அரசியல் கட்டுரைகள்

இந்திய-ஈழத்தமிழர் இடையிலான உரையாடல் களம் வெளிப்படுத்தும் அரசியல்?

இலங்கை இந்திய அரசியலில் ஈழத்தமிழர் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளார் என்பது கடந்தகால வரலாறு முழுவதும் உணரக் கூடியதாக அமைந்திருந்தது. புவிசார் தன்மையால் மட்டுமல்லாது அவர்களது அரசியல், பொருளாதார, இராணுவ திறன்களாலும் அதன் மீதான அர்ப்பணிப்பாலும் அத்தகைய பலத்தைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதனை தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டு இயங்கியதாக தெரியவில்லை. ஒன்று அத்தகைய சூழலை அடிப்படையில் நிராகரிப்பை வெளிப்படுத்துவது அல்லது தாம் சார்ந்திருக்கும் சக்திகளிடம் அடிமையாது என்ற இரு மாதிரிகளையே ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பின்பற்றியிருந்தனர். அனேகமான காலப்பகுதி முழுவதும் ஈழத்தமிழர் அடிமையாக அல்லது எதிரியாக செயல்பட்டே தமது அரசியலை நிர்மூலமாக்கியவர்கள். தற்போதும் புதுடில்லியில் மீளவும் ஒரு உரையாடல்களம் திறக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழல் பற்றிய புரிதல் ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஈழத்தமிழரின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கத்தோடு வடக்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் இணைந்து சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளன. அதாவது அவுஸ்ரேலியா தமிழ் காங்கிரஸ்ன் தலைமை இளங்கோ, அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயல்குழுவின் செயலாளர் சிவராஜ், ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயல்குழுவின் செயலாளர் குப்புசுவாமி, உலக சமூகசேவை மையத்தின் அறங்காவலர் கதிரவன், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியான தவசிலிங்கம், வேலன் சுவாமிகள் ஆகியோர் புதுடில்லியிலுள்ள உரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பில் 29.11.2023 இல் புதுடில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அத்தரப்பினர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகார கட்டமைப்பு இல்லாத நிலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதியுச்ச தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. மேலும் அத்தரப்பு குறிப்பிடும் போது தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு இந்தியா பங்களிக்க வேண்டும் எனவும் மகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படாமையினால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊடக சந்திப்பில் மூன்று பிரதான விடயங்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர் ஒன்று, பெரும்பான்மை சிங்கள மக்கள் சீன சார்பு நிலையில் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு, சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் நிகழ்ந்துவருகிறது, மூன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகிறது எனவும் அத்தரப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழரது வெளியுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை புதுடில்லி நகர்வு ஏற்படுத்துமா என்ற கேள்வி சாதரண ஈழத்தமிழர் முதல் அரசியல்வாதிகள் வரை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வாய்ப்பு எவ்வாறுள்ளது என்பதை ஆழமாகத் தேடுவது அவசியமானது.

