January 19, 2025
அரசியல் கட்டுரைகள்

தமிழரது தேசிய இனப்பிரச்சினையை மனித உரிமைகள் பிரச்சினையாகக் கொள்ள முடியுமா?

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நீண்ட பொருத்தமற்ற உரையாடல்களும் தீர்வுத் திட்டங்களும் நகர்த்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது தோல்வி கண்ட நாடாக காணப்படுகிறது. புதிய அரசாங்கமும் அத்தகைய தோல்விக்கான பாதையை தெரிவு செய்கிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது அதற்கான ஆதாரங்களை புதிய அரசாங்கத்தினரது கட்சி உறுப்பினர்களும் அதன் அமைச்சர்களும் வெளிப்படுத்திவருகின்றனர். அதன் பிரதிமை தமிழ் மக்களின் அரசியல் இருப்பு சார்ந்த எத்தகைய தீர்மானங்களை தென்னிலங்கை முன்னெடுக்கப் போகிறதென்ற விடயம் முதன்மையானது. இக்கட்டுரையும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வெளிவகார அமைச்சர் விஜித ஹோரத் அண்மையில் உடகங்களுக்கு முன்வைத்த உரையாடல் அடிப்படையை தேடுவதாக அமையவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் முன்வைத்த கருத்தினை முதலில் நோக்குவது அவசியம். அதன் பிரகாரம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ளக பொறிமுறை ஊடாக இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது. உள்ளக பொறிமுறை ஊடாக உரிய நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துடன் மேலும் குறிப்பிடுகின்ற போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் கடந்த கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய அரசாங்கமானது தேசிய பொறிமுறை ஊடாக மனித உரிமை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இதனை புதிய அரசாங்கம் செயலில் உறுதிப்படுத்தியும் வருகிறது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வடக்கு கிழக்கு மக்கள் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர் ஒரு நாட்டுக்குள் இலங்கையர்களாக முன்னோக்கிச் செல்வதற்கு தயாராக உள்ளனர் என்பதை அது உணர்த்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். வெளியுறவு அமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்கும் விடயங்களை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது மனித உரிமை பேரவை முன்வைத்த தீர்மானங்களை நிராகரித்து விட்டு உள்ளக பொறிமுறையில் மனித உரிமை சார்ந்த தீர்வுகளை எட்ட போவதாக விவாதித்திருப்பது எந்தளவுக்கு பொருத்தப்பாடுடையதாகும். உலகளாவிய ரீதியில் சர்வதேச சட்ட நியதிகளுக்கு உட்பட்டு இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனித உரிமை பேரவை 2009 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பல்வேறுபட்ட தீர்மானங்களை முன்வைத்து வருகிறது. அத்தகை தீர்மானங்களை கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டும் அதனை நடைமுறைப்படுத்தாமலும் கைவிட்டும் நிராகரித்தும் வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியை புதிய அரசாங்கம் பின்பற்றுவதற்கான ஏதுக்களை வெளிப்படுத்தி வருகின்றது போல் தெரிகிறது. இலங்கையில் நடந்து முடிந்த போர்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களாக என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக 1971 ஆம் ஆண்டு 1989 ஆம் ஆண்டு ஜனதா விமுத்தி பெரமுனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மனித உரிமை மீறல்களாக கொள்ள முடியுமா? மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு அது நோக்கப்படுமாயின் எந்த மனிதர்களுடைய உரிமையை ஜேவிபி என்ற அமைப்பு மீறியது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு செயல்பாட்டை தான் ஜேவிபி முன்னெடுத்திருந்தால் ஏன் ஜேவிபி என்ற அமைப்பும் அதன் தலைமையான றோகன விஜியவீராவும் கொல்லப்பட்டார்கள். மனித உரிமை மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கொல்லப்படுவது தான் வழமையான செய்முறையா? அத்தகைய அம்சத்தையே வடக்கு கிழக்கிலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட அமைப்புகள் நிகழ்த்தினவா? ஒரு நீண்ட ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய ஒரு புரட்சிகரமான அமைப்பின் ஆட்சியாளர்களின் உரையாடல் இடதுசாரித்தனத்தோடு இல்லாவிட்டாலும் அடிப்படை நியாயத்தோடாவது அமைந்திருப்பது அவசியமானது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஏறக்குறைய ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழ் மக்களும் யாருடைய மனித உரிமைகளை மீறி இருந்தார்கள்? கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணித் தாய்மார்கள் பெண்கள் வயோதிபர்கள் என்று பெரும் தொகையினர் காணப்பட்டனர். அவர்கள் யாருடைய மனித உரிமைகளை மீறியிருந்தார்கள் என்று கருதி கொல்லப்பட்டார்கள். ஒரு தேசிய இனம் தனது இருப்பையும் இறைமையும் சுயநிர்ணயத்தையும் முன்னிறுத்தி தன்னுடைய வாழ்வியலை பாதுகாப்பதற்கு போராடுவது மனித உரிமை மீறலாக கொள்ள முடியுமா? இதனை சர்வதேச சட்டங்கள் எவ்வகையான நியாயப்பாட்டை வழங்க முயலுகின்றன. ஒரு புரட்சிகரமான அமைப்பின் ஆட்சியாளர்கள் இடதுசாரி சிந்தனையோடு இல்லாவிட்டாலும் நியாயப்பாடுடைய எண்ணங்களை கொண்டிருப்பது அவசியமானது. அத்தகைய எண்ணங்களே ஒரு ஆரோக்கியமான அரசியலை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும். தேசிய இனங்களின் இருப்பு என்பது நவீன உலக வரலாற்றில் எழுச்சி பெற்ற ஒரு சிந்தனையாகவே காணப்படுகிறது. தேசியங்களின் கூட்டு உரிமையை அல்லது உரிமைகளின் கூட்டு அதன் இருப்பாக்கும். அத்தகைய கூட்டு ஆத்மாவே தேசிய இனத்தின் வாழ்வியலாகும். அதனை நோக்கி கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளில் முதன்மையானது மார்க்சிய மரபில் தோன்றிய இடதுசாரி சிந்தனை. முதலாளித்துவ சிந்தனையும் தனக்குள் தேசிய இருப்பை கொள்ள முயன்றுள்ளது. ஆனால் முதலாளித்துவ சிந்தனைகளின் அணுகுமுறைகள் அடக்குமுறைக்குட்பட்ட தேசங்களின் நிலவும் தேசிய இனங்களின் பிரச்சினைகளை மனித உர்மைகளாக கருத்தில் கொள்ள முயலுகிறது. இதன் பிரதிபலிப்புகளை புதிய அரசாங்கம் உள்வாங்குகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது. அடக்குமுறைக்குட்பட்ட தேசங்கள் மீது முதலாளித்துவ சக்திகள் தாராண்மை வாத மற்றும் நவ-தாரண்மைவாத சக்திகளின் அணுகுமுறைகள் மனித உரிமைகள் என்ற வடிவத்திற்குள் தேசிய இனப்பிரச்சினைகளை சுருக்கிவிட முயலுகின்றன.

