July 11, 2025
அரசியல் கட்டுரைகள்

அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழரின் நீதிக்கான பேராட்டங்களை பலவீனப்படுத்தாதீர்கள்?

மனித உரிமை ஆணையாளரின் வோல்கர் டர்க்ன் இலங்கைக்கான வருகை அதிக முக்கியத்துவத்தை பெற்றிருந்தது ஆரம்பத்தில் அவரது வருகையை நிராகரித்த சிவில் அமைப்புகள் தவிர்க்க முடியாமல் அத்தகைய வருகை நீதியினதும் நியாயத்தினதும் கோரிக்கையாக ஆணையாளரை அணுகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மறுபக்கத்தில் வடக்குக்கான வோல்கரின் வருகையில் அரசியல் நலன்களும் அது சார்ந்த போராட்டம் மற்றும் அணையா விளக்கு போராட்டம் பற்றிய உரையாடல்களும் இன்னொரு விடயமாக அரங்கேற்றப்பட்டிருந்தது. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் வருகை தமிழர் அரசியலில் காத்திரமான ஒரு பங்கை ஏற்படுத்துவதற்கான அடிப்படை தந்திருக்கின்றது. இக்கட்டுரையும் அத்தகைய பணியை முன் கொண்டு செல்வதற்காக வழிவகுக்க வேண்டிய உத்திகளைத் தேடுவதாக உள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் தீர்வற்ற அல்லது நீதியற்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் அமைய அதனை மூடிமறைக்கும் அரசியல் மறுபக்கத்தில் அரங்கேற்றப்படுகிறது. கல்லோயா குடியேற்றத்தில் இருந்து 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் வெளிக் கொண்டுவராது மறைக்கப்படுகிறது. செம்மணி போன்று வடக்கு கிழக்கில் இன்னும் பல இடங்களில் புதைகுழிகளில் தமிழர்களின் எலும்புக் கூடுகள் மறைக்கப்பட்டுள்ளன. அத்தகைய புதைகுழி அரசியல் பக்கத்தை உடைத்துக் கொண்டு செம்மணி புதைகுழி ஒரு ஆரம்ப வழிமுறையாக வெளிவந்திருக்கின்றது. அது முழுமையாக ஈழத்தமிழரின் நியாயத்திற்க்கான அல்லது நீதிக்கான விசாரணையாகவே பார்க்கப்பட வேண்டும். உலக வரலாறுகளில் இனப்படுகொலைக்கான நீதி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கு காலதாமதமாகவே வழங்கப்பட்டிருக்கின்றது. கொசவோ இனப்படுகொலைக்கான நீதி காலம்தாள்த்தியே வழங்கப்பட்டதென்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அத்தகைய நீதிப் பொறிமுறைகளும் உலக நாடுகளது ஒத்துழைப்புகளும் அனுசரணைங்களும் புரிந்துணர்வுகளுக்கும் உட்பட்டு சாத்தியமாகியிருக்கின்றது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆழமான பகுதிகள் விரிவாக தேடப்பட வேண்டும்.

முதலாவது செம்மணி புதைக்குழியின் நீதியை தேடுகின்ற அணையா விளக்கு போராட்டம் ஈழத்தமிழர் அரசியலில் புதிய பாதையை அடையாளப்படுத்தியிருந்தது. ஆனால் அது கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான அம்சங்கள் முடிவுறாது முயற்றுபெற்றதாக தெரிகிறது. அதனை நோக்கிய ஏற்பாட்டுக் குழுக்களும் சிவில் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் பங்காற்றுவதற்கான களத்தை மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வருகை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஈழத்தமிழர்களின் 2009க்குபின்னரான அரசியலில் சர்வதேச நிறுவனம் ஒன்றை கண்காணிப்புக்குள் செம்மணிபுதைகுழிப் போராட்டம் மேல்நிலைக்கு கொண்டுவந்திருகிறது. ஏற்பாட்டு குழுவின் அத்தகைய அரசியல் தனித்துவமான பக்கங்களாகவுள்ளது. அதனை பேணுவதும் பராமரிப்பதும் தமிழருடைய இனப்படுகொலை அரசியலை நீதிக்கான அரசியலாக மாற்றுவதில் பங்கெடுக்கக் கூடியது. உலக வரலாறு முழுவதும் இத்தகைய புதைகுழி அரசியல் ஒரு நீண்ட போராட்டங்களுக்கு பின்னரே சாதகமான பதில்களை தந்திருக்கிறது. அதனால் போராட்டங்கள் தொடரப்படுவது போல் அது ஏதோ ஒரு அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவைப்படும் ஈழதமிழருடைய அரசியலுக்கு அவசியமானது. அதனை கட்டமைக்க வேண்டிய தரப்புகள் கவனம் கொள்ளுதல் முக்கியமானதாகும்.

