இலங்கை அரசியலில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளன என்பது தெளிவானதாகும். அதற்கு அடிப்படையில் தென் இலங்கை அரசியல் தலைவர்களது அணுகுமுறையே காரணம் என்பதும் தெரிந்தவிடயமாகும். துமிழ் அரசியல் பக்கத்தினை மட்டுமல்ல பிராந்திய, சர்வதேச அரசியல் முயற்சிகளையும் தென் இலங்கை தமது இராஜதந்திரத்தால் கையாண்டு தமிழருக்கான தீர்வை சாத்தியமற்றதாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய செய்முறையில் இனவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட தென் இலங்கைத் தலைவர்கள் மட்டுமல்ல இடதுசாரிகள், தாராளவாதிகள், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த சோஸலிஸ்டுகள், மற்றும் மதவாதிகள் அனைவருமே வரலாறு முழுவதும் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுக்கு எதிராக செயல்பட்டள்ளனர் என்பது கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இதில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுராகுமார திசாநாயக்கா கிளிநொச்சியில்(16.03.2024) ஆற்றிய உரையின் உள்ளடக்கத்தின் புரிதல் அவசியமானது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மகாநாட்டில் அநுராகுமார தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது இலங்கையின்(எமது) வரலாற்றை எடுத்தக் கொண்டால் தமிழர், சிங்களவர்(நாங்கள்) திருமணம், சமயவழிபாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் செயல்பட்டோம். நூங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்.அப்போது எங்களுக்குள் இனவாதம் மற்றும் வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் பிரிவினை அரசியலே மேற்கொள்ளப்பட்டது. தெற்கிலும் வடக்கிலும் பிரிவினை பேச்சுக்களையே முன்னெடுத்தே அரசியல் செய்யப்பட்டது. அந்த அரசியல் நிலையிலிருந்தே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்திய எனும் நாட்டை நாங்கள் பார்க்க வேண்டும். இந்தியத் தேசியக் கொடியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு இனங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.அங்கு பல்வேறு வகையான கலை,கலாசாரம் என இருந்தாலும் அவர்கள் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.
ஆந்த ஒற்றுமையினால் அப்துல்கலாம் எனும் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையினால் சிறுபான்மையினரான சீக்கியரை பிரதமராக கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வெற்றியைக் கொடுத்தது. ஆனால் இலங்கை (எமது) நாட்டில் அதற்கு மாறாக நடந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழிப்பிரச்சினை உருவாகியதைத் தொடர்ந்து இனப்பிரச்சினையும் தொடங்கியது. வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மகாநாட்டில் தனிநாடு கோரி தேர்தலில் போட்டியிட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாக்கப்பட்டனர். தொடர்ந்து 2009 இல் போர் முடிந்தது. இலங்கையர் (நாங்கள்) சுதந்திரத்திற்கு பின்னர் சண்டையிட்டே காலத்தைக் கடந்தோம். ஆதனால் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இழப்புக்களையும், பகைகளையும் இனரீதியாக தனிமைப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது.இவற்றுக்கு முடிபு வேண்டும். அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அநுராவின் உரை வரவேற்கப்பட வேண்டியது. அதில் புதிய, உத்வேகம் மிக்க இலங்கையர் என்ற எண்ணம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதனை அடைவதற்கு நீண்ட நிலையான பயணம் தேவையாக உள்ளது.
முதலாவது, அநுராவின் உரையில் தமிழர் மீது அதிகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக விளங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அடிப்படையில் ஏன் தமிழர்கள் அத்தகைய தனிநாட்டுக்குக் கோரிக்கைக்கு போனார்கள் என்பது விளங்கிக்கொள்ள வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னர் எத்தனை உடன்பாடுகளும் (பண்டா-செல்வா,டட்லி-செல்வா) தீர்வு முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டதென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் 1956 இல் கொண்டுவரப்பட்டது சுயபாசை திட்டமல்ல. சிங்கள மொழி மட்டும் சட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே ஜே.வி.பி.யை தோற்றுவித்தது என்பதை மறந்துவிட முடியாது. அதுவே ஈழவிடுதலையில் ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது என்பதுவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது, தமிழர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறியதற்க்கான நியாயப்பாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். 1958 ஆம் ஆண்டு முதல் 2009 வரை தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளும் அழிப்புகளும் சாதரணமானவையாக கடந்து செல்ல முடியாது. அதன் சிதைவுகளிலிருந்து தமிழ் மக்கள் என்னும் மீளவில்லை. தென் இலங்கை ஆட்சியாளரின் இராணுவ அடக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளவே தமிழர் ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார்கள். 1979 ஆண்டு முதல் தற்போது வரை தமிழர்கள் இராணுவச் சட்டத்திற்குள்ளேயே வாழ்கின்றார்கள். பயங்கரவாதச் தடைச்சட்டம் என்பது ஒர் இராணுவச் சட்டம் என்பதை அறிவியல் ரீதியாக நிராகரிக்க முடியாது. அத்தகைய ஆயுதப் போராட்டமானது தமிழர்களால் மட்டுமல்ல அயல்நாடான இந்தியாவினது ஒத்துழைப்போடு உருவானது. தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழர் அச்சாணியாக இருந்த போதும் அதனை வளர்த்தெடுத்ததில் இந்தியாவுக்கு பங்குண்டு. இந்தியா இல்லை எனில் தமிழர் அழித்தொழிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது. ஜே.