ஒன்று, ஈழத்தமிரது வெளியுறவு இந்தியா நோக்கியதாக மட்டுமல்ல உலக நாடுகளை மையப்படுத்தியதாக அமைவதற்கான சூழல் வலுவானதாக காணப்படுகிறது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களது அரசியல் நகர்வுகள் அத்தகைய போக்கினை முதன்மைப்படுத்தவும் அந்நாடுகளை இலகுவில் வெற்றி கொள்ளவும் உதவக் கூடியது. அத்தகைய முயற்சியில் ஒன்றாகவே புலம்பெயர் தமிழர்களது அமைப்புக்களும் புலத்திலுள்ள அரசியல் சிவில் மற்றும் மத பிரிவினரும் ஒன்றிணைந்து புதுடில்லி நோக்கிய அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்குமான உறவு பலமானதாக மாற்றப்பட வேண்டும். அதற்கான அடிப்படைகளை ஏற்படுத்துமாக அமைந்தால் சாதகமான விளைவை தரும். கடந்த காலங்களில் புதுடில்லி அழைத்த போதும் ஒத்துழைப்பு வழங்காத நிலை தமிழ் அரசியல் தரப்பிடம் காணப்பட்டது. அதனோடு ஒப்பிடும் போது இத்தகைய நடவடிக்கைகள் அவசியமான அரசியல் செயல்படாகவே தெரிகிறது. ஆனால் இதனால் புதுடில்லிடம் சரணடைவதோ அல்லது புதுடில்லியின் விருப்புக்கு தலையாட்டுவதாக அமைந்துவிடக்கூடாது. புதுடில்லியின் நலனும் ஈழத்தமிழரது நலனும் ஒரே புள்ளியில் மையங்கொண்டுள்ளது. அதனைக் கண்டறிந்து நகர்த்துவதே சாதகமானது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத் தீவு அவசியமானதென்பதை கருத்தில் கொள்ளும் நிலை வலுவடைந்துள்ளதனால் மட்டுமல்ல தென் இலங்கைச் சிங்களத் தலைமைகள் இந்தியாவை ஏமாற்றும் செய்முறையில் வெற்றி பெற்றுவருகின்றனர் என்பதையும் இந்தியா உணரத் தொடங்கியுள்ளது என்பது ஈழத்தமிழருக்கு சாதகமான வெளிகளாகவே தென்படுகிறது. அடுத்துள்ள பலமான விடயமாக 2024 இல் பாரதீய ஜனதாக்கட்சி எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்றத் தேர்தல் சாதகமான வாய்ப்பாகவே தென்படுகிறது. இதன் அர்த்தம் இந்திய மத்திய அரசின் போலி வார்த்தைகளுக்குள் அடங்கிப் போவதல்ல. மாறாக இந்தியா ஆளும்வர்க்கத்தின் நகர்வுகளைக் கண்டறிந்து கையாளுவது அவசியமானது.

இரண்டு, வெளியுறவு என்பது இராஜதந்திரத்தின் திரட்சியே. அத்தகைய இராஜதந்திரத்தை முன்னிறுத்தி இந்தியாவை கையாளுதல் வேண்டும். இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக செயல்படாத அதே வேளை ஈழத்தமிழரது நலன்களை விட்டுக் கொடுக்காது பயணிக்க வேண்டும். ஆனால் புதுடில்லிக்கு விஜயம் செய்த தரப்புக்களது ஊடக சந்திப்பில் அத்தகைய இராஜதந்திரம் வெளிப்பாடுகள் அமைந்ததாக தெரியவில்லை. குறிப்பாக சீனா பற்றிய உச்சரிப்புகள் இந்தியாவுக்கு தெரியாததோ புரிந்து கொள்ளப்படாதது ஒன்றல்ல. அதனை முன்னிறுத்தி ஈழத்தமிழர் அரசியல் செய்ய வேண்டியதில்லை. அவ்வாறே வடக்கு கிழக்கு தளுவிய விதத்தில் இடைக்கால நிர்வாகத்தை அத்தரப்பு கோரியிருத்தல் வேண்டும். மாறாக மாகாணசபைத் தேர்தல் நடைபெறாததால் இடைக்கால நிர்வாகம் என்று மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இடைக்கால நிர்வாகத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்த முனையவில்லை. அவ்வாறே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக புதிய உடன்பாடு ஒன்றுக்கான நகர்வைப் பற்றிய உரையாடியிருந்திருக்கலாம். 35 வருடங்களுக்கு மேலான உடன்பாடு ஒன்றினை மீளவும் நடைமுறைப்படுத்த கோருவது அதன் யதார்த்தத்தை பலவீனமாக்குவதாகவே தெரிகிறது. அது மட்டுமல்லாது காங்கிரஸ் பாரதீய ஜனதா கட்சி அரசியலை தவிர்த்துக் கொள்ளவும் மத்திய அரசின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அத்தகைய உரையாடலை தவிர்த்திருக்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் பொருளாதார இராணுவ மாற்றங்களையும் ஈழத்தமிழரது தேவையையும் முதன்மைப்படுத்தி புதிய உடன்பாட்டையும் வெளிக்கொண்டுவந்திருக்க முடியும். அல்லாவிட்டால் அத்தகைய உரையாடல் அனைத்தையும் கைவிட்டுவிட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வின் அவசியத்தை முன்வைத்து அதற்கான நடவடிக்கைகளை உரையாடியிருக்கலாம். இத்தகைய இராஜதந்திர உரையாடலை நோக்கி புதுடில்லி சந்திப்பை மேற்கொள்வதே அவசியமானது. இதில் ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு கோருவதற்கு இந்தியா பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தனித்துவமானது. அதனை புதுடில்லியில் நிகழ்ந்த ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தியதும் சிறப்பான விடயமாகத் தெரிகிறது. இது ஆரோக்கியமான தந்திரோபாய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