இரண்டாவது செம்மணி புதைக்குழி நோக்கிய மனித உரிமை ஆணையாளரின் வருகையும் அவரது அணுகுமுறைகளும் தனித்துவமானவை. வோல்கர் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு அவர் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் போது நிகழ்த்திய ஊடக சந்திப்பு என்பன முக்கியமானவை. ஆணையாளர் ஈழத்தமிழரின் இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் கோரிக்கைகளை அங்கீகரித்திருந்தார் என்பதும் அதற்கான ஒரு வடிவத்தை கட்டமைத்திருந்தார் என்பதும் தெளிவாகவே தெரிகிறது. அவ்வாறே செம்மணி புதைகுழி தொடர்பிலும் ஒட்டுமொத்தமான இனப்படுகொலை தொடர்பிலும் அங்கு உரையாடப்பட்ட விடயங்கள் ஒர் ஆழமான கரிசனையும் தெளிவும் அவரிடம் இருந்தது என்பதை அவதானிக்க உதவுகிறது. தாய்மார்கள் அன்னையர்கள் காணாமல் போனவர் ஆகிய எல்லா தரப்புகளோடும் அவரது அணுகுமுறைகள் நியாயத்தின் பக்கத்தை தந்திருந்தது. அதனை முதன்மைப்படுத்திக் கொண்டு ஈழத்தமிழர்களின் தரப்புகள் தொடர்ச்சியாக மனித உரிமை ஆணையாளரையும் ஐ.நாவின் மனித உரிமை பேரவையையும் அணுகுதலுக்கான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியமானதாகும். வெறுமனே ஒரு போராட்டமாக மட்டும் அதனை முடித்து விடாது தொடர்ச்சியான செய்முறைகளுக்கூடாக அதைக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

மூன்றாவது மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இத்தகைய பிரச்சினைக்குரிய தீர்வை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து தேடவேண்டும் என்று உரையாடியுள்ளதுடன் தென் இலங்கையின் ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளார். இதனடிப்படையிலேயே சர்வதேச நியமங்களுக்கு அமைவான உள்நாட்டுப் பொறிமுறையை சிபார்வு செய்துள்ளார். இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் உள்நாட்டு நீதி தமிழ் மக்களுக்கு எத்தகைய நியயாதிக்கத்தை கொடுத்ததென்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். ஆத்தகைய சூழலில் வோல்கர் முன்வைத்தது முற்றிலும் நியாயமற்றதாகவே தெரியும். ஆனால் இத்தகைய மனித உரிமைப் பேரவையை உதறிவிட்டு தமிழர்கள் எங்கு எப்படி நீதியைக் கோருவது. மாறாக மனித உரிமைப் பேரவைக்கூடாக உள்நாட்டுப் பொறிமுறை எதனையும் வழங்காது என்பதை நிலைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்பிடம் ஏற்பட வேண்டும். புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை சாத்தியப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயகா முதலில் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிறார். இனப்பிரச்சினை தீர்ந்தால் பொருளாதாரப் பிரச்சினை இலகுவாக தீர்க்கப்பட்டுவிடும் என்பதை தென் இலங்கை என்னுமே உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதனாலேயே செம்மணி புதைகுழி விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகள் அது சார்ந்து செயல்பட வேண்டிய சூழல் ஒன்றை மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தோடும் மனித உரிமை பேரவையோடும் உரையாட வேண்டிய தேவைப்பாடு அதற்குரிய பொறிமுறையும்; போராட்ட தளத்துக்கு அப்பால் மனித புதை குழியை அகழ்வில் ஈடுபட்டிருக்கும் தரப்பு ஆழமான கரிசனையை கொள்ளுதல் அவசியமானது. இலங்கை அரசாங்கம் இதற்கான வாய்ப்புகளை வழங்கியதற்கு அப்பால் தென்னிலங்கையின் சூழல் இதற்கான நீதியை சாத்தியப்படுத்துமா என்பதில் அதிக சந்தேகங்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அனுபவத்தில் உள்ளது. அதனால்; அகழ்வுக்கான நீதிமன்ற கட்டமைப்பும், மருத்துவர்களும், அகழ்வை மேற்கொள்ளும் ஏனைய தரப்புக்களும் ஆழமான அரசியல் புரிதலோடு நகர்த்துதல் அவசியமானது. அத்தகைய தரப்பு இரண்டு பிரிவுகளை கட்டமைத்து அதற்கு ஊடாக இலங்கை அரசாங்கத்தையும் மனித உரிமை பேரவையும் கையாளுவதற்கு முயல்வது அவசியமானது.

