இலங்கையின் அரசியல் போக்கானது இராணுவ ஆட்சிக்கான திட்டமிடலாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தந்துள்ளது. குறிப்பாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்யுமளவுக்கு வரையப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதற்கான எதிர்வினைகள் அதிகரித்த போதும் தமிழ் மக்கள் அதற்கான கவனத்தை குவித்துள்ளதாக தெரியவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்தும் செய்திகள் தொடர்ச்சியானதாகவோ தாக்கம் செலுத்துவதாகவே அமையவில்லாத நிலை காணப்படுகிறது. இது தமிழ் மக்களை மட்டுமல்ல ஏனைய இனங்களையும் பாதிக்கும் விடயமாக அமைந்திருக்கின்றது. சிங்கள சாதாரண மக்களும் அதன் அரசியல்வாதிகளும் தமிழர் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கும் போது அது தமிழருக்கானதென்றே கருதினர். ஆனால் இலங்கைத் தீவில் ஆட்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிரானதாக எந்த இனமும் எழுச்சியடையும் போது அதற்கு எதிராக அரச இயந்திரம் செயல்படும் என்பதை ஜே.வி.பி. இன் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் போதே சிங்கள அரசியல்வாதிகளும் மக்களும் கண்டுகொள்ளவில்லை என்பது மீண்டும் ஒரு தடவை அதே துயரம் அரங்கேற தயாராகிறது. இதன் நெருக்குவாரத்திற்குள் தமிழரின் தேசியம் பிரதேசவாதத்தையும், மதவாதத்தையும், சாதிவாதத்தையும் அரங்கேற்றுவதில் முனைப்புச் செலுத்திவருகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மதவாதம் அதிக எதிர்புவாதமாக மாறத் தொடங்கியுள்ளது. தமிழர் மத்தியில் அகமுரண்பாடுகளை தூண்டும் விதத்தில் மௌனமாக பிரச்சாரமும் செயல்பாடுகளும் நகர்த்தப்படுகிறது.
தேசியவாதத்தால் ஒன்றிணைந்திருந்த ஈழத்தமிழர் தமக்கிடையே அதிகம் முரண்பாடடையத் தொடங்கியுள்ளனர். 2009 வரை தேசம் தேசியம் மற்றும் தேசிய உணர்வால் பிணைக்கப்பட்டவர்கள் பிரதேசவாதத்தால் துண்டாடப்பட்டார்கள். பெரும் ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய அமைப்பே குறிப்பாக இராணுவ பலமுடைய அமைப்பே பிரதேச உணர்வால் துண்டாடப்பட்டது. அது போராட்டத்திற்கான அடிப்படையை தகர்த்தது. அத்தகைய நிலை ஒன்றுக்குள்ளேயே மீண்டும் தமிழர் தமது இருப்புச் சார்ந்தும் தேசியம் சார்ந்தும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக இந்து மதமும் இந்து மதத்திற்கு எதிராக கிறிஸ்தவ மதமும் மோதிக்கொள்ளும் செய்திகளும் பிரச்சாரங்களும் தமிழர் தேசியத்தின் போலியைக்காட்டுவதாகவே தெரிகிறது. இதுவரை காலமும் தேசியத்தால் கட்டப்பட்ட அல்லது தேசிய உணர்வால் எழுப்பப்ட்ட வடக்கு கிழக்கு தமிழர்களது அரசியல் இவ்வளவு விரைவாக மதத்திற்குள் அடங்கிப் போகிறதென்றால் அதன் தேசிய இருப்பு பலவீனமானதாகவே உள்ளதென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் தேசியம் உண்மையான அர்த்தத்தால் கட்டப்படாது போலியான நியதிகளால் கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே உணர முடிகிறது.
