அரசியல் கட்டுரைகள்

விடுதலைப் புலிகளது தலைமை பற்றிய உரையாடலும் அறிவியலும்

இலங்கையின் அரசியல் பரப்பில் மீளவும் விடுதலைப் புலிகளது தலைமை பற்றிய உரையாடல் 13.02.2023 தமிழ் தேசியப் இயக்கத்தின் தலைமை நெடுமாறன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தஞ்சாவூர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. 2009 களில் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைமை மீளவும் உயிருடன் இருப்பதாகவும் தமிழ் மக்களின் விடிவுக்காக திட்டத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்து சமுத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற சாரப்படவும் அவ்வறிக்கை பதிவு செய்துள்ளது. இக்கட்டுரை விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பில் எழுந்துள்ள சர்சைகளுக்கு அறிவியல் ரீதியில் பதிலளிக்க முனைகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியலின் வளர்ச்சி மற்றும் தொழிநுட்பத்தின் முன்னேற்றம் அதீத மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. ஓரிடத்தில் பதிவு செய்யப்படும் நிழல்படத்தை வைத்துக் கொண்டு அந்த இடத்தின் சூழலையும் தட்பவெப்பத்தையும் பாதிப்பின் விளைவுகளையும் கண்டறியக் கூடியளவுக்கு அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. அத்தகைய பதிவையே இறுதிக்கட்ட போரின் பதிவுகளை சனல்-4 காட்சிகள் உலகத்திற்கு தந்துள்ளன. அது மட்டுமல்ல இரண்டாம் உலக போரில் யூதர்கள் மீதான படுகொலைகளால் இழந்தவர்களை தேடுவதும் அவர்களது மூதாதையரின் தடயங்களை கண்டறிவதிலும் மரபணுவைக் கொண்டு தேடும் நடவடிக்கைகள் நிகழ்ந்துவருகிறன. அத்தகைய அறிவியல் யுகத்திற்குள் மனித சமூகம் நுழைந்து பல தசாப்தங்களாகிவிட்டது. சாதரண ஒளிப்படம் தரக்கூடிய அதிகூடிய வெளிப்படாக தரையின் இயல்புகள் வெப்பத்தின் அளவுகள் சூழலில் காணப்படும் அனைத்துவகைப் பொருட்களின் தன்மை என்பன மட்டுமன்றி அத்தகைய ஒளிப்படத்தின் காலத்தைக் கூட அளவிடும் நிலையை அறிவியல் ஏற்படுத்திவிட்டது. அவ்வாறான சற்றலைற் மூலமான ஒரு காட்சியே ஒசாமா பில்லாடன் கண்டறியப்பட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு கொல்லப்பட்ட காரணமாக இருந்தது என்பது நினைவுகொள்ளப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு இறுதி போரில் கொல்லபட்ட அனைத்து பொதுமக்களதும் விடுதலைப் புலிகளதும் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் நிழற்படங்கள் குரல் ஒலிகள் தாக்குதல் பிரதேசங்கள் தாக்குதல் விமானங்கள் ஆயுதங்கள் மற்றும் அழிவுகள் அதன் சூழல்கள் என்பன அடங்கிய சனல்-4 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்டது. அத்தகைய காட்சிப்படுத்தலை அடுத்து அப்போதைய இலங்கை அரசாங்கம் அத்தகைய காட்சிகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது எனவும் சோடிக்கப்பட்டவை எனவும் மறுத்திருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த மனித உரிமைப் பேரவை அதனை தடயவியல் பரிசோதனைக்கு(Forensic Investigation) உட்படுத்தும் நோக்கில் அத்தகைய காட்சிகளை பரிசோதிக்க தனியாக தடயவியல் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று(Independent Expert) நியமிக்கப்பட்டு அப்பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.தடயவியல் என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச் செயல்களை ஆராயும் ஓரு துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்’கும் தடையங்களை சோதனையிடுவதன் மூலம் குற்றச் செயலின் உண்மைத் தன்மையையும் நீதியின் முன்னான சாட்சியங்களையும் உறுதிப்படுத்துவதாகும். அதன் பிரகாரம் இலங்கையில் நிகழ்ந்த இறுதி போரின் தடயங்கள் சனல்-4 இன் காட்சிகள் போன்றவை அனைத்தும் உண்மையானவை எனவும் உண்மையான தடயங்களைக் கொண்டுள்ளவை எனவும் அத்தடயவியல் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை கவனத்திற்கு உரியதாகும். அதில் விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட கொல்லப்பட்ட பொது மக்களது அனைத்து நிழல்படங்களும் வீடியோக்களும் பெருமளவுக்கு உள்ளடக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடக் கூடியவிடயமாகும்.