இரண்டாவது இலங்கையின் புதிய அரசாங்கம் மீதான நன்மதிப்புகளை அமெரிக்க ஆட்சியாளர்கள் முன்வைத்திருப்பது முதன்மையானது என கருதப்படுகிறது. அது அரசாங்கங்களின் கொள்கையும் ஆட்சி முறைமையின் உபாயங்களுமாகும். ஒரு தேசிய இனத்தின் இருப்பை அதன்; பிரச்சினையை மனித உரிமை பிரச்சனையாக புரிந்து கொள்ளப்படுவது என்பது அதனையும் அமெரிக்கா சார்ந்த தளத்தில் புரிந்து கொள்ளப்படுவது என்பது அதிகம் குழப்பத்தையும் சந்தேகத்தையும் அரசாங்கம் மீது ஏற்படுத்துகின்றது. உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மனித உரிமை பற்றிய நடவடிக்கைகள் எவை என்பது குறிப்பிடப்பட வேண்டிய தேவை வாசகர்களுக்கு எழாது. காரணம் உலகம் முழுவதும் மனித உரிமைகளை போதிக்கும் மேற்கு நாடுகள் அனைத்தும் ஆசிய ஆபிரிக்க மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் எவை எப்பது தெரிந்த விடயம். இதற்கு சமகாலச் சாட்சியாக காஸா நிலப்பரப்பு போதுமானது. அத்தகைய நாட்டின் சான்றிதலோடு இலங்கையின் இன பிரச்சினைக்குரிய தீர்வை மனித உரிமைகளுக்குள்ளால் நோக்குவது என்பது அதன் விளைவுகளைவிட அதனை வெளிப்படுத்தும் தரப்புச் சார்ந்து அதிக அதிர்ச்சியே காணப்படுகிறது. வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருப்பது என்பது அவர்கள் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை எதிர்நோக்கி என்பது மறுக்க முடியாது. ஆதற்காக புதிய ஆட்சி கூறுவது எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்றோ முடிபுக்குவர முடியாது. காரணம் இதற்கு முன்னரும் தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசியல் கட்சிகளோடு சேர்ந்து பயணித்திருக்கிறார். வாக்களித்திருக்கிறார்கள். அதற்காக அந்த அரசியல் கட்சிகள் மேற்கொண்ட மோசமான நடைமுறைகள் அவர்களை கட்சியிலிருந்து விலகுவதற்கும் தனித்துவமான கட்சிகளை கட்டமைப்பதற்கும் வழிவகுத்திருந்தது. பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசாங்கம் முன்வைக்கின்ற எல்லா வகை தீர்வுகளையும் நியாயமற்ற தீர்வுகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்து அர்த்தப்படுத்த முடியாது.

எனவே தேசிய இனங்களின் பிரச்சினை என்பது பிராந்திய அடிப்படையிலும் சர்வதேச மட்டத்திலும் தங்கியிருக்கும் பிரச்சினையாகும். அத்தகைய தேசிய பிரச்சனைக்கான தீர்வை சர்வதேசத்தின் அல்லது பிராந்தியத்தின் அனுசரணையோடு மேற்கொள்வது என்பது அதற்கான சரியான உத்தியாககும். அத்தகைய சூழலை நோக்கி இலங்கைத் தீவின் புதிய அரசாங்கம் நகர்தப்படுமாயின் ஆரோக்கியமான அரசியலை இலகுவில் கட்டமைக்க முடியும். அதனை நோக்கி புதிய அரசாங்கம் பயணிப்பதே முதன்மையானது. தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை மனித உரிமை பிரச்சனைக்குள் சுருக்கி விட முடியாது. தேசிய இனப்பிரச்சினையின் ஒரு விடயமாக கருதலாமே அன்றி அதுவே பிரச்சினையோ அல்லது பிரச்சினைக்கான தீர்வாகவோ அமையாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)