அரசியல் கட்டுரைகள்

இம்ரான் கான் படுகொலைச் செய்தியும் அமெரிக்க-பாகிஸ்தான் இராணுவ அரசியலும்?

தென்னாசியப் பிராந்தியத்தில் இராணுவ ஆட்சி முறையை அதிகம் பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் காணப்படுகிறது. சுதந்திர பாகிஸ்தான் காலத்தில் இருந்து ஜனநாய ரீதியான ஆட்சிமாற்றத்தை விட இராணுவ சதிப் புரட்சிகளுக்கூடாக ஆட்சியை அமைத்த மரபு அதிகமாக காணப்படுகிறது. காலனித்துவத்தின் முடிவின் போது பாகிஸ்தானை தனியரசாக ஸ்தாபித்த போதும் ஜனநாயக மரபுகளுடன் அதிகாரத்தை கட்டமைக்க முடியவில்லை. மாறாக 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஓரங்கமாக திகழ்ந்த வங்களாதேஷ் பிரிவினைக்கு வித்திட்டமைக்கு பாகிஸ்தான இராணுவ அணுகுமுறையே அடிப்படைக் காரணமாக இருந்தது. 2008 ஆண்டுக்கு பின்னர் நிலவிய ஜனநாயக ரீதியான ஆட்சி மாற்றத்தில் மீளவும் இராணுவத்தின் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் படுகொலை (?) செய்யப்பட்டதையும் அதன் எதிரொளிப் புகளையும் வரலாற்றின் பக்கங்களையும் தேட முயலுகிறது.

பாகிஸ்தான் நகரங்களில் ஒன்றாக விளங்கும் டிராவில்பிண்டியில் (Rawilpindi) அமைந்துள்ள அடியாலா (Adiala Jail) சிறைச்சாலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான்கான் கொல்லப்பட்ட செய்தி பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகம் முழுவதையும் இஸ்லாமிய சமூகங்களையும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியள்ளது. ஆப்கான் ரைம்ஸ் பத்திரிகையில் 26.11.2025 வெளியான செய்தியே இம்ரான் கான் கொல்லப்பட்டமை தொடர்பான செய்தி வெளியானது. ஆனால் இப்பகுதி எழுதப்படும் வரை பாகிஸ்தான் தொடர்பாடல் துறை அமைச்சு அச்செய்தியை மறுத்தது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதுவரை இம்ரான் கான் உயிருடன் இருப்பதை வெளிப்படையாகவோ அல்லது உறவினரை சந்திக்க ஏற்பாடோ மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பாகிஸ்தான ஆட்சியாளர் மீது முன்வைக்கப்படுகிறது. இதே நேரம் இம்ரான் கானின் படுகொலை செய்யப்பட்ட உடல் காட்டப்பட்ட செய்தியை பாலுஸ்த்தான் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு செய்தி நிறுவனமும் பாகிஸ்தானின் எதிரி நாட்டு மற்றும் மாநிலத்தின் செய்தி நிறுவனம் என்பது கவனத்திற்குரியதாகும். ஆட்சியாளர்கள் மீது தண்டனை வழங்குவதும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் பின்னர் தூக்கிலிடுவதும் பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் ஒரு மரபார்ந்த அரசியலாகவே உள்ளது. ஆனாலும் இம்ரான்கான் திட்டமிட்டு சிறைச்சாலையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு அப்பால் பாகிஸ்தானை விளங்கிக்கொள்வது அவசியமானது.