மூன்று, 2009களுக்கு பின்னர் இந்தியா அதீதமான பிரயத்தனங்களை ஈழத்தமிழர் அரசியலிலும் இலங்கைத் தீவு அரசியலிலும் மேற்கொண்டுள்ளது. அவை அனைத்தும் இந்தியாவுக்கு ஆரோக்கியமான விளைவைத் தரவில்லை என்றே தெரிகிறது. அதற்கு இந்தியா மட்டுமல்ல ஈழத்தமிழரும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் ஏற்பட்ட புதிய நிலைப்பாடே இந்தியாவின் அழைப்பின் பெயரில் புலம்பெயர்ந்த, புலத்திலுள்ள அரசியல் சிவில் மற்றும் மதத்தரப்புகளின் இணைவாகும். இந்தியா பலதடவை எடுத்த தனியான முடிபுகள் தற்போது புதிய வடிவத்தில் நிகழ்ந்துள்ளதாகவே தெரிகிறது. இதே நேரம் இந்தியாவுக்கு கிடைத்துள்ள நெருக்கடியும் வாய்ப்புக்களும் முக்கியமான விடயமாகும். பிராந்திய சர்வதேச தளத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் இலங்கைத் தீவை நோக்கிய சீனாவினது நகர்வு வடக்கை மையப்படுத்த ஆரம்பித்துள்ளது என்ற எச்சரிக்கை தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. இது அழைப்பிற்க்கு பின்னாலுள்ள அரசியலில் முக்கியமானதாகவே தெரிகிறது. ஏனைய காரணங்களைக் காட்டிலும் சீனா வடமாகாண அரசியலில் கொண்டுள்ள கவனம் இந்தியாவை சீண்டுவதாகவே அமைந்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்குள் புதுடில்லி தள்ளப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதனை ஈழத்தமிழர் பயன்படுத்துவார்களா அல்லது பலியிடப்படுவார்களா என்பது நகர்வின் அரசியலில் தங்கியுள்ளது.

எனவே, ஈழத்தமிழர் அரசியலின் வெளியுறவில் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. அதனை கடந்த காலங்களைப் போன்று கைவிடுவதும் முரண்படுவதுமாக அமைந்தால் மீளவும் ஈழத்தமிழர் தோல்வியை அடையும் நிலையையே சந்திக்க நேரிடும். இது ஒரு முதல் நகர்வாகக் கொண்டு தொடர்ச்சியாகவும் சரியான உபாயங்களுடனும் நகர வேண்டும். மீள மீள உரையாடலும் சந்திப்புகளும் மேற்கொள்வதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும். அதற்காக இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்க வேண்டும் என்பதல்ல. ஈழத்தமிழரது அரசியலை முன்கொண்டு செல்ல முனைவது அவசியமானது. ஈழத்தமிழரது அரசியல் உரையாடப்படாது மௌனிக்கப்படுமாயின் அழிவின் நீட்சியை அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். இந்தியாவுடன் மட்டுமல்ல உலகிலுள்ள வலுமிக்க நாடுகளுடன் உரையாடப்பட வேண்டும். ஈழத்தமிழருக்கான தீர்வை முன்னிறுத்தி அத்தகைய உரையாடல்கள் அமைய வேண்டும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)