2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் இலங்கைதீவின் அரசியலில் ஈழத்தமிழர் புதிய அனுபவம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக கூறுவதாயின் 2009க்கு பின்னர் மிக அதிகமான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதோடு கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் எல்லையற்றுப் பெருகியுள்ளன. இது ஜனநாயகத்தின் வடிவம் என்று விவாதித்தாலும், அத்தகைய ஜனநாயகத்திற்கு வரையறைகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஈழத்தமிழர்கள் தமது அரசியலை கட்டமைக்க முடியாத துயரத்துக்குள் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர் என்பது தவிர்க்க முடியாதது. அதற்கான அடிப்படையையும் காரணங்களையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வடக்கு-கிழக்கு ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் 28 ஆசனங்களுக்கு 2068 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மாவட்ட வாரியாக யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. அவ்வாறே வன்னித் தேர்தல் தொகுதியில் 22 அரசியல் கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களும்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளும், 27 சுயேட்சை குழுக்களும்; அம்பாறை மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும், 43 சுயேட்சை குழுக்களும்; திருகோணாமலை மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும், 14 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவ்வாறு கட்சிகளும், சுயேட்சை குழுக்களும், வேட்பாளர்களும் அதிகரித்து உள்ளமைக்கு அடிப்படையில் பல்வேறுபட்ட காரணங்களை முன்வைக்க முயன்றாலும்; ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்கள் திட்டமிடப்பட்ட வகையில் கையாளப்படுகின்றன என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது ஆகவே உள்ளது. ஆனாலும் வடக்கு-கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளும் அதற்குப் பின்னால் உள்ள பலவீனங்களும் மிகப் பிரதானமான காரணமாக தெரிகின்றத. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமானது.
முதலாவது, மிக நீண்ட காலமாக நிலைத்திருந்த தமிழரசு கட்சியும் அதனுடைய கூட்டும் பலவீனப்பட்டமை மிக முக்கியமான குறைபாடாக தெரிகின்றது. தமிழ் மக்களுடைய அரசியலை வடக்கு-கிழக்கு முழுவதும் கட்டமைத்தது மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் அதற்கான அடிப்படையை முன்னிறுத்துவதில் கணிசமான பங்களிப்பை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்திற்கும் மிதவாத அரசியலின் போராட்டங்களுக்கும் அடிப்படையாக தமிழரசு கட்சியின் போராட்ட அணுகுமுறை முக்கியம் பெற்றிருந்தது. அதனை நெருக்கடிக்கு உள்ளாக்கி தனிப்பட்ட நபர்களின் விருப்புக்களுக்கான ஒன்றாகவும் நலன்களுக்கு உட்பட்டதாகவும் மாற்றியதோடு தனி மனித சர்வாதிகாரமும் சுயநலமும் மேலோங்கி இருந்தமை கட்சியின் சிதைவுக்கும் அதன் கூட்டின் பலவீனத்துக்கும் அடிப்படையானதாக அமைந்தது. தென்னிலங்கையின் நலனுக்கு அமைய திட்டமிட்டு இத்தகைய தமிழ்த் தேசிய அரசியலை அழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டே தமிழரசுக்கட்சியை அழித்துள்ளனர். வடக்கு-கிழக்கில் ஆதிக்கம் பெற்றிருந்த தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பலமடைந்திருந்த சூழலில் காணப்பட்ட நிலைமை என்பது முற்றாகவே தகர்ந்து போய் உள்ளது. கட்சிகள் எப்போதும் மக்களின் நலனுக்குட்பட்டதும் மக்களினதும் என்பதை நிராகரித்துவிட்டு அரசியலை செயல்படுத்த முடியாது.