முதலாவது பாகிஸ்தானின் வரலாறு முழுவதும் ஜனநாயக ஆட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தற்கொலை தாக்குதலுக்கு உள்ளால் கொல்லப்படுவதும் இராணுவ அரசியல் என்பதற்கான வடிவமாகவே உள்ளது. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கான அடிப்படை அந்த நாட்டினை ஸ்தாபிதத்த பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்படும் அலி ஜின்னாவே (Ali Jinnah) காரணம் என விமர்சிக்கப்படுகிறது. சுதந்திர காலத்தில் இருந்து இராணுவ ரீதியான எழுச்சியும் எதிர்ப்பும் அடிப்படையாக காணப்படுகிறது. சுதந்திரத்திலிருந்து இந்தியா பாகிஸ்தானை ஆக்கிரமித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இராணுவத்துக்கு வழங்கப்பட்ட தனித்துவமான அங்கீகாரம் இவ்வகையான படுகொலைகளை நிகழ்த்துவதற்கு வழிவாக உள்ளது. குறிப்பாக இராணுவ ஆட்சியாளர் ஷியாவுல்-ஹக் ஜனநாயக முறைப்படி தெரிவான அலிபூட்டோவை (Ali Bhutto) சிறையில் அடைத்து பின்னர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகிறார். அதேபோன்று அவரது மகளான பெனாசீர் பூட்டோ (Benazir Bhutto) தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீது அந்த தேசம் கொண்டிருக்கின்ற பலவீனத்தை அடையாளப்படுத்துகிறது. இதுவே பாகிஸ்தானின் அரசியல் கலாச்சாரத்தின் வடிவமாக காலத்துக்கு காலம் இருந்திருக்கின்றது. சுதந்திரத்தின்போது ஆட்சி துறையின் தலைவராக இருந்த ஜின்னா 1970 கள் வரை ஓர் அரசியல் அமைப்பை வரைய முடியாத நிலைக்கு பாகிஸ்தானை விட்டு சென்றிருந்தார். அதனால் இராணுவ தளபதிகள் ஆட்சியாளர்களாக மாறுவதும் ஜனாதிபதிகளாவதும் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதும் தவிர்க்க முடியாத அரசியலாக காணப்படுகிறது.

இரண்டாவது முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் படுகொலை (?) என்பது பாகிஸ்தான் அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாக காணப்பட்டாலும் உலக நாடுகளும் இன்னோர் காரணமாக உள்ளன. அதில் இந்தியாவின் அச்சுறுத்தல் உள்நாட்டில் எழுந்த ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் செல்வாக்குச் செலுத்துகிறது. அது மட்டுமின்றி பாகிஸ்தானின் மாநிலங்கள் சுயாட்சியை கோருவதும் தனி நாட்டுக்காக போராடுவதும் வழமையான இராணுவத்தை பலப்படுத்துவதற்கான காரணமாக கொள்ளப்படுகிறது. இந்தியாவை கையாளுவதற்காக பாகிஸ்தான பயங்கரவாதத்தை அதிகம் ஊக்குவிக்கின்றது. இந்தியாவுடன் நடந்த அனைத்து யுத்தங்களும் பாகிஸ்தான் இராணுவத்தினாலே தங்கியிருந்தது அதனை வெற்றி கொள்வதற்கு இராணுவத்தின் பலம் பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியாளர்களையும் அத்தகைய கோட்பாடுகளையும் நிராகரிக்க காரணமாகியுள்ளது. மக்கள் இராணுவத்தின் ஆட்சியை தமது அதிகாரத்திற்கான பலம் என்று கருதுகின்றார். அதனை அதிகார பலமாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தக்க வைத்திருப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர். இதுவே மக்களும் இராணுவமும் கலந்த ஆட்சிமுறை (Hybrid) ஒன்றினை ஆதரிப்பதற்கு அடிப்படையாகிறது. இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதும் ஜனாதிபதிகளாவதும் வழமையான மரபாக நிலவுகிறது.