ஐரோப்பியரால் வடிவமைக்கப்பட்ட தேசியம் மனித நாகரீகத்தின் பிரதான வளர்ச்சிக் கட்டமாகவே உள்ளது. மனிதன் குழுவாதங்களையும் மதவாதத்தையும் முடியாட்சி முறைமைகளையும் முடிபுக்குக் கொண்டுவந்த யுகமாக தேசிய யுகம் அமைந்திருந்தது. இனம், மதம், மொழி அல்லது பிரதேசம் இவற்றில் ஏதோவொன்றின் பெயரால் அல்லது இவற்றில் பல கூட்டாவதன் பெயரால் ஒரு தேசியம் தனது குறியீட்டு அழைக்கலாம். ஜனநாயகம் என்பது தான் தேசியத்தின் சாரம்சமாகும். அதாவது 18ஆம் நூற்றாண்டிலிருந்தே தேசியம் எனும் அரசியற்பதம் உருப்பெற்றது. அதற்கு முன்பு இனக்குழுக்கள் என்றும், மதக்குழுகட்கள் என்றும் அழைக்கப்படடமை கவனிக்கத்தக்கது. இறைமை பற்றிய விடயத்தில் ஜனநாயகம் பற்றிய கருப்பொருள் தோற்றம் பெறவே தேசியம் என்பது இன, மத மக்கள் குழுக்களுக்குள் அவற்றின் எண்ணங்களைத் தோற்கடித்து பிரவேசம் செய்கிறது. இங்கு மக்களுக்கு அரசியல் தீர்மானம் எடுப்பதில் தேசியம் ஜனநாயகத்தின் பெயரால் பங்களிப்பு செய்கிறது. அதாவது மக்கள் திரட்சியே தேசியமாகும். அத்தகைய தேசிய எண்ணத்துடன் முதல் முதல் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டம் அமெரிக்க சுதந்திரப் பேராகும். 1776 இல் முதலாவது அர்த்தத்தில் மன்னராட்சிக்கு எதிரானது. இரண்டாவது நிலையில் பிரித்தானியரது அல்லது ஆங்கிலேயரது ஆதிக்கத்திற்க்கு எதிரானது. அது அமெரிக்க மக்களின் திரட்சியினால் எழுந்த பேராட்டமாகும். அது ஜனநாயக உரிமை கோரிய தேசிய விடுதலைப் போராட்டமாகும். தேசியம் என்பது இன, மத, மொழி வடிவங்களைக் கடந்து ஜனநாயகத்தின் ஊற்றாகவே விளங்கியது.
அத்தகைய திரட்சி தமிழ் மக்களுக்கு அவர்களது வாழ்விடத்தாலும் மொழியாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களது வாழ்விடமே அவர்களது மொழிக்கான அடிப்படையைத் தந்துள்ளது. வடக்கு கிழக்கில் வாழ்ந்த சைவர்களும், (தற்போது இந்துக்கள் என அழைக்க பலர் முயலுகிறார்கள்) வீரசைவர்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பின்பற்றிய மொழி தமிழ் மொழியே. தமிழர்கள் வடக்கு கிழக்கு தாயகம் என்பதனாலும் தமிழ் மொழி தாய்மொழி என்பதனாலும் தமிழ் தேசியத்தை மொழிவழித் தேசியமாக வடிவமைத்தார்கள். வடிவமைக்கும் போது இஸ்லாமியர்களும் தமிழ் தேசியத்தின் ஒரங்கமாகத் திகழ்ந்தார்கள். தற்போது அவர்கள் தமிழ் தேசிய அங்கத்திலிருந்து விலகி வேறு ஒரு வடிவத்தை தமக்குரியதாக கட்டமைத்துள்ளனர். அதற்கு தமிழர்களது அரசியல் நகர்வுகளும் இஸ்லாமியர்களது அரசியல் நடவடிக்கைகளும் காரணமாக அமையும் அளவுக்கு சிங்களப் பெரும்பான்மை அரசியலும் செல்வாக்குச் செலுத்தியதாக தெரிகிறது. அத்தகைய இஸ்லாமியர்கள் வடக்கு கிழக்கில் தமிழையும் தென் இலங்கையில் சிங்களத்தையும் மொழியாக கொண்டுள்ளனர். அரபிய மொழியும் பிரயோக மொழியாக உள்ளது.
ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு மேலாக தேசிய விடுதலைப் போராட்டத்தை நிகழ்த்திய தமிழர்கள் மிதவாத அரசியலிலும் ஆயுத அரசியலிலும் தமிழ் தேசியத்தையே நேசித்துள்ளார்கள் என்பது பொதுப் புரிதலாகும். தேசியத்தின் பெயரால் கட்சிகள், ஆயுதப் போராட்ட அமைப்புக்கள், தலைமைகள், தீர்மானங்கள் மற்றும் மக்கள் திரட்சிகள் என்பன காணப்பட்டன. அக்காலப்பகுதியில் தேசியத்தின் பெயராலேயே தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. புதைகுழிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சைவனும் கிறிஸ்தவனும் தியாகசுடரானான். அதற்காக பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். எல்லையில்லாத படுகொலைகளையும் இனவன்முறைகளையும் கலவரங்களையும் எதிர்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படையில் தமிழர் என்றொரு வடிவமே காரணமாக அமைந்தது. கிறிஸ்தவனாக சைவனாக வீரசைவனாக அடையாளப்படுத்தி கொல்லப்படவும் இல்லை. கொலையிலிருந்து தவிர்க்கப்படவும் இல்லை. தமிழன் என்றொரு அடையாளத்திற்காக படுகொலைகளையும் துயரங்களையும் எதிர்கொள்ளப்பட்டது. தற்போது தமிழ் மக்களாக கொல்லப்பட்டவர்களையும் தியாகிகளையும் நினைவு கொள்ள அரசிடமும் சர்வதேசத்திடமும் உரிமை கோருகிறது. தமிழ் இனம் கடந்த கால வெற்றிகளை மட்டுமன்றி தியாகங்களின் உச்சத்தை எண்ணி பெருமை கொள்கிறது. இதன் அர்த்தங்கள் அனைத்தும் போலியானவையாகவே தெரிகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளில் தமிழ் மக்களின் திரட்சி பெரும்வியப்பினை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தந்தது. அப்படியானால் அவை அனைத்தும் போலிகளா? தேசியத்தின் பெயரால் அவை எவையும் நிகழ்த்தப்படவில்லையா? அவை எதிலும் கிறிஸ்தவனும் சைவனும் ஒன்றாக நினைவு கொள்ளப்படவில்லையா? ஈழத்தமிழன் தமது புதிய தேசியத்தை கட்டமைக்கும் காலம் எழுந்துள்ளது. நவீன வடிவத்தில் தமிழ் தேசியம் கட்டப்பட வேண்டும். தேசியம் என்பது பழமைகளையும் புராதனங்களையும் தோட்டி எடுப்பதல்ல. முடியையும் வாழையும் வீரத்தையும் மீளமைப்பதல்ல. அறிவியலால் கட்டமைக்கப்பட வேண்டியதே புதிய தமிழ் தேசியம். குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் குறியீடாக மொழி மற்றும் மதவாதமே முன்னிறுத்தப்பட்டிருந்தது. அது சாதி,வட்டார, நிலமானிய,குழுநிலைப் பண்புகளை முறியடித்து ஒரு தேசியமாக உருப்பெறவில்லை. தனித்து மொழி,மத பெருமைவாதமாகவே உருவானது. தேசியத்திற்கு இருக்கக்கூடிய பரந்த சமூக உருவாக்கத்தை கொண்டிருக்கவில்லை. பரந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கவில்லை.