வி.பி. இனது ஐந்தாவது பிரகடனமும் அத்தகைய ஒன்றாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. இத்தகைய அழிவுகளிலருந்தும் படுகொலைகளிலிருந்தும் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்கப்படுவதற்காகவே ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒன்றாகவே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அமைந்திருந்தது. இத்தகைய அழிவுகளையும் படுகொலைகளையும் தென் இலங்கை மேற்கொள்ளும் போது ஜே.வி.பி. மௌனமாகவே இருந்தது மட்டுமல்ல இறுதிக்கட்டப் போரில் போரின் முன்னணி வீரராக நிறுத்தப்பட்டவர்கள் ஜே.வி.பி.இனர் என்பதை மறுக்க முடியுமா? இதனை தென் இலங்கைப் புத்திஜீவிகளும், அரசியல் தலைவர்களுமே உறுதிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் படுகொலை துயரமானது என்பதை பகிரக்கூட தென் இலங்கையில் ஒருவரும் தயாரில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது, ஈழத்தமிழத் தலைவர்கள் விட்டுக் கொடுப்பின் உச்சத்திற்கே சென்றிருந்தார்கள். தனிநாடு கோரியவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபையை தென் இலங்கை அரசாங்கள் முன்வைத்த போது ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அத்தகைய மாவட்ட அபிவிருத்தி சபையைக் கூட அமுல்படுத்த தென் இலங்கை அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏக்கய ராச்சியத்தை சமஷ;டி என்று கூட கூறினார்கள் தமிழ் அரசியல்வாதிகள். இலங்கையின் தேசியக் கொடியையும் தேசிய இலட்சினைகளையும் அங்கீகரித்து மட்டுமல்ல அதற்கான ஏற்று பணிபுரிந்தார்கள் தமிழ் தலைவர்கள். ஆனால் நிறைவில் இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் கேட்கவோ உச்சரிக்கவோ முடியாது என தென் இலங்கை ஆட்சியாளர்கள் கட்டளையிட்டார்கள். இவை எல்லாவற்றையும் ஜே.வி.பி. பார்த்துக் கொண்டிருந்ததுடன் பங்குதாரராகவும் காணப்பட்டது.
நான்காவது, தென் இலங்கையின் இடதுசாரிகள், வலதுசாரிகள், தீவிர தேசியவாதிகள், மதவாதிகள் என அனைவரும் இனவாதிகளாகவே கடந்த வரலாறு முழுவதும் செயல்பட்டார்கள். குறிப்பாக 1956 இல் ஒரு மொழியெனில் இரு நாடு இரு மொழியெனில் ஒரு நாடு என பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட கொல்வின். ஆர்.டி.சில்வா என்.எம். பெரேரா போன்றவர்கள் 1972 முதலாவது குடியரசு யாப்பில் சிங்கள மொழியையும் பௌத்தத்தையும் முதன்மைப்படுத்தியதோடு தமிழருக்கு இருந்த சட்டரீதியான வாய்ப்புக்களை இல்லாது செய்தார்கள். 1926 இல் சமஷ;டியை முன்மொழிந்த பண்டராநாயக்கா 1956 இல் தனிச்சிங்களச் சட்டத்தை உருவாக்கினார். தராளவாதியான தற்போதைய ஜனாதிபதியும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா முன்வைத்த தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் தீயிட்டனர். இத்தகைய வரலாறுகளை ஈழத்தமிழர் எப்படி மறுப்பது அல்லது நினைவிழந்து போவது. அல்லது இன்னுமே தீர்வைத் தென் இலங்கைத் தலைவர்கள் சாத்தியப்படுத்த அனுமதிப்பார்கள் என எதிர்பார்ப்பது.
ஐந்தாவது, அநுராவின் பேச்சில் இந்தியா அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை மையப்படுத்தியதென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். பல்லினம் வாழும் இலங்கைத் தீவில் பௌத்தமும் சிங்களமும் மட்டும்தான் முதன்மை என வரைந்த அரசியமைப்புக்குள் பிற தேசியங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும். இலங்கை அரசியலமைப்பிலுள்ள சட்டம், நிர்வாகம், நீதி என்பன தனித்து பெரும்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்தியே வரையப்பட்டுள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கையின் அரசியலை இந்தியாவுடன் ஒப்பீடு செய்ய முடியுமா என்பது முதன்மையான சந்தேகமே. இந்திய தேசியத்தை கட்டியவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பே அவர்களது ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அடிப்படையாகும். அத்தகைய அடிப்படை எதனையும் இலங்கை அரசியலமைப்பு கொண்டிருக்கவில்லை.
எனவே, அநுரா முன்மொழிந்துள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலங்கைத் தீவு செல்ல வேண்டுமாயின் அதிக மாற்றங்களை அரசியல் கலாசாரத்தில் மேற்கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கம் என்பது பிரதிநிதிகளால் கட்டப்படுவதல்ல. உணர்வுகளாலும் எண்ணங்களாலும் கட்டப்பட வேண்டும். தேச கட்டுமானத்திற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். தமிழ் சிங்கள முன்னாள் அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டுவதனாலேயோ அல்லது கடந்தகாலத்தை குறைகூறுவதனாலோ தீர்வு சாத்தியமாகாது. இவற்றால் ஒருமைப்பாடு நிகழாது. கடந்தகாலத்தை மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு தீர்வுக்கு போக முடியாது. ஆனால் மாற்றம் அவசியமானது. தேசியங்களின் இருப்பிலிருந்து தேசிய அரசாங்கம் கட்டப்பட வேண்டும். அதற்கான அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திலருந்தே அத்தகைய அரசியல் கலாசாரத்தை தொடக்கலாம். தற்போதுள்ள அனைத்து போலிகளையும் துடைத்தொழித்துவிட்டு புதிய புரட்சிகரமான இலங்கைத் தீவை கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும். அத்தகைய மாற்றத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அனைத்து தேசியங்களுக்கும் பங்கெடுக்கும் நிலை சாத்தியமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
