அரசியல் கட்டுரைகள்

இந்திய எதிர்ப்புவாதமாக மாறும் போராட்டங்கள் ஈழத்தமிழருக்கு ஆபத்தானதே?

ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியமானவை. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் போராட்டத்தின் மூலமே தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதில் வெற்றி காணுகின்றன. அதன் அடிப்படையில் சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமகாலத்த்திலும் ஈழத்தமிழர்கள் மன்னாரை மையப்படுத்தி நீண்ட போராட்டத்தை நிகழ்த்திவருகின்றனர். மன்னாரின் கனிய வளங்களையும் காற்றாலைத் திட்டத்தையும் எதிர்த்து வலுவான போராட்டம் ஒன்றின் களம் திறக்கப்பட்டுள்ளது. அத்தகைய போராட்டத்தின் களத்தை சிவில் அமைப்புகள் பிரதேச மட்டத்திலுள்ள அமைப்புகள் கிராம மட்டத்தில் இருந்து சாதாரண மக்கள் அரசியல் கட்சிகள் என ஒரு பெரும் மக்கள் கூட்டம் திரண்டு போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர். ஆனால் இப் போராட்டம் மீது இருவகையான விமர்சனங்கள் உண்டு. அதனை நோக்கியே இக் கட்டுரையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகம் பற்றி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘பொது மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் அதிகார மையங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதும் தான் போராட்டங்களின் நோக்கங்களாகும். உண்மையில் அமெரிக்க வரலாறு முழுவதும் போராட்டங்கள் புரட்சிகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன்களுக்காக மாற்றத்திற்குள்ளாவதென்பதும் அந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் சிவில் ஒத்துழையாமை இயக்கங்களின் பெறுபேறாகும்’ எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போராட்டங்கள் அமெரிக்க ஜனநாயகத்தை மட்டுமல்ல உலகத்தில் ஜனநாயகத்தின் திறவு கோலாகவும் உள்ளன. மன்னாரில் அமைக்கப்பட்டுவரும் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும் அங்கு அகழ்ந்தெடுக்கப்படும் கனிய வளங்களுக்கு எதிராகவும் தமது நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மன்னாரில் காணப்படும் கனிய வளங்களின் அகழ்வதென்பது அந்த மக்களின் இருப்பை அல்லது நிலத்துடனான வாழ்வை முற்றாகவே அழித்து விடக்கூடிய வலிமை கொண்டது. அதற்கு எதிராக போராட வேண்டிய அடிப்படை அந்தப் பிரதேச மக்களுக்கே உரியது. காரணம் இந்த நிலம் அகழப்படுகின்றபோது கனியங்கள் ஒருபுறம் அழிக்கப்படுகின்ற நிலை அமைய மறுபக்கத்தில் நிலத்தில் மையப்பட்டுள்ள மக்களின் வாழ்விடம் என்பது வளப்பற்றாகுறையினால் காணாமல் போகும் அபாயம் உள்ளது. இது அந்த மக்கள் காணாமல் போவதற்கு வழிவகுக்கும். வளங்களின் இழப்பானது பொதுமக்களை அந்த நிலத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்ற நிலையை ஏற்படுத்தும். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாது முன்னெடுக்கப்பட வேண்டியது. இவ்வாறான நடவடிக்கைகள் மன்னாரில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு எங்கும் நிகழ்ந்து வருகின்றது. அதுக்கு எதிரான போராட்டங்கள் அவசியமானது.

ஆனால் கனியவளங்களை அகழ்வது தொடர்பில் தொடக்கப்பட்ட போராட்டம் அதானி குழுமத்தின் காற்றாலை தொடர்பிலும் விரிவடைந்துள்ளது. இத்தகைய போராட்டத்தை பலவீனப்படுத்த ஈழத்தமிழர் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ஈழத்தமிழர் நவீன மாற்றங்களை நிராகரிப்பவர்களாக காட்ட அத்தகைய விமர்சகர்கள் முயலுகின்றனர். காற்றாலை மீது ஈழத்தமிழர்களின் எதிர்ப்பு போராட்டம் அதனையே உணர்த்துவதாக அத்தரப்பினர் குற்றம் சாட்ட முயலுகின்றனர். எத்தகைய விஞ்ஞானபூர்வமான புரிதலுமின்றி அரசியலுக்காகவே அத்தகைய விடயத்ழைத எதிர்ப்பதாக குற்றம்சாட்டும் தரப்பு விவாதிக்க முயலுகிறது. குறிப்பாக மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத்துக்கான அடிப்படைகளை நிராகரிக்கும் ஈழத்தமிழர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தை மையப்படுத்தி அத்தகைய காற்றாலைகளை அதிக போராட்டத்தில் பின்னர் அனுமதித்துள்ளனர். இத்தகைய முரண்பட்ட சூழல் ஏன் ஈழத்தமிழர்களிடம் ஏற்படுவது என்பது பிரதான கேள்வியாக உள்ளது. வடக்கின் ஒரு பிரதேசத்தில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கவும் அதற்கான அனுமதியை நிர்வாக கட்டமைப்பு சிவில் அமைப்புகள் ஒப்புதல் வழங்குகின்ற போது இன்னொரு இடத்தில் அதன் மீது மக்கள் அதிக அதிர்பதியும் நிராகரிப்பும் சுற்றுச்சூழல் சார்ந்த எண்ணங்களும் முதன்மைபடுத்தப்பட்டுகிறது. மேற்படி கேள்வி எழுப்பும் சாரார் முன்வைக்கும் விடயத்தை முற்றாக நிராகரித்துவிட முடியாது.

காற்றாலை மற்றும் கனியவளங்கள் தொடர்பிலும் இந்த மக்களிடம் எழுந்திருக்கும் விழிப்பு நியாயமானது. எந்த சக்திகளும் மக்களுடைய வாழ்வை அளிக்க முயலுகின்றபோது அதற்கு எதிராக போராடுவது என்பது அவசியமானது. ஆனால் மறுபக்கத்தில் அந்தப் போராட்டத்தின் பிரதான சக்திகள் யார் என்பதும் யாருக்கு எதிராக போராடுதல் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் காற்றாலை தொடர்பிலான எதிர்ப்பு என்பது இந்திய தேசத்திற்கான எதிர்ப்பாகவே அதிகம் முன்னிறுத்தப்படுகிறது. கனியவளங்கள் கையகப்படுத்தும் நிறுவனம் ஆஸ்திரேலியாவினுடையது. காற்றாலைத் திட்டம் இந்தியாவினுடையது. இந்த இரண்டு நாடுகளையும் அந்த நாடுகளின் திட்டங்களையும் எதிர்ப்பதாகவே போராட்டம் பரிமாணம் பெறுகிறது. இதில் அவுஸ்திரேலியா பொறுத்து எத்தகைய விவாதங்களும் ஈழத்தமிழரிடம் அதிகம் இல்லாத போதும் தவிர்க்க முடியாது ஈழத்தமிழர் ஒரு நாட்டுடன் பகைப்புலத்தை கட்டமைக்க முயலுவது ஆபத்தானது. அது அவுஸ்திரேலியா என்றாலும் தன்சானியா ஆனாலும் ஈழத்தமிழருக்கு நட்புச் சக்திகளாக நாடுகள் அவசியமாகும். காற்றாலை மற்றும் கனியவள உடன்பாடுகள் சார்ந்து தடுக்க வேண்டிய காலப்பகுதியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் மௌனம் காத்திருந்ததோடு அதற்கான வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்திக் கொண்டனர். எதிர்காலத்தில் அனல்மின் நிலையங்கள் நுரைச்சோலை போன்ற திட்டங்கள் வடக்கு கிழக்கிலும் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் அமைய வாய்ப்புள்ளது. விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் நிறுவத்திட்டமிட்ட அனல்மின் நிலையங்கள் பற்றிய தகவல்கள் அக்கால பகுதியில் அதிகம் உரையாடப்பட்டது. அவர்களது போராட்ட காலப்பகுதியில் அதிகம் திட்டமிடலைக் கொண்டிருந்தது. அவர்களுடைய திட்டமிடலில் அனல்மின் நிலையங்களும் காற்றாலைகளும் மிகப் பிரதானமான அம்சங்களாக முதன்மைப்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கை தனி அரசாக அமைகிறபோது அவற்றின் அவசியம் உணரப்படும் என விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர்.

ஆனால் தற்போது காட்டப்படும் விடயங்கள் அதிகம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வளங்களின் அருந்தலும் நவீன தொழில் நுட்பத்தின் தேவையும் பெருகிவரும் சூழலில் ஈழத்தமிழர் பின்பற்றும் அணுகுமுறைகள் முரண்பாடுடையவையாக உள்ளன. மறுபக்கத்தில் இத்தகைய போராட்டங்கள் இந்திய எதிர்ப்புவாதம் திட்டமிட்டு நகர்த்தப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. அதனை புரிந்து கொள்ளாத மக்களாக ஈழத்தமிழர்கள் இருந்துவிடக் கூடாது என்பதே இப்பதிவின் நோக்கமாகும். ஏனெனில் ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு போராட்டங்களும் ஈழத்தமிழர்கள் எதிரிகள் என்று கருதப்படும் சக்திகளை பாதுகாப்பதாகவே தெரிகின்றது. அடிப்படையில் இந்திய எதிர்ப்புவாத அரசியல் ஈழத்தமிழரை தலைகீழாக மாற்றி இருக்கிறது என்பதும் அதன் விளைவுகளை நோக்கியே 2009 நகர்த்தப்பட்டது என்பதும் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய புவிசார் அரசியலுக்குள்ளால் சமகாலத்தை புரிந்து கொள்வது அவசியமானது. காற்றாலை எதிரான போராட்டம் என்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு எதிரான போராட்டமாக புரிந்து கொள்ளப்படாது இந்திய எதிர்ப்புவாதமாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்திய முதலீட்டில் தமிழ் மக்கள் பங்கெடுப்பதுவும் பொருத்தமற்ற நில ஆக்கிரமிப்பை தடுப்பதுவுமே அவசியமானது. அத்தகைபய விடயம் கைவிடப்பட்டு இந்திய எதிர்ப்புவாதத்தையே முதன்மைப்படுத்துவதாக மாறிவருகிறது. இது தென் இலங்கை ஆட்சியாளரைத் திருப்திப்படுத்துவதுடன் அவர்களுக்கு பின்னே இருக்கும் சீனத் தரப்பை பாதுகாப்பதற்கான செய்முறையாகவும் தெரிகிறது.

இந்திய எதிர்ப்பை மையப்படுத்திய போராட்டங்கள் கட்டமைக்கப்படுகிறபோது அதன் விளைவுகள் அபாயமான மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. இந்தியாவின் காற்றாலை திட்டம் என்பது வெறுமனே மின்சார உற்பத்தியை மட்டும் கொண்டதல்ல உலகில் உள்ள எல்லா நவீன அபிவிருத்தி நோக்கியா திட்டங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அடிப்படையில் அரசியல் நோக்கங்கள் அல்லாமல் மேற்கொள்ளப்படுபவை அல்ல. அத்தகைய அரசியல் நோக்கங்களின் இயல்பான தன்மைகளை எதிர்ப்பது என்பது அந்தப் பிரதேச மக்களின் அடிப்படை உரிமையாகவும் நிலத்தின் மீதான இருப்பை உத்தரவாதப்படுத்தும் அம்சமாகவும் காணப்படுகிறது. ஆனால் அதன் எதிர்கால விளைவு இந்திய அரசியலோடு ஈழத்தமிழர் கொண்டிருக்கும் உறவை கேள்விக்கு உட்படுத்தும். அதன் விளைவுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பின் விளைவுகளாகவே பரிமாணம் பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமும் காற்றாலைக்கு எதிரான போராட்டமும் இந்தியா மீதான எதிர்ப்பு வாதமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. அரசற்ற ஒரு தேசிய இனம் தனது எதிர்காலம் பற்றிய புரிதலோடு அத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.

எனவே விளைவுகளை பொறுத்து போராட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் அனுபவித்தவற்றிலிருந்து ஈழத்தமிழர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இந்தியாவின் அணுகுமுறையில் அதிருப்தியும் எதிர்ப்பும் ஈழத்தமிழருக்கு தவிர்க்க முடியாதது. அது ஈழத்தமிழர் இந்திய உறவை சிதைப்பதாக அமைந்துவிடக் கூடாது. இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி மீதான படுகொலை ஈழத்தமிழரை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றதென்பதை நிராகரித்துவிட முடியாது. ஈழத்தமிழரது இந்திய எதிர்ப்புவாதத்தினால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. மாறாக ஈழத்தமிழரையே பாதிப்பதாக அமையும். அதனையே கடந்த கால வரலாறு முழுவதும் தென் இலங்கை அட்சியாளர்கள் மேற்கொண்டிருந்தனர். ஈழத்தமிழரையும்-இந்தியாவையும் பகைப்புலத்திற்க்குள் நகர்த்தியதன் விளைவாகவே ஈழத்தமிழர் அழிவுக்கு அடிப்படை காரணமாகும். அதனால் ஈழத்தமிழர் தமது அணுகுமுறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதுவே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)