எனவே தஞ்சாவூரில் வெளியிடப்பட்ட தகவலின் உள்ளடக்கம் பற்றிய அறிவியல்பூர்வமான உரையாடல் மேற்குறித்த தடயத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. அதில் அதிக குழப்பங்கள் தேவையற்றதாகவே தெரிகிறது. தமிழ் ஊடக வெளியினது அபரிமிதமான உரையாடல் அறிவியலை மையப்படுத்தாதுள்ளமை புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகவுள்ளது. அப்படியானால் ஏன் நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் அத்தகைய தகவலை வெளியிட்டுள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு இதற்கு முன்னரும் இத்தகைய செய்தியை வெளிப்படுத்தி இருவரும் செயல்பட்டுள்ளனர். அதனைவிட தமிழகம் விடுதலைப் புலிகளின் தலைமையையும் அமைப்பையும் முன்னிறுத்தி அரசியல் மேற்கொள்ளும் போக்கினையும் கொண்டுள்ளமை தெரிந்த விடயமே. ஆனால் தற்போது எழுந்துள்ள உரையாடல் வேறுபட்டதாகவே உள்ளது. நெடுமாறனது பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் அதிக ஊகங்களும் குழப்பங்களும் வெளியாகியுள்ளது. அதே நேரம் அத்தகைய அம்சத்தை முன்னிறுத்தி அரசியல் மேற்கொள்ளும் சக்திகளது எழுச்சி தவிர்க்க முடியாது இடம் பெற்றுள்ளது. அதில் முக்கிய அணியாக இந்தியா-அமெரிக்காவும் அதன் குவாட் நாடுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு பகுதியை தென் இலங்கையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அதன் அரசியல் வழமையானதே.

ஒன்று, ஒரு நீண்ட ஆயுதப் போராட்டத்தின் தலைமையை அதிகம் அவமதிப்பதாகவே ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர். ஆயுதப் போராட்ட அமைப்புக்களது தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட இந்தியா அதாவது புதுடில்லி அதன் சிதைவுகளுக்கும் முடிபுக்கும் காரணமாய் அமைந்தது என்பது பெரும் குற்றச்சாட்டாக ஈழத்தமிழரிடம் உள்ளது. அதில் தமிழகம் தவிர்க்கப்பட்டிருந்தது. தமிழக-ஈழத்தமதிழரது உறவு பலமானதாகவே காணப்பட்டது. சிறிபெரும்புதூர் சம்பவத்திற்குப் பின்னரும் இரு தேசியங்களது உறவும் பலமாகவே காணப்பட்டது. ஆனால் தமிழக மக்களது உணர்வுகளும் எண்ணங்களும் ஈழத்தமிழருடன் நெருக்கமாக அமையும் போது தமிழக அரசியல்வாதிகள் அதனை தமது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துவதாக உணரப்படுகிறது. அது மட்டுமன்றி மத்தியரசின் நலன்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைக்குள் ஈழத்து அரசியலையும் தமிழக அரசியலையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. தற்போது திராவிட-மதவாத அரசியலுக்குள் ஈழத்தமிழரது அரசியல் இழுத்துவிடப்பாட்டதாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் மத்தியரசாங்கத்தை கையாள தமிழக அரசியல் தேவையானதென்பதை ஈழத்தமிழர்கள் மறுதலிக்கவில்லை. அதே நேரம் ஈழத்தமிழரது அபிலாசைகள் சிதையாமல் தமிழக-புதுடில்லி அரசியலை நிலைநிறுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது.

இரண்டு, தமிழகம் ஈழத்தமிழரது அரசியலில் கடந்த காலத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டை தற்போது காணமுடியாதுள்ளது என்பது துயரமான உண்மையாகும். தனித்து இந்தியா மத்தியரசின் நலனுக்குட்பட்டே ஈழத்தமிழரது அரசியல் மட்டுமல்ல இலங்கைத் தீவின் அரசியல் அமையவேண்டும் என்பதில் புதுடில்லி அக்கறையாக உள்ளது. புதுடில்லிக்குள்ளால் ஈழத்தமிழரது அரசியல் தமிழக தலைவர்கள் சிலரால் சிந்திக்கப்படுகிறது. ஈழத்தமிழரது அரசியல் இராமபிரானுக்குள்ளால் கட்டமைக்கும் நகர்வுகள் சமகாலத்தில் அரங்கேறிவருகிறது. இந்துத்துவ-மதவாத சிந்தனைக்குள்ளால் ஈழத்தமிழரது அரசியல் வரைய முயலுவதும் அது புதுடில்லியின் வரைபாக அமைவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனமாகவே தெரிகிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தை புதுடில்லியின் நலனுக்குட்பட்டதாக கையாள முனைந்த இந்திய கொள்கைவகுப்பாளர்கள் தற்போதும் தீர்வையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் இந்தியா சார்ந்தே உருவாக்கப்பட வேண்டும் எனக்கருதுகின்றன. 13 வது திருத்தத்தை அமுலாக்குவதில் சர்வதேச மட்டத்தில் இந்தியா முயன்றுள்ளது. அதனை கடந்து ஈழத்தமிழர்கள் எந்த அடைவையும் எட்டக்கூடாது என்பதில் இந்தியாவின் கவனமாகவுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் தோற்றமும் முடிபும் அதனையே காட்டுகிறது.

