இலங்கை தீவின் அரசியலில் சீனாவின் செல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் பெரும் பொருளாதார வலுவோடு வல்லரசாக கட்டமைக்க முயலும் சீனா உலக நாடுகளையும் தனது பிடிக்குள் வைத்துக் கொள்வதில் வெற்றிகரமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதனொரு அங்கமாகவே இலங்கை தீவு மீது அதிக கரிசனையும் கவனமும் கொண்டு செயல்படுகிறது. இந்துசமுத்திரத்தின் மத்தியில் இலங்கை என்பதோடு இந்தியாவுக்கு அண்மையிலுள்ள நாடு என்ற அடிப்படையிலும் இலங்கைத்தீவின் முக்கியத்துவம் தனித்துவமானதாக சீனா கருதுகிறது. அன்மைய வாரத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அவரது விஜயத்தின் போது அவர் வெளிப்படுத்திய உரையாடலும் முன்வைத்த உதவி திட்டங்களும் ஈழத்தமிழருடைய அரசியல் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பக்கங்களாகும். அதனை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.
கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த சீன தூதுவர் கீசென் ஹொங் பருத்தித்துறையில் அமைந்துள்ள சக்கோட்டை முனையை சென்று பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தழருந்தார். வடக்கை வென்ற தெற்கின் தலைவர் அனுரகுமாரதிஸநாயக்கா என்று தெரிவித்ததோடு வடக்கு ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது சீன அரசாங்கத்தின் 12 மில்லியன் ரூபாய் பெருமதியான காசோலையை கையளித்திருந்தார். அப்போது வடக்கின் அபிவிருத்திய சீனாவின் பங்களிப்பு இனி இருக்கும் என்றும் தெரிவித்தார். அது மட்டுமின்றி இலங்கை வரலாற்றில் தெற்கு சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை என்றும் யார் ஆட்சியில் இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவில் ஆதரவு தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார் . வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் என வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் சீனத் தூதுவர் உறுதி அளித்தார். மேலும் யாழ் .ஊடக மையத்தின் நிகழ்த்திய ஒரு சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சீனாவுடனான கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சரியான பதில்களை வழங்குவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் இத்தகைய இவரது கருத்துக்கள் சீன ஈழத்தமிழர் உறவு கொள்வது புரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை நோக்குவது அவசியமானது.
முதலாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் சீனாவின் புலமைப்பரிசுகளோடு பல கலாநிதி பட்ட மாணவர்கள் ஆய்வுகளை நிறைவு செய்ததோடு தற்போது கலாநிதிப்பட்ட ஆய்வு கற்கைக்கான அனுமதியை பெறுவதிலும் கற்கையை மேற்கொள்வதிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மிக நீண்ட காலமாகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்களை சீனப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்வதோடு நெருக்கமான தொடர்பும் கொண்டுள்ளனர். அத்தகைய நோக்கத்தை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செயல்பட முடியும் என்பது மட்டுமின்றி ஒரு பல்கலைக்கழகத்தின் தற்றுணிவு அதிகாரம் என்பது அதன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபாடுகாட்ட மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. அதை கடந்து பல்லைக்கழகம் வேறு எந்த அரசியல் செய்முறைகளிலும் ஈடுபடுவது என்பது அது வரையறுத்துக் கொண்ட கொள்கையிலிருந்து வேறுபடுவதாகவே புரிந்து கொள்ளப்படும் . இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவான புரிதலை கடந்த காலங்களில் வழங்கி இருப்பதோடு மாணவர்களுக்கான புலமை பரிசுகளை சீனா வழங்குகிற போது அதனை ஏற்று அனுசரித்து செயல்பட்டுள்ளது. அவ்வாறே பல உட்கட்டுமான நடவடிக்கையில் அனுசரணை மேற்கொள்ள சீன அரசாங்கத்துக்கு வாய்ப்பு உண்டு. அவை எதனையும் நிராகரித்ததாக பதிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.
