இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இந்தியாவின் செல்வாக்கும், தலையீடும், ஆக்கிரமிப்பும் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்து கொணடே நகர்கிறது. அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் பௌத்தத்தின் பரம்பல் நிகழ்ந்ததிலிருந்து இலங்கை-இந்திய உறவு பௌத்த மதத்தால் பிணைக்கப்பட்ட தொன்றாகவே அமைந்திருந்தது. வரலாற்றுக் காலத்தைப் போல பிரித்தானியர் காலத்திலும் இலங்கைத் தீவு பிரிட்டிஷ; இந்தியாவின் செல்வாக்கிலும் இந்தியாவின் பாதுகாப்பற்கான அரணாகவும் காணப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் இந்தியாவின் செல்வாக்கு மட்டுமல்ல ஆக்கிரமதிப்பும் தலையீடும் நிகழ்ந்து கொண்டதாகவே காணப்பட்டது. அது இராணு வடிவத்திலும் அரசியல் ரீதியிலும் பொருளாதார உதவிகள் அடிப்படையிலும் நிகழ்ந்து கொண்டதைக் காணமுடிகிறது. ஆனால் இவை யாவற்றுக்கும் மேலாக பௌத்தம் இரு நாட்டுக்குமான நட்புறவை இந்து-பௌத்த மரபுக்குள்ளால் கட்டிவளர்த்து வருகிறது. பௌத்தம் இந்து மத்தத்திற்கு விரோதமானது அல்ல என்பதும் இந்து மதத்திலிருந்தே பௌத்தம் தோன்றியதாகவும் கௌதமபுத்தர் ஒர் இந்துவாக பிறந்து இந்து மதத்திலுள்ள குறைபாடுகளை களைய முயன்றதாகவும் அவரது பரிநிர்வாண நிலைக்கு பின்னர் பௌத்தமதத்தை அவரது சிஷ;சியர்கள் உருவாக்கினார்கள் என்றும் ஆதாரப்படுத்துகின்றனர். அத்தகைய ஆதாரப்படுத்தலே இலங்கை-இந்திய உறவுக்கு வலுவான அடிப்படையாகும். இத்தகைய தனித்துவமான உறவின் பலத்தை முதன்மைப்படுத்தும் இலங்கை இந்திய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு மீதான பௌத்த ஆக்கிரமிப்பினை எவ்வாறு கேள்விக்கு உட்படுத்த முயலுவன என்ற சந்தேகம் ஈழத்தமிழரிடம் எழவேண்டிய தேவை உள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய சந்தேகத்திற்கு விடை காண முயலுகிறதாகவே அமையவுள்ளது.
கடந்த 22.04.2023 அன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் தலைமைப் பீடாதிபதிகளை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்கே சந்திப்பொன்று மேற்கொண்டுள்ளார். இரு நாட்டுக்குமான பல நூற்றாண்டுகால உறவு குறித்து உரையாடப்பட்டுள்ளதுடன் அரசியல் வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் பற்றியும் 2017 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது கண்டி வருகை பற்றியும் நினைவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு மதிப்பளித்த பீடங்கள் இருநாட்டு உறவும் பலமடைய வலியுறுத்தியுள்ளனர். இரு நாட்டு மக்களுக்குமிடையிலான உறவை வலுப்படுத்துவது பற்றியும் உரையாடப்பட்டுள்ளது. 20 .04.2023 புதுடில்லியில் நிகழ்ந்த உலகளாவிய பௌத்த மகாநாட்டில் (Global Buddhist Summit) இந்தியப் பிரதமர் ஆற்றிய உரையின் சிங்கள மொழிபெயர்ப்பு மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் இந்தியப் பிரமரது பௌத்தம் பற்றிய உரைக்கு மகாநாயக்கர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.
