நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் இருப்பை அதிகம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அது தனித்து அரசியல் கட்சிகளை பாதித்தது மட்டுமின்றி அதனூடாக தமிழ் தேசிய அரசியல் பரப்பை பாதித்துள்ளது. ஆனாலும் தமிழர்களுக்கான நீண்ட பாரம்பரியத்தை கொண்ட தமிழரசு கட்சி வடக்கில் பாரிய தோல்வியை அடைந்தாலும் கிழக்கு மாகாணத்தை ஆசனங்களை வென்றதன் மூலம் அத்தகைய தோல்வியை சரி செய்ததாக கட்சியின் மூத்த கட்சித் தலைவர்கள் உரையாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் தேசிய பட்டியலை பகிர்ந்து கொண்ட விதம் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் அதிக கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இக்கட்டுரையும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வந்த தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை உரையாடுவதாக அமைய உள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி தமிழ் மக்களின் ஆதரவை இழந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் தமிழரசு கட்சி தனி கட்சியாக போட்டியிட்டு எட்டு ஆசனங்களை பெற்றுள்ளது என ஊடகங்கள் முன் உரையாற்றி வருகின்றனர். அதன் மூலம் தமிழரசு கட்சி தோல்வி அடையவில்லை என்றும் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்து ஏனைய கட்சிகளின் வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையிலேயே அதிக ஆசனங்களைப் பெற்றதாகவும் கருத்தாட முயலுகின்றனர். இது தனித்து வெற்றிகரமான வளர்ச்சி என்றும் கட்சியின் தலைவர்கள் உரையாடுகின்றனர். இத்தகைய உரையாடலின் அர்த்தத்தையும் நியாயப் பாட்டையும் விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களின் திரட்சி சார்ந்த விடயம் தமிழ் மக்கள் இனத்தால் மொழியால் பண்பாட்டால் பொருளாதாரத்தால் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்டப்படும் நிலையே தேசியம் என்று மிகச் சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். அத்தகைய இன அடையாளங்களுக்குள் அல்லது மொழி அடையாளங்களுக்குள் அல்லது பிரதேச அடையாளங்களுக்குள் ஒன்றிணைக்கப்பட்ட திரட்சியாக அரசியல் பொருளாதாரம் சமூக இருப்பை பலப்படுத்தவும் ஒற்றுமையாக அதனை அடையவும் உதவுவதற்கே கட்சிகளும், அமைப்புகளும் இயக்கங்களும் கட்டமைக்கப்படுகின்றன. இதற்காகவே உருவாக்கப்பட்டதே தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசியக் கட்சிகளும் இயக்கங்களும். தமிழ் தேசியத்துக்கு தமிழக அரசு கட்சியும் இதர தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் தேவையே அன்றி தமிழரசு கட்சிக்கோ அல்லது இதர தமிழ் தேசியக் கட்சிகளுக்களின் இரும்புக்கோ தமிழ் தேசியம் என்பது அல்ல. ஆனால் தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவர்களும் இதர கட்சியின் உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சிக்கே தேசிய என்பது போன்றே செயல்படுகின்றனர். பாரிய தோல்விக்கு பின்னரும் அவர்களது எண்ணத்தில் தமிழ் தேசியம் தோல்வி கண்டு விட்டது என்றோ பலவீனப்பட்டு விட்டது என்றோ கருதாது தமிழரசு கட்சி தனித்து நின்று வெற்றி பெற்று விட்டது என்றே விவாதிக்கின்றனர். அவ்வாறெனில் அவர்களது எண்ணம் தோல்விக்கு பின்னரும் மாற்றம் உறவில்லை. மீளவும் தமிழரசு கட்சி என்ற மமதையுடன் அதன் ஆசனங்களின் எண்ணிக்கையை வெற்றியாகவும் பலமாகவும் கருதுகின்றனர். அவ்வாறெனில் கட்சியின் உருவாக்கம் அல்லது அது தாங்கிக் கொண்ட தமிழ் தேசியம் என்ற கொள்கை எவ்வாறு இத்தகைய மூத்த உறுப்பினர்களையும் மற்றும் இளம் தலைமுறைகளையும் கொண்டு தமிழ் தேசியம் கட்டமைக்க முடியும் என்ற கேள்வி இயல்பானது. தமிழ் தேசியத்திற்கான கட்சி என்பதை விடுத்து கட்சிக்காக தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய தளத்தில் செயல்படாத தென்னிலங்கை கட்சியை ஒன்று அதிக ஆசனங்களை அல்லது சமமான ஆசனங்களை பெற்றுக் கொண்டதை பற்றி எத்தகைய கரிசனையோ துயரமோ சுய விமர்சனமோ கொள்ளாது தனித்து நின்று எட்டு ஆசனங்களை பெற்றிருக்கிறோம் என்று உரையாடுவது அவர்களின் தேசியம் பற்றிய புரிதலை தெளிவுபடுத்துகிறது. அவர்கள் கட்சிக்காகவே கட்சியின் வளர்ச்சிக்காகவே கட்சியினுடைய இருப்புக்காகவே தமது நலனுக்காகவே தேசியத்தை உச்சரிப்பவர்களாக உள்ளனர். அத்தகைய போலித்தனம் பெரும் தோல்விக்கு காரணமாக அமைந்ததென்ற புரிதல் அவர்களிடம் இல்லை. தோல்விக்கு பின்னரும் பின்னரும் மாற்றம் வரவில்லை. அப்படியாயின் தமிழரின் அரசியலை இத்தகைய போலித் தமிழ்த் தேசியவாதிகளிடம் ஒப்படைக்க முடியுமா? இவர்களிடமிருந்து புதிய தேசிய உணர்வை கட்டி எழுப்புவது கடினமண்டே தோன்றுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு புதிய தேசியம் சார்ந்த உரையாடலும் அதற்கான கட்டமைப்புகள் அதற்குரிய தலைமைகளும் தவிர்க்க முடியாத தேவையாக எழுந்துள்ளன.
