தென்னாசியபிராந்திய அரசியலில் இந்தியாவின் அணுகுமுறைகள் பிரதானமான தாக்கத்தை கொண்டிருப்பது இந்தியாவின் வலுவான அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் புவிசார் வலுவினால் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் தவிர்ந்த ஏனைய தென்னாசிய நாடுகளோடு இந்தியா அயல் நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First Policy) என்ற அடிப்படையில் பிரகாரம் இந்திய வெளியுறவு கொள்கையை கட்டமைத்து வருகிறது. தவிர்க்க முடியாமல் இலங்கை தீவின் அரசியலோடு இந்தியா நெருக்கமான உறவையும் தீர்மானங்களையும் முன்னெடுத்து வருகிறது. விடுதலைப்புலிகளின் மீள்எழுச்சிக்கான உரையாடல் ஒன்றை இந்திய புலனாய்வுத்துறை (National Investigation Agency) அண்மைக்காலத்தில் முன்னுரிமை வழங்கி உரையாடி வருகிறது. விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றதுக்கான நிதி பரிமாற்றமும் ஆயுதங்களை செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானில் இயங்கும் போதைவஸ்த்துக் கும்பலுடன் விடுதலைப்புலிகளை இணைத்து அண்மைய காலங்களில் அதிக உரையாடல்கள் நிகழ்கிறது. இக்கட்டுரையும் இந்தியாவும் மௌனிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் மீதான சதிக் கோட்பாடுகளையும் தேடுவதாக உள்ளது.
இரண்டு பிரதான விடயங்களைக் கண்டறியப்பட்டதாக என்.ஐ.ஏ. குறிப்பிடுகிறது. ஓன்று, விடுதலைப் புலிகள் மீள் எழுச்சிக்காக இலங்கையின் போதைப் பொருள் கடத்தல்காரர் சி.குணசேகரன் பாகிஸ்தானின் தலைநகரான காராச்சியில் இயங்கும் ஆயுத மற்றும் போதைப் பொருள்; கடத்தல்காரர் ஹாஜி சலீமின் கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக நிதியை மாற்றியதாக கண்டறிந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. இரண்டு, இந்தியாவில் இயங்கும் தாவூக் இப்ராஹிம் குற்றக் குழு எஞ்சிய விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இடையில் புதிய அபாயகரமான கூட்டணி குறித்து எச்சரித்துள்ளது.
முதலாவது விடுதலைப்புலிகள் 2009 இல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் எத்தகைய ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபாட்டை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெளிப்படுத்தவில்லை. தென்னிலங்கை அரசாங்கமும் இந்தியாவும் விடுதலைப் புலிகளையும் விடுதலைப்புலிகள் தலைமை தொடர்பிலும் எல்லையற்ற விவாதங்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் 2009 க்கு பின்னர் எந்த அடிப்படையில் அவ்வமைப்பு சார்பாக எத்தகைய ஆயுத ரீதியான நகர்வையும் மேற்கொண்டதாக தகவல் இல்லை. காரணம் விடுதலைப் புலிகளின் தலைமையோ கட்டளையிடும் தளபதிகளோ களத்தில் இல்லாமை மட்டுமன்றி விடுதலைப் புலிகள் என்பது தலைமை சார்ந்ததேயாகும். மாறாக விடுதலைப் புலிகளின் பெயரால் எல்லையற்ற நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தளத்திலும் புலத்திலும் இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லாததுடன் விடுதலைப்புலிகளின் பெயரில் அத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவினாலும் தென்னிலங்கையினதும் அரசாங்கங்களினால் தமது நலனுக்கு சார்பாக கட்டமைக்கப்பட்டு போலித்தனமாக விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்படுகிறது. அத்தகைய சதி கோட்பாடுகளால் விடுதலைப்புலிகளின் பற்றிய விம்பங்கள் உடைக்கப்பட்டு முன்நகர்த்தப்படுகின்றது. அடிப்படையில் 2009 இல் விடுதலைப்புலிகளின் தலைமை கொல்லப்பட்டதிலிருந்து எத்தகைய நடவடிக்கைகளும் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. காரணம் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று 2009 க்கு பின்னர் இல்லை என்பது எதார்த்தமான அரசியலாகும். அதன் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற அரசியல் என்பது அந்தந்த அரசுகளின் நலன்களுக்கு உட்பட்ட சதி கோட்பாடுகளின் மூலமாக கையாளப்படுகின்ற செயல்முறையாகவே காணப்படுகிறது. இதே போன்ற பல விடயங்களை விடுதலைப்புலிகளின் பெயரில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கடந்த காலங்களில் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் அதீதமாக காணப்படுகிறன.
1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியப் படைகளுக்கு வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட அழிவுகளின் பின்னனய காலப்பகுதியில் அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.டிக்சித் (J.N. Dixit) எழுதிய நூலான Assignment Colombo இல் குறிப்பிடுகின்ற போது இந்திய புலனாய்வுத்துறை (RAW) தனக்கு வழங்கிய தவறான தகவலின் அடிப்படையில் இலங்கையின் வடக்கு கிழக்குக்கு இந்தியப்படைகளை இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே அண்மைய காலங்களில் இந்திய அரசியல் வாதிகளில் முக்கியமானவரும் காங்கிரஸ் கட்சியின் பிரதான அரசியல் தலைவர்களும் ஒருவரான மணிசங்கர் ஐயர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையை இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதான அல்லது வடகிழக்கு மீதான இந்தியாவுடனான பகைமைக்கு அடிப்படை காரணம் என்று இந்திய இராணுவர்த்தினை குற்றம் சாட்டியிருந்தார். அத்தகைய புலனாய்வுத்துறையும் இராணுவமும் தவறு இழைத்த பின்னரும் புலனாய்வுத் துறையினாலும் இராணுவ தரப்பினராலும் வடகிழக்கு சார்ந்து ஈழத்தமிழர்கள் பொறுத்தும் விடுதலைப்புலிகள் பொறுத்தும் முன்வைக்கும் விவாதங்கள் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். இத்தகைய நெருக்கடிக்குள்ளாலேயே ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு வடிவமைக்கப்படுகிறது.
