இலங்கையின் அரசியலில் வல்லரசுகளின் தலையீடு தொடர்ச்சியனதாக காணப்படுகின்றது. இந்தியா அமெரிக்கா சீன என மூன்று பிரதான வல்லரசுகளும் இலங்கைத் தீவை நோக்கி தொடர்ச்சியாக நகருகின்றன. ஒரு காலப்பகுதியில் அமெரிக்காவின் வகிபாகம் காணப்பட மறு காலப்பகுதியில் சீனாவினது வகிபாகம் அமைந்துள்ளது. இதற்கு மத்தியில் இந்தியாவும் தனது வகிபங்கினை இலங்கைத் தீவை நோக்கி நகர்த்திவருகிறது. இத்தகைய போக்கானது இலங்கையின் பாதுகாப்பினையும் இருப்பினையும் தக்கவைக்க வழிவகுத்துள்ளது. அரசியலாக மட்டுமன்றி பொருளாதார-இராணுவ ரீதியில் வல்லரசுகளது ஒத்துழைப்புடன் இலங்கைத் தீவின் போக்கு இயங்கிவருகிறது. இதில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் காலப்பகுதி மூன்று வல்லரசுகளையும் சுவாரசியமாக கையாள்வதில் கவனம் கொண்டு இயங்கிவருவதனை அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும் சீனாவின் விசேட குழுவின் இலங்கை வருகையின் அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
18.11.2023 சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்ன் சிறப்புத் தூதுவர் ஷென் ஹிகின் தலைமையில் தூதுக்குழுவினர் இலங்கைத் தீவுக்கு வருகைதந்துள்ளனர். நவம்பர் 21 வரை இலங்கையிலிந்து தூதுக்குழுவினர் அரசியல் தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர். அது மட்டுமன்றி கொழும்பு நகரத்துறைமுகத் திட்டம் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் மற்றும் சீன முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரச தலைவர்களுடன் உரையாடியுள்ளனர். கண்டித்தலதாமாளிகைக்கு நேரடியாக சென்றுள்ள தூதுக்குழுவினர் மதவிடயங்களில் கலந்து கொண்டனர். இக்குழுவினர் மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்தனர் என்பதும் மாலைதீவில் பதவிக்கு வந்துள்ள புதிய ஜனாதிபதி மொஹமட் முஸ்ஸீ சீனச்சார்புடையவர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுக்குழுவினரது இலங்கை நோக்கிய வருகையின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஒன்று, தூதுக்குழுக்களும் தூதுவர்களதும் நகர்வுகள் அரசுகளின் இராஜதந்தர நடவடிக்கையாகவே அமைந்துள்ளன. கடந்த வரலாறு முழுவுதும் உலகளாவிய ரீதியில் தூதுக்குழுக்களது முதலாவது இலக்கு இராஜதந்திரமாகவே அமைந்திருப்பது வழமையானதாகும். சீனாவின் தூதுக்குழுவினது சந்திப்புகள் இலங்கையின் ஜனாதிபதி பிரதமரை மட்டுமல்லாது பாரம்பரியமான பௌத்த மதத்தையும் அரசியலையும் பிணைக்கும் தலதாமாளிகையும் உட்படுத்தி அமைந்திருந்தது. முழுமையாக இலங்கையின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைமைகளையும் அதன் நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக சீனத் தூதுக்குழுவின் இலக்கு அமைந்திருந்தது. இது முழுமையாக இராஜதந்திர நகர்வாகவே அமைந்துள்ளது.
இரண்டு, இலங்கையின் அரசியல் பொருளாதார விடயங்களில் சீனா தனது பிடியை பலப்படுத்த வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாக உள்ளது. இலங்கையின் முக்கியத்துவம் கருதி உறவுகளை கட்டமைத்துள்ள சீனா இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளது. அதிலும் பொருளாதார முதலீடுகளை தக்கவைப்பதும் அதன் மீது பிற சக்திகளது தலையீடு இல்லாத நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியமானதாக உள்ளது. சீனாவின் முதலீடுகள் அனைத்தும் பலமானதாக அமைந்துள்ளதை பாதுகாப்பதே தூதுக்குழுவின் பிரதான நோக்கமாகும். அதற்கு அமைவாகவே ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுக நகரத்திற்கான முதலீடுகள் பற்றியதாக அமைந்திருந்தது. இத்தகைய பொருளாதார ஒத்துழைப்புக்கூடாகவே சீனா அரசியல் இருப்பையும் அதன் தொடர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம் எப்போதும் இலங்கைத் தீவுக்கு மட்டுமானது கிடையாது அதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தையும் உலகளாவிய பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்ள முடியும் என்பதே வல்லரசு நாடுகளது உத்தியாக அமையும். மாலைதீவுக்கு வருகை தந்த தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்ததன் நோக்கம் தென்னாசியப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன் இந்து சமுத்திர நாடுகளையும் இலக்காகக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
மூன்று, இலங்கைத் தீவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரமைப்பின் பிரதிநிதி சமந்தபவர் இலங்கையின் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும் போது இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்து மதிப்பளிக்கும் என்றார். மாலைதீவில் ஜனாதிபதியைச் சந்தித்த சமந்தா பவர் அமெரிக்காவின் இலங்கை உறவை உறுதிப்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளார். ரணில்விக்கிரமசிங்ஹா ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து அமெரிக்க-இலங்கை நெருக்கம் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. அத்தகைய நெருக்கத்தை எச்சரிக்கையுடன் அணுகும் சீனா தனது இராஜீக நகர்வை தொடராக கொண்டிருக்க வேண்டும் என்பதோடு பொருளாதார முதலீடுகளிலும் அரசியல் நடவடிக்கையிலும் அதிக கவனம் கொண்டு செயல்படுகிறது.
நான்கு, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் வழங்கும் நகர்வு மேற்கு இலங்கை உறவை வலுவாக்கியதுடன் அமெரிக்காவின் தனித்துமான நடவடிக்கையாகவே தெரிகிறது. அதனை கையாள வேண்டிய நிலைக்குள் சீனாவின் நகர்வு தென்படுகிறது. சீனா தொடர்ச்சியாக பொருளாதார உதவிகளை இலங்கைக்கு வழங்கினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு இலங்கைக்கு அவசியமானது மட்டுமல்ல பாதுகாப்பானதாகவும் கருதுகிறது. இதனால் சீனா தனது நடவடிக்கைகள் மீதான செயல்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது. வெளிப்படையாக சீனா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவினாலும் வெளிப்படையாக அத்தகைய உதவியின் தாற்பரியம் ஆரோக்கியமான விளைவை இலங்கை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக சீனாவின் கடன்களாலும் நன்கொடைகளாலும் இலங்கையைவிட சீனாவே அதிக இலாபத்தை அடைவதாக கருதும் நிலை வலுவானதாக உள்ளது. அதனால் சீனா தனது முதலீடுகள் மட்டுமல்லாது உறவையும் நெருக்கமானதாக கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கை ஆட்சியாளர்களுடனான உறவையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐந்து, தலதாமாளிகைக்கான சீனத் தூதுக்குழுவின் விஜயம் மத முக்கியத்துவத்தை விட அரசியல் முக்கியத்துவம் பொருந்தியதாகவே அமைந்துள்ளது. காரணம் தலதாமாளிகை அரசியல் ரீதியில் இலங்கையின் இருப்பினைத் தீர்மானிக்கும் வலிமை கொண்டது. இலங்கையின் அரசியல் பௌத்தமத பாரம்பரியத்திற்குள்ளால் கட்டிவளர்க்கப்பட்டது என்ற வகையில் தலதாமாளிகைக்கும் இலங்கையின் அரசியல் நிறுவனங்களுக்கும் அதிக தொடர்பு காணப்படுகிறது. சீனா ஒரு கம்யூனிஸக் கொள்கையை கடைப்பிடித்தாலும் நடைமுறையில் பௌத்த மரபுகளை அங்கீகரிப்பதுவும் இலங்கை போன்ற நாடுகளில் மதத்தினை அனுசரித்து செயல்படுவதும் வழமையான அரசியலாகக் கொண்டுள்ளது. சீனா சித்தாந்தங்களைக் கடந்து அரசியல் நலனுக்கான இலக்குகளை அடைவதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது. ஏறக்குறை ஏகாதிபத்திய மனோநிலையுடன் நாடுகளையும் ஆட்சியாளர்களையும் அரவணைக்கும் சீனா பொருளாதார ரீதியில் நாடுகளை கட்டுப்படுத்துகின்றது. இது மேற்கு ஏகாதிபத்தியத்திற்கு சமமான கொள்கையுடன் செயல்படுவதாகவே தெரிகிறது. மேற்கு ஏகாதிபத்தியத்திடம் மனித உரிமைகளும் நீதிப் பொறிமுறையும் போலியாகவேனும் காட்சிப்படுத்துகிறது. சீனா அத்தகைய கொள்கை எதனையும் கொண்டிராது மட்டுமல்ல கம்யூனிஸம் என்ற போலியை அசலாக்க காட்சிப்படுத்த முயலுகிறது. இரு தரப்புமே போலியாகவே சித்தாந்தங்களை கட்டமைத்துள்ளன. தராண்மைவாதத்தினதும் கம்யூனிஸத்தினதும் வடிவம் ஏகாதிபத்தியமே. சுரண்டலும் ஆக்கிரமிப்பும் ஒன்றாகவே கையாளப்படுகிறது.
ஆறு, சீனத் தூதுக்குழுவின் விஜயம் இலங்கை ஆட்சி மாற்றத்தை மாலைதீவின் ஆட்சி மாற்றத்துடன் தொடர்புபடுத்துவதாக அமைந்துள்ளது. அத்தகைய பிரதிபலிப்பில் ஒன்றாகவும் அது எத்தகையதாக அமைய வேண்டும் என்பதுவும் முக்கியமானது. மேற்குலகத்தின் நெருக்கடிகளால் அதிக மறைந்து செயல்படும் வெதமுலே அரசியல்வாதிகளை கருத்தில் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அத்தகைய தரப்பின் முக்கியத்துவமும் தற்போதைய ஜனாதிபதியின் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்வதாகவே தெரிகிறது. அண்மைய நீதிமன்றத் தீர்புக்களால் குழப்பத்திலுள்ள வெதமுலே தரப்பினை திருப்திப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு சீனத் தூதுக்குழுவினது இலங்கைத் தீவுக்கான வருகை புரிந்து கொள்ளப்பட வேண்டும். வெளிப்படையாக அவர்களது விஜயம் சில விடயங்களைத் தெரிவித்தாலும் மறைமுகமாக இராஜதந்திர விஜயமாக அமைந்தாலும் அரசியல் பொருளாதார இராணுவ முக்கியத்துவத்தைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. சீன ஜனாதிபதியின் சிறப்புக் குழுவினது விஜயம் என்ற வகையில் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாகும். இது பிராந்திய நசர்வதேச முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