இரண்டாவது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்குகின்ற அனைத்து கட்சித் தலைவர்களும் தேர்தலின் தோல்விக்கு பின்னர் ஐக்கியம் பற்றியும் ஒருமைப்பாடு பற்றியும் உரையாடத் தொடங்கியுள்ளனர். தோல்விக்கு முன்னரே இத்தோல்வியையை அடையாளப்படுத்தியதோடு ஐக்கியத்திற்கான அவசியபாட்டை பலதளத்தில் வலியுறுத்தப்பட்ட போதும் அவை எதனையும் செவிமடுக்காது காலங்காலமாக பின்பற்றி வந்த அதே உணர்வோடு இத்தேர்தலை தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்கொண்டன. ஆனால் அதன் விளைவை அனுபவிக்கின்ற சூழல் ஏற்பட்ட பின்னரே ஒற்றுமை பற்றி உரையாடுகிறார்கள். ஆனால் அத்தகைய உரையாடலையும் அதே தலைமைகளும் அதே வடிவங்களில் இருந்து கொண்டு ஐக்கியம் பற்றி கருத்து முன்வைக்கிறார்கள். இதில் எத்தகைய மாறுபட்ட புரிதலும் இன்றி புதிய சிந்தனையுமின்றி ஒன்றிணைவதற்கான உரையாடல் தொடங்கியுள்ளது; கட்சிகளும் ஒரு சில அரசியல் இலாபங்களை முன்கொண்ட சிவில் தரப்புகளும் உரையாட ஆரம்பித்துள்ளன. இதன் விளைவுகள் ஆரோக்கியமற்றதாக தென்படுவது மட்டுமின்றி எதிர்காலத்திலும் இதே கட்டமைப்புகளும் கட்சிகளும் உறுப்பினர்களும் செயல்பட முனைவது அபத்தமான விளைவையே தரும் என்பது கடந்த கால அனுபவமாகும். இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை வலுப்படுத்த முடியாதவர்களாகவே விளங்குவார்கள், கடந்த காலம் முழுவதும் எவ்வாறு ஏமாற்றுத் தனத்தை பிரயோகித்தார்களோ அதே மனோநிலையோடு தற்போது செயல்பட முனைகிறார்கள். இத்தகைய கட்சிகளும் அமைப்புகளும் முழுமையாக கைவிடப்பட்டு புதிய தளத்திலும் புதிய கோணத்திலும் புதிய கட்டுமானங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவை ஈழத்தமிழருடைய அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதனை நோக்கி ஒரு சமூகம் அரசியலை உரையாட முயலுகின்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே ஏதும் மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியும். இத்தகைய பழைய பயன்பாட்டற்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியாத தரப்புகளை வைத்துக்கொண்டு ஈழத்தமிழரின் அரசியலை கட்டி எழுப்ப முடியாது. இத்தரப்புகள் கைவிடப்படுவதும் காலாவதி ஆக்கப்படுவதும் தவிர்க்க முடியாதது. அவ்வாறன்றி மீண்டும் மீண்டும் இத்தகைய அமைப்புகளை ஒன்று சேர்ப்பதும் ஐக்கியபடுத்துவதும் இதற்கு ஊடாக ஈழத்தமிழர் உடைய அரசியலை மாற்றத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கருதுவதும் எல்லாவற்றையும் விட மோசமான சிந்தனையாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னரும் தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் உறுப்புரிமையை அக்கட்சியினர் பயன்படுத்திக் கொள்ளுகின்ற முறையினை அவதானிக்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவுகள் ஒன்றையே சொல்ல முயலுகின்றன. இத்தகைய தரப்புக்களால் எவ்வகையான மாற்றத்தை ஈழத்தமிழர் அரசியலில் மேற்கொண்டு விடமுடியாது என்பதாகும்.
எனவே ஈழத்தமிழர் ஒரு புதிய சிந்தனைக்கு கட்டமைப்புகளுக்கும் செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. பழையவற்றை வைத்துக்கொண்டு அவற்றின் மனோநிலையை வைத்துக்கொண்டு புதிய சிந்தனையும் மாற்றங்களையும் கட்டமைக்க முடியாது. வடக்கில் அடைந்த நெருக்கடி கடந்த காலங்களில் கிழக்கில் தமிழ் தேசியம் எதிர்கொண்டிருந்தது. ஆனால் மீளவும் கிழக்கு முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. தனித்து தேர்தலையும் ஆசனங்களையும் வைத்துக்கொண்டு தேசியத்தை அளவீடு செய்கின்ற போலித்தனம் எல்லோர் மத்தியிலும் நிலவுகிறது. அதற்கு அப்பால் தமிழ் தேசியத்தின் இருப்பில் அதிகமான துயரங்களும் வலிகளும் வறுமைகளும் காணப்படுகிறது. அவற்றை சரி செய்யக்கூடிய கட்டமைப்புகளை நோக்கிய கட்சிகளை நோக்கிய இயக்கங்களை நோக்கிய தொழில்பாடு அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-