இரண்டாவது இலங்கை தீவின் அரசியல் ஈழத் தமிழர்களின் பொருளாதார சமூக இருப்பில் பெரும் பாதிப்புகளை கொடுப்பதாகவே உள்ளது. பொருளாதார உதவிகளை சீனா வழங்குவது என்பது வாழ்வாதாரத்தையும் அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்வதற்கான ஒன்றாகவே உள்ளது. ஒரு பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்தி என்பது அப்பிரதேச மக்களின் அரசியல் சமூக பொருளாதார இருப்புச் சார்ந்ததென்று. பொருளாதார உதவியை பொருளாதார அபிவிருத்தியாக அளவீடு செய்யும் மரபு முடிபுக்குவந்து பல தசாப்தங்களாகிவிட்டன. பொருளாதார உதவி மட்டுமே அபிவிருத்தி என்று கருதுவதில்லை. அரசியலாக சமூகமாக பண்பாடாக மனித உரிமைகளாக நாகரிகமாக ஒரு சமூகம் வளர்வது அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியாக கொள்ளப்படும். அத்தகைய அபிவிருத்திய நோக்கிய கோரிக்கைகளே ஈழத்தமிழர்கள் மத்தியில் முதன்மைப்படுத்தப்படுகிறது. அடிப்படை பொருளாதாரம் தேவை என்பது ஈழத்தமிழர்களிடம் அதீதமாகவே காணப்படுகிறது. அதற்காக வழங்கப்படும் உதவிகளும் நிவாரணங்களும் கடன்களும் உள்கட்டுமானங்களும் அவசியமானவை. ஆனால் அவற்றின் நிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சியும் சாத்தியப்பட வேண்டுமாயின் அந்தப் பிரதேசத்தின் அரசியல் உறுதிப்பாடு அவசியம். அரசியல் உறுதிப்பாடற்ற மற்றும் அரசியல் அதிகாரமற்ற பொருளாதார ஒத்துழைப்பு உடனடித் தேவையான நிறைவு செய்யுமேயற்றி ஒரு நீண்ட கால நோக்கில் சாத்தியப்படான அபிவிருத்தியை தந்துவிடாது. இதனால் பொருளாதார உதவி என்பது நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார உதவியாகவும் அது நிலைத்திருப்பதற்கான அரசியல் அதிகார இருப்பும் அவசியமானது என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 1978 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையை சிங்கப்பூருக்கு சமனான நாடாக மாற்றுவேன் என பாராளுமன்றத்தில் சூழுரைத்தார். ஆனால் மீளமுடியாத மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை தீவை அவரது ஆட்சியும் அவரது அரசியலமைப்பும் கொண்டு சென்று விட்டுள்ளது. இதனையே உலக நாடுகளும் விரும்புகின்றனவா என்ற கேள்வி ஈழத்தமிழரிடம் எழுவது ஒன்றும் தவறான புரிதலாக தென்படவில்லை. இத்தகைய பொருளாதர் உதவிகள் ஈழத்தமிழருக்கு அவசியமானது என்பதற்கு அப்பால் அரசியல் அதிகாரத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சியே அவசியமானது.
மூன்றாவது வரலாற்றில் முதல் தடவையாக தெற்கின் தலைவர் ஒருவர் வடக்கு கிழக்கில் வென்றிபெற்றிருப்பதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். அவரது வெளிப்பாடு வேறொரு அர்த்தத்திலும் ஒரு புரிதலிலும் முன்வைக்கப்பட்டதாகவே தெரிகின்றது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மிகைப்படுத்துவதாக தெரிகிறது. அனுரகுமாரதிஸநாயகா இலங்கைத்தீவின் ஜனாதிபதி. அவரது கட்சி இலங்கை தீவில் எப்பாகத்திலும் போட்டியிடலாம். வெற்றி பெறலாம். தோல்வி அடையலாம். அது இலங்கைத் தீவின் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக சகோதரர்களுக்கிடையில் நிகழும் அரசியல் அதிகாரத்துக்கான போட்டி மட்டுமே. இன்றைய சூழலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி 2020 ஆம் ஆண்டு சொற்ப வாக்குகளை வடக்கில் பெற்றுள்ளது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது மட்டுமின்றி சக்கோட்டையில் நின்று கொண்டு அக்கருத்தினை தூதுவர் முன்வைத்தது பிராந்தி அரசியலில் வேறொரு அர்த்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய அர்த்தத்தை அதற்குரிய சக்திகள் புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த பிராந்திய சத்திய நோக்கி உரையாடல் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. பிராந்திய சக்திகளுக்கான போட்டிக் களமாக இலங்கை தீவை சர்வதேச சக்திகள் வைத்துக்கொள்ள அனுமதிப்பதே இலங்கை தீவின் துயரமான அரசியலாகவுள்ளது.
நான்காவது சீனா ஒரு வலுவான பொருளாதார அரசு. அதே நேரம் அது தன்னை கம்யூனிச கட்சியால் ஆளப்படும் அல்லது கம்யூனிஸத்தை பிரதிபலிக்கின்ற நாடென்று அடையாளப்படுத்தம் முயலுகிறது. அவ்வகை சோசியலிஸ அல்லது கம்யூனிஸ சிந்தனைக்குள் தேசியங்களும் தேசிய இனங்களின் விடுதலையும் சுயநிர்ணயமும் முதன்மையான கோட்பாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. இலங்கை தீவின் தேசிய இனங்களை அங்கீகரித்து அடையாளப்படுத்துவதே கம்யூனிஸக் கொள்கையின் அடிப்படை ஆதாரமாகும். தேசிய இனங்களின் தனித்துவத்தோடு இலங்கையர் என்ற அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டிய கம்யூனிஸ சித்தாந்தம் தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் மலையக மக்களை ஒரே அடையாளத்துக்குள் உட்படுத்த முனைகிறது. அதற்கான எண்ணங்களை அதிகம் தமிழ் மக்கள் மத்தியில் பிரதிபலிக்க சீனா விரும்புகின்றது. இலங்கை தீவை பொருத்தவரையில் தேசியங்களின் தனித்தோடு கூடிய பல்லின தேசிய அரசுக்கான கட்டமைப்பை தோற்றுவிப்பதே அவசியமானது. அத்தகைய கட்டமைப்பின் கீழ்; இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தியே சாத்தியமாகும். அதனை நோக்கியே புதிய அரசை பிராந்திய சர்வதேச சக்திகள் ஊக்குவிக்க வேண்டும். இதனை விடுத்து தனித்துவமான அடையாளங்களை கைவிடவும் இலங்கைத்தீவின் தேசியங்களின் அடையாளமற்ற அரசியலை மேற்கொள்ளவும் சீன தேசம் ஆலோசனை வழங்குவது என்பது அபத்தமான விளைவை தரக்கூடியதே. இது சீனாவின் தலையீட்டைக் கோடிட்டுகாட்டுவதாகவே உள்ளது. சீனா இன்னொரு நாட்டின் அரசியலில் தலையிடுவதில்லை என்ற வெளியுறவு கொள்கையாக முதன்மைப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் நடைமுறையில் இலங்கை தீவினுடைய தேசிய இனங்கள் பொறுத்தும் இனங்களின் தனித்துவம் பொறுத்தும் நிராகரிப்பையும் அடையாளமற்ற அரசியலையும் முதன்மைப்படுத்த விளைகின்றது. இத்தகைய முரணியத்தை கொண்டதாகவே சீனாவின் வெளியுறவு காணப்படுகிறது. இலங்கைத் தீவில் இருக்கும் தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு தேசிய இனங்களை அங்கீகரிப்பதிலிருந்தே தொடக்கப்பட வேண்டும். அத்தகைய சிந்தனையையே மாபெரும் புரட்சியாளனான லெனின் குறிப்பிடுகின்றார்.
எனவே சீனத் தூதுவரது வடக்கு கிழக்கு விஜயம்பொருளாதார ஒத்துழைப்புக்கான விஜயமாகவே அல்லது பொருளாதார உதவிக்கான விஜயமாகவே தென்பட்டாலும் அவர் வெளிப்படுத்திய உரையாடல்கள் ஆழமான அரசியல் முக்கியத்துவத்தை உள்நாட்டிலும் பிராந்திய தளத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தல் என்பது காலங்காலமான மரபுகளில் ஒன்று. அத்தகைய மரபுகளுக்குள்ளால் கடந்த காலங்களிலும் ஈழத் தமிழர்கள் தென்னிலங்கை சார்ப்பான தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். அந்த மரபுக்குள் தற்போதைய காலம் காணப்படுவதோடு தமிழ் தேசிய அபிலாசைகளை கொண்ட கட்சிகளின் மோதலும் முரண்பாடும் தென்னிலங்கைக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அது வடக்கு கிழக்குக்கும் தென் இலங்கைக்குமான உறவின் பிரதிபலிப்பு. புதிய அரசாங்கம் தெளிவான மாற்றத்தை நோக்கிய கொள்கையோடு பயணிக்கத் திட்டமிடுகிறது. அதனை பலவீனப்படுத்தும் விதத்திலும் பிரா சர்வதேச அரசுகள் செயல்படுவதென்பது அபாயமான விளைவையே மீளவும் ஏற்படுத்த முயலும். இது வல்லரசுகளுக்குள் நிலவும் போட்டியை காட்டுவதாகவே தெரிகிறது. அத்தகைய வல்லரசுப் போட்டியை இலங்கைத் தீவின் அரசியலில் முதன்மைபடுத்த விளைவது ஆரோக்கியமாக தென்படவில்லை. சீனாவை ஈழத் தமிழர்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என்பது போல் சீனாவும் ஈழத்தமிழருடைய அரசியல் புரிதலையும் தெளிவையும் கொண்டிருத்தல் வேண்டும். ஈழத்தமிழர்கள் இறைமைபடைத்த சுயநிர்ணயம்கொண்ட தேசிய இனம் என்ற அடிப்படையை ஏற்றுக் கொள்வதோடு அதற்கான வாய்ப்புகளை அரசியல் ரீதியாக மேற்கொள்ளக்கின்ற சந்தர்ப்பத்திலேயே ஈழத்தமிழருக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடி நிலைகளை பலவீனப்படுத்துவதும் அவமதிப்பதும் இனத்தின் அடையாளத்தை பலவீனமானதாக காண்பிப்பதும் நாகரீகமான அரசியலில் விளைவுகளாக தென்படவில்லை. அதனை மாற்றிக் கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழர் சீன உறவு ஆரோக்கியமானதாக கட்டியெழுப்ப முடியும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)