இலங்கைத் தீவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் உலக நாடுகளது களமுனை நடவடிக்கைகள் தீவிரம் அடைய தொடங்கியுள்ளன. குறிப்பாக வேட்பாளர்களை நோக்கிய பேச்சுவார்த்தைகள் அவர்களை தமது நாடுகளுக்கு அழைத்து உரையாடுவது மட்டுமல்லாது வேறு நாடுகளுக்கு அழைத்து தூதுவர்கள் மூலம் அவர்களுடன் உரையாடுவதென பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. அவை ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகள் நிகழ்வதாகவும் 2024 இல் ஜனாதிபதி தேர்தல் என்ற விவாதமும் பாராளுமன்றத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போன்று ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஐந்து வருடமா? ஆறு வருடமா? ஏன்ற கேள்வியும் நீதிமன்றம் வரை நகர்த்தப்பட்டுள்ளது. இவ்வகைச் சூழலுக்குள்ளேயே ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ஏற்படக் கூடிய செலவீனங்களை கருத்தில் கொண்டு அதனை பிற்போட வெண்டும் என்றும் இன்னோர் சாரார் விவாதித்துவருகின்றனர். ஒட்டுமொத்தமாக அவதானித்தால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகள் அதிகமாக உள்ளன. அப்படியாயின் இலங்கைத் தீவில் சர்வதேச சக்திகளின் நலனுக்குட்பட்ட ஜனாதிபதியின் வெற்றி என்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை என்பதே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான அடிப்படையானதாக தெரிகிறது. இக்கட்டுரையும் அத்தகைய நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.
தென் இலங்கையில் 2024-ஜனாதிபதி தேர்தல் நான்குமுனைப் போட்டியாகவே தெரிகிறது. ஏற்கனவே மும்முனைப் போட்டியாகக் கணிப்பிடப்பட்டமை தற்போது நான்கு வேட்பாளர் களமிறக்கப்படும் நிலை காணப்படுகிறது. ஆனால் அதனை விடவும் அதிகரிக்கலாம் என்ற விவாதம் உண்டு. புதிதாக ஏற்கனவே பரீட்சமான முன்னாள் இராணுவத் தளபதி அறகளைய போராட்டத்தின் சார்பில் இறக்கப்படுவதற்கான களச்சூழல் காணப்படுகிறது. எதுவாயினும் நான்கு வேட்பாளருக்கிடையில் பலமான போட்டி நிலவ வாய்ப்புள்ளது. அதனால் வெற்றிவாய்ப்பு குழப்பத்திற்குள் காணப்படுகிறது. இலங்கைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை ஒரு வேட்பாளர் பெறும் சந்தர்ப்பத்திலேயே அவர் ஜனாதிபதியாகலாம். அதற்கான வாய்ப்பு மிக குறைவானது. காரணம் நான்கு வேட்பாளர்களுக்கும் இடையே நிலவும் போட்டியானது அத்தகைய சூழலை ஏற்படுத்தும். கடந்த காலங்களைப் போல் வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டமும் இல்லை. ஜே.வி.பி. இன் ஆயுத அமைப்புமில்லை. இதனால் வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. அதனால் இரண்டாவது விருப்பத் தெரிவிலேயே 2024 ஆண்டுக்கான ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு அதிகம் தங்கியுள்ளது. அதில் இலங்கைத் தீவிலுள்ள மக்களுக்கு இரண்டாவது விருப்பத் தெரிவுக்கான அனுபவம் மிகக் குறைவானது. ஆதனால் சதாரண பெரும்பான்மைக்கான தெரிவே அதிகம் சாத்தியமானது. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறும் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாகும் வாய்ப்பே உண்டு. அதனை நோக்க்pயே தமிழரது வாக்குகளை சேகரிக்க சர்வதேச சக்திகள் முனைகின்றன. அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நோக்கிய நகர்வுகளும் ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் வாரங்களில் இந்தியத் தரப்பும் அமெரிக்கத் தரப்பும் தமிழ் தேசியக் கட்சிகளுடனான சந்திப்புகளை திட்டமிட்டுள்ளமை தெரியவருகிறது. இதற்கான அடிப்படைகளைத் தேடுவது அவசியமானது.
ஒன்று, தமிழ் மக்கள் தமக்கான ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவதென்ற கருத்து நிலையானது சர்வதேச சக்திகளுக்கு அதிக குழப்பததை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமது விருப்புக்குரிய தென் இலங்கை வேட்பாளரது வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று கருதுகின்றனர். அதற்கான முனைப்புக்களை ஆரம்பகாலத்திலேயே சந்திப்புக்களில் கேட்டறிந்த இந்திய அமெரிக்கத தரப்புக்கள் தற்போது தமிழ் பொது வேட்பாளரது கருத்து நிலை வளர்ர்ச்சிக் கண்டு அதற்கு பதிலளிக்கும் வடிவத்தில் அதனைக் கையாளும் விதத்தில் தமது ஈடுபாட்டை ஆரம்பித்துள்ளன. தமிழ் பொதுவேட்பாளர் என்பது தென் இலங்கையின் இருப்பை மட்டுமல்ல சர்வதேச சக்திகளது இலகுவான கையாளுகையையும் பாதிக்கும் எனக்கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தீவை தமது விருப்புக்கு ஏற்ப கையாண்டு வந்துள்ள சக்திகளது நலன் பாதிப்பாக அமைவதுடன் புதிய சக்திகளது(ஜே.வி.பி) வருகையையும் சர்வதேச சக்திகளால் கையாள முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அச்சமடைகின்றன.
இரண்டு, ஜே.வி.பி. இன் ஜனாதிபதி வேட்பாளர் மீது இளைஞர்களது ஈடுபாடு அதிகரித்துவருவது சர்வதேச சக்திகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உடனடியாக இல்லாதுவிட்டாலும் எதிர்காலத்தில் ஜே.வி.பி. வேட்பாளர் ஜனாதிபதியாக வாய்ப்பு இருப்பதாக அத்தகைய சர்வதேச சக்திகள் கருதுகின்றன. அது மட்டுமன்றி நான்கு வேட்பாளர் மட்டுமன்றி தமிழ் பொது வேட்பாளர் போட்டியாளராக இல்லாத போதும் தமிழ் மக்களது வாக்குகள் ஓரிடத்தில் குவியும் போது ஐந்து முனைப்போட்டி நிலவும் என்றும் அது ஜே.வி.பி.க்கு வாய்ப்பினை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஜே.வி.பி.ஐ அழைப்பதுவும் உரையாடுவதும் ஜே.வி.பி.ஐ ஜனாதிபதியாக்கவதற்கல்ல. ஜே.வி.பி.ஐ கையாளுவதற்காகவே. ஆதன் திட்டங்களையும் உத்திகளையும் குழப்பத்திற்கு உள்ளாக்குவது அல்லது இவை யாவற்றையும் கடந்து ஜே.வி.பி. வேட்பாளர் ஜனாதிபதியாகிவிட்டால் அவரைக் கையாளுவதற்காகவே என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜே.வி.பி. சீனச்சார்புக் கட்சி என்பதில் ஏனைய சர்வதேச சக்திகளுக்கு சந்தேகம் இல்லை என்பதோடு ஜே.வி.பி.இன் சீனச்சார்பு நிலையை ஏனைய சக்திகள் அச்சுறுத்தலாகவே கருதுகின்றன. இதனால் தமிழ் மக்களின் வாக்ககளை தென் இலங்கையின் சர்வதேச சக்திகள் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு திரட்டவே முனைகின்றன. இதன் மூலம் பிராந்திய சர்வதேச நலன் பாதுகாக்கப்பட முடியும் என்பதே சர்வதேச சக்திகளது விருப்பமாக உள்ளது. அதனை நோக்கிய களமாகவே இலங்கைத் தீவு கையாளப்படப் போகிறது. கடந்த காலத்தில் இலகுவாக அத்தகைய களத்தை சர்வதேச சக்திகள் கையாண்டன. தற்போது அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான அடிப்படை தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தநிலையே காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மூன்று, சம்பந்தனின் மறைவும் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டள்ள பிளவும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ் மக்களை இலகுவில் கையாள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் அத்தகைய வலுவை