தென்இலங்கையின் அரசியல் சூழல் குழப்பகரமான நிலையை நோக்கி நகர்வதாகவே தெரிகின்றது புதிய ஜனாதிபதியும் அதனால் கட்டமைக்கப்பட இருக்கின்ற புதிய அரசாங்கமும் தனது ஆட்சிக் காலத்தை முழுமைப்படுத்தாது என்ற விவாதங்கள் எதிர்த்தரப்புகளால் அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து உயர்வர்க்கத்தின் ஆட்சியும் அதிகாரமுமே தற்போது வரை நிலைத்திருக்கின்றது. அதிலும் கொழும்பை மையப்படுத்திய கருவாத்தோட்ட அரசியலில் நீண்ட இருப்பை கொண்டிருந்தது. புரட்சிகரமான அணுகுமுறைகளை கொண்ட பல முயற்சிகள் இலங்கைத் தீவின் அரசியலில் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அனைத்தும் படுகொலைகளாலும், எதிர்ப்பு வாதத்தினாலும் முடிவுக்கு வந்துள்ளது. அத்தகைய நிலை ஒன்று மீளவும் தென்னிலங்கையில் பயணிக்க திட்டமிடுகிறதா என்பதை தேடுவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.
முதன்மையான உரையாடலாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட விடயத்தை கவனத்தில் கொள்வது அவசியமானது. “அநுரகுமார திசநாயக்கவின் அரசாங்கம் மூன்று மாதங்களே பதவி வகிக்கும் என மக்கள் தெரிவித்தனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் பதவியை தொடர வேண்டும். அவரின் கட்சியிலிருந்து அரசியல் குற்றப்பிரிவினைகள் கொண்டுவரப்படுமா என்பது தெரியாது. அவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆனால் அவரின் அல்லது அவர்களின் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீட்டிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது. காரணம் அனுபவவாதிகள் பாராளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதி மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும். அவ்வகையான சூழ்நிலை காணப்படாவிட்டால், நாட்டின் வரிசை யுகம் உருவாகும். தற்போது தேங்காய் வரிசைக்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
அவ்வாறே புதிய ஜனாதிபதி அமைத்திருக்கும் அரசாங்கம் நாணயத்தாள்கள் அச்சிடுவதாகவும், அது அபாயகரமானது எனவும் தென்னிலங்கையில் இன்னொரு குற்றச்சாட்டு வலுவானதாக எழுந்துள்ளது. அதனை விட அறுகம் குடா தாக்குதல் சம்பவம் பாரிய நெருக்கடியை புதிய ஜனாதிபதிக்கு ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய அரசாங்கத்தின் உடன்படிக்கை உறுதியாக இல்லை என்ற குற்றச்சாட்டு நிகழ்த்தப்படுகின்றது. தற்போது அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுத் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சையும், தென்னிலங்கையின் தேர்தலை நோக்கிய முன்னாள் இந்நாள் ஆட்சியாளர்களின் மோதல்களாகவே தெரிகின்றது. ஆனால் இத்தகைய தெரிவுகளில் அமைய இருக்கின்ற புதிய பாராளுமன்றம் புரட்சிகரமானதாகவும், புதியவர்களை கொண்டதாகவும் கட்டமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும் அவரது கட்சியினரும் கருதுகின்றனர்.
இலங்கைத் தீவின் அரசியலில் ஆள் மாற்றமும், அடையாளங்கள் மாற்றப்படுவதும் புரட்சிகரமானது என்று கருதுவது துயரமான பதிவாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய பதிவைக் கூட உயர்வர்க்கம் மற்றும் மேட்டுக்குடி அரசியல் இடம் கொடுக்க மறுக்கின்ற துயரத்தை இலங்கையின் அரசியல் வரலாற்றில் கண்டுகொள்ள முடிகிறது. தற்போது தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் ஆள் மாற்றம் என்பது சிந்தனை அடிப்படையிலோ, கருத்தியல் நோக்கு நிலையிலையோ கட்டமைக்கப்படுவதாக தென்படவில்லை. புரட்சிகரமானது என்பது மாற்றத்தை கருத்தியலாகவும் சிந்தனையாகவும் ஏற்படுத்துவது என்பது பிரதானமானது. அல்லது அதன் அடிப்படையாக அத்தகைய அடிப்படைகளை ஏற்படுத்தாது. ஆள் மாற்றம் செய்வது என்பதும் புரட்சிகரமானது என்று திசைதிருப்புவது இலங்கை அரசியல் மரபில் நிலையானதாக உள்ளது. அத்தகைய திசைதிருப்பல்களை இலங்கைத் தீவு பல தடவை எதிர்கொண்டுள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானது.
