இலங்கைத் தீவின் அரசியலில் வடக்கு கிழக்கு மூலோபாயரீதியில் பிரதான இடத்தை வகிக்கிறது. அதனை நோக்கி தென் இலங்கை ஆட்சியாளர் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் அவற்றின் நகர்வுகளும் முக்கியத்துவம் பெறுவதனைக் காணமுடிகிறது. அந்த வகைக்குள்ளேயே இலங்கைக்கான சீனத்தூதுவரது வடக்கு நோக்கிய வருகை அமைந்துள்ளது எனலாம். இலங்கைத் தீவு இந்தியாவுக்கு அண்மையிலிருப்பதென்பது வடக்கு கிழக்கு சார்ந்ததால் ஏற்பட்ட புவியியல் நெருக்கத்தால் ஏற்பட்டதொன்றாகும். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசம் தென் இலங்கையோடு ஒப்பிடும் போது மூலோபாயரீதியில் முக்கியம் பெற்ற நிலப்பகுதியாகும். அதற்கான தனித்துவத்தை பாக்குநீரிணை கொடுக்கின்றது என்பது கருத்தில் கொள்ள வேண்டிய இன்னோர் பிரதான அம்சமாகும். அதனாலேயே இந்தியர்கள் இலங்கை அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ அம்சங்களில் கவனம் கொள்கிறார்கள். இந்தியா இலங்கைத் தீவை நோக்கி நகரவும் பிறசக்திகள் இந்தியா நோக்கிய பாதுகாப்புச் சார்ந்த அணுகுமுறைக்கும் வடக்கு கிழக்கின் புவிசார் அமைவிடமே பிரதான காரணமாக தெரிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் அணுகுமுறை அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருந்தது. இக்கட்டுரையும் இலங்கைக்கான சீனத் தூதுவரது வடக்கு நோக்கிய வருகை ஏற்படுத்தியுள்ள அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி சென் ஹொங் நான்கு நாள் பயணமாக வடக்கு மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்தார். அவரது வருகையின் போது வடக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கும் நகர்வுகளிலும் கவனம் செலுத்தியிருந்தார். குறிப்பாக சீன-இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் அத்தகைய நிவாரணப் பொதிகள் வவுனியா, மன்னார், கிளிநோச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சீனத் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கம் வடக்குக்கு மட்டும் 155 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் அது தனித்து நிவாரணம் மட்டுமல்லாது வடக்கு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான வலைகள் வழங்குவதோடு மீதி பணத்தை வீடமைப்புத் திட்டங்களை வழங்குவதெனவும் தெரிவித்தார்.
இதே நேரம் வடக்குக்கு வருகைதந்த சீனத் தூதுவரை சிவில் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வர்த்தக பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது வடக்கு கிழக்குக்கான பொருளாதார உதவிகளை முதன்மைப்படுத்திய தூதுவர் அத்தகைய திட்டங்களை சீனா தொடர்ந்து வழங்குவதோடு முதலீட்டு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டார். அப்போது சிவில் தரப்பினர் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாத போது எந்த பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களாலும் பயனடையப் போவதில்லை எனவும் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் எனவும் அதற்கான அழுத்தங்களை சீன அரசு தென் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். இலங்கை பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது பாரிய உதவிகளை சீனா வழங்கியது என குறிப்பிடும் சீனத்தூதுவரிடம் இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுக்க முடியுமென சிவில் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். உலகளாவிய பொருளாதாரத்தில் இரண்டாவது நிலையிலுள்ள சீனா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையுடையது மட்டுமல்லாது உலகளாவிய அரசியலில் அதிக கவனம் செலுத்தும் சீன இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் கவனம் கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி சீனத் தூதுவரிடம் முன்வைக்கப்பட்டது. பாலஸ்தீன -இஸ்ரேலிய முரண்பாட்டுக்கு இரு நாட்டுத் தீர்வை சிபார்சு செய்துள்ள சீனா இலங்கைத் தீவின் நீண்ட இனப்பிரச்சினையில் கவனம் செலுத்தாது நிவாரங்களை வழங்குவதால் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை என சிவில் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இவை அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் போது சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் பிரகாரம் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்தார். சீனத்தூதுவர் அவ்வாறு கூறுவது சரியானதா என்ற சந்தேகம் எல்லோரிடமும் உண்டு. அதனை ஆழமாக உரையாடுவது அவசியமானது.
