இலங்கை அரசியலில் அதிக திருப்பங்கள் நிகழ்தகவுகளாக மாறிவருகின்றன. அதனை அடையாளம் காணமுடியாது ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் அங்கலாய்த்து கருத்துக்களை புனைகின்றனர். இத்தகைய புனைவுகளே ஒரு நூற்றாண்டு காலமாக ஈழத்தமிழரது அரசியல் மீதான சிதைவுகளுக்கு வழிவகுத்ததுள்ளது. மீளவும் அத்தகைய புனைவுகளுக்கு இடங்கொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை செய்வது அவசியமானது. ஈழத்தமிழரது அரசியலில் பிரதான நிகழ்வுகள் கடந்தவாரம் பதிவாகியுள்ளது. அதன் பிரகாரம் உலகத் தமிழர் பேரவையின்(GTF) ஈழத்தமிழருக்கான அரசியல் பற்றிய உரையாடல் மற்றும் மீண்டும் நல்லிணக்க அரசியலுக்கான முனைப்புகள் பற்றிய கலந்துரையாடல்கள் என்பன நடைபெற்றுள்ளன. இக்கட்டுரையும் அத்தகைய முயற்சிகள் தொடர்பில் காணப்படும் புனைவுகளுக்கு அப்பாலுள்ள யதார்த்தத்தை தேடுவதாக அமையவுள்ளது.
உலகத் தமிழ்ர் பேரவையும் பௌத்த மதகுருமாரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாள நாட்டிலுள்ள நாகர்கோட் நகரில் நடத்திய ஆரம்பகட்ட பேச்சுவார்தைகள் பரஸ்பரம் கட்டமைப்பை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் பௌத்த மத அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடக்கிய உரையாடல் நேபாளத்தில் நடைபெற்றமையால் இமாலய பிரகடனம் என அழைக்கப்பட்டது. இப்பிரகடனம் ஆறு அம்ச அறிக்கையாக வெளியானதுடன் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தெடுக்கப்பட்ட மத அமைப்பினரையும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியிருந்தனர். இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட ஆறு அம்சக் கோரிக்கையையும் முதலில் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
1. ஏந்தவொரு சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவோ, அதன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்துவிடக் கூடியநிலை ஏற்பட்டுவிடுமோ என்றுஅஞ்சாத வகையில் நாட்டின் பன்முகத் தன்மையை பேணிக்காத்து மேம்படுத்தல்.
2. பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களினதும் மற்றயவர்களினதும் ஈடுபாட்டிற்கும் முதலீட்டிற்கும் வசதியாக அமைக்கக் கூடியதாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் உகந்த பொருளாதார வகை மாதிரியை தெரிவு செய்வதுடன் இலங்கையை உறுதியான மத்தியதர வருமானத்தை உடைய நாடாக முன்னேற்றும் பாதையில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துதல்
3. தனிப்பட்ட உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் உத்தரவாம் செய்து சகலமக்கள் மத்தியிலும் சமத்துவத்தை மேம்படுத்தக் கூடிய நிறுவனங்களின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்களை உத்தரவாதம் செய்யக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைதல் அதுவரை அதிகாரப்பரவல் தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நம்பகமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
4. ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான நாட்டுக்குள் மக்களின் மத கலாசார மற்றும் அடையாளங்களை ஏற்றுக் கொண்டு மதித்து அதிகாரங்களை பரவலாக்கி இனக்குழுக்களுக்கும் மதக்குழுக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவது பற்றி பாடுபடுதல்.
5. மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடியதும் கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்வதில் பற்றுறுதியுடன் கடந்தகால அவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தல் பொறுப்புக் கூறலக்கான பொறிமுறைகளைக் கொண்டதுமான இலங்கையை உருவாக்கும் நோக்குடன் செயல்படுதல்.
6. இரு தரப்பு மற்றும் பல்தரப்பு சர்வதேச உடன்படிக்கைகளின் கடப்பாடுகளை மதித்து சுதந்திரமானதும் உரமும் ஊக்கமும் நிறைந்த வெளியுறவக் கொள்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்த உலகில் சமாதானமும் வளமும் கொண்ட நாடுகள் மத்தியில் பெருமைக்குரிய ஓரிடத்தை இலங்கை பிடிப்பதை உறுதி செய்தல்.
விசாகா தர்மதாசாவின் அனுசரணையுடன் இப்பேச்சுவார்தை நடைபெற்றதாக தெரியவருகிறது. இந்த உரையாடலும் அறிக்கையும் மிக தரம்வாய்ந்த முயற்சியாக தோன்றுகிறது. இவ்வகை முயற்சிகள் அவசியமானவை. தென் இலங்கையுடன் ஈழத்தமிழர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவாதம் நியாயமானதாகவே உள்ளது. ஆனால் அதிகமான சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளது. அதனை விரிவாக புரிதல் வேண்டும்.
முதலாவது, ஆறு அம்ச அறிக்கை இரு இனங்களுக்குமான நம்பிக்கையையும் பொறுப்புக் கூறலையும் முதன்மைப்படுத்துகிறது. அத்தகைய எண்ணம் சரியானது. ஆனால் அதற்கான நம்பிக்கையையும் பொறுப்புக்கூறலையும் ஈழத்தமிழர்கள் தட்டிக்களித்தார்களா என்ற கேள்வி முக்கியமானது. உடன்பாடுகளை செய்துவிட்டு மீறியது எத்தரப்பு என்பதும் படுகொலைகளையும் இன அழிப்பையும் மேற்கொண்டதரப்பு எதுவென்பதும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் தென் இலங்கை ஆட்சியாளர்களே கடந்த காலம் முழுவதும் மேற்கொண்டார்கள் என்பது உலகத்திற்கும், உலக தமிழர் பேரவைக்கும் மற்றும் அஸ்கிரிய-மல்வத்த தேரர்களுக்கும் நன்கு தெரியும். ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட பொறுப்புக் கூறலைக்காட்டிலும் இதுவொன்றும் தனித்துவமானதல்ல. அதுகூட உலகளாவிய அரசுகளின் அனுசரணைகளால் மேற்கொள்ளப்பட்டது. இது அரசாங்கத்தாலோ அல்லது அரசு அங்கீகரித்த தரப்புக்களாலோ மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. அரசாங்கங்களால் செய்யப்பட்ட உடன்பாடுகளையே கிளித்தெறிந்த தென் இலங்கை இதனை எல்லாம் கருத்தாக கொள்ளுமா என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு, இது பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை பயன்படுத்தும் உத்தியோடு நகர்த்தப்படுவதாகவே தெரிகிறது. ஆறு அம்ச அறிக்கையிலும் அனேகமான பகுதி இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட அழித்தொழிக்கப்பட்ட ஈழத்தமிழரது வாழ்வும் இருப்பும் பாதுகாப்பதற்கு எந்த பகுதியும் முன்வைக்கப்படவில்லை. இரு இனத்தையும் சமமாக மதிக்கும் உரையாடலாக தெரிகிறதே அன்றி பாதிக்கப்பட்ட இனத்தின் பக்கம் செய்ய வேண்டியவற்றை அறிக்கை முன்வைக்கவில்லை. அதனால் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் மீதான போரினாலேயே இலங்கைத் தீவின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்வதாகவோ அதற்கு தீர்வு காண்பதன் மூலம் பொருளாதாரத்தை கட்டிவளர்க்கலாம் என்ற விவாதம் எதனையும் அறிக்கையிலோ உரையாலிலோ காணப்படவில்லை.
மூன்று, இக்குழுவினரது அறிக்கை மட்டுமல்ல அவர்களது சந்திப்புக்களும் உரையாடிய தரப்புக்களும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் பௌத்தமத குருமாருக்கும் சாதகமான தரப்புடனானதாகவே அமைந்திருந்தது. ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர வடக்கிலும் கிழக்கிலும் அத்தரப்பினரது சந்திப்புகள் துயரத்தையும் பாதிப்புக்களையும் எதிர்கொண்ட தரப்புக்களை தவிர்துக் கொண்டுள்ளதை கண்டு கொள்ள முடிந்தது. நீண்ட நிலைத்திருக்கும் இனமுரண்பாட்டுக்கு ஒரு தீர்வினை நோக்கி பயணிப்பதென்பது பாதிக்கப்பட்ட தரப்புக்களை சார்ந்த உரையாடலாக அமைந்திருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்புக்கள் எதனையும் இந்தக் குழுவினர் மேற்கொள்ளாதது தென் இலங்கையின் நலன்களை நிறைவு செய்யும் நகர்வென்பதை கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. குறிப்பாக வடக்கில் பிரதான அரசியல் கட்சியின் தலைமைக்காக போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினரது நிகழ்ச்சி நிரலிலேயே சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் ஜனாதிபதியின் தேர்தல் இலக்காக அமைந்துள்ளதாகவும் தெரிகிறது. தமிழ் மக்களின் வாக்குகள் இலக்காக கொள்ளப்படுகிறது என்ற தெளிவைத் தர முயலுகிறது.
நான்கு, இதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான கரிசனை புலத்திலுள்ள தமிழர்களுக்கு அருகத் தொடங்கியுள்ளது. 2009களுக்கு பின்னர் புலம்பெயர் தமிழர்களிடமே ஈழத்தமிழரது அரசியல் வலு அமைந்திருந்தது. ஈழத்தமிழரது தேசிய இனப்பிரச்சினை என்பது சர்வதேசப் பிரச்சினையாகவே பரிமாணமெடுத்திருந்தது. தேசிய இனப்பிரச்சினை என்பது அடிப்படையில் சர்வதேசப் பிரச்சினை என்ற யதார்த்தத்தை கொண்டது என்பது புலம்பெயர் தரப்பினரால் நகர்வுகளில் உணர முடிந்தது. அதற்கான வாய்ப்புக்களை போலி துவாரகா மூலமும் உலகளாவிய தமிழரின் அனுசரணையில்லாத உலகத் தமிழர் பேரவையின் போலி வாதங்களாலும் பலவீனமடைய தொடங்கியுள்ளது. இதனை தென் இலங்கை திட்டமிட்டே நகர்தியுள்ளதென்பதையும் அதற்கு ஒரு தேசிய இனத்தின் இருப்பை அத்தரப்பு பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் விளங்கிக் கொள்ள கூடியதாக உள்ளது.
எனவே, உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகள் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை என்பது அதன் போக்குகளை கொண்டு கண்டு கொள்ள முடிகிறது. எத்தகைய அடிப்படையுமின்றி தீர்வுக்கான முயற்சிகளை சாத்தியப்படுத்த முடியுமென கருதுவது பலவீனத்தின் பிரதிலிப்பது மட்டுமல்ல எதிரிக்கு சேவையாற்றுவதாகவே அமையும். ஈழத்தமிழரது அரசியலில் புலம்பெயர் தமிழரது பலம் காணாமல் போகும் நிலையை எட்டியுள்ளது. இது தென் இலங்கை அரசியலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)