இரண்டாவது, வடக்கு-கிழக்கு நோக்கி தமிழ் மக்களின் ஒருங்கிணைப்பையும் ஐக்கியத்தையும் சிதைப்பதில் பிறசக்திகள் காட்டிய முனைப்பை விட, அகரீதியின் எழுந்திருக்கும் போட்டி தன்மைகளும் புரிதலற்ற செழுமையற்ற அரசியல் கலாச்சாரம் இன்றைய சிதைப்புக்கு அடிப்படை காரணங்களாக உள்ளன. ஈழத்தமிழர்களது அரசியல் கலாச்சாரம் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்புக்கு எதிரானதாக கடந்த பல தசாப்தங்கள் நகர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் 2009க்கு பின்னர் இலங்கைத் தீவின் அரசியலமைப்போடு சேர்ந்து ஒன்றினைகின்ற அல்லது அதனைப் புரிந்து கொள்கின்ற மனோநிலையை கட்டி வளர்க்கின்ற ஒன்றாக மாறியது. இவ்அரசியல் கலாச்சாரத்தை உள்வாங்குவதற்கான வாய்ப்புகளை ஈழத்தமிழர்கள் நமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ்த்தேசிய அரசியலை நிராகரித்துவிட்டு, ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் அரசியலோடு அல்லது அரசியல் அமைப்பு என்று பயணிப்பது என்பது இன அடிப்படையில், பிரதேச அடிப்படையில் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அத்தகைய ஆபத்துகளுக்கு உள்ளே ஜனநாயகம் என்ற போர்வையில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லை இல்லாத சிதைவுகளுக்கு இன்றைய சூழல் வழிவகுத்துள்ளது. இதனை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிற்பாடு ஈழத்தமிழர்கள் அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. தன்மயமான அரசியல் கலாச்சாரத்தையும், அசௌகரியமான அரசியல் கலாச்சாரத்தையும் ஒரே சூழலுக்குள் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஈழத் தமிழர்கள் அரசியலுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை மிஞ்சும் அளவுக்கு கட்டமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளை முதன்மைப்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை தனிப்பட்ட பிறப்பு, பிரதேச நலன்களை கடந்து அல்லது அறிவுபூர்வமாக எதிர்கொள்வதற்கு முனைதல் வேண்டும்.
மூன்றாவது, ஈழத் தமிழர்கள் ஜனநாயக என்ற பெறுமதிமிக்க தனித்துவமான எண்ணக்கருவை மிகப் பலவீனமான புரிதலோடு செயல் வடிவத்தில் உட்படுத்தியுள்ளனர். ஜனநாயகம் என்பது தேர்தலும் ஆட்சி மாற்றமும் பெரும்பான்மை முடிவுகளும் என்றே கருதுகின்றனர். அத்தகைய எண்ணத்துக்கு வரையறைகளும், எல்லைகளும் உலக வரலாறு முழுவதும் பின்பற்றப்பட்டுள்ளது. கிரேக்க மரபிலிருந்து ஜனநாயகம் தோற்றம் பெற்றாலும், அதன் பிரயோகம் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாடுகளில் புவிசார் தன்மைக்கும் உள்நாட்டு பிரச்சனைகளுக்கும் உள்நாட்டு அரசியல் கலாச்சாரத்துக்கு அமைவாக வடிவமைக்கப்படுகின்றது. எல்லைகள் இடப்படுகின்றது. சட்டரீதியாக அத்தகைய எல்லைகள் வரையறுக்கப்பட்டு அதன் கீழ் அரசியல் அபிவிருத்தி பொருளாதார முயற்சி சமூக சீர்திருத்தங்கள் என்பன எதிர்கொள்ளப்படுகிறது. ஜனநாயகம் இல்லை என்றால் தேசியம் இல்லை என்றும், ஜனநாயகம் இல்லை என்றால் சோஷலிசம் இல்லை என்றும் உலகத்தில் ஒவ்வொரு தேசங்களும் தமது இருப்பை நிலை நாட்டுவதற்கு ஜனநாயகத்தை உள்வாங்கிக் கொண்டனர். அத்தகைய ஜனாயகம் அறிவு சார்ந்தும் தேசிய நலன் சார்ந்தும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை தவறான புரிதலோடு ஈழத் தமிழர்களின் அரசியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளே 2024 பாராளுமன்றத் தேர்தலாகும். ஐக்கியமும், கூட்டும் தேசிய இனங்களின் பலத்தை நிலைநிறுத்துவதோடு; தேசியத்தின் இருப்புக்கு ஆரோக்கியமான வடிவத்தை கொடுக்கும் திறன் கொண்டது. உலகம் முழுவதும் தேசியங்களும் தேசங்களும் ஐக்கியத்தாலே உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கியத்தினாலே நாம் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளை வெற்றிகரமாக எதிர்கொள்கின்றனர்.