வடக்கு-கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதென்ற நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டம் அடுத்துவந்த அரசாங்கங்களாலும் அமுலாக்கப்படுகிறது. சைவர்களது ஆலயங்கங்கள் உடைக்கப்படுவதும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுவதும் வடக்கு கிழக்கின் அரசியலாகியுள்ளது. இத்தகைய இந்து-சைவ ஆலயங்கள் உடைக்கப்படுவதற்கு எதிரான தமிழ் மக்களது பேராட்டத்தில் ஓரங்கமாக இந்தியா இவற்றை தடுத்து நிறுத்த உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள இந்துவா ஆட்சியானது வடக்கு கிழக்கிலுள்ள கோவில்கள் உடைக்கப்படுவதை தடுப்பதுடன் அவற்றினை பாதுகாக்க உதவ வேண்டும் எனவும் பாரதீய ஜனதாக்கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளனர். இவற்றை தடுத்து நிறுத்த இந்தியா உதவுமென்ற அரசியல் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு விடுதலை அரசியல் மீதான நம்பிக்கை இந்தியா ஊடாக வளர்க்கப்பட்டதோ அவ்வாறே மத அரசியலும் வளர்க்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழரது அரசியல், பொருளாதார, கலாசார விடயங்கள் அனைத்துமே பிற சக்திகள் மீதான நம்பிக்கையால் கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தியாவால் அமெரிக்காவால் அல்லது ஐரோப்பியரால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருபோதும் தமிழ் மக்கள் தமது தலைமைகள் மீதோ அல்லது தம் மீதோ நம்பிக்கை கொண்டு அரசியல் செய்முறைகளை கட்டமைத்ததாக தெரியவில்லை. மாறாக ஒரு தலைமை எழுச்சியடைந்து விட்டால் அந்த தலைமை அனைத்தையும் செய்யும் என்ற நம்பிக்கை அரசியல் செய்முறை உளரீதியில் கட்டப்பட்டுள்ளது. அத்தலைமையின் தவறான செய்முறையைக் கூட விமர்சனம் செய்யத் தயாராக இல்லாத சமூகமான நம்பிக்கை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவறுகளையும் சரியானதாக வியாக்கியானம் செய்யும் திறனும் அதீதமாக வளர்ந்துள்ள சமூகமாக உள்ளது. இதுவே நூற்றாண்டுக் கணக்கான தோல்விக்கான ஒரு பக்கமாகும். தேசிய ஒருமைப்பாட்டை விட சுயநலன் மேன்மையானது என்ற வாதம் வலுவானதாக உள்ளது. தனியுடமைவாதத்தை சுயநலவாதமாக வியாக்கியானம் செய்துள்ள நிலையே வளர்ந்துள்ளது. இந்தியாவினது நலன்களுக்கான நகர்வுகளை ஈழத்தமிழர் தமது விருப்புக்கான அடையாளமாக கருதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா,அமெரிக்கா, சீனா என்பன ஈழத்தமிழரை தனது நலனுக்காக பயன்படுத்துவதிலேயே அதன் தேசிய நலன் தங்கியிருக்கிறது என்றால் அதனையே அந்நாடுகள் முதன்மைப்படுத்த வேண்டும். ஈழத்தமிழரை மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து தேசியங்களையும் ஏதோ ஒரு வரைபுக்குள் வல்லரசுகள் பயன்படுத்திக் கொள்வது வழமையானது. அதனையே சர்வதேச அரசியலின் பக்கம் என ஹான்ஸ் மோகன்தோ எனும் சர்வதேச அரசியல் கோட்பாட்டாளர் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் நலன்கள் எல்லாம் ஈழத்தமிழரது விருப்புகளல்ல. ஈழத்தமிழரது விருப்புகளை மட்டும் இந்தியா கொண்டிருக்கும் என்பதுமல்ல. இந்தியாவுக்கு இலங்கைத் தீவு முழுமையாக வேண்டும். தென் இலங்கையும் வடக்கு கிழக்கும் இந்திய நலன்களுடன் நேரடியாக தொடர்புபட்டது. அதனால் இலங்கைத் தீவு முழுதையும் இந்தியா கையாளவே முனையும். தென் இலங்கையை பகைத்துக் கொள்ளாது வடக்கு கிழக்குக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை இந்தியா கவனத்தில் கொள்ளும். தென் இலங்கையை திருப்திப்படுத்துவதில் கவனம் கொள்வது போல் வடக்கு கிழக்கை கவனத்தில் கொள்ளாது. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் அரசு-அரசு உறவு முதன்மையானது.