இரண்டாவது ஈழத்தமிழர்களுடைய அரசியல் சதிக் கோட்பாடுகளால் சிதைவடைந்து போகின்ற துயரத்தை ஈழத்தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர். ஈழவிடுதலைப் போராட்டத்தை இந்தியாவே ஊக்குவித்தது என்பது வரலாற்று ரீதியான ஆதாரங்கள் அதிகம் உண்டு. ஈழத்தமிழர்களின் எழுச்சிகரமான ஜனநாயகப் போராட்டங்களை அல்லது மிதவாதப் போராட்டங்களை திசை திருப்பி ஆயுதப் போராட்டமாக வடிவமைத்ததில் இந்தியாவுக்கு பாரிய பங்கிருந்தது. அப்போது விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து அமைப்புகளையும் விடுதலை அமைப்புகளாகவும் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் போராளிகளாகவும் இந்தியா கருதிக் கொண்டு பயிற்சியும் ஆயுதமும் பொருளாதார ஒத்துளைப்பும் வழங்கியது. அது மட்டுமின்றி உள்நாட்டு ரீதியான வளங்களையும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா வழங்கியிருந்தது. அத்தகைய இந்தியாவே ஈழவிடுதலைப் போராட்டத்தின் சிதைவுக்கும் காரணமாகியது. அதே அணுகுமுறையோடு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் இந்தியாவின் ஈழத்தமிழர் குறித்து மாற்றம் எதனையும் கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. அப்படியானால் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஈழத்தமிழரும் இந்தியாவுக்கு விரோதமான சக்திகளாகவே தெரிகின்றனர். ஈழத்தமிழர் இந்திய அரசியலோடு இந்திய மத்திய அரசின் புலனாய்வு பணிகள் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. வெளிப்படையாக கூறுவதானால் பாகிஸ்தானுக்கும் விடுதலை புலிகளுக்கும் போதை வியாபாரிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கராச்சிக்கும் விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கும் முடிச்சு போடுவது இந்தியாவின் சதிகோட்பாடாகவே தெரிகிறது. கடந்த காலங்களைப் போன்று சதி கோட்பாடுகளின் நீட்சியாகவே விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக இந்திய புலனாய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆயுதப் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்ட ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகள் தற்போது இந்தியாவினாலும் இந்திய புலனாய்வுத் துறையினராலும் பயங்கரவாதிகள் எனவும் போதை வியாபாரிகள் எனவும் பாகிஸ்தானுடன் தொடர்புள்ள உளவாளிகள் எனவும் முத்திரை குத்துவதற்கு திட்டமிடுகின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அயல்நாடுகளான போதும் பல போர்களையும் தொடர்ச்சியான இராணுவ அரசியல் மோதல்களையும் எதிர்கொள்கின்ற நாடுகள். பாகிஸ்தானுடன் விடுதலைப் புலிகளது உறவு என்பது இந்தியாவினால் நிராகரிக்கப்படுகின்ற ஒன்றாக காணப்படுகின்ற போது விடுதலைப்புலிகளையும் கராச்சியையும் பிணைத்து வைப்பதில் இந்தியா முனைப்பு காட்டுகிறது. அப்படியானால் விடுதலைப்புலிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கிற உறவை காரணம் காட்டிக்கொண்டு ஈழத்தமிழர்களின் அரசியலை கையாள முனைகிறது. 2009க்கு பின்னரான விடுதலை புலிகள் என்ற அமைப்பு இல்லாத சூழலிலும் ஈழத்தமிழர் மீதான அரசியலில் இந்தியாவின் அணுகுமுறை விடுதலைப்புலிகள் காலத்தைப் போன்றே காணப்படுகிறது.
எனவே விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டு என்பது அவ்வகை அமைப்பொன்று இல்லாத சூழலில் மேற்கொள்ளப்படும் சதி கோட்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவ்வகை சதிக்கோட்பாடுகளுக்கு ஊடாக ஈழத்தமிழர்களுக்கு உரித்துடைய உரிமைகளை நிராகரிப்பதன் மூலம் இந்தியா பிராந்திய ரீதியில் நமது செல்வாக்கையும் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் பேணுவதற்கு முயல்வதாக தெரிகிறது. இந்தியாவுக்காகவே ஈழத்தமிழர்கள் சிங்கள மக்களோடு பகைத்துக் கொள்ளுகின்ற நிலையில் இந்தியாவின் அணுகுமுறை ஈழத்தமிழர்களை இந்தியாவிடம் இருந்து முற்றாகவே அன்னியப்படுத்த திட்டமிடுவதாக தெரிகின்றது. பாகிஸ்தானோடு ஈழத்தமிழர்களின் அல்லது விடுதலைப்புலிகளின் இணைப்பு என்பது அத்தகைய நோக்கத்தை அடைவதற்கான அணுகுமுறையாகவே தென்படுகின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