முதலாவது, சீனாவின் வெளியுறவுக் கொள்கையானது அரச இறைமையை பிரதிபலிப்பதாக உள்ளது. அது மக்கள் இறையாண்மைக்கோ, தேசிய அரச இறைமைக்கோ உட்படாத கொள்கையைக் கொண்டது. தற்போதும் புராதன மரபுக்குட்பட்ட இறைமைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவையே பிரதிபலிக்கிறது. ஆனால் அத்தகைய அரசிறமையானது சீன அரசின் மேலான அதிகாரத்தை மட்டுமே குறிக்கிறது. வெளித் தோற்றத்தில் சோஸலிஸம், கம்பூனிஸம் என்பதெல்லாம் அதன் தோற்றப்பாட்டு தேசியமாகவே தெரிகிறது. அடிப்படையில் அதற்கான அர்த்தத்தை கொடுக்குமளவுக்கு செயல்பாடு அமையவில்லை. ஐரோப்பியர்கள் இறைமைக் கோட்பாட்டில் நான்கு யுகங்களை கடந்துவிட்டார்கள். மன்னனிடம் இறைமை, அரசிடம் இறைமை, தேசிய அரசிடம் இறைமை தற்போது மக்களிடம் இறைமை என்ற வளர்ச்சியை உலகம் அடைந்துள்ளது. சீனாவோ இன்றும் புராதன யுகத்திலேயே அரச தத்துவங்களைக் கொண்டுள்ளது. இதற்கூடாக ஆட்சியாளர்கள் மறைந்து செயல்பட வெளி கிடைத்துள்ளது. அத்தகைய வெளியைப் பாதுகாப்பதிலும் சீன ஆட்சியாளர்கள் முன்னின்று செயல்படுகின்றனர். இதனாலேயே சீனாவின் வெளியுறவு ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறது.
இரண்டாவது, சீனா 1948 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீன பாகப்பிரிவினைத் திட்டத்தை ஆதரித்துள்ளது. அப்போது ஷியாங் கை- சேக்கின் (Chiang Kai-Shek) தலைமையிலான சீனாவின் ஆதரவு பாலஸ்தீனத்திற்கு இருந்தது. ஏறக்குறைய பின்வந்த காலம் முழுவதும் பாலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை முன்வைத்த 181 ஆவது தீர்மானத்தின் கீழ் உள்ள பாகப்பிரிவினைத் திட்டத்தை (Partition Plan) பாதுகாப்பச் சபையின் ஏனைய நாடுகளைப் போன்று சீனாவும் ஏற்று அங்கீகரித்திருந்தது. அதாவது இரு நாட்டுத் தீர்வுத் திட்டத்தை அனைத்து பாதுகாப்புச் சபை நாடுகளும் அங்கீகரித்திருந்தன. அண்மையில் பாலஸ்தீன ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது (யூன்-12) பாலஸ்தீன சுயாட்சிக்கான கோரிக்கையை சீனா அங்கீகரித்தேயிருந்தது. வடக்குக்கு வருகை தந்திருந்த சீனத் தூதுவர் பலஸ்தீனாவில் மனித உரிமை மீறப்படுவதையும் மேற்கு நாடுகளின் நடவடிக்கையையும் சுட்டிக்காட்டுகின்றார். அங்கு நிகழ்வது மேற்குலகத்தின் போர் என்பது நியாயமானதே. மனித உரிமை மீறப்படுகின்றது என்பது சரியானதே. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலில் உலகமே ஒன்றிணைந்து போர் செய்தது. பாலஸ்தீனத்தில் மேற்குலகம் போர் செய்கிற போது உலகம் பார்த்துக் கொண்டிருகிறது. இது மட்டுமே இரு போருக்குமான வேறுபாடு. இரண்டுமே ஏறக்குறைய ஒன்றாகவே தெரிகிறது. ஈழத்தமிழர் மீதான மனித உரிமை மீறலுக்கு சீனாவும் பொறுப்புடையது. கம்யூனிஸத்தின் பெயரால் தினமென் சதுக்கத்தில் மீறப்பட்டதும் மனித