மூன்றாவது இம்ரான்கானுக்கு மீதான படுகொலைக்கு (?) பின்னால் ஆழமான இராணுவ –அரசியல் அச்சுறுத்தல் அமைந்திருப்பதற்கான வாய்ப்புள்ளது. அண்மையில் இராணுவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பில் 27ஆவது சீர்திருத்தமும் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்ன் பாகிஸ்தானுடனான கொள்கையும் பிரதான விடயங்களாக தெரிகிறது. குறிப்பாக பாகிஸ்தானுடைய அரசியலில் இராணுவத்தால் நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளும் நடவடிக்கைகளுக்கும் நீதியின் முன் நிறுத்தப்பட முடியாது என்ற எண்ணத்தை 27 வது சட்டத்திருத்தம் இராணுவத் தளபதிக்கு வழங்குகிறது. சட்ட திருத்தத்தின் பிரகாரம் பீல்ட் மாஷல் என அடையாளப்படுத்தப்படும் இராணுவத்தின் கூட்டு தளபதி நீதிபதிகளின் நியாயதிக்கத்திற்க்கு முன் நிறுத்தப்பட முடியாதவர்களான அதிகாரம் உடையவராக காணப்படுகிறார். Field Marshal, Marshal of the Air Force, Admiral of the Fleet போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்நாள் சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சட்டத் தீரத்த மூலம் 2008 ஆம் ஆண்டுக்கு பின் நேரடி இராணுவ ஆட்சியைத் தவிர்த்த பாகிஸ்தான பின்புலத்திலிருந்து செயல்பட்ட நிலை மாறி ஆட்சியில் சமமான பங்காளியாக மாறியுள்ளது. இது மூனீர் மாதிரி (Munir Model) என அழைக்கப்படுகிறது. இத்தகைய திருத்த சட்டம் மூலம் 12.11.2025 இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதன் பிரதான நோக்கத்தை இம்ரான் கானின் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நோக்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் படுகொலையின் குற்றச்சாட்டை பீல்மாஷலிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான நியாயாதிக்கத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வகையான நகர்வுகளுக்கு சட்டத்திருத்தம் உதவக்கூடியது. ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட இம்ரான் கான் விடுதலை பெறுகிற போது பாகிஸ்தானுக்கான ஜனநாயக வெளி திறந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே ஆட்சியாளர்கள் அச்சமடைகிறார்கள். அதுவும் ஜனநாய ஆட்சியாளர்களே அத்தகைய அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நான்காவது அமெரிக்க பாகிஸ்தான் நட்புறவில் பிரதமர் nஷபாஸ் ஷரீஃப் (Shehbaz Sharif) மட்டுமல்ல இராணுவத் தளபதி தற்போதைய பீல்மாஷல் ஆசிம் மூனீர்க்கும் (Asim Munir) அதிக பங்கிருந்தது. மூனீர் அண்மைய(2025) பாகிஸ்தான்-இந்திய மோதலுக்கு பின்னர் பீல் மாஷலாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசிற்கான முன்மொழிந்தவர்களில் இருவரும் முக்கியமானவர்கள் என்பது நினைவு கொள்ளத்தக்கது. பாகிஸ்தானின் ஆட்சியில் அமெரிக்காவுக்கான பங்கு அதிகரித்துள்ளது. இரு நாட்டுக்குமான இராணுவ பொருளாதார உறவு வலுவடைந்துள்ளது. 2025 இன் ஆரம்ப காலப்பகுதியில் மூனீர் தலைமையில் அமெரிக்காவுடன் பொருளாதார இராஜதந்திர உரையாடல் தொடங்கி யூலையில் மூனீர் தலைமையில் அமெரிக்காவுக்கு ஒரு தூதுக்குழு பயணமானது. அது வரிகுறைப்பிலும் உடன்பாடுகளிலும் ஈடுபாடு காட்டியது. குறிப்பாக பாகிஸ்தான இராணுவம் நடாத்தும் Frontier Works Organization எனும் நிறுவனம் அமெரிக்காவின் மிசோறியில் இயங்கும் உலோக மூலோபாய அமைப்புடன் அரியவகை மணல் தாதுக்களை ஏற்றுமதி செய்வதற்கான் 500மில்லியன் அ.டொ. பெறுமதியான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதனை தனிப்பட்ட முறையில் இஸ்லாமாபாத்திலிருந்து மூனீர் மேற்பார்வை செய்வதாக உடன்பாட்டின் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. செம்ரொம்பர் 26 இல் ஓவல் அரங்கில் பாகிஸ்தான் பிரதமருடன் மூனீர் ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானின் கனிமங்கள் தாதுக்கள் அடங்கிய காட்சிப்படங்களை மூனீர் காட்சிப்படுத்தியதாகவும் ட்ரம்ப்க்கும் மூனீருக்கும் இடையில் நீண்ட இணையவழித் தொடர்பு இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் பிரபல கனியமணல் வர்த்தகரது படம் ஒன்றையும் