அரசியல் கட்டுரைகள்

ஜேர்மனின் ஊடகத்துடனான ரணில்விக்கிரமசிங்ஹாவின் உரையாடல் அவரை தீவிர தேசியவாதியாக்கியுள்ளதா?

இலங்கை அரசியல் சுவாரசியமான திருப்பங்களை நோக்கி நகர்கிறது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல உலகமும் அதனை இரசித்துக் கொண்டு பயணிக்கிறது. உலகத்தின் போட்டியாளர்கள் தமக்குள் மோதிக் கொள்ளும் சந்தர்பங்களிலும் தமது நலனுக்கு ஆதரவான சக்தியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைத்து வல்லரசுகளும் செயல்படுகின்றனர். சீனா ராஜபக்ஷ அணியினருக்கும் அமெரிக்கா ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கும் ஆதரவு வழங்கும் போக்கினை போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இந்தியாவையும் தனது ஆட்டத்தில் சேர்த்துள்ளார். ஆனால் தென் இலங்கை ஆட்சியாளர்கள் அவ்வப்போது நாடுகளுடனான நட்புறவை மாற்றிக் கொண்டாலும் இறுதி இலக்கில் தென் இலங்கையின் நலனை அடையும் விதத்தில் செயல்படுகின்றது. அதற்கான ஒரு களத்தையே ரணில்விக்கிரமசிங்ஹா அண்மையில் ஊடகமென்றின் முன்னிலையில் வெளிப்படுத்தியிருந்தார். இக்கட்டுரையும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா ஜேர்மனிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்தின் அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா ஜேர்மன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்வது அவசியமானது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கைக்கு சர்வதேச விசாரணை இருக்காது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் அண்மைய அறிக்கையை நிராகரித்துள்ளதாகவும் மனித உரிமைப் பேரவை தவறானது என்றும் தெரிவித்தார். அவர் மேலும் அவ்வூடகத்திற்கு தெரிவிக்கையில் ஒரு சிலர் சர்வதேச விசாரணை அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால் அத்தகைய விசாரணையை பாராளுமன்றம் கோரவில்லை இலங்கை தனது சொந்த நபர்களை பயன்படுத்தி விசாரணையை நடாத்துகிறது. தேசம் தொடர்பாக எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கைக்கு சர்வதேச விசாரணை இருக்காது. ஐரோப்பிய நாடுகள் அத்தகைய விசாரணைகளை எதிர் கொண்டுள்ளனவா? குறிப்பாக ஜேர்மன், பிரிட்டன் போன்ற நாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படனவா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிய நாடுகள் இரண்டாம் தர நாடுகள் என்றே மேற்கு நாடுகள் அதன் ஊடகங்களும் கருதுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் உரையாடல் பகுதியை நோக்கும் போது கடந்த மே 2023இல் HARD Talk என BBC ஆல் நடாத்தப்படும் உரையாடலில் தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சியில் தென்னாபிரிக்க தேசியக் காங்கிரஸ்ன் (ANC) பொது செயலாளர் Fikile Mbalula குறிப்பிட்டதைப் போல் உள்ளது. அதாவது அவர் அவ்வுரையாடலில் தென் ஆபிரிக்கா ரஷ்சியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தென்னாபிரிக்காவுக்கு வருகைதரும் போது ரஷ்சிய ஜனாதிபதி புட்டினை போர் குற்றத்திற்காக கைது செய்ய முடியாது என்றும் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மேற்கொண்டு இன அழிப்புகளுக்கெல்லாம் எந்த கைதும் நிகழவில்லை எனவும் புட்டின் அரச தலைவர் என்றும் அதனால் அவரை கைதுசெய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார். பிரித்தானியா பல மில்லியன் மக்கள் மீது போர்குற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதற்கொல்லாம் எந்த கைதும் நிகழ்த்தப்படவில்லையே என்று ஏ.என்.சி.இன் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பினார்.

இருவரது உரையாடலும் மேற்கு விரோதப் போக்கினையே அம்பலப்படுத்துகிறது. இதில் ரணில்விக்கிரமசிங்ஹாவின் உரையாடலே அதிக குழப்பத்தை தந்துள்ளுது. மேற்குலகத்தின் நட்பராகவும் தராளவாதியாகவும் விளங்கும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா திடீரென மேற்குக்கும் அதன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஏன் உணர்ச்சிவசப்பட்டு தனது வெளிப்பாட்டை முதன்மைப்படுத்தினார் என்பது பிரதான கேள்வியாகும். அதிலும் மேற்கு இயல்பிலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மேற்குலகத்தின் பொருளாதார உதவிகளாலும் இராஜதந்திர நிழலுக்குள்ளால் பயணிக்கும் ரணில்விக்கிரமசிங்ஹா எப்படி மேற்குலகத்தை விமர்சிக்கும் தகவலை வெளிப்படுத்துவார்?. இதனை தெளிவாக விளங்கிக் கொள்வதன் மூலமே அதனைக் கண்டு கொள்ள முடியும்.

முதலாவது, மேற்குலகத்தை விமர்சிக்கும் போது அமெரிக்காவை நேரடியாக கண்டிக்கவில்லை என்பதை அந்த நேர்காணலில் கண்டு கொள்ள முடியும். குறிப்பாக பிரித்தானியாவையும் ஜேர்மனியையுமே நாடுகள் என்ற வரிசையில் விமர்சித்திருந்தார். ஆனால் உலகத்தின் அதிகமான அழிவுகளுக்கும் போர்க் குற்றங்களுக்கும் அமெரிக்காவே காரணமாகும். அதனை வெளிப்படுத்தாது ஜனாதிபதி ரணில் அந்த நேர்காணலை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது நட்புச்சக்தியான அமெரிக்காவை குற்றம்சாட்டாது பாதுகாத்துள்ளதாகவே தெரிகிறது. மேற்குலகம் என்ற உரையாடல் முழுமையான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை அடையாளப்படுத்தினாலும் தெளிவாக ஜேர்மனியையும் பிரித்தானியாவையுமே ஜனாதிபதி விழித்திருந்தார்.

இரண்டு, மேற்குலக ஊடகங்களையே அதிகம் சாடியுள்ளதாக ஜனாதிபதியின் கருத்து அமைந்திருந்தது. மேற்குலக ஊடகங்கள் கீழைத்தேச நாடுகளின் மக்களை இரண்டாம்தர பிரஜைகளாகவே கருதுகின்றன என தெரிவித்திருந்தார். அதே நேரம் இலங்கையிலுள்ள ஏனைய தேசியங்களை அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே தென் இலங்கை கருதுகிறது என்பதை ஜனாதிபதி கருத்தில் கொள்ளவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அதற்கூடாகவே போர்க்குற்றமும் சர்வதேச விசாரணையும் முதன்மைப்படுத்தப்படுகின்றது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ளாதவராக உள்ளாரா என்பது பிரதான விடயமாகும். மேற்கின் இரண்டாம்தரப் பிரஜைகளாக இருப்பதை ஏற்றுக் கொள்ள தயங்கும் ஜனாதிபதி இலங்கைத் தீவுக்குள் ஈழத்தமிழரது நிலையை புரிந்து கொள்ள மறுக்கிறார்.

மூன்று, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இலங்கையில் நிகழ்ந்த எத்தகைய குற்றச் செயலுக்கும் சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் அழுத்த முயன்றவிடயம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணையும் இல்லை என்பதாகும். அதன் மூலம் தென் இலங்கையின் வாக்குகளையும் தென் இலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான நகர்வாகவே தெரிகிறது. இது தென் இலங்கையில் ஜனாதிபதி ஒரு தேசியவாதியாக அடையாளப்படுத்த வழிவகுத்துள்ளதாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் சர்வதேச விசாரணை தொடர்பில் வெளிப்படுத்திய தகவலை வரவேற்றுள்ளார். தனது நிலைப்பாடும் அதுவென அறிவித்துள்ளார். இது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுன கட்சி முன்வைக்க வழிவகுத்துள்ளது. தற்போது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மொட்டுக்கட்சியின் தலைமைகளையும் ராஜபக்ஷ குடும்பத்தையும் பாதுகாக்க வேண்ய நிலையிலுள்ளார். அதனையே சனல்-4 நகர்த்தியுள்ளது. அதாவது ராஜபக்ஷக்கள் பாதுகாக்கும் நிலையில் ரணிலும், ரணிலின் ஜனாதிபதி பதவியை மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் நிலையில் ராஜபக்ஷக்களும் உள்ளனர். இத்தகைய பரஸ்பரம் நலனுடன் ஒத்தியங்கும் அரசியலை தென் இலங்கை கொண்டுள்ளது. அதன் ஓரங்கமாகவே ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் ஜேர்மன் ஊடகத்திற்கான நேர்காணலை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஊடகத்திற்கு முன்னோ அல்லது அரசியல் தலைவர்களுக்கு முன்னோ உணர்ச்சிவசப்படாத தலைவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா என்பது உலகமறிந்த விடயம். அப்படியானவர் தற்போது உணர்ச்சிவசப்பட்டு பதில் அளிப்பதற்கு மாறாக கேள்வி எழுப்பும் நிலையில் மாறியுள்ளமை அதிகமான அரசியல் இலாபத்திற்கான உரையாடலாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவினது வீடு தீயிடப்பட்ட போது கூட நிதானம் இழக்காது செயல்பட்டவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

நான்கு, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் அரசியலை அதிகம் எதிர்க்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸா உயிர்த்தஞாயிறுத் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணையை கோரியுள்ளார் என்பதை முறியடிக்க வேண்டும் என்பது பிரதான நோக்கமாகவுள்ளது. அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய போட்டியாளராக சஜித் விளங்குவார் என்பது கணிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவரால் முன்வைக்கப்படும் அனைத்தையும் எதிர்ப்பதுடன் தனது வாக்கு வங்கியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே நகர்வுக்கு அடிப்படையாகும். அது மட்டுமன்றி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலேயே இத்தகைய நகர்வுகள் அரங்கேறிவருகிறது. அதனையே பேராயர் மல்கம் ரஞ்சித்தும் சர்வதேச விசாரணை தேவையற்றது என்கிறார்.

ஐந்து, சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையில் ஆரம்பித்தால் அதன் விளைவு எவ்வாறானதாக அமையும் என்பதில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா கவனமாக உள்ளார். ஈழத்தமிழர்கள் அதனால் பயனடையவும் அவர்கள் மீதான கவனமும் உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் என்பதை மறைக்கவே ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா முயலுகின்றார். ஆனால் உலகளாவிய ரீதியில் பல தசாப்தங்கள் பின்னரும் சர்வதேச விசாரணைகள் நாடுகள் மீதும் ஆட்சியாளர் மீதும் நடைபெற்றுள்ளது என்பதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய அரசியலும் பிராந்திய அரசியலும் மாற்றத்திற்கு உள்ளாகும் போது ஈழத்தமிழர் எதிர்பார்த்த மாற்றங்கள் சாத்தியமாகும். ஆனால் அதுவரை ஈழத்தமிழரது இருப்பும் அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் ஜேர்மனிய ஊடகத்திற்கான நேர்காணல் தென் இலங்கையில் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளவும் தென் இலங்கையின் தேசியவாதத்தை தமக்கு சாதமாக்கிக் கொள்வதுமே பிரதான நோக்கமாகத் தெரிகிறது. இது அடுத்த ஜனாதிபதி தேர்தலை நோக்கிய நகர்வாகவே அமைந்துள்ளது. அதனை மேற்குலகமும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. காரணம் மேற்குக்கு நெருக்கமான நட்புச்சக்தியாக தற்போது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவே உள்ளார் என்பதும் அதனால் இத்தகைய வாய்ப்புக்களை பயன்படுத்தியாவது ரணில்விக்கிரமசிங்ஹாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதில் மேற்கு கவனமாக உள்ளது. ஆனால் இவற்றுக்கு அப்பால் செயல்படும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இந்தியாவையும், சீனாவையும் தனது பக்கம் வைத்துக் கொள்வதிலும் நேர்காணலை கவனமாக கையாண்டுள்ளமை தெரிகிறது. இது ரணில்விக்கிரமசிங்ஹாவை தென் இலங்கையில் ஒரு தேசியவாதியாக்குவதில் பங்காற்றியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)