மூன்றாவது, இலங்கைத் தீவின் மீதான சீனாவின் செல்வாக்கு இந்திய-அமெரிக்க நலன்களை பாதிக்கும் விடயமாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்கும் நகர்வுகளில் இந்தியா தனித்து தோல்விகண்டுள்ளது. அதனால் அமெரிக்கா உட்பட்ட குவாட் நாடுகளது ஒத்துழைப்புடன் நகர முயன்றும் அதிகமான நெருக்கடியை அத்தரப்பு எதிர்கொண்டு வருகிறது. அதனால் இலங்கைத் தீவை கையாளவேண்டிய நிலைக்குள் இந்தியா மற்றும் அமெரி;க்க தரப்பு காணப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதி மேற்கு சார்பனவராக இருந்தாலும் சீனாவின் நட்புக்குள்ளால் பயணிக்கின்றார் என்பதையும் சீனாவை மீறி இலங்கைத் தீவு செயல்படாது என்பதை சமகால நடவடிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்தியா மீதான எதிர்ப்புணர்வே இலங்கைத் தீவின் இருப்பும் அரசியலும் என்பதை தென் இலங்கை தெளிவாக உணர்ந்துள்ளது. அதனால் சீனாவை கையாளும் நிலையை இலங்கை ஒரு போதும் கைவிடாது என்பதை கவனத்தில் கொள்ளும் போது இந்திய-அமெரிக்க் கூட்டுக்கு வலுவான சக்திகள் இலங்கைத் தீவில் அவசியமானதாக உள்ளது. அத்தகைய சக்திகள் தென் இலங்கையை மட்டுமல்ல சீனாவையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். அதற்கான பலமான அமைப்புக்களை எதிர்காலத்தில் உருவாக்குவது பற்றிய தேவைப்பாடு இந்திய-அமெரிக்க அணிக்கு அவசியமானதாக தெரிகிறது. அது மட்டுமன்றி தென் இலங்கையை குழப்பத்திற்கு உள்ளாக்குவதை விட சீனாவின் ஆரோக்கியமான இ.ருப்பை குழப்புவதே தற்போதைய இந்திய-அமெரிக்க நகர்வாகத் தெரிகிறது. பாதுகாப்புத் தொடர்பில் பேச்சுக்களை நடாத்தும் நோக்குடன் 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழு ஒன்று 14.02.2023 அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்தக் குழுவில் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜெடிடியா றோயாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே அறிவியலின் வளர்ச்சியை தமிழ் ஊடகங்கள் கருத்தில் கொள்வது அவசியமானது. அனைத்துப் போக்குகளையும் ஊடகங்களே தீர்மானிக்கின்றன. அதனைக் கருத்தில் கொண்டு நகர்த்த வேண்டிய முக்கியமான விடயத்தை அறிவியலுக்குள்ளால் தேடுவதும் அதற்கான தீர்வை முன்வைப்பதும் ஈழத்தமிழரது அரசியலுக்கு பொருத்தமானது. மீளவும் அமெரிக்க-இந்திய கூட்டு ஈழத்தமிழரது அரசியலுக்குள்ளால் தமது நலன்களை சாத்தியமாக்க முயலுகின்றன என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதனால் எந்த மாற்றமும் ஈழத்தமிழரது அரசியலில் ஏற்படக் கூடியதாக அமையப் போவதில்லை என்பது கடந்த காலப்பகுதின் அனுபவமாக உள்ளது. இத்தகைய உரையாடலட்களைக் கடந்து ஈழத்தமிழரது அரசியல் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கான களத்தை திசைதிருப்பாது பாதுகாத்துக் கொள்வதும் கட்டமைத்துக் கொள்வதுமே தற்போதைய அவசியப்பாடாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)