அரசியல் கட்டுரைகள்

இடதுசாரிகளின் எதிர்ப்புவாதமும் அமெரிக்க-விக்கிரமசிங்ஹா கூட்டு அரசியலும்?

இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு காட்சி மாற்றத்திற்கான அரங்கத்தை தீவிர அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனர். அதில் முன்னாள் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்பவர்களும் உள்ளடங்குவார்கள். இலங்கைத் தீவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தாராளவாதிகளும் மதவாதிகளும் இனவாதிகளாகவும் தீவிர தமிழ் எதிர்ப்புவாதிகளாகவுமே காணப்படுகின்றனர். இனவாத உணர்வுக்கு முன் எந்த சித்தாந்ததும் செல்லுபடியாகாத நிலையே இன்றுவரையும் காணப்படுகிறது. அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தீவிரவாதிகளாக மாறியதன் விளைவே இன்றைய இலங்கைத் தீவின் நிலையாகும். இக்கட்டுரையும் என்.எப்.எப்(NFF) தலைமையினதும் அக்கட்சியினதும் உரையாடலின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.

தென் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியின் போது உதயமான தேசிய முற்போக்கு முன்னணியின் தலைமையும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை முதல்ல் நோக்குவது பொருத்தமானதாக அமையும்.

