அரசியல் கட்டுரைகள்

கனடாவின் தீர்மானமும் ஈழத்தமிழரது அரசியலும்

ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினை மீண்டும் ஒரு தடவை மேற்குலக நாடுகளால் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது. 2009களுக்கு பின்னர் அதிக தடவை அத்தகைய முதன்மைப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. ஆனால் எந்த அடிப்படையிலும் தீர்வுக்கான நகர்வு சாத்தியமற்றதாக விளங்குகிறது. இதனால் மேற்குலகத்தினது உரையாடலை காலத்தை நகர்த்தும் தந்திரோபாயமாக கரும் நிலை ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு தனித்து மேற்குலகம் மட்டுமல்ல ஈழத்தமிழ் அரசியல்வாதிகளது நலன்களாலும் அத்தகைய இழுத்தடிப்பு காணப்படுகிறது என்ற கருத்து நியாயமற்றதல்ல. இருந்த போதும் உலகளாவிய வல்லரசுகள் மற்றும் அயல் நாடான இந்தியா தமது நலனுக்கு ஈழத்தமிழரை பயன்படுத்துகிறது என்ற விமர்சனத்தை நிராகரித்துவிட முடியாது. இக்கட்டுரையும் அத்தகைய உரையாடலுக்கு கனடாவின் பிரதமரது அண்மைய நகர்வுகளை கொள்ள முடியுமா என்ற கருதுகோளுக்கு விடை தேடுவதாக அமையவுள்ளது.

கனடாவின் அண்மைய காலப்பகுதியில் ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களை நோக்குவது அவசியமானதாகவுள்ளது. குறிப்பாக போர் முடிந்த பின்னர் கனடாவின் போர்க்குற்றம் தொடர்பில் அதிக நடவடிக்கைகளை முதன்மைப்படுத்த தொடங்கியது. அதற்கான அடிப்படையை கனேடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கனடிய பழங்குடிகளுக்கு நிகழ்ந்த இனப்படுகொலை தொடர்பான விசாரணையின் முடிபில் பழங்குடிகள் மீது கலாசார இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதாக அறிக்கையிட்டது. அதன் பரின்னர் கனடாவின் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானங்களை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது. அதில் ஓரங்கமாகவே ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தீர்மானமாக மாநிலங்கள் முன்மொழிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து கனேடியப் பாராளுமன்றமும் பிரதமரும் அதற்கான தீர்மானங்களை வெளியிட்டதுடன் அதற்கான நியாயப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்களைக் கடந்து ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்டமை இனப்படுகொலை என்பதை தெளிவுபடுத்தியதுடன் அதற்கான நினைவு நாளான மே-18ஐ முதன்மைப்படுத்தி அறிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி இலங்கையின் போர்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ மீதும் தடைவிதித்ததுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இவை யாவற்றையும் கடந்து முள்ளிவாய்க்சகால் நினைவாக தூபி ஒன்றினை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்கு நாடுகளில் வலுக்கும் போது கனடாவின் மத்திய அரசும் மாநிலங்களும் அத்தகைய கோரிக்கைக்கு முதன்மை கொடுக்க ஆரம்பித்துள்ளன. இவ்வகையான நகர்வகளை ஏன் கனடா முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது என்பது பிரதான விடயமாகும். கனடா ஈழத்தமிழரது அயல்நாடோ கலாசார ரீதியான நெருக்கமான நாடோ கிடையாது. ஆனாலும் ஈழத்தமிழரது மனித உரிமைகளைகள் மீறப்படுவது பற்றியும் இனப்படுகொலை பற்றியும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

முதலாவது, உலக அரசியலில் கனடா மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது அதிக உணர்வையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ள நாடாக விளங்குகிறது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொல்லப்பட்ட போது எழுச்சி பெற்ற வெகுஜனப் போராட்டங்களை எதிர்கொண்ட ஜஸ்மின் ரூட்டோ முளந்தாளிட்டு மன்னிப்புக் கோரியதை நினைவில் கொள்வது அவசியமானது. அவ்வாறே தனது நாட்டில் கொல்லப்பட்ட பழங்குடியின் சிறுவர்களுக்காக மன்னிப்புக் கேட்டதோடு அதற்கு முறையான சட்ட நடிவடிக்கைக்கும் எடுக்க பணித்துள்ளமையும் நினைவு கொள்ளத் தக்கதாகும். அது மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலியுறுத்தும் கனடா உலக அமைதிக்கான நடவடிக்கையில் அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது. உக்ரையின் மீதான ரஷ்சியாவின் போரை கண்டித்த கனடா உக்ரையினுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இராணுவ ஒத்துழைப்பினையும் மேற்கொண்டு வருகிறது. இதனநடிப்படையில் கனடாவின் கொள்கைகளுக்குட்பட்டு ஈழத்தமிழர் மீது கவனம் கொள்ளும் செய்முறையை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

