அரசியல் கட்டுரைகள்

போலி சோஸலிஸக் கூட்டுக்களும் தென் இலங்கை ஆட்சியாளர்களின் வடிவமும்?

2025ஆம் ஆண்டுக்கான மேதின கொண்டாட்டம் ஜேவிபிஅரசாங்கத்தின் முதலாவது தொழிலாளர் தினக் கொண்டாட்டமாகக் காணப்பட்டது. ஆட்சிக்கு முன்னர் தொழிலாளர்களின் உரிமைகள்பற்றி அதிகம் முதன்மைப் படுத்திய ஜேவிபி அரசாங்கம் அதன் ஆட்சிக்குப் பின்னர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்க முயன்றுள்ளதாக தெரிகிறது என்று கூறிவிட முடியாது. குறிப்பாக ஜே.வி.பி. மேதினக் கொண்டாட்டங்களில் விசேட விருந்தினர்களாக சர்வதேச சோஸலிஸ சக்திகளை ஒன்றிணைப்பதில் கவனம் கொண்டிருந்தது. அதாவது சீனாவின் கம்யூனிஸக் கட்சியின் சார்பில் பிங் சிபூபின் (Peng Xiubin) இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஏ ஆர். சித்தூ (A.R.Sindhu) ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஜே.வி.பி.இன் கம்யூனிஸக் கொள்கைக்கான அடையாளம் மட்டுமன்றி சர்வதேசவாதத்தை சார்ந்ததென்றாகவும் அமைந்திருக்கிறது. இதனை அடுத்து 06.05.2025 அன்று இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க அரச முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு வியட்னாம் சென்றதோடு ஹோசிமின் அரங்கில் பௌத்தமதம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் கொண்டாட்டத்தை தொடக்கிவைக்கும் நிகழ்வில் உரையொன்றை ஆற்றியிருந்தார். இக் கட்டுரையும் இடதுசாரி -மார்க்சிஸ- சோஸலிஸ கருத்தினை கொண்டிருக்கிறது என்று வர்ணிக்கப்படும் ஜேவிபியரின் சர்வதேசியவாதம் சார்ந்த புரிதலை தேடுவதாக உள்ளது.

இப்பகுதி ஏன் சர்வதேசியவாதம் சார்ந்து முன்வைக்கப்படுகிறது என்பதற்கு காரணமாக ஜேவிபி இன் அணுகுமுறைகளும் மே தினத்தை சர்வதேச நிகழ்வு என்ற அடிப்படை உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தினமென்ற அடிப்படையிலும் அவர்கள் உரையாட முயலுகிறனர். சர்வதேசியவாதம் என்பது ஆழமானதும் மார்க்சிஸ புரிந்துணர்வை தருவதும் ஒத்துழைப்பை சாத்தியப்படுத்துவதும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களை கொண்டாடுவதன் ஊடாக அவர்களது உரிமையை நிலைநாட்டுகின்ற விதத்தில் அத்தகைய தினம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகத் தொழிலாளர்களும் பாட்டாளிகளும் இல்லாத ஒரு நிலையில் அந்த நிகழ்வை அரசாங்கங்களும் அரசியல் கட்சிகளும் கம்யூனிஸ கட்சிகளும் தத்தெடுத்து கொண்டாடி வருகின்றன. உலக தொழிலாளர் தினம் அரசியல் கட்சிகளின் தினமாக மாறிவிட்டது. இதனாலேயே இவ்விடயம் சார்ந்தும் இது பொறுத்தும் இலங்கையில் தங்களை இடதுசாரிகள் என்றும் சோசியலிஸ்ட்கள் என்றும் மார்க்சிஸ்டுக்கள் என்றும் மாவோயிஸ்டுகளின் வழித் தோன்றல்கள் என்றும் உரையாடும் ஜேவிபியினர் எத்தகைய வடிவத்தில் உள்ளனர் என்பதை கோடிட்டுக் காட்ட முயலுகின்றது.