வடக்கு கிழக்கு பிரதேசத்தை ஒன்றிணைக்கும் பொருளாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இரு பிரதேசத்தையும் பிணைக்கும் வீதியமைப்புக்களோ போக்குவரத்து வாய்ப்புக்களே உருவாக்கப்படவில்லை. சமூக-பொருளாதார கட்டமைப்பு பருத்தித்துறையிலிருந்து பொத்துவில் வரையும் உருவாக்கப்பட வேண்டும். இது வெறும் அரசியல் சுலோகமாக அமையாது இரு பிரதேச மக்களது வாழ்வின் உயிர்ப்பாக அமையவேண்டும். தேசிய ஒருமைப்பாடு சமூக-பொருளாதார-கலாசார-பிரதேச ஜனநாயக அம்சங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். பரஸ்பரம் இரு பிரதேசங்களது வாழ்வும் சமூக-பொருளாதார-கலாசார-ஜனநாயக அம்சங்களால் பிணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் போலித்தனமான விழுமியங்களும் பழமைவாதமும் இன மத எதிர்ப்புவாதங்களும் நிலமானியப் பண்புகளும் ஜனநாயகதன்மைற்ற சமூக இயங்குமுறைகளும் வாழ்க்கை முறைகளும் துடைத்தொழிக்கப்பட வேண்டும். தேசியம் என்பதை ஜனநாயகத் தன்மை பொருந்தியதாகவும் அது சமானியரை அரசியல் அதிகாரத்தில் சமபங்காளியாக்குவதிலும் உணர்வு கொண்டதாய் அமையவேண்டும். தமிழர் மத்தியில் நிறைய மரபுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை எவற்றிலும் தேசிய அலையை உருவாக்கும் மரபுகள் காணப்படவில்லை. தமிழர் மத்தியதர வர்க்கம் அரச உத்தியோகம் சார்ந்த வர்க்க நலன் தமிழ் தேசியத்தை முழுமையாகவோ இலட்சிய நோக்குடனோ கட்டமைக்க உதவ தவறியது. பதவி உயர்வு இடமாற்றம் போன்ற தேவையின் நிமித்தம் அரசின் அனுகூலங்கள் நிமித்தமும் தமிழ் தேசியத்தை தெளிவாக நேசிக்கத் தவறியது. அது பற்றிய எழுத்துக்களை வெளிக்கொணரத் தவறியது. மறுபக்கத்தில் அரச இயந்திரத்திற்கு சேவை புரிவதிலும் அந்நிய சக்திகளுக்கு உதவுவதிலும் கவனம் கொண்டது. அதனையே தமிழ் தேசியம் என கூறிக் கொள்வதில் கவனம் கொண்டனர். சைவம் இந்துவாக மாறியதன் தோற்றப்பாடே தமிழ் தேசியத்தின் சிதைவுக்கு வழிவகுத்துள்ளது.
எனவே தோற்றப்பாட்டுத் தேசியத்திலிருந்து நவீன தேசியத்திற்குள் நுழைய வேண்டும். வடக்கு கிழக்கை சமூக-பொருளாதார கண்ணோட்டத்திலும் ஜனநாயக மரபுக்குள்ளால் சமானியனது வாழ்வையும் அரசியல் அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தி சமபங்காளியாக்க வேண்டும். நிலமானிய மரபுகளையும், முடிமன்னர்களின் வாழ்களையும், வீரத்தையும், மதவாதத்தையும், மதவெறியையும் துடைத்தொழிக்க வேண்டும். இந்திய நலனுக்காக தொடங்கிய ஆயுதப் போராட்டத்தை இந்தியர்களே முடித்துவைத்த துயரத்தை ஈழத்தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு ஏமாற்றத்திற்கு ஈழத்தமிழர் தயாராவதாகவே தெரிகிறது. அப்போது ஆயுதத்தால் தற்போது மதத்தால் நிகழப்போவதாகவே உணரப்படுகிறது. பெரியாரது சிந்தனையால் தமிழகத்தை வெற்றி கொள்ள முடியாத மதவாதம் ஈழத்தமிழரை வெற்றி கொள்வது அவமானமாகவே தெரிகிறது.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

