அரசியல் கட்டுரைகள்

உலக ஒழுங்கின் மாற்றமும் ஈழத்தமிழர் அரசியலும்

இலங்கை அரசியல் பரப்பில் ஈழத்தமிழர்களின் இருப்பு நீடித்த நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது. 2009களுக்கு பின்னர் அவ்வகை நெருக்கடி மிகத்தீவிரமாக அதிகரித்திருப்பதோடு தீர்வை நோக்கிய அவசியப்பாட்டினை ஊடகவியலாளர்களும் கருத்தியல்வாதிகளும் உரையாடிவருகின்றனர். ஈழத்தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவதற்கு உள்நாட்டின் எல்லைக்குள் சாத்தியமற்றதென்ற முடிவை அத்தரப்பு மட்டுமல்ல அரசியல் தரப்புக்களும் ஈழத்தமிழர்களும் உணர்ந்துள்ளனர். அதனால் பிராந்திய மட்டத்திலும் பூகோள மட்டத்திலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை பயன்படுத்தி கொள்ள முடியுமென கருத்தியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கான சூழல் 2020களுக்கு பின்னர் மேலும் அதிகரித்திருக்கின்றது என்பதுவே அக்கருத்தியல்வாதிகளின் அறிவுத்தேடலின் வெளிப்பாடாக உள்ளது. இக்கட்டுரையும் அவ்வாறு கருத்தியல்வாதிகளால் முன்னிறுத்தப்படும் வாய்ப்பான சூழலை மேலும் தெளிவுபடுத்தும் விதத்தில் வெளிக்கொண்டு வருகிறது.

உலக ஒழுங்கின் மாற்றம் 2009களுக்கு பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியலோடு அதிக ஈடுபாட்டை கொண்டதாக அல்லது தொடர்பு கொண்டதாக உணரப்படுகிறது. இந்து சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் உபாயத்தை வகுத்த அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இந்தியாவை அரவனைத்துக்கொண்டு தென்னாசிய பிராந்தியத்தின் ஆழமான அரசியலில் பொருளாதார இராணுவ மற்றும் இராஜீக முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. பசுபிக் சமுத்திர நாடுகளும் இந்து சமுத்திர நாடுகளும் அதீதமான அரசியல் இணைப்பாட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இப்பிராந்திய நாடுகளில் பொருளாதார விருத்தி, உட்கட்டமைப்பு வளர்ச்சி, தேசிய இனங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்ற அடிப்படையில் அத்தகைய நகர்வுகளை மேற்கு ஏகாதித்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய நகர்வுகளுக்கு பின்னால் கிழக்கு ஏகாதிபத்திய சக்திகளான சீனாவினதும் ரஷ;சியாவினதும் நடவடிக்கைக்கான பதிலீட்டையே மேற்கு நாடுகள் ஏற்படுத்த முயலுகின்றன. குறிப்பாக சீனாவை அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு பிரதான சக்தியாகவும் நெருக்கடி கொடுக்கும் நாடாகவும் கருதுகின்றது. இதனால் சீனாவுடனான உறவை கொண்டிருக்கும் நாடுகளை நோக்கி அதீதமான இராஜீக நகர்வுகளும் கையாளுகைகளும் மேற்கு நாடுகளால் முன்னகர்த்தப்படுகிறது. இதுவே ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்குரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இலங்கைத்தீவில் சீனாவின் அதீத பிரசன்னத்தை அங்கீகரிக்கும் ஊக்குவிக்கும்; தென்னிலங்கை அரசு அரசியல், பொருளாதார, உட்கட்டமைப்பு விடயங்களினை கையாள்வதோடு இராஜீக முயற்சிகளினை மேற்கு நாடுகள் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள். அத்தகைய மேற்கு நாடுகளின் அணிக்குள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவே முதன்மையான நாடாக உள்ளது. எனவே இந்தியாவை கையாளுதல் என்பதுவும் இந்தியாவை அரவணைத்தல் என்பதுவும் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சமமான வாய்ப்புக்களினை வழங்கக்கூடியதொன்றாகும். இதனாலேயே ஈழத்தமிழரின் அரசியல் தலைமை மற்றும் சிவில் அமைப்புக்கள் இத்தகைய காலப்பகுதியை பயன்படுத்தி கொள்ளுதல் அவசியமென கருத்தியல் தளத்தில் இயங்குபவர்கள் முதன்மைப்படுத்துகின்றார்கள். இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் குடியரசுகளிலும், ஆசிய குடியரசுகளிலும் கிடைத்த வாய்ப்பு தற்போது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கிடைத்துள்ளது. சோவியத் யூனியனின் சோசலிச வீழ்ச்சிக்கு பின்னர் தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குள்ளாலேயே கையாளப்படுகிறது. மேற்கின் ஏகாதிபத்திய விருப்புகளுக்கு உட்பட்டே தேசிய இனங்களுக்கான சமஷ;டி தீர்வும், அகநிர்ணய சுயநிர்ணய தீர்வும், பொதுவாக்கெடுப்பு தீர்வும் சாத்தியப்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழல் ஒன்றுக்குள் ஈழத்தமிழர் தமது தீர்வை நோக்கிய நகர்வுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனை கட்டமைப்பதும், நகர்த்துவதும், வெற்றி கொள்வதும் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், சிவில் தரப்புக்கும், புலம்பெயர்தரப்புக்கும் உரியதாகும். இதனாலேயே இக்காலப்பகுதியை அதிகம் முதன்மைப்படுத்த வேண்டிய சூழலுக்குள் கருத்தியல்வாதம் காணப்படுகிறது.

இரண்டாவது, சமஷ்டி தீர்வு என்பது பல நூற்றாண்டுகளாக முரண்பாடுடைய தேசியங்களுக்குள் கையாளப்படும் ஒரு அதிகார கட்டமைப்பாக காணப்படுகிறது. அத்தகைய கட்டமைப்பை ஈழத்தமிழர்களும் ஈழத்து சிங்களவர்களும் மிக நீண்டகாலமாக உரையாடி வருகின்றனர். ஒரே நாட்டுக்குள் ஒரு தீர்வை எட்ட வேண்டுமாயின் அது ஒரு ஆரோக்கியமானதாக கட்டமைக்கப்பட வேண்டியதாயின் கூட்டு சமஷ்டியோ, சமஷ்டியோ பொருத்தமானது என்ற வாதம் கருத்தியல் தளத்தில் முன்னிறுத்தப்படுகிறது. அத்தகைய இணக்கப்பாட்டுக்குள் பயணம் செய்வதற்கான முயற்சியை ஈழத்தமிழர்கள் முயன்றுள்ளார்கள். சமகாலத்திலும் அதன் அவசியப்பாட்டை வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் அதற்கான அரசியல் கூட்டுத்தன்மையோ அல்லது ஒருமைப்பாடோ ஈழத்தமிழர் அரசியல் சக்திகளிடம் ஏற்படவில்லை. ஆனாலும் அதனை நோக்கி இந்தியாவையும் மேற்கையும் அரவணைப்பது மூலம் அடைவதற்கான வாய்ப்பு அதீதமாக உள்ளது.

