அரசியல் கட்டுரைகள்

இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியை முன்மொழிந்துள்ளதா?

இலங்கைத்தீவின் அரசியலில் மீண்டும் ஒரு தடவை இனப்பிரச்சினைக்கான தீர்வும் சமஷ்டியும் உரையாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தைப் போன்று உரையாடல் மட்டும் தானா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால் தற்போது எழுந்துள்ள சூழல் இந்தியாவின் அதிக கவனத்துடன் நர்வதாகவும் இந்தியாவிடம் முழுமையாக தென்இலங்கை ஒத்துழைக்க தயாராகி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதற்காக சீனாவை தென் இலங்கை புறந்தள்ளிவிட்டதாகவோ முழுமையாக இந்தியாவிடம் தென் இலங்கை சரணடைவதாகவோ கருத முடியாது என்பதில் இக்கட்டுரையாளர் தெளிவாகவுள்ளார். நெருக்கடிவரும் போதெல்லாம் தென் இலங்கை ஆட்சியாளர்கள் அவ்வாறான தந்திரோபாய நகர்வுகளை செய்வதில் சிறந்த விற்பன்னர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தெளிவான அரசியல் செய்பவர்களாகவே உள்ளனர். இக்கட்டுரையும் இந்திய புலனாய்வுத் துறையின் தலைமைச் செயலாளர் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட உரையாடலின் போது வலியுறுத்திய விடயங்களையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு உட்பட 1987ஆம் ஆண்டு முதல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுமாறு இந்தியப் புலனாய்வு தலைவர் சமந்குமார் கோயால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை சந்தித்த போது தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறாயின் ஏறக்குறைய சமஷ்டிக்கான கட்டமைப்பினை இந்தியா முன்மொழிவதாக புரிந்து கொள்ளப்பட முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி என்பதில் தமிழ் தலைமைகளுக்கு வேறுபாடு இல்லை என்றே தெரிகிறது. இத்தகைய சூழல் என்பது நிர்ப்பந்தமாக தென் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அதனை பிரயோகப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் அவசியமானதாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி தமிழ் தலைமைகள் சமஷ்டி பற்றிய வாதங்களை முன்வைக்க முன்னர் சிங்களத் தலைவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 1926 ஆண்டு முதல் சமஷ்டிபற்றிய உரையாடல்கள் நிகழ்ந்து வருகிறது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டரநாயக்கா சமஷ்டியை முன்மொழிந்த போது தமிழ் தலைவர்கள் இலங்கைத் தேசியத்துக்குள்ளும் இலங்கைத் தீவிற்கு தலைமை தாங்கும் நிலையையும் கொண்டிருந்தார்கள். அதனால் தவிர்க்க முடியாது சமஷ்டி பற்றிய உரையாடல்களை தவிர்த்திருந்தார்கள். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி என்ற அடிப்படையில் சமஷ்டிக்குரிய தீர்வை முன்வைத்தார். அத்தகைய உரையாடல் சமகாலம் வரை முதன்மையானதாகவும் தீர்வாகவும் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சமஷ்டியே இனமுரண்பாடுகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. அதனை பிரதான அணுகுமுறையாக உலகம் பின்பற்றிவருகிறது.

தற்போது எழுந்துள்ள பிரதான விடயம் இலங்கைத் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா சமஷ்டியை முன்மொழிய வந்துள்ளமையாகும். தமிழ் ஆய்வாளர்களிடமும் புலமை உரையாடல்களை மேற்கொள்ளும் தரப்பிடமும் இந்தியா 13 க்கு அப்பால் போகாது எனவும் அவ்வாறு செயல்பட்டாலும் இந்திய அரைகுறைச்சமஷ்டிக்கு அப்பால் செயல்படாது எனவும் மாயைத் தோற்றத்தை கட்டமைத்துள்ளனர். அதனை ஊடகங்களும் பிரச்சாரப்படுத்திவருகின்றனர். தமிழர்களாகவும் சிங்கள பெரும்பான்மை புத்திஜீவிகளாகவும் அரசியல் இலாபத்தை நோக்கி நகர்வதற்கு அதிக பிரயத்தனம் செய்து அத்தகைய பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள். இது பெரும் அபத்தமான அரசியலாக மாறியுள்ளது. சமஷ்டியை இந்தியா முன்மொழிந்தாலும் அதனை இத்தகைய தரப்புக்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதே இதன் முடிபாகும். நம்பிக்கையூட்டும் தளத்தில் அத்தகைய முயற்சியை வெற்றி கொள்ள திட்டமிடாது போலியாக இயங்கிக் கொண்டு செயல்படுவது எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதனை வெறும் உரையாடலாக்குவது பலவீன்படுத்துவது போன்ற செயல்களை செய்வதில் அதிகமான ஈடுபாடு தழிழ் தரப்பிடமும் பெரும்பான்மைத் தரப்பிடமும் உண்டு. எனவே அதனை நோக்கி பயணிக்க முயலுவதே முதன்நிலைத் தயாரிப்பாகும். அதற்கு தமிழ் தரப்பினை தயார்ப்படுத்துவது அவசியமானது.

அவ்வாறு இந்தியா தனது அரைகுறைச் சமஷ்டியை திணிக்கும் என்ற விவாதமும் 13 க்கு அப்பால் செயல்படாது என்ற விவாதமும் 1971 ஆம் ஆண்டு வங்களாதேஷ் பிரிவினையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய நகர்வாகவே தெரிகிறது. எப்போதும் சந்தர்ப்பமும் சூழலும் யதார்த்தமும் இவ்வகையான தீர்வுகளை வடிவமைப்பதனைக் காணமுடிகிறது. இங்கு இந்தியாவின் நலன் முதன்மையானதாகவே காணப்படுமே அன்றி ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அத்தகைய முக்கியத்துவத்திலேயே வங்சகளாதேஷ் எனும் அரசு உருவானது. அதன் பின்னர் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியா பிரிவினையை செய்ததற்காக இந்தியாவின் அடிடையாகவோ கட்டுப்பாட்டுக்குள்ளேயோ வங்களாதேஷ் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. ஆனால் இலங்கைத் தீவின் அரசியல் போக்குக்குள் ஏற்பட்டுள்ள மாற்றம் சமஷ்டிக்கான தீர்வை நோக்கியதாக அமைந்துள்ளது என்பது தற்போதைய அரசியல் யதார்த்தம் என்பதை புரிந்து கொள்ளப்பட வேண்டும் .இத்தகைய யதார்த்தம் எதிர்காலத்தில் வேறு வடிவத்தை நோக்கி நகரலாம். அது பிராந்திய மட்டத்தில் எழுந்துள்ள அரசியல் சூழலைச் சார்ந்தது. தற்போது எழுந்துள்ள சீன இலங்கை அரசியல் உறவானது இராணுவரீமதியில் முக்கியம் பெற்றதாக உணரப்படுகிறது. அதனால் எழுந்துள்ள அரசியல் சூழலே தற்போதைய சமஷ்டி பற்றிய இந்தியாவின் உரையாடலுக்கு அடிப்படைக்காரணியாகும். இத்தகைய சூழல் தீவிரமடையலாம் அல்லது தணிந்து போகலாம். உலக ஒழுங்குக்குள்ளேயே தமிழ் மக்களது அரசியல் தீர்வு அடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது. இந்தியாவின் நலன் பாதிக்கப்படும் போது இந்தியாவின் நகர்வு தீவிரமானாகவும் அமையலாம். அதனை பயன்படுத்திக் கொள்வதே அவசியமானது.

தமிழர் அரசியல் சமூகமாக எதிர்கொள்ள வேண்டிய தேவை அவசியமானது. அவ்வாறல்லாது கைவிடுவோமாயின் அல்லது முழுமையாக நிராகரிப்போமாயின் அமையப்போகும் முடிவிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் தென் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி அத்தகைய சூழலை கட்டமைத்தில் அதிக பங்கு வகித்துள்ளது. பிராந்திய அரசியலும், சர்வதேச அரசியலும், ஈழத்தமிழரது அரசியல் சமூக இருப்பும் அத்தகைய சூழலையே மேலும் தனித்துவமாக்கியுள்ளது. அதிலிருந்து இலங்கைத் தீவின் அரசியல் மட்டுமல்ல தமிழ் மக்களது அரசியலும் மீட்கப்படவேண்டும் அல்லது பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு தென் இலங்கை தயாராகிவிட்டது. வடக்கு கிழக்காக தமிழர்கள் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. எப்போதும் வரலாறு தரும் வாய்ப்புக்களை தமிழ் அரசியல் சமூகமாக எதிர்கொள்ளாத போக்கொன்று தமிழர்களிடம் உண்டு. தமிழர்கள் தம்மை ஒர் அரசியல் சமூகமாக தயார்ப்படுத்திக் கொண்டு புலம்பெயர்ந்த அமைப்புகளையும் பிராந்திய சக்தியையும் (இந்தியா) சர்வதேச சக்திகளையும் (குவாட் நாடுகள்) உலகளாவிய நிறுவனங்களையும் (ஐ.நா.சபை) ஒன்றிணைத்துக் கொள்வதன் மூலம் தீர்வின் உத்தரவாதத்தையும் வலிமையையும் பலப்படுத்த முடியும். அதற்கான அரசியல் அங்கீகாரத்தை அதிகரிக்க வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் சமூகத்திற்குரியதாகும். கடந்த காலத்தில் தமிழ் அரசியல் சமூகம் பல உடன்பாடுகளையும் பேச்சுவார்த்தைகளையும் எதிர்கொண்டது. அதன் அனுபவத்திலிருந்து தீர்வுக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளும், தீர்வு உடன்பாடுகளும் இராஜதந்திர செய்முறையாகவே உள்ளன. அதனை இராஜதந்திர செய்முறைக்குள்ளாலேயே எதிர்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய வழிமுறையே தமிழரின் அரசியல் இருப்பினை சாதகமானதாக மாற்றும். அல்லாதுவிடின் மீளவும் ஒரு தோல்வியும் துயரமும் சுயநிர்ணயத்திற்கு உட்படாத தீர்வும் எதிர்கொள்ள வேண்டியதாக அமையவாய்பு ஏற்படும்.

எனவே இந்தியா சமஷ்டிக்கான நகர்வுகளை முன்மொழிந்துள்ளதை தென் இலங்கை கையாள ஆரம்பித்துள்ளது என்பதை அதன் நகர்வுகளில் கண்டு கொள்ளக் கூடியதாக அமைகிறது. அதனால் தமிழ் தரப்பு ஓர் அரசியல் சமூகமாக இணைந்து கொண்டு செயல்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. அதுவே ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும். இத்தகைய வாய்ப்புக்களை தமிழ் அரசியல் சமூகமாக பயன்படுத்துவது அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)