நான்காவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, 226 000 வாக்குகளை பெற்றுக்கொண்டனர். ஆனாலும் 12 இலட்சம் வாக்காளர்கள் காணப்படும் வடக்கு கிழக்கில் வெறும் 226 000 வாக்குகள் தேசியத்தின் அடையாளத்தையும், ஒருமைப்பாட்டின் வடிவத்தையும், ஐக்கியத்தையும் தோற்றுவிக்கவில்லை. மாறாக தென்னிலங்கை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அதிகமான வாக்குகளை அளித்த மனோநிலை என்பது ஈழத்தமிழர்களுடைய அரசியலில் தேசியத்தின் பக்கத்தை கோடிட்டு காட்டுகிறது. அது மட்டுமின்றி அதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு தனது இயலாமையை பாராளுமன்றத் தேர்தலில் ஒப்புக்கொண்டது. பொதுக்கட்டமைப்பு கூட்டுத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் அதன் அடிப்படை கருத்தியலான அரசியலை அல்லது வடக்கு-கிழக்கு அரசியலை எதிர்கொள்கின்ற எண்ணத்தை பாதுகாத்திருக்க வேண்டிய பொறுப்பாண்மை உண்டு. ஆனால் பொதுச்சபையில் காணப்பட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களும், கட்சி நலனுக்குட்பட்ட விசுவாசிகளும், அவர்களது அமைப்புகளும் அதனை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளாது; முடிவுக்கு கொண்டு வந்ததோடு, அதன் கட்டமைப்புகள் அனைத்தையும் காலாவதியாக்கி உள்ளனர். இது பெரும் அளவுக்கு ஈழத்தமிழர்கள் அரசியலில் எழுச்சி பெற்ற அனைத்து அமைப்புகளின் தோல்விகளுக்கும் பின்னால் இருக்கும் வலுவான காரணமாகவே கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி ஈழத்தமிழர்களும் அதன் அரசியல் தலைமைகளும் தமது நலனுக்கு ஏற்ற வகையில் பொதுக்கட்டமைப்பையும் பொதுச்சபையும் பயன்படுத்த முனைகின்ற சூழல் என்பது இவ்வாறான சிதைவுகளுக்கு அடிப்படை காரணங்களாக உள்ளது. தமது நலன் பாதிக்கப்படுகிற போது இவ்வகையான அமைப்புகளின் எழுச்சிகள் வளர்ச்சி அடையக் கூடாது என்பதில் அத்தகைய தரப்புகள், எதிராக செயல்பட்டு தோல்வி அடையச் செய்கின்றன. அத்தகைய தோல்வி ஒட்டுமொத்த இனத்தினதும் அதன் வாழ்வியலதும் தோல்வியாகும் என்பதை கட்சிகளோ கட்சிகளின் விசுவாசிகளோ அரசு சார்பற்ற அமைப்புகளோ கருதவில்லை. மாறாக தமது நலன்களும் தங்கள் விசுவாசிகளின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலக்காகக் கொண்டு இத்தகைய கட்டமைப்புகளை சிதைப்பதில் முனைப்பாக செயற்பட்டிருந்தன. ஆனால் இவ்வகையான கட்டமைப்புகள் அரசியல்ரீதியில் ஈழத்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பான்மை கொண்டுள்ளன. இதனை ஸ்தாபிக்கின்ற தரப்புகள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பொதுக் கட்டமைப்பினதும் பொதுச்சபையினதும் சிதைவு இன்றைய நெருக்கடிக்கு பிரதான காரணமாக கருத முடியும். ஏனெனில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டி வளர்ப்பதன் ஊடாக ஒரு தேசிய இனத்தின் இருப்பை பலப்படுத்த முடியும் என்ற அறிவியல்பூர்வமான எண்ணத்தோடு தொடக்கப்பட்ட ஒரு அமைப்பு, ‘அரசியலை எதிர்கொள்ள முடியாது’ என்ற எண்ணங்களால் கைவிடப்பட்டமை நூற்றுக்கணக்கான கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பாளர்களும் அரங்கில் குவிந்திருப்பதற்கு அடிப்படை காரணமாக காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையை மீட்டெடுப்பது என்பது அரசியல்ரீதியாக அதனையும் அறிவியல் ரீதியாக மேற்கொள்ள தவறுகின்ற பட்சத்தில் பலவீனங்களும் சிதைவுகளும் தவிர்க்க முடியாது.
எனவே, 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஈழத்தமிழன் அரசியல் சிதைவுகள் அங்கமாக மாறி இருக்கிறது. இது எதிர்காலத்தின் அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகவே தெரிகின்றது. இதனை தமிழர்களாக மாற்ற தவறுகின்றபோது எந்தவிதமான எதிர்பார்க்கையும், தேர்வுகளையும், அதற்கான எதிர்வாதங்களையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்புகளையும் சிதைவுகளையும் தடுக்க முடியாத துயரத்தை அனுபவிக்கின்ற நிலை தவிர்க்க முடியாத அரசியலாக அமையும். புறத்தை எதிர்கொள்ளது என்பது அகத்தின் பலத்திலேயே உள்ளது. அகத்தினை பலவினப்படுத்திக் கொண்டு, புறத்தை எதிர்கொள்வது சாத்தியமான செய்முறை என்று, அதற்காக விவாதங்களையும் அரங்கங்களையும் பிரச்சாரங்களையும் செய்வது போலித்தனமானது. அவ்வாறான போலித்தனமான அரசியல் மையத்திலேயே ஈழத்தமிழர் அரசியல் காணப்படுகின்றது.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)