முழுமையாக சூறையாடப்பட்டது. பாடசாலை மாணவிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். நாடெங்கும் ஏழுநாட்களாக நீடித்த இனவெறித்தாக்குதலில் 3000 மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடற்றவர்களாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். தென் இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்த தமிழர்கள் வடக்குக்கு கப்பல்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இத்தகைய இனவன்முறைக்கப் பின்னால் அரசும் அதன் அரச இயந்திரங்களும் முழமையாகப் பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துறை போன்ற ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் அடித்தும் துன்புறுத்தியும் கொல்லப்பட்டனர். குறிப்பாக குட்டிமணியின் கண்கள் தோட்டி எடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக ஆசிய மனித உரிமைகள் வெளியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம் குட்டிமணியை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது தனது கண்களை இன்னோர் தமிழனுக்கு தானமாக வழங்கப் போவதாகவும் தமிழருக்கு தனிநாடு ஒன்று கிடைக்கும் போது தனது கண்களால் மலரும் தேசத்தை காணப்போவதாகவம் தெரிவித்திருந்தார். இதற்கு பழிவாங்கும் முகமாகவே குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக ஆசிய மனித உரிமைகளது பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தாக்குதலுக்காகவும் நாடெங்கும் தாக்குதல் மேற்கொள்வதற்காகவும் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இராணுவம் ஒத்துழைப்பும் அரசாங்கம் அனுசரணையும் வழங்கியது என்பது அப்போதைய தகவல்கள் உறுதிப்படுததியிருந்தன. அதனால் இத்தாக்குதலை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொண்டது என்பதை தமிழர்கள் கருதுகின்ற நிலை தவிர்க்க முடியாததது.
யூலைக்கலவரம் தொடர்பில் தென் இலங்கையைச் சேர்ந்த பாளி மொழிப்புலமையாளரும் இலங்கையின் முன்னாள் தொல்பொருள்துறைத் தலைவருமான கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் குறிப்பிடும் போது இத்தகைய பெரும் துயரம் இனிமேல் மீண்டும் மீண்டும் நடைபெறாது இருக்க வேண்டுமென்றால் ஒரு ம் என்றார். காரணம் அந்தளவுக்கு மகாவம்சம் ஊட்டும் இனத்துவேச வரலாறு ஆபத்தானது என்பதே இதன் அர்த்தமாகும். இலங்கைத்தீவின் வரலாறு முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இனவாம் காணப்படுகிறது.
அரசின் நீதித்துறையின் பராபட்சமும் இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே தமிழ் மக்களின் நீண்ட துயரத்திற்கு அடிப்படையானது. தேன் இலங்கையின் அரசியலில் சட்டம்,நீதி, நிர்வாகம் என்பன முழுமையாக இனவாதத்தழிற்குள் அகப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து மீண்டு வருவதென்பது கடினமானதாகவே கடந்த கால வரலாறு முழுவதும் கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. தற்போது கூட இஸ்லாமிய சகோதரர்களது ஜனாசாவுக்காக மன்னிப்புக் கோரிய போதும் தமிழ் மக்களது நீண்ட இனப்படுகொலைக்கும் அழிப்புகளுக்கும் பொறுப்பேற்று அரசே அத்தகைய மன்னிப்பைக் கோரவில்லை. மாறாக ஓரமைச்சர் மன்னிப்புக் கோருவதென்பது அதுவும் தனிப்பட்ட ரீதியிலானது என்பதும் வினோதமான விடயமாகவே உள்ளது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியானதாக உள்ளது என்பது யதார்த்தமான போதும் தமிழருக்கு இழைத்த அநீதியானது வரலாறு முழுவதும் மறக்க முடியாததென்றாகும். அதனை தென் இலங்கையாக அதற்கு காரணமான தரப்புக்கள் அனைத்தும் அத்தகைய மன்னிப்பை கோருவது அவசியமானது.
இரண்டாம் உலக போரின் இறுதியில் அமெரிக்கர்கள் ஜப்பான் மீது இரு அணுக்குண்டுகளை வீசிய பல இலட்சம் ஜப்பானியர்களை கொன்று குவித்தனர். அத்தகைய தாக்குதலுக்;கு வருத்தம் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா ஆட்சியில் இருந்த போது மன்னிப்புக் கோரியதோடு ஹிரோசிமா, நாகஷhகியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்வை உலகம் கண்டு வியந்தது. அத்தகைய திராணியும் துணிச்சலும் கொண்ட தென் இலங்கைத் தலைவர்கள் எவரையும் காணமுடியாதுள்ளது. காலம் தாழ்தியாவது அமெரிக்கர்கள் வெளிப்படுத்திய மரியாதையை தமிழர் மீது தென் இலங்கைத் தலைவர்களோ அரசோ காட்டாதது வேதனை அளிக்கும் விடயமாகவே உள்ளது. அமெரிக்கர்கள் நலன்கருதி அத்தகைய நகர்வை மேற்கொண்டாலும் அதில் ஒரு தலைமுறையின் மாறுதல் தென்படுகிறது. அதற்க்குக்கூட தென் இலங்கை புதிய தலைமுறை தயாராக இல்லை என்பது கவனத்திற்குரியது.