மே தினத்தை கொண்டாடிய இலங்கை ஆட்சியாளர்கள் அவர்களால் அழைக்கப்பட்ட விசேட கம்யூனிஸ விருந்தினர் வரிசையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிங் தனது மேதின உரையில் போது குறிப்பிட்ட விடயங்கள் நோக்குகளுக்குரியது. இலங்கையும் சீனாவும் பேணி வருகின்ற உறவை எதிர்காலத்திலும் பலமாக்குவதே தங்களது நோக்கமாகும் என்றார். அவ்வாறு இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சித்து குறிப்பிடும் போது இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள ஜேவிபி இனர் இந்தியாவையும் கேரளாவையும் பின்பற்றுவது பெருமை கொள்கிறதாக உள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது சிறப்பான விடயமாக கருதுகின்றேன். இலங்கை மக்கள் பெருமைக்குரியவர்கள். கேரளா மட்டுமன்றி அவர்கள் இந்தியாவை பின்பற்றி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியான விடயம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஜேவிபிஇன் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா குறிப்பிடுகின்ற போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லையற்ற உறவுகள் காணப்படுகிறது. சீனா இலங்கைக்கு பாரிய உதவிகளை ஆற்றி வருகின்றது. அத்தகைய அதிக நெருக்கமான உறவின் எதிர்காலத்தில் அவர்களது நிபுணத்துவம் எங்களுக்கு (இலங்கைக்கு) அதிகம் தேவையானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  இதே நேரம் ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயகா வியட்னாமில், போரின் தீப்பிளம்புகளிலிருந்து நீங்கி அமைதி நிறைந்த உலகில் அனைத்து நாடுகளுக்கிடையேயும் மக்களிடையேயும் அமைதியையும் கௌரவத்தையும் உருவாக்க பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

மேற்குறித்த உரையாடல்கள் அரசுகளுக்கு இடையிலான உறவுகளையும் தந்திரங்களையும் கௌரவங்களையும் அடையாளப்படுத்துவதாக காணப்படுகிறது. தொழிலாளர் தினத்தில் தொழிலாளர் முன்னிலையில் ஆற்றப்படக் கூடிய உரைகளின் சாரம்சங்கள் அரசுகளுக்கு இடையிலான உறவின் சாரம்சங்களாகவே மேல் எழுகின்றது. இதுவே மார்க்சியத்தின் தோல்வி அல்லது பலவீனத்தின் நிலையாகும். இதற்கான தெளிவை பெற்றுக் கொள்வதற்கு மாக்ஸ்சியம் கூறும் சர்வதேசியவாதத்தை அவதானிப்பது பொருத்தப்பாடு உடையது.

மார்க்ஸ்சிய அர்த்தத்தில் சர்வதேசியம் என்பது மரபு வகைப்பட்ட தேசியத்துடன் பொருந்தி வராது என்கிறார் ஹொரேல் டேவிஸ். மரபு வகைபட்ட தேசியம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது இனத்தின் நலன்களை காப்பாற்றுவதிலும் முன்னேற்றுவதிலும் அடங்கி இருக்கின்றது. ஆனால் சோசிலிஸம் சார் அமைப்புகள் மற்றும் நாடுகள்; அனைத்தும் சர்வதேச அரசியலில் பங்கு கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதனால் அனைத்து போலித்தனங்களுடன் பிற நாடுகளில் உள்ள பிற்போக்கு சக்திகளையும் கட்சிகளையும் தங்களுடைய கூட்டாளிகளாக அரவணைத்துக் கொண்டு போலி மார்க்ஸ்சிய பிரிவினரை ஆதரிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதாக மாறிவிட்டது. இதற்கான எடுத்துக்காட்டு 1918 இல் துருக்கியை விளாடிமிர் லெனின் ஆதரித்ததை டேவிஸ் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. இதற்கு பல எடுத்துக் காட்டுக்கள் உலகில் மார்க்ஸ்சிஸ்டுகள் மத்தியில் நிகழ்ந்துள்ளதாக டேவிஸ் குறிப்பிடுகிறார். குறிப்பாக முன்னாள் சோவியத் தலைவர் ஸ்டாலின் ஹிட்லரோடு கொண்டிருந்த நல்லிணக்கம், சீனர்கள் பாகிஸ்த்தான் இராணுவ ஆட்சியாளர் ஜாகியாக்ஹானுடன் கொண்டிருந்த நெருக்கம் அதற்கான புரிதலை அல்லது ஆச்சரியத்தைதரக் கூடியதாகும். சமகாலத்தில் கூட சீனாவின் நட்புக்குள் இருக்கும் பாகிஸ்தானையும் பிடல்காஸ்ட்ரோவின் கியூபா இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷhவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்றதையும் குறிப்பிட முடியும். அத்தகைய வரைவுக்குள் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டுக் கொள்ள முடியும். நடைமுறையில் மார்க்சிய சர்வதேசியம் தனி மனிதர்கள் அல்லது குழுக்களின் புரிதலாக மாறிவிட்டது. சர்வதேசியத்தை ஆதரிப்பவர்களும் அதை முதன்மைப்படுத்துபவர்களும் அது சார்ந்த எழுத்துக்களை முன்வைப்பவர்களும் அத்தகைய போலி சர்வதேசியவாதத்தை முதன்மைப்படுத்துகின்றார்கள்.

மூல மார்க்ஸ்சத்தின் அர்த்தத்தில் சர்வதேசியம் என்பது தேசிய விடுதலை இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கும் போது அவை சோசலிஸ திசை வழியில் இருக்கும் போதும் அவற்றின் முழுமைபொறுத்தும் தேசிய நலன்களுக்கு பாடுபடுவது தான் உண்மையான சர்வதேசியம். சர்வதேசியம் சோசலிசப் புரட்சிக்கு உதவும் கொள்கையை கொண்டிருப்பது மட்டும் தான் அது சர்வதேசியம் என்ற பொருள் பொதிந்திருக்கின்றதற்கான அடிப்படையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது மாறுவேடத்தில் வந்துள்ள தேசியம் ஆகிவிடும் என்றும் வேறு எதற்கும் அதை பொருத்தினாலும் அது குழப்பத்தை உருவாக்கும் என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏன்கிறார் டேவிஸ் என்ற அறிஞர். அடிப்படையில் சர்வதேசிய வாதிகளாக இருக்கும் முயற்சியை மார்க்சியவாதிகள் கைவிட்டு உள்ளதாகவே தெரிகின்றது. அரச தலைவர்களாகும் மார்க்சிஸ்ட்டுகள் தங்களுடைய நாட்டின் நலன்களை முதன்மைப்படுத்து இயங்குவார்களேயானால் அதன் தன்மையை சர்வதேசியவாதமாக கொள்ள முடியாது. சர்வதேசியவாதிகள் இல்லாத போதும் மார்க்சிய கோட்பாடு சர்வதேசத்துக்குரியதாகவே இன்றும் பேணப்பட வேண்டும். சரியாக புரிந்து கொள்வோமானால் சர்வதேசியம் தான் மார்க்சியத்தின் சாராம்சமாகும் என டேவிஸ வரையறுகிறார்.

இது சாந்து 1964 இல் டியூட்சர் (Deusher) என்பவர், பாட்டாளி வர்க்கங்கள் சர்வதேசியவாதிகளாக இல்லாவிட்டாலும் சோஸலிஸ்டுகள் சர்வதேசியவாதிகளாக இருத்தல் வேண்டும் என்றார். சோஸலிஸ்டுகள் மக்களுடைய தேசியத்தை அறிந்திருக்க வேண்டும். தேசியம் பற்றி விழிப்புணர்வை சோஸலிஸ்டுகள் கொண்டு இருக்க வேண்டும். சர்வதேசியம் புதிய உலகின் உயிரோட்டமான கொள்கையாக இருக்கின்றது என அவர் விவாதித்தார். இந்த முன்மொழிவின் நோக்கம் சோஸலிஸப் புரட்சி எங்கு நிகழ்ந்தாலும் அவற்றுக்கு மார்க்சியர்களின் ஆதரவு உண்டு என்பதை கூறுவது தான். சோஸலிஸ அரசுகளும் அத்தகைய புரட்சிகளுக்கு அரசியல் ரீதியான உதவிகளை வழங்கும் நிலையும் அதன் பொருளையும் அர்த்தமற்றதாக்கி விட்டது. இதன் அடிப்படைக்குள்ளேயே உலக சோஸலிஸ சக்திகளின் தோல்வியும் முடிவும் சோஸலிஸ அரசுகளாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் யூனியனும், சீனாவும் அத்தகைய புரட்சியை வடிவமைத்தன. இத்தகைய அணுகுமுறையே ஸ்பெயின், யூகோசிலாவாக்கியா, வியட்னாம் போன்ற அனேக நாடுகில் நிகழ்ந்து முடிந்தது. ஒரு சோவித் எழுத்தாளர் குறிப்பிடும் போது இரண்டாம் உலக போருக்குப பின்னர் ஸ்டாலின் சர்வதேச சோஸலிஸப் புரட்சியில் கவனம் கொண்டதை விட பிரிட்டிஷ் பிரதமர் சேர்ச்சிலுடனும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடனும் நடத்திய பேரத்துக்கு தான் அதிகம் விசுவாசமாக செயல்பட்டார்.

ஈழத்தமிழர்கள் ஒரு நீண்ட அடக்குமுறைக்குட்பட்ட ஒடுக்கு முறையை எதிர்த்து போரிடுகின்ற ஒரு போராட்டத்தை நிகழ்த்திய தேசிய இனம் என்ற அடிப்படையில் அதன் மீதான கவனத்தை கியூபாவோ முன்னாள் சோவியத்யூனியனே தற்போதைய சீனாவோ கொண்டிருக்கவில்லை. ஈழத்தமிழர் சோஸலிஸப் புரட்சியை மேற்கொள்ளவில்லை என்பது உண்மையானாலும் ஒடுக்குமுறைக்குட்பட்ட தேசிய இனம் என்ற அடிப்படையிலும் தேசிய இனவிடுதலைக்கு போராடுகின்ற இனம் என்ற அடிப்படையிலும் அத்தகைய கவனம் ஏற்படவில்லை. மாறாக இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களின் விருப்புக்களுக்கு ஏற்ற வகையில் தமது சர்வதேச பிராந்திய நலன்களுக்கு கட்டுப்பட்ட வகையில் ஆட்சியாளர்களை அரவணைத்துக் கொண்டு தமது சித்தாந்தத்தை நிராகரித்து செயல்படுகின்ற போக்கை கண்டுகொள்ள முடிகின்றது.ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றின் தொடக்கம் சொஸலிஸ தனிநாடாகவே அமைந்திருந்தது.

இலங்கை தீவுக்கும் சீனாவுக்குமான உறவு பிராந்திய பரிமாணத்தையே கொண்டிருக்கின்றது. இந்திய கம்யூனிஸ்ட்களும் சீன கம்யூனிஸ்ட்களும் தங்களை சோசியலிஸ்ட்கள் என்று கூறுவதில் அத்தமற்றவர்களாக இருக்கிறார்கள். அதே அளவுக்கு இலங்கை தீவில் புதிய ஆட்சியாளர்களும் தம்மை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். தமே கூட்டிணைந்து ஒரு தேசிய இனத்தை அழித்தவர்கள் அல்லது அழிப்புக்கு உதவியவர்கள் எப்படி சோஸலிஸ்டுகளாக இருக்க முடியும். குறைந்த பட்சம் அத் தேசியத்தை அங்கீகரிக்க முடியாதவர்கள் எப்படி சோஸலிஸ்டுக்கள் என்றோ கம்யூனிஸ்டுக்கள் என்றோ மார்ஸ்சிஸ்டுக்கள் என்றோ குறிப்பிட முடியும். பௌத்தத்தையும் சோஸலிஸத்தையும் ஒன்றாக சுமக்கும் கட்சியாக ஜே.வி.பி மாறிவிட்டது. பௌத்தத்திலிருந்து சோஸலிஸம் நோக்கிய அரசாங்கம். இதற்குள் அகப்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே நடைமுறையில் போலித்தனங்களின் கூட்டு சோஸலிஸ்ட்டுக்களே.

எனவே மே தின பிரகடனங்களும் உரையாடல்களும் ஒடுக்கப்பட்ட தேசியங்களை சார்ந்ததென்றோ, ஒடுக்கப்பட்ட தேசியங்களின் விடுதலைக்கான எண்ணங்களை பிரதிபலிக்கின்றது என்றோ, தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தியதென்றோ, அளவீடு செய்ய முடியாது. மாறாக அரசுகளின் நலன்களுக்குள் தந்திரோபாய ரீதியாக கையாளப்படும் உறவு முறையேயாகும். உலகத் தொழிலாளர்களும் பாட்டாளிகளும் காணாமல் போன இந்த உலகத்தில் மே தினத்தின் போலித்தனம் கம்யூனிசத்தின் சோசலிசத்தின் மார்க்சியத்தின் நடைமுறை போலித்தனம் ஆட்சியாளர்களின் வடிவங்களை தோலுரித்துக் காட்டுகிறது. இதனை எல்லாம் இடதுசாரித்துவம் என்று அழைப்பது வேடிக்கையானது. போலிகளுக்கு முகம் கொடுக்க முடியாத உலகமாக முதலாளித்துவாதிகள் மட்டுமல்ல சோஸலிஸவாதிகளும் உள்ளனர்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)