இந்த நிலையிலேயே பௌத்தம் இந்திய -இலங்கை நட்புறவுக்கான ஊடகமாக கொண்டுள்ளது.இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரும் சமகாலத்தில் அதனையே மதத்தை மைப்படுத்தி இரு நாட்டுக்குமான உறவை பாதுகாத்து வருகின்றனர். பாபர் மசூதியில் அமைப்படவுள்ள இராமர் கோவிலுக்கு சீத்தாஎலியாவிலிருந்து பௌத்த துறவிகளால் மந்திரிக்கப்பட்ட கல் மிலிந்த மொறக்கொடாவினால் எடுத்துச் செல்லப்பட்டதை நினைவில் கொள்ளலாம். இத்தகைய அரசியலும் தந்திரோபயத்திலும் கட்டமைக்கப்பட்ட இலங்கை-இந்திய மதரீதியான உறவை ஈழத்தமிழர்கள் புரிந்துகெர்ளளத் தவறக்கூடாது. அதில் இந்திய-இலங்கை நலன்கள் மையப்படுத்தப்ப ட்டுள்ளன. அதற்காக இந்தியாவை நோக்கியும் பிற நாடுகளை நோக்கியும் ஈழத்தமிழர்கள் கோரிக்கைகளை வைக்க கூடாது என்பதல்ல. மாறாக அதன் பேரால் கொள்ளப்படும் நம்பிக்கையே ஆபத்தானது. அது மட்டமன்றி அத்தகைய புரிதலற்ற நியதிக்காக பிற மதத்தவர்களை நிந்திப்பதும் பகைபுலத்தை உருவாக்குவதும் சமூகங்களை துண்டாடுவதும் போராட்டத்தை மேற்கொண்ட மக்கள் கூட்டத்திற்கான அரசியலாகாது. ஆக்கிரமிப்புச் சக்திகளை கைவிட்டுவிட்டு நட்புச் சக்திகளை பகைவர்களாக்கும் கையறுநிலை அரசியலை ஒரு தேசிய இனத்தின் அரசியல் என்று குறிப்பிட முடியாது. மதத்திற்கு அறம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அரசியலுக்கும் அறம் உண்டு. தென் இலங்கை வழிபாட்டுக்குரிய மக்கள் இல்லாது விகாரைகளை அமைக்கின்றது. காரணம் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் மட்டுமல்ல மக்கள் தொகையிலும் வடக்கு கிழக்கில் மாற்றம் செய்வதற்கான திட்டமிடலாகும். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டமிடலின் படி வடழக்கு கிழக்கில் 25 சதவீத சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற கொள்கையை 2010களிலேயே வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் முன்நிலையிலேயே இத்தகைய விடயம் உரையாடப்பட்டுள்ளது. இது ஈழத்தமிழரது பூர்வீகத்தை அழிப்பதற்கான செய்முறையாகவே தெரிகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்த அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளமாக ஆக்குவதில் கவனம் கொளளும் தென் இலங்கை சர்வமத வடிவத்திற்குள்ளால் பிரவேசம் செய்யத் தொடங்கியுள்ளது. இவை எதுவும் இந்துமத்தையோ இந்தியாவையோ பாதிப்புக்கு உட்படுத்தாது. இந்துமதத்திலிருந்தே பௌத்தம் தோற்றியது என்பதுடன் பௌத்தம் இந்தியாவை விழுங்கப் போவதில்லை. ஆனால் இருபத்திரண்டு இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஈழத்தமிழரை அவர்களது மத அடையாளத்திலிருந்தும் அரசியல் அடையாளத்திலிருந்தும் அப்புறப்படுத்தக் கூடியது. ஈழத்தமிழர்கள் அகரீதியில் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி முரண்பாட்டுக்குட்படுத்துவதல்ல. தேசிய இனமாக மொழியால் பண்பாட்டால் பிரதேசத்தால் அல்லது இதில் ஏதாவதொன்றினால் ஒன்றுபடுவதே அரசியல் கோட்பாடுகளும் அரசியல் நாகரீகமும் வெளிப்படுத்தும் புரிதலாகும். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் பகைவர்களை தோடினார்களே அன்றி நண்பர்களை உருவாக்கவில்லை என்நே கூறலாம். அது உள்நாட்டக்குள் மட்டுமல்ல பிராந்திய தளத்திலும் புலம்பெயர்ந்த தளத்திலும் அத்தகைய பகைவர்களே உருவாக்கப்படுகிறார்கள்.
எனவே, இந்தியாவின் நலனுக்குட்பட்தே இலங்கைத் தீவின் பௌத்தம். அதே அர்த்தத்தில் பௌத்தத்தை ஈழத்தமிழர்கள் நோக்க முடியுமா என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தியா தென் இலங்கையை பகைத்தக் கொண்டு ஈழததமிழருக்கான பௌத்த ஆக்கிரமிப்பை தடுப்பதென்பது சாத்தியமற்ற உரையாடல். இந்தியாவின் எல்லையை அதன் நலன்சார் அரசியலுக்குள்ளால் புரிந்து கொள்வதுடன் ஈழத்ததமிழர் தமக்கான அரசியல் நம்பிக்கையை தமது இருப்பிலிருந்து கட்டவேண்டும். அகரீதியில் பலமடைவதை விடுத்து பிரிவினையை ஊக்குவிப்பது அபாயமானது. கடந்தகாலத் தலைவர்களைப் போல் தேசியத்தின் பெயரால் எதிரிகளை உருவாக்குவதை விடுத்து ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முனைவது அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்-