நீதி அமைச்சர் விஜயதாஸா ராஜபக்ஷh ஏன் தமிழர் மீதான தனிப்பட்ட மன்னிப்பை யூலைக்கலவரம் பொறுத்து முன்வைத்தார் என்பது எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.
முதலாவது, உண்மையிலேயே இஸ்லாமிய சகோதரர்களிடமே அரசாங்கம் மன்னிப்புக் கோரியிருந்தது. அதற்கான அடிப்படை இஸ்லாமிய சகோதரர்களது வாக்குகள் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்க அவசியமானதாகவே உள்ளது. தென் இலங்கையில் நான்கு முனைத் தேர்தல் போட்டி தயாராகிவிட்டது. வெற்றியை அடையும் ஒரு வேட்பாளர் 50 சதவீதத்திற்கு மேல் எட்டுவதென்பது மிகக் கடினமானதே. குறைந்தது சதாரண பெரும்பான்மை என்ற வெற்றி இலக்கை அடைவதற்கு இஸ்லாமிய, தமிழ் வாக்குகள் தேவையானதாகவே உள்ளது. ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாக ஏனைய சிறுபான்மைத் தேசியங்களது வாக்குகளே அமையப் போகின்றன. அதனால் அத்தகைய சாதகமான நிலையில் இஸ்லாமிய சகோதரர்களே உள்ளனர். காரணம் சனத்தொகையில் 65 சதவீதமானவர்கள் வடக்குக்கு கிழக்குக்கு வெளியே உள்ளனர். 35 சதவீதமான இஸ்லாமியர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தென் இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்களின் தயவிலும் நட்பிலுமே தமது அரசியல் பொருளாதாரத்தை கட்டிவளர்த்துவருகின்றனர். அதனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களது வாக்குகள் தென் இலங்கை வேட்பாளருக்கானதே. அதனை யார் ஈர்ப்பதென்பதே அரசுக்கும் எதிர்கட்சியினருக்கும் உள்ள போட்டியாகும். அந்த புள்ளியிலேயே தென் இலங்கை அரசு கடந்த காலத்தில் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரப்படுகிறது.
இரண்டாவது, அத்தகைய இஸ்லாமிய சமூகத்திடம் கோரியது போன்றதல்ல தமிழரிடம் கோரிய மன்னிப்பு. காரணம் தனித்தே நீதி அமைச்சரே முன்வைத்திருந்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுதல் என்பதற்கு அப்பால் தென் இலங்கையை மையப்படுத்தியுள்ள தமிழ் வாக்க்காளர்களை ஈர்க்கும் எண்ணமும் அதற்குள் அடங்கியிருக்க வாய்ப்புள்ளது. அதனைக் கடந்து நீண்டதூர நோக்குடனோ அல்லது தமிழ் மக்கள் மீதான எண்ணத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படவில்லை. அரசாகவோ, அமைச்சரவையிலோ, அல்லது பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக சபாநாயகரோ கோரவில்லை. இதே நீதி அமைச்சர் கடந்த காலங்களில் நீதியையும், தீர்வையும் தமிழ் மக்கள் ஒன்றாகக் கோரமுடியாது எனக் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. அத்தகைய ஒரு விடயமாகவே யூலை இனப்படுகொலை சார்ந்து தென் இலங்கை அரசியலில் பேசப்படுகிறது.
மூன்றாவது, கனடாவின் பிரதமர் ஐஸ்டின் ட்டூடோ யூலைக்கலவரம் தொடர்பில் அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்திய ஆதரவும் தென் இலங்கைக்கு அதிக தேவையை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் ஒரு கையாளுகையை தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவிய தளத்திலும் ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலை அண்டிய காலத்தில் தென் இலங்கைக்கு தேவையானதாக உள்ளதாகவே தோன்றுகிறது.
எனவே, தென் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மன்னிப்புக் கோரல் என்பது அரசியல் நோக்கம் கொண்டதே அன்றி யதார்தமாக தமிழரது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான நடவடிக்கையாக தென்படவில்லை. தமிழ் மக்களை இலங்கைத் தீவுக்குள் சுயநிர்ணயத்திற்குரியவர்களாக கருதும் நிலையிலோ அல்லது தெளிவான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதாவது சமஷ்டியின் அடிப்படையிலோ தீர்வை முன்வைத்த சுமூகமான ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டதாக தென்படவில்லை. மாறாக தென் இலங்கை அரசியல்வாதிகளின் நலன்களை பூத்தி செய்யும் நகர்வாகவே தெரிகிறது. இதனையே கடந்த காலம் முழுவதும் தென் இலங்கை ஆட்சியாளர்களும் அதற்கு செவிசாய்க்கும் ஏனைய தரப்புக்களும் மேற்கொண்டுள்ளன. அதனையே தற்போதைய ஆட்சியாளர்களும் கையாண்டுவருகின்றனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)