முதலாவது, 1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க யுகம் அத்தகைய ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. சுதேச வைத்தியர்களையும், ஆசிரியர்களையும் கொண்ட ஒரு பாராளுமன்றத்தை பண்டாரநாயக்க யுகம் ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய யுகம் நீடித்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி அத்தகைய அரசாங்கம் கொண்டு வந்து நிறுத்திய சுதேச மற்றும் தனிச் சிங்கள சட்டங்கள் தென்இலங்கையிலும் வடஇலங்கையிலும் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு அழைத்து வந்தது. அதன் விளைவு இன்றைய தென்னிலங்கை அரசாங்கத்தின் புதிய வடிவம் ஆகும். அத்தகைய வடிவத்தை உருவாக்கிய பெருமை பண்டாரநாயக்க யுகத்தை யே சாரும். ஆனால் அத்தகைய பண்டாரநாயக்க யுகம், இலங்கைத் தீவின் அரசியலை இரத்தம் தோய்ந்த அரசியலுக்கான விதையாக முதன்மைப்படுத்தியிருந்தது. பண்டாரநாயக்கவின் படுகொலை அத்தகைய அரசியலை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், உயர் வர்க்க அரசியலில் தனித்துவமாகியது.
இரண்டாவது, 1940க்களில் இருந்து புதிய அணுகுமுறை ஒன்றை நகர்த்துகின்ற நோக்குடன் ரணசிங்க பிரேமதாசா இலங்கை அரசியலில் பிரவேசித்தார். அவரது பிரவேசம் அடிமட்ட சாதி அமைப்பிலிருந்து உயர்வான அரசியலை கைப்பற்றியதாக அமைந்திருந்தது. ஆனால் அத்தகைய வாழைத்தோட்ட அரசியல் நிலையான இருப்பை கொடுத்திருக்கவில்லை. உயர்வர்க்க மேட்டுக்குடி அரசியல் அதனை முடிவுக்கு கொண்டு வந்தது. அவர் மீதான படுகொலையின் தொடர்ச்சியான நிகழ்வுகள், இலங்கைத் தீவின் உயர்வர்க்க அரசியலின் வடிவத்தின் நீட்சியை தெளிவுபடுத்தி இருந்தது. ரணசிங்க பிரேமதாச உருவாக்கி கொடுத்த பாதையில், அவரது மகன் சஜித் பிரேமதாசவினாலேயே சரியாக பயணிக்க முடியவில்லை. மேட்டுக்குடி அரசியலின் போட்டி அவரது எழுச்சிக்கு தொடர்ச்சியான தடையாகவே அமைகின்றது. மேட்டுக்குடி தன் தோல்வியிலும், சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக செயற்படுகிறது.
மூன்றாவது, 1971ஆம் ஆண்டு மற்றும் 1989ஆம் ஆண்டு இரு புரட்சிகளை முன்னகர்த்திய ஜே.வி.பி என அழைக்கப்படும் ஜனதா விமுத்தி பெரமுன மற்றும் அதன் தலைவர் ரோகண விஜயவீர மீதான அடக்குமுறையும் படுகொலையும் அத்தகைய அரசியல் சூழலையே நினைவுப்படுத்தி இருந்தது. தென்இலங்கையின் சாதி அரசியலின் வடிவமாகவும், இடதுசாரிக்கு எதிரான வடிவமாகவும் அத்தகைய அரசியல் படுகொலை காணப்பட்டது. இதுவே இலங்கைத் தீவின் இடதுசாரி மீதான கரிசனையாக காணப்பட்டது. அதுமட்டுமன்றி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த இடதுசாரிகளை தோற்கடித்து, அவர்களுக்கு எதிரான அணுகுமுறைகளை உயர்வர்க்கம் பின்பற்றி ஆட்சி உரிமை அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்று அதில் வெற்றியும் கண்டது. இடதுசாரிகளை இலங்கைத் தீவு முழுமையாக அகற்றுவதில் உயர்வர்க்கத்தின் இலக்கு கடந்த காலம் முழுவதும் நிறைவு பெற்றிருந்தது. தற்போது புதிதாக எழுந்திருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அத்தகைய இடதுசாரி பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அதிக உரையாடல்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் அது அடிப்படை நியதிகள் எதனையும் இடதுசாரி நோக்கு நிலையில் கொண்டதாக இல்லை என்பது தவிர்க்க முடியாத விவாதமாக அமைகின்றது.
நான்காவது, வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்ற ஆயுதப் போராட்டம் ஆரம்பத்தில் இடதுசாரி மரபுகளை பின்பற்றியிருந்தது. காலப்போக்கில் அது முழுமையாக முதலாளி வர்க்கம் தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் அது இலங்கைத் தீவின் உயர் வர்க்கத்தின் நலன்களை முற்றிலும் தோற்கடிக்கின்ற ஒரு வடிவத்தில் இளைய தலைமுறையினரால், ஆயுத ரீதியாகவும் மாற்றத்தை நோக்கியதாகும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால் அதனை முதல் அர்த்தத்தில் முடிவுக்கு கொண்டு வருவது என்ற எண்ணம் இலங்கைத் தீவின் உயர் வர்க்கத்துடன் காணப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையின் பிரதிபலிப்பாக தென்இலங்கை மேற்கொண்ட அனைத்து உத்திகளுக்கும் பின்னால் உயர்வர்க்க அரசியல்நலன் மேலோங்கி காணப்பட்டது. அதில் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளும் உயர் வர்க்கத்தினரும் பங்கெடுத்து கொண்டனர்.
எனவே, ஒட்டுமொத்தத்தில் இலங்கைத் தீவின் அரசியலை தமக்கே உரியதென கருதும் உயர் மற்றும் மேட்டுக்குடி வர்க்கம் தற்போதைய ஆட்சியையும் அத்தகைய அணுகுமுறைகளுக்கு உள்ளால் முடிவுக்கு கொண்டு வர முயலுகின்றது. இதனையே கடந்த காலம் முழுவதும் இலங்கைத் தீவின் அரசியலாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். புரட்சிகரமான எண்ணம் என்பதும், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது ஒன்றாக அளவீடு செய்யப்படுகின்றமை ஒரு துயரமாகவும்; உயர் வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கும் அரசியல் இன்னொரு துயரமாகவும் இலங்கைத் தீவின் அரசியல் பயணம் நிகழ்கின்றது. நிலவும் வரிசை யுகம் என்ற ஒன்றை முன்னிறுத்திக் கொண்டு, இவ் அரசியல் இருப்பை சிதைப்பதற்கு உயர்வர்க்கத்தின் மனோநிலை கட்டமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போதைய தேசிய மக்கள் சக்தி கடந்த பல அனுபவங்களை முன்னிறுத்திக் கொண்டு, மாற்றம் என்பதை சிந்தனை ரீதியான அல்லது கருத்தியல் ரீதியான புரட்சியாக முன்னிறுத்துகின்ற சூழல் ஏற்படுமாக இருந்தால், இப்புதிய யுகம் நிலையான ஒரு மாற்றத்தை இலங்கைத் தீவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறன்றி ஆள் மாற்றமும், இளைஞர்களின் வருகையும் எந்தவிதப் புரட்சியையும் ஏற்படுத்தி விடாது. மாறாக மீளவும் துயரமான அரசியலுக்குள் இலங்கைத் தீவை நகர்த்துகின்ற சூழலையே தந்து விட்டு செல்லும்.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)