சம்பந்தன் அவர்கள் கொண்டிருந்தார். தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாது போயுள்ளது. தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது அதிக குழப்பம் கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் வாதிகளின் அரசியல் நடத்தை மீது சந்தேகம் கொள்ளும் நிலை தவிர்க்க முடியாததாகியுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்து எந்தத் தீர்க்கமான தீர்மானமும் எடுக்காது தென் இலங்கையுடனும் சர்வதேச சக்திகளுடனும் கூட்டுச்சேர்ந்து கொண்டு செயல்பட்டதாகவே சம்பந்தன் மீதான குற்றச்சாட்டை தமிழ் மக்கள் முன்வைக்கின்றனர். அதனால் புதிய அரசியல் தலைமைகளை தேடும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே சர்வதேச சக்திகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். மரபார்ந்த கட்சிகள் சிதைந்து போகின்றன, புதிய தரப்புக்களைக் கண்டு கொள்ள முடியாதுள்ளன, வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புகள் அரசியலில் முடிபுகளை தீர்மானிக்க முனைகின்றன, போன்ற முரண்பாடுகளால் தென் இலங்கை மட்டுமல்ல சர்வதேச சக்திகளும் தமது நிகழ்ச்சி நிரல் குழப்படைவதாக கருதுகின்றன.
நான்கு, தமிழ் அரசியல் செல்நெறியினை மட்டுமல்ல தமிழ் சிவில் சமூகத்தின் இருப்பினையும் சிதைக்கும் நிகழ்வுகள் அதிகம் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படுகிறது. மத மோதல்களும் தனிமனித ஆளுமைகள் மீதான சேறுபூசல்களும் தனிப்பட்ட விருப்புக்களையும் நலன்களையும் நிறைவு செய்யும் குற்றச்சாட்டுகளும் அரங்கேற்றப்படுகிறன. தனிப்பட்ட நலன்களும் முரண்பாடுகளும் பொது நலன்களுக்கானதாகவும் சட்டப்பிரச்சினையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. இது தமிழ் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கும் செயலை உருவாக்குகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் சிறிய முரண்பாடாக தெரியும். ஆனால் அதன் ஆழமும் இருப்பும் தமிழ் மக்களை சிதைக்கும் செயல்பாடுகளாகவே உள்ளன. தமிழ் மக்களின் தலைமைகள் சிதைக்கப்படுதல், ஆளுமைகள் அவமானப்படுத்தப்படுதல், தமிழ் மக்களின் ஆதாரபூர்வமான நிறுவனங்களும் அவற்றின் இயங்கு திறன்கள் இல்லாமல் செய்தல் என்பன திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. இதன் மூலம் தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்லாது தமிழ் மக்களது புலம்பெயர்வை ஊக்குவிப்பதாகவே தெரிகிறது.
எனவே, தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து செய்முறைக்கும் பின்னால் தெளிவான நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. அதனைக் கண்டு கொள்ள முடியாத எந்த நிறுவனங்களாலோ கட்சிகளாலோ தமிழ் மக்களுக்கான அரசியல்-சமூக-பொருளாதார செய்முறையை மேற்கொள்ள முடியாது. குழப்பங்களும் முரண்பாடுகளையும் மேலும் வளர்க்க முடியுமே அன்றி தனித்துவமான இருப்பினை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களை தனிமனித உதிரிகளாக வகைப்படுத்தி மோதுவதற்கு வழியமைக்கலாமே அன்றி ஒருமைப்பாட்டை தோற்றுவிக்க முடியாது. வாழ்வியலையோ பண்பாட்டையோ பாதுகாக்க முடியாது. இதன் போக்கு வெகுவிரைவில் ஈழத்தமிழர் தமக்கான தேசிய அடையாளத்தை இழந்து குழுக்களாக வடிவமெடுக்கும் நிலை தோன்றும். இது குழுச்சண்டைகளுக்கும் குழுவாதங்களுக்கும் வழிவகுக்கும்.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)