மூன்றாவது, மேற்கு ஏகாதிபத்தியத்தின் தீர்வு சார்ந்த இன்னொரு அம்சமாக பொது வாக்கெடுப்பு காணப்படுகிறது. அதனையும் தனது விருப்புக்கு உட்பட்ட விதத்தில் கட்டமைப்பதிலேயே கரிசணை கொண்டு செயற்படுகிறது. மேற்கின் பொருளாதார, இராணுவ, அரசியல் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப அத்தகைய பொதுவாக்கெடுப்புக்கான முடிவுகளை அங்கீகரிக்கப்படுகின்றது. அதன் வரிசையில் மிகப்பிந்திய அனுபவம் ஈராக் குர்திஷ், ஸ்கொட்லாந்து, நியூ கலிடோனியா மற்றும் கடலோனியா போன்ற பிரதேசங்களில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுகளுக்காக முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால் கடலோனியா மக்கள் சுயாட்சிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டும் மேற்கின் நலன்களுக்கு வாய்ப்பான சூழலை கொடுக்காத போது பொதுவாக்கெடுப்பு அங்கீகரிக்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. எனினும் பொதுவாக்கெடுப்பு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அங்கீகாரமிக்கதொரு இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த விடயமாக காணப்புடுகிறது.

நான்காவது, இத்தகைய முன்மொழியப்பட்ட தீர்வுகளுக்கு பின்னால் மேற்குலகின் நலன்கள் இணைக்கப்படுகின்ற போது சாத்தியமான விளைவுகளை நெருக்கடிக்கு உள்ளாகும் தேசிய இனங்கள் அனுபவித்து வருகின்றன. இதனை முன்னிறுத்தியும் நாடுகளை இலக்கு வைத்தும் இந்தோ-பசுபிக் உபாயத்தின் விஷ்தரிப்பு நிகழ ஆரம்பித்துள்ளது. அத்தகைய நிகழ்வின் பிரதான தெரிவிற்குரிய தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவாலும், அமெரிக்காவாலும், ஐரோப்பிய நாடுகளாலும் அவதானிக்கப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இத்தகைய அவதானிப்புக்கு பிரதான பங்காளிகளாக உள்ளனர். இதில் இந்திய நலன்களும், மேற்கு நலன்களும் இந்து சமுத்திரத்தை நோக்கி சீன எதிர்ப்புவாதத்தால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அத்தகைய கட்டமைப்பு மேற்கு ஏகாதிபத்;திய நலனுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. அதன் பொருளாதார, சந்தை, வர்த்தக, இராணுவ நலன்களுக்கு உள்ளாலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியலாக உள்ளது.

ஐந்தாவது, இத்தளத்தில் சீனா நோக்கிய ஈழத்தமிழர்களுடைய பார்வை அரசு என்ற அடிப்படையிலும், கீழைத்தேய ஏகாதிபத்தியம் என்ற அடிப்படையில் அணுகப்படுவதும் கையாளப்படுவதும் அவசியமாகும். மேற்கின் ஏகாதிபத்தியம் போலி வடிவத்திலேனும் ஜனநாயத்தையும், மனித உரிமைகளையும், சுயநிர்ணயத்தையும், தேசிய விடுதலையையும் உரையாடுகின்ற போதும் சீனாவோ இன்றும் 16ஆம் நூற்றாண்டு அரச இறைமைக்குட்பட்ட ஏகாதிபத்தியமாகவே காணப்படுகிறது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடா கொள்கையும், ஜனநாயகம், மனித உரிமைகள், சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத சீனாவின் அரச இறைமை இராணுவ ஆட்சிகளையும், சர்வதிகார அரசுகளையும் கட்டியெழுப்ப உதவுமேயன்றி தேசிய இனங்களின் பாதுகாப்பை ஒருபோதும் உத்தரவாதப்படுத்தாது.

எனவே, 2019ஐ விட 2020 ஓர் ஆரோக்கியமான களத்தை தந்தது போல் 2020ஐ விட 2021 ஈழத்தமிழரின் தேசிய நலனில் ஆரோக்கியமான காலமாகவே தெரிகிறது. அதனை கையாளுவதும் வென்றெடுப்பதுவும் ஈழத்தமிழ் அரசியல் மற்றும் சிவில் தரப்பிடமே தங்கியுள்ளது. உலக ஒழுங்கின் மாற்றம் இதற்கான செய்தியை ஈழத்திழர்களுக்கு வழங்கி உள்ளது.

-அருவி இணைத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: ஈழநாடு 09.01.2022)