இரண்டு, கனடாவில் ஈழத்தமிழரது தொகை ஏறக்குறைய மூன்றரை இலட்சத்தை கடந்துள்ளதாக தெரியவருகிறது. அதிலும் கனடாவின் முக்கிய நகரங்களையும் அரசியல் தீர்மானமெடுக்கும் நிலையிலும் காணப்படுவதே அவர்களது முக்கியத்துவமாகும். குறிப்பாக ரொரன்றோ, மொன்றியல், வன்கூவர், கலிபக்ஸ் மற்றும் எட்மொன்ரன் போன்ற இடங்களில் அதிகமாக ஈழத்தமிழர் வாழ்கின்றனர். இத்தொகையை விட அதிகமானவர்கள் வாழ்வதாக முருகர் குணசிங்கம் தனது ஆய்வொன்றில் குறிப்பிடுகின்றார். இதனால் அரசியல் ஈடுபாட்டை அதிகம் கொண்ட ஈழத்தமிழர் அதற்கான வாய்ப்புக்களை பயன்படத்திக் கொள்வதுடன் அரசியல் கட்சிகளிலும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்கள் அவைத் தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். மேலும் ஆளும்தரப்பில் அங்கம் வகிக்கின்ற ஈழத்தமிழர் தேர்தல் முடிபுகளில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாகவும் விளங்குகின்றனர். இதனால் ஈழத்தமிழருடன் அதிக நெருக்கம் கொண்டுள்ள அரசியல் தலைமைகளையும் அரசியல் கட்சிகளையும் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.

மூன்று, ஈழத்தமிழர்கள் கடின உழைப்பை உடையவர்களாகவும் பொருளாதாரத் தேடலை அதிகம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். அதனால் பாரியளவு முதலீடுகளை செய்வதுடன் உற்பத்தி நுகர்வு ஆகிய இரண்டிலும் கவனம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். ஈழத்தமிழரால் கனடாவுக்கு அதிக இலாபமே அன்றி சுமையாக இல்லாத நிலை பாதுகாப்பானதான கருதவாய்புள்ளது. அத்தகைய வலுவுக்கு அவர்கள் திரட்சியாக இருப்பதுவும் தொழில் முயற்சிகளில் கூட்டாக தொழில்படுவதும் கனடாவின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்கிறமையும் அடிப்படைகளாகும். இதற்கான காரணம் ஈழத்தமிழர்களில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த அனேகமானவர்கள் மத்தியதர வர்க்கத்தவர்கள். அவர்களது அரசியல் பொருளாதார சமூக அந்தஸ்த்து தனித்துவமானது. அதற்கமைவாகவே கனடாவின் இருப்போடு சேர்ந்து பயணிக்கக்கூடியவர்கள். குடியேற்ற காலத்திலிருந்து ஈழத்தமிழரின் இயல்பு அன்னிய நாடுகளில் நேர்கணியமாக செவையாற்றும் திறனுடையவர்கள். அதனால் ஈழத்தமிழருக்கும் கனேடியருக்குமான உறவு சுமூகமானதாக அமைந்துள்ளது.

நான்கு, கனடா ஈழத்தமிழரது அரசியலில் அதிக ஈடுபாடுகாட்டுவதற்கு பிரதான காரணம் அமெரிக்காவுக்கும் ஈழத்தமிழருக்குமான அரசியலின் முக்கியத்துவமாகும். அத்தகைய முக்கசியத்துவம் இந்து சமுத்திரம் சார்ந்து இலங்கைத்தீவு மேற்கொள்ளும் நகர்வுகளாகும். கனேடியப் பிரதமரது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அறிவிப்பும் இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படும் போது அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான றொஸ், ஜான்சன், நிக்கல், இலினொயிசுக்கான, டேவிஸ் மற்றும் மக்பாத் ஆகியோர் அவ்வறிக்கையினை அமெரிக்க வெளிவிவகார குழுவக்கு வழங்கியிருந்தனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற விடயத்தையும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதென்பதையும் முதன்மைப்படுத்தி அவ்வறிக்கை அமைந்திருந்தது. இத்தகைய செய்முறையைப் பாhட்க்கும் போது அமெரிக்காவின் போக்கினை மையப்படத்தி கனடாவும் செயல்படுவதாகவே தெரிகிறது. இரு நாட்டுக்குமான புவிசார் அரசியல் உறவு மட்டுமன்றி சர்வதேச அரசியலிலும் உலகளாவிய பொருளாதார இராணுவ நகர்வுகளிலும் ஒன்றிணைவும் கூட்டாக செயல்படும் போக்கும் காணப்படுகிறது. அதனால் அத்தகைய போக்கினை ஐரோப்பாவுக்குள்ளும் அதற்கு வெளியேயும் அவதானிக்கும் போது அமெரிக்காவின் நலன்களை தாங்கி செயல்படும் நாடாக கனடா காணப்படுகிறது. ஜீ-7, காலநிலை மாற்றம்,மனித உரிமைகள் மற்றும் இனப்படுகொலை போன்ற விடயங்களில் இரு நாடுகளும் ஒன்றாகவே பயணிக்கின்றன. கனடா மேற்கு நாடுகளின் அமைப்புக்குள் வலுவான அமெரிக்க நட்பு நாடாக விளங்குகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையினை நோர்வேயின் தலைமையில் நிகழ்த்திய அமெரிக்கா தற்போது 2009 பின்னான ஈழத்தமிழரது அரசியலை கனடாவை முன்னிறுத்தி நகர்வதாகவே தெரிகிறது.

இத்தகைய நலன்களையும் இலாபங்களையும் கனடா மற்றும் அமெரிக்கா பெற்றுக் கொண்டாலும் ஈழத்தமிழரது அரசியல் அத்தகைய நாடுகளால் கையாளப்படகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். ஈழத்தமிழர் இந்தியாவை மீறி வல்லரசுகளுடன் செயல்பட்டதன் விளைவுகளை அனுபவித்தனர். தற்போது வல்லரசு அல்லாத ஒரு சக்தியுடன் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிவரக் கையாள வேண்டியது அவசியமானது. புலம்பெயர்ந்த கனேடிய ஈழத்தமிழரது அரசியல் வெற்றிகள் அதிகம் ஈழத்தமிழரது புலத்தை மையப்படுத்தியது. அதனால் கனேடிய ஈழத்தமிழரது உழைப்பினை சரிவரக் கையாள வேண்டிய வாய்ப்பும் தேவைப்பாடும் புலத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் மக்களுக்கும் உரியதாகும். அதனை அவர்கள் ஒழுங்குபடுத்தி நட்புறவு கொண்டு பலப்படுத்த வேண்டும். இதுவரை கனடாவின் பிரதமரது அறிவிப்புக்கு தமிழ் அரசியல்வாதிகள் வரவேற்கும் அறிக்கை மட்டுமே முன்வைத்துள்ளனர். அதனையும் கடந்து அந்த நாட்டுடன் உறவைப் பலப்படுத்தவும் நட்புறவு கொள்ளவும் முயலுதல் வேண்டும். நேரடியாக அந்த நாட்டுக்கு விஜயம் செய்வதும் அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை சந்திப்பதும் பிரமரைச் சந்திப்பதும் அவசியமான செய்முறையாக உள்ளது. நேரடியாக சந்தித்து நன்றியையும் வரவேற்பையும் வெளிப்படுத்த வேண்டும். அதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சிவில் அமைப்பினரும் ஈடுபட:டக் கொள்ளலாம். அத்தகைய செயல்பாடகளை கனடாவுடன் பலப்படத்த வேண்டிய நிலை அவசியமானது. அந்நதந்த நாடுகளது நலன்கள் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் ஈழத்தமிழர் தமது நலன்களை அவர்கள் நோக்கி நகர்த்த வேண்டும். அதற்கான வாய்பும் சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது.

எனவே நலன்களே அரசியலின் மையப்புள்ளியாகும். அத்தகைய நலன்களை நோக்கி நகர்வதே அரசுகளின் அரசியலாகும். அத்தகைய அரசியலை நோக்கி ஈழத்தமிழர் ஈடுபட வேண்டும். தமவறும் பட்சத்தில் தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்ற நியதிகளை இழக்க வெண்டிய நிலை மேலும் தீவிரமாகும். இருபத்தியோராம் நூற்றாண்டிலுள்ள தேசியங்கள் தம்மைப் பாதுகாப்பதென்பது பூகோள அரசியலாலே முடியும் என்ற நியதி தவிர்க்க முடியாததாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)