உர்மை மீறல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது, சீனா தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்த பின்னர் 99 வருடத்திற்கு குத்தகைக்கு பெறுகிறது. பாகிஸ்தானில்-குவாடர், இலங்கையில் -ஹம்பாந்தோட்டை, வங்களாதேஷில்-சிட்டங்கொங், மியான்மாரில்-சிற்சுவே போன்ற துறைமுகங்களை விருத்தி செய்ததோடு குவாடர், ஹம்பாந்தோட்டையை ஏற்கனவே 99 வருட குத்தகைக்கு பெற்றுள்ளது. இது சீனாவின் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமல்லாது அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையில் ஒன்றாகவும் காணப்படுகிறது. அந்த நாடுகளுடன் உடன்பாடு மேற்கொண்ட பின்னரே அத்தகைய குத்தகையை சீனா கைப்பற்றுகிறது என்றாலும் அதன் அடிப்படை தலையீடாகவே தெரிகிறது. சர்வதேச அரசியலின் தந்தை என அழைக்கப்படும் ஹான்ஸ் மோகன்தோ குறிப்பிடும் போது ஓர் அரசு தனது நாட்டின் எல்லைக்கு வெளியே நிகழ்த்துகின்ற அனைத்து நடவடிக்கையும் அந்த நாட்டின் அதிகாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதிகாரத்திற்கான போராட்டமே சர்வதேச அரசியல் என்கிறார். அவ்வகையான செய்முறையினையே சீனா உலகளாவிய தளத்தில் மேற்கொள்கிறது. பாதை மற்றும் பட்டிக்கான முன்முயற்சியானது உலகளாவிய ரீதியில் நாடுகளை வர்த்தக ரீதியில் ஒன்றிணைப்பதாகும். அத்தகைய பொருளாதார ஒன்றிணைப்பானது இன்னோர் நாட்டின் மீது சீனாவின் தலையீடாகவே உள்ளது. இதனை தலையீடற்ற செய்முறையென விவாதித்துவிட முடியாது. அது ஏமாற்றுத்தனத்தின் விம்பமே அன்றி யதார்தமான புலமைசார் உரையாடல்ல. சீனாவின் Market Bomb, Win-Win Strategy, Soft Power அனைத்துமே உலகளாவிய கொள்கைகளே. அவை ஒவ்வொன்றும் சீனா பிற தேசங்களின் மீது தலையீடு செய்கின்றதையே குறிக்கின்றது. நன்கொடையும், முதலீடும், பொருளாதார உதவிகளும் மற்றும் இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளும் தலையீடாகவே உள்ளன. முதலீட்டினால் கிடைக்கும் இலாபங்களும் ஒத்துழைப்பால் கிடைக்கும் நன்மைகளும் தலையீடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் மட்டும் தலையீடு இலங்கையில் மேற்கொள்ளவில்லை. அனைத்து நாடுகளும் இலங்கைக்குள் தமது தலையீட்டை நிகழ்த்துகின்றன. முதலாளித்துவம் சுரண்டினால் மட்டும் சுரண்டலல்ல. சீனா சுரண்டினாலும் அது சுரண்டல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நான்காவது, சீனா கம்யூனிஸ நாடு எனக்கூறிக் கொண்டு இராணுவ ஆட்சி நாடுகளுடனும் சர்வாதிகார சக்திகளுடனும் ஏகாதிபத்திய நாடுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணுவது மட்டுமல்ல அந்த நாடுகளை பாதுகாத்துவருகிறது. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் வீட்டோவை பிரயோகிப்பதோடு சர்வதேச தளத்தில் அத்தகைய நாடுகளை முதன்மைப்படுத்தியும் வருகிறது. இது சீனாவின் கம்யூனிஸத்தின் போலித்தன்மையை காட்டுவது மட்டுமன்றி உலகளாவிய கொள்கையின் தன்மையையும் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பிரச்சினையில் சீனா கவனம் கொள்வதை கொள்கையாகக் கொண்ட நாடு கிடையாது. அதனை ஈழத்தமிழர் மீதான இறுதிகட்டப் போரில் கண்டு கொள்ள முடிந்தது. இதனாலேயே சீனா தனது நாட்டின் எல்லைக்குள் கம்யூனிஸம் என்று கூறிக் கொண்டாலும் உலகளாவிய ரீதியில் ஏகாதிபத்திய அரசாகவே இயங்குகிறது. அமெரிக்கா உட்பட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்தியா எவ்வாறு உலகளாவிய கொள்கையைக் கொண்டிருக்கிறதோ அதே கொள்கையையே சீனாவும் கடைப்பிடிக்கிறது. ஆனால் சீனா தன்னை கம்யூனிஸ நாடு என அழைக்கிறது. அதிகம் வேடிக்கையான அரசியலாகவே உள்ளது.
ஐந்தாவது, இலங்கைத் தீவில் ஹம்பாந்தோட்டை மட்டுமல்ல கொழும்பு துறைமுக நகரம் ஒன்றினை கட்டமைத்து புதிய நாடாக பிரகடனப்படுத்த முனைகிறது. கடன் பொறி பற்றிய உரையாடல் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்கி அதில் கடைக்கும் இலாபத்தைப் பற்றி மட்டுமல்ல அதனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க முயலுகிறது. இத்தகைய செய்முறை எதனையும் தலையீடு என்று கூற முடியாதா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாது. இதனூடாக இலங்கையின் அரச இறைமை பாதிக்கப்படுவதுடன் சுதேச மக்களின் இருப்பு அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகிறது. முள்ளிவாய்க்காலில் தென் இலங்கை ஆட்சியாளர்களது இராணுவ நடவடிக்கைக்கு உந்துதலாக இருந்த நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். ஒரு இலட்சத்து நாப்பத்தாறாயிரம் மக்கள் கொல்லப்பட்டத்திற்கு பின்னால் இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மட்டமல்ல சீனாவும் ஒரு பங்குதாரர் என்பதை மறுக்க முடியாது.
எனவே சீனாவின் தலையிடாத வெளியுறவுக் கொள்கை என்பது நியாயபூர்வமான வாதமாக கொள்ள முடியாதுள்ளது. வெளிப்படையாக உலகத்தை சீனா தலையீட்டின் மூலமே பொருளாதார இராணுவ நகர்வுகளை சாத்தியப்படுத்துகிறது. இயற்கையான கடலைக் கூட தலையீட்டினால் ஆக்கிரமித்துவருகிறது. தென்சீனக் கடலிலும் இலங்கையிலும் ஏற்படுத்திய Man Made Island என்பன இயற்கை மீதான தலையீட்டின் வெளிப்பாடேயாகும். இதனை மறைப்பதற்கே சீனா உலகத்திற்கு முன்னே தலையிடா வெளியுறவுக் கொள்கை என நியாயப்படுத்திக் கொள்ள முயலுகிறது. ஆனால் நடைமுறை அதுவல்ல. சீனா வலுவான வல்லரசாகவும் ஏகாதிபத்திய சக்தியாகவும் விரைவில் எழுச்சியடைய முனைகிது. சீனாவின் கம்யூனிஸமும் தலையிடா வெளியுறவும் கேள்விக்குரியதே.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