நான்காவது செம்மணிப் புகைகுழி அமைந்திருந்த அணையா விளக்கு போராட்டம் அதிக அதிர்ச்சியான சூழலை அரசில்வாதிகள் பொறுத்து ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய சூழல் இருதரப்புகளதும் நலன்சார்ந்ததென்று கூறிவிட்டுச் செல்ல முடியாது. உணர்வுகளும் அதனை வெளிப்படுத்துகின்ற இடமும் முக்கியமானது. இதில் உணர்வுகளை கவனத்தில் கொள்ளாத அரசியல் வாதிகளும்; ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாதவர்களும் அதில் மோதிக்கொண்ட காட்சிகள் செம்மணி புதைகுழி போராட்டத்தைப் பலவீனப்படுவதற்கான வாய்ப்புக்களைக் கொடுத்திருந்தது. அத்தகைய நிகழ்வுகள் ஈழ்தமிழர்களுடைய அரசியலில் பல்வேறு கால பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றன 1970களிலும் இதே பகுதிகள் அக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த அரசியல் சக்திகளும் இவ்வாறு அணுகப்பட்டனர். அதுக்கு பிற்பாடு எழுந்த ஆயுதப் போராட்டம் செம்மணிகள் போன்ற அதிக புதைகுழிகளை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தியது. அரசியல் தரப்புகளின் போலியான அணுகுமுறைகளும் அதற்கு எதிரான உணர்வுகளும் எதார்த்தமான அரசியலை பிரதிமை செய்கிறது என்பதை நிராகரித்து விட்டு செல்ல முடியாது. ஆனால் இத்தகைய சம்பவங்கள் நீதிக்கான வாய்ப்புக்களையும் அதற்கான போராட்டங்களையும்; பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதே முக்கியமானதாகும். எனவே அதனை விடுத்து ஈழத்தமிழர் அரசியல்; புதைகுழி சார்ந்த விடயத்தை நோக்கி குவிக்கப்பட வேண்டும். அதற்குரிய நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு அனைத்துத் தரப்புக்கும் உண்டு.

எனவே தமிழரின் அரசியல் வரலாற்றில் இவ்வகையான திருப்பங்கள் அவ்வப்போது தோன்றியதும் அது பின்னர் தொடர்ச்சியற்ன்று கைவிடப்படுவதும் வழமையானதே. அவ்வாறு அன்றி நீதிக்கான போராட்டம் தொடரப்படுவதோடு அதற்கான உரையாடல்களும் நடவடிக்கைகளும் சர்தேச அமைப்புக்களுடனும் அரசோடும் கையாளுவதற்கான செய்முறைகள் அவசியமானவை. நாளாந்த அரசியல் நலன்களையும் கட்சி அரசியல் நலன்களையும் கைவிட்டு நீண்ட தூர நோக்கில் இத்தகைய விவகாரத்தை கவனத்தில் கொள்ளுதல் தமிழ் அரசியல் பக்கங்களை சரியான திசையில் கொண்டுபோவதற்கு வழிவகுக்கும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)