முன்னாள் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ பதவியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு பின்னால் அமெரிக்கா செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான தந்திரேபாயங்களையும் பாராளுமன்றத்தை நோக்கிய அமெரிக்காவின் நகர்வுகளையும் தெளிவாக தனது 133 பக்கம் கொண்ட நூல் ஒன்றில் விலாவாரியாக விமர்சனம் செய்துள்ளார். அதனை 24 மணி நேரத்தில் ஆங்கிலத்தில் அமெரிக்கத்தூதுவர் மொழிபெயர்த்து எதிர்வினையாற்றியுள்ளதாக தென் இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதில் அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கை அரசியல் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்குள்ளும் வெளியுறவு அமைச்சிலும் தனிப்பட்ட செயலாளர்கள் நிலையிலும் ஏற்பட்ட பதவி நிலை மாற்றங்களும் அதிகாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் உரையாடப்பட்டுள்ளது. இராணுவத்தளபதியின் நகர்வுகள் எப்படி கையாளப்பட்டதென்பதும் பொதுஜனப் பெரமுனவுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் உட்பட ஆட்சிமாற்றத்தின் பின்னணி விhபரணப்படுத்தப்படுகிறது. அத்தகைய நிலையிலேயே தேசியப்பட்டியல் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்ஹா பிரதமரானதும் அதனை அடுத்து அவர் ஜனாதிபதி ஆனதற்கும் பின்னால் அமெரிக்க நகர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய விடயம் இதே பரப்பில் பலதடவை உரையாடப்பட்டுள்ளது. இதுவொன்றும் தமிழ் வாசகர்களுக்கு புதியது கிடையாது. ஆனால் அவர்களால் இத்கைய வல்லரசு நாடுகளது தலையீட்டுக்கு அடிப்படைக்காரணங்களை கண்டறிந்து அது தீர்க்கப்படாத வரை வல்லரசுகளது தலையீடு மட்டுமல்ல தென் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்திற்காக உலகத்தை நோக்கி கையேந்த வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். இது தென் இலங்கையிலுள்ள இடது சாரிகள் என தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பொருந்தும். காரணம் அவர்களே ஏகாதிபத்தியம் பற்றியும் முதலாளித்துவம் பற்றியும் அதிகம் உரையாடுபவர்கள். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்காது இனவாதம் பேசும் தரப்பாகவே தென் இலங்கை சிங்கள இடது சாரி அரசியல் காணப்படுகிறது. சிறிய அளவில் முற்போக்குச் சக்திகள் காணப்பட்டாலும் அவர்களால் தனித்தோ கூட்டாகவோ தீர்மானம் எடுக்கும் வலிமை இல்லாதுள்ளமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது விடயமாகவே உள்ளது. ஆனால் இத்தகைய எதிர்புவாதத்தை கட்டியெழுப்புவதன் வாயிலாக மாற்றத்தை நோக்கிய நகர்வு திட்டமிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலாவது, இந்திய-அமெரிக்க எதிர்ப்புவாதம் என்பது இலங்கைத் தேசியத்தின் அடிப்படையென்பது வரலாற்று ரீதியில் நிகழ்ந்துவரும் விடயமாகும். அத்தகைய எதிர்புவாதம் சிங்கள் தேசியவாதத்தை தூண்டிவிட அவசியமானது. அதுவே மகாவம்சம் முதல் இன்றுவரை நிகழ்ந்துவரும் தென் இலங்கை அரசியலாகும். அத்தகைய எதிர்ப்புவாதத்தினால் ஈழத்தமிழர் விரோதிக்கப்படுகிறார்கள். இந்தியாவும் அமெரிக்காவும் ஈழத்தமிழருக்கு அதிகாரம் பெற்றுத்தர முனைவதாகவே பெய்யான பிரச்சாரத்தை முன்வைத்துவருகின்றனர். குறைந்தபட்சம் விடுதலைப்புலிகளை மீளவும் பலப்படுத்த முயல்வதாகவாவது பிரச்சாரம் செய்யும் தன்மையை தென் இலய்கை அரசியல்வாதிகள் கொண்டிருப்பார்கள். இவற்றின் வாயிலாக சிங்களத் தேசியத்தை மீளௌச் செய்வதற்கான முயற்சியாகவே தெரிகிறது. அரகளய அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலால் தூண்டப் பெற்றதென்றால் சிங்களத் தேசியம் இடதுசாரி முலாம்பூசிக் கொண்ட தீவிர அரசியல்வாதிகளால் தூண்டப்படுவதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இடதுசாரிகளிடம் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு எனும் சுலோகங்களை முன்னிறுத்திக் கொண்டு தென் இலங்கை இடதுசாரிகள் சிங்களத் தேசியவாதத்தை போலியாக பலப்படுத்துகிறார்கள். இத்தகைய இடதுசாரிகள் எவரும் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக என்னுமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இடதுசாரிகளின் ஆழமானதும் முதன்மையானதும் தேசிய இனம் பற்றிய பிரச்சினைக்கான தீர்வு பற்றிய சிந்தனையேயாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணயம் மற்றும் சமஷ்டி பற்றிய உரையாடலை முதலாளித்துவம் முன்வைத்தாலும் அதனை உலகளாவிய நியதிக்குள் கொண்டுவந்ததும் நடைமுறைப்படுத்தியதும் இடதுசாரிகளே. அத்தகைய இடதுசாரிகளின் கோட்பாட்டிலிருந்தே தென் இலங்கை இடதுசாரிகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் என்றுமே இனவாதிகளாகவே துலங்கியுள்ளனர். தென் இலங்கை இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்தின் சோற்றை உறுஞ்சிக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடுகிறார்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது, தற்போதுள்ள ஆட்சியும் ஜனாதிபதியும் அமெரிக்க நலனுக்கு செயல்படுபவர்களாவே காட்டப்படுகிறது. அதில் நியாயம் உண்டு. பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்ஹா ஜனாதிபதி ஆவதென்பது இலகுவான விடயமாகாது. அது ஒரு தேசத்தின் பலத்தினால் என்பதையும் மறுக்க முடியாது.விக்கிரமசிங்ஹா ஓர் உயர்வர்க்கம் என்பதனால் சாத்தியமானாலும் அதனைக் கடந்து அவர் ஒரு தராளராள ஜனநாயகவாதியாகவும் மேற்குலக விசுவாசியாகவும் காணப்பட்டதே அத்தகைய ஜனாதிபதி பதவியை இலகுவில் கைப்பற்றவும் அதனைத் தக்கவைக்கவும் முடிந்தது. தற்போது அதனை நீடிப்பதற்கு முனைகிறார். அதற்கு மேற்குலகத்தின் ஆதரவு அவசியமானது. மேற்குலகத்தின் இலங்கை பொறுத்த நிகழ்ச்சி நிரல் என்பது இந்துசமுத்திர நிகழ்ச்சி நிரலுமாகும். இதுவே தற்போதுள்ள எதிர்முரணியமாகும். அதாவது வெதமுல்ல அரசியலுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்ஹா தேவையாக உள்ளார். அதே நேரம் அவரது அமெரிக்க விசுவாசத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வெதமுல்ல அரசியல் கருதுகிறது. அதனால் வெதமுல்ல அரசியலின் எதிர்காலம் காணாமல் போய்விடும் என எண்ணுகிறது. ஆனால் விக்கிரமசிங்ஹா இல்லாவிட்டால் வெதமுல்ல இருப்பு காணாமல் போய்விடும் என்பதை நிராகரிக்க முடியாது. இதனையே விக்கிரமசிங்ஹாவும் பயன்படுத்திவருகிறார். அதாவது வெதமுல்லவின் ஆதரவுடன் மக்களால் தேர்வு செய்யப்படும் ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்வதே அவரது நோக்கமாகும். அத்தகைய எதிர்காலம் விக்கிரமசிங்ஹாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் இந்துசமுத்திர அரசியலுக்குமானது. இந்துசமுத்திரத்தில் சீனாவின் பலத்தை உடைத்து மேற்குலகத்தின் பலத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் நகரும் அமெரிக்காவும் விக்கிரமசிங்ஹாவும் காணப்பட விக்கிரமசிங்ஹாவை தோற்கடிப்பதன் மூலம் அமெரிக்காவை அகற்றி வெதமுல்லவை மீளவும் ஆட்சியில் அமரச் செய்து சீனாவின் இருப்பினைப் பாதுகாப்பதே வீரவன்சா அணியின் திட்டமிடலாக தெரிகிறது. அதில் அதிக முரண்பாடுடையவராக விக்கிரமசிங்ஹாவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதாவது இந்தியாவை இலங்கைத் தீவின் அரசியலில் தலையிடாது இருக்க செய்டய வேண்டுமாயின் சீனாவுடனான உறவு இலங்கைத்தீவக்கு அவசியமென் விக்கிரமசிங்ஹா கருதாமலுமில்லை. ஆனால் இதனை இடதுசாரி அணி ஏற்றுக் கொள்ளவதாக இல்லை. அதனை நம்பவும் தயாரில்லை. அதனாலேயே அமெரிக்காவையும் விக்கிரமசிங்ஹாவையும் சிங்களத் தேசியத்தின் பெயரால் அகற்ற முயலுவதாகவே தெரிகிறது. அதற்கான தயாரிப்புக்கள் தென் இலங்கையில் அரங்கேற ஆரம்பித்துள்ளது.

மூன்றாவது, இது எத்தகைய பிரதிபலிப்பை ஈழத்தமிழரது அரசியலில் ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். இத்தகைய அமெரிக்க விக்கிரமசிங்ஹா நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே தமிழ் அரசியல்வாதிகளுடனான பேச்சுமேசை கட்டமைக்கப்படுகிறது. அதன் உள்ளார்ந்த நோக்கம் தமிழ் மக்களது வாக்குப்பற்றியதாகும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கு விக்கிரமசிங்ஹாவுக்டகு தேவையாக உள்ளது. தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஓரளவாவது சமாளித்துக் கொள்ள தமிழ் மக்களது வாக்கு தேவையாக உள்ளது. அதற்கான நகர்வாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அமைந்துள்ளது. பேச்சுவார்த்தை என்பது ஓர் இராஜதந்திர செய்முறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேச்சுக்களுக்கு போகாது பகிஸ்கரிப்பது, வெறுமையாக எந்த தயாரிப்புமின்றி நிபந்தனையும் இன்றி பேசப் போவதும் தமிழ் தரப்பின் பலவீனமே. அது பற்றி உரையாடுவதில் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த தென் இலங்கை மற்றும் இந்துசமுத்திர அரசியல் சூழலில் தமிழ் அரசியல் தனது நியாயமான அடிப்படைகளை வென்றெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான எந்த தயாரிப்பும் இன்றி அவர்களது வெளிப்பாடுகள் வழமையானதாக உள்ளது. எந்த புரட்சிகரமான அணுகுமுறையுமின்றி நகரும் பாதையில் தமிழ் அரசியல் பயணிக்கிறது. இத்தகைய வங்குரோத்து அரசியலாலேயே எதனையும் அடைய முடியாது. புதிய அரசியல் அணி புரட்சிகரமான அணுகுமுறையும் உபாயம் கொண்ட திட்டமிடலுடன் எழுச்சியடைய வேண்டும்.

எனவே தென் இலங்கை இடதுசாரிகளது அமெரிக்க இந்திய எதிர்ப்புவாதம் உள்நாட்டில் வெதமுல்ல அரசியலை நிலைநிறுத்துவதாக உள்ளது. அவ்வகை நிலைநிறுத்தலானது இந்துசமுத்திரத்தில் சீனாவின் பலத்தை வலுவடையச் செய்வதுடன் விக்கிரமசிங்ஹாவையும் அமெரிக்காவையும் சிங்களத் தேசியத்தின் பெயரால் தோற்கடிப்பதாகும். இதில் தமிழர் தரப்பு பலியிடப்படுவதற்கான தயாரிப்பாகவே பேச்சுவார்த்தை என்ற அரங்கு காணப்படுகிறது. அமெரிக்க விக்கிரமசிங்ஹத் தரப்பால் அணைத்து கெடுக்கவும் வெதமுல்ல வீரவன்ச சீன தரப்பால் இனவிரேதத்தால் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு அதிகமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)