January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்ற தயாராகும் தலைமைகள்?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழரசு கட்சியினர் ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் கோரிக்கையின் பெயரில் 19.11.2025 சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பில் மாகாண சபை தேர்தலை நிகழ்த்துவது பற்றியும் வடக்கு கிழக்கில் ஏற்பட்டுவரும் பிரச்சனைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் முடிபில் ஜனாதிபதி ஜனவரி 2026 முதல் பேச்சுவார்த்தையை தொடங்குவதாக குறிப்பிட்டு முதல் கட்ட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சக்திலிங்கம் பேச்சுவார்த்தை ஜனாதிபதியுடன் தழிரசுக் கட்சியினர் தொடரப் போவதாகவும் அதற்கான நம்பிக்கை தமிழரசு கட்சிக்கு உண்டு என்றும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது தெரிவித்துள்ளார். இக்கட்டுரையும் இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையும் கைவிடப்பட்ட தீர்மானங்களையும் பட்டியலிட முயல்வதன் மூலம் தமிழ் தலைமைகள் ஏமாற்றப்பட்ட விதத்தை கோடிட்டுக்காட்ட முயல்கிறது.

இலங்கைத் தீவிலுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 1957ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் அனைத்து கட்சி சந்திப்புகளும் நிகழ்ந்துள்ளது. அனைத்துமே ஏதோவொரு காரணத்தை முன்வைத்து கைவிப்பட்டுள்ளது. அவற்றை அவதானிப்பது அவசியமானது.

முதலாவது தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் 1957 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவுடன் தமிழ் மொழி நிர்வாக மொழியாக அங்கீகரிப்பது தொடர்பிலும் பிராந்திய சபைகளை நிறுவுவது சார்ந்தும்; பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அதன் பிரகாரம் பண்டா-செல்வா உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. பின்னர் தென்னிலங்கையில் எழுந்த எதிர்பாத்தினால் அவ்வுடன்படிக்கை கைவிடப்பட்டது.

இரண்டாவது 1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்காவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்துக்கும் இடையே நிலபகிர்வு தொடர்பில் தமிழர்களுக்கு நியாயமான பங்கு வழங்குவது சார்ந்தும் வடக்கு கிழக்கு நிர்வாக அந்தஸ்தை கோரும் விதத்திலும் உரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக டட்லி-செல்வா உடன்படிக்கை கையெழுத்தானது. ஆவ்வுடன்படிக்கையும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.

மூன்றாவது 1960-61 காலப்பகுதியில் சிறிமாவோ பண்டரநாயக்காவுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் தனிச்சிங்களச் சட்டம் தொடர்பிலும் சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் பல கட்டப் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. அஅதில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளாது முடிபுக்கு வந்தது.

நான்காவது 1974-1976 வரை பல சந்திப்புகள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கும் சிறிமாவோ பண்டரநாயக்காவுக்கும் இடையில் மொழி உரிமை, கல்வி தரைப்படுத்தல, தமிழர் நிலங்கள் மீது குடியேற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. எத்தகைய உடன்பாடும் இல்லாது பேச்சுவார்த்தை முடிபுக்கு வந்தது.

ஐந்தாவது 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம்-ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையே தன்னாட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பிலும் தேர்தல் உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தகைய உரையாடல் உடன்பாடு எதுவுமின்றி கைவிடப்பட்டது.

ஆறாவது 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் அமுதலிங்கத்திற்க்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நிகழ்ந்ததோடு மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பிலும் தமிழர் பாதுகாப்பு மற்றும் மாநில அதிகாரப் பகிர்வு போன்ற அம்சங்கள் முன்வைக்கப்பட்டு பேசப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் செயற்பாடுகள் பற்றிய இருதரப்புக்கும் இடையில் உரையாடல் நிகழ்ந்தது. அவை எதுவும் அமுல்படுத்தப்படாது கைவிடப்பட்டது.

ஏழாவது 1984 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நீண்ட ஒரு உரையாடல் நிகழ்ந்ததோடு அனைத்து கட்சிகளுக்கான சந்திப்பும் இனப்பிரச்சினை தீர்வு பொறுத்து உரையாடப்பட்டது. அத்தகையஉரையாடலும் பயனற்ற ஒன்றாக முடிவுக்கு வந்தது.

எட்டாவது 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா உடன்பாட்டின் பிரகாரம் 13ஆம் திருத்தச் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்ட போதும் அதுவும் முழுமைப்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளது. பொலீஸ் காணி அதிகாரம் மட்டுமின்றி வடக்கு கிழக்கு துண்டாடப்பட்டதோடு இலங்கை ஒப்பந்தமும் காலாவதியானது. அது மட்டுமல்லாது 13 ஆம் திருத்த சட்டம் மூலமும் வலுவற்ற ஒன்றாக மாறியது.

ஒன்பதாவது 1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரணதுங்காவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நிகழ்ந்ததோடு பிராந்திய சபை தன்னாட்சி அதிகார சபை போன்றவை தொடர்பு உரையாடல் மேற்கொள்ளப்பட்டு பராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுவும் எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.

பத்தாவது 2002 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் ரணில்விக்ரம்சிங்காவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினை பொறுத்த ஒரு நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. அத்தகைய உரையாடலும் அமைதி நிலையை ஏற்படுத்துவது வடக்கு கிழக்கு நிர்வாகத்தை கோருவது மனித உரிமை தொடர்பிலும் மனிதாபமான விடயங்கள் தொடர்பிலும் உடன்பாடு எட்டுவதற்கான பேச்சுவார்த்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ந்ததோடு புரிந்துணர்வு உடன்படிக்கை இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் எத்தகைய தீர்வுமின்றி பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

பதினொன்று 2013 ஆம் ஆண்டு தமிழர் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் 11 கட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு தீர்வின்றி கைவிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு இனப்பிரச்சினை தீர்வு பொறுத்து மகிந்த ராஜபக்சவுடன் அனைத்து கட்சிகள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்ட போதும் 2020ஆம் ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்துக்கான ஏற்பாடுகள் இனப்பிரச்சினை பொறுத்து மேற்கொள்ளப்பட்டு அவற்றிலும் எத்தகைய முடிவு இன்றி கைவிடப்பட்டது.

பன்னிரெண்டு 2015 ஆம் ஆண்டு மைத்திரிபாலா சிறிசேன-ரணில்விக்ரம்சிங்க-எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இடையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி புதிய அரசியல் அமைப்பு வரையப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிகழ்ந்து எத்தகைய மாற்றமும் இன்றி அரசியலமைப்பு முயற்சி கைவிடப்பட்டது. அக்காலப் பகுதியில் 13 பிளஸ் பற்றியும் சமஸ்டி கோரிக்கை பற்றியும் உரையாடப்பட்டது. இவ்வாறு தமிழர் தொடர்புக்குஆட்சியில் இருந்த அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஒரு நீண்ட உரையாடல் இனப்பிரச்சனைக்குரிய தேர்வு பொறுத்து மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு 1957 ஆம் ஆண்டு இருந்து 2025 ஆம் ஆண்டு வரை ஒரே விடயத்தை நோக்கி தமிழ் தரப்பும் அரசாங்க தரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அமைதி உடன்படிக்கைகளை எட்டிய போதும் அவை ஏதேனும் அமுல்படுத்தப்படாது கிழித்து எறியப்பட்டது. தமிழ் மக்கள் மேலும் மேலும் ஒரே உத்தியை பயன்படுத்துவது மட்டுமின்றி தோல்விகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்ற மக்களாகவும் தலைவர்களாகலும் காணப்படுகின்றனர். மீண்டும் பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையை தமிழ் அரசியல் தலைமைகளும் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய பேச்சுவார்த்தைகள் என்ன முடிவை வெளிப்படுத்தும் என்பது முன்கூட்டியே உணரக் கூடிய ஒன்றாகவே காணப்படுகிறது. தேசிய இனப்பிரச்சனை என்பது சர்வதேசப் பிரச்சினை என்பதை உலக வரலாறு முழுவதும் உணர்த்தி நிற்கிறது. அனைத்து உலக நாடுகளிலும் தேசிய இனங்கள் எதிர்நோக்கும் தேசிய இன பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்ட பிரச்சனையாகவும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குள்ளால் தீர்வை எட்டுவதாகவும் கண்டு கொள்ள முடிகிறது. அப்படியானால் இலங்கை தீவின் ஈழத்தமிழர்கள் ஒரே உத்தியை மீள மீளப்பாவித்து தோல்வி அடைந்து கொண்டிருப்பதை விடுத்து உத்தியை மாற்றுவது பொருத்தப்பாடு உடையதாக தெரிகின்றது. தலைவர்களும் இதற்கு பின்னால் பயணிக்கும் மக்களும் தமது கடந்த கால அனுபவங்களில் இருந்து எவ்வகையான உத்திகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாதது. முடிவை நோக்கி ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் போவதனைவிடுத்து பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகளை எட்ட முடியும் என்று நம்பிக்கை அளிப்பது ஏமாற்றுத் தனமான போலித்தனமான அரசியலாகவே தெரிகிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழ் அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதில் கடந்த நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த நூற்றாண்டு முழுவதும் தமிழர்கள் ஒரே உத்தியை பயன்படுத்தி தோல்வியையே எதிர்கொண்டனர். விடுதலைப்புலிகள் காலமும் போரின் வழிமுறைக்கூடாக சண்டைகளை வெற்றி கண்டனரே அன்றி இறுதிப் போரில் வெற்றி பெறவில்லை.

எனவே ஈழத்தமிழர்கள் மற்றும் அரசியல் தலைமைகள் கடந்த வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு உலகத்தின் தேசிய இனங்கள் பின்பற்றும் உத்திகளை பிரயோகப்படுத்த வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் மோசமான ஒரு சூழலை எட்டுவதற்கான அடிப்படையை தோற்றுவிக்கும். அதுவே தமிழர்களுடைய இருப்பு இறைமை வாழ்விடம் பொருளாதாரம் மக்கள் தொகை அனைத்துமே காணாமல் போகின்ற துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. மீண்டும் ஜே.வி.பி.அரசாங்கத்தோடு பேசுவதன் மூலம் கடந்தகாலத்தில் அனுபவித்ததை மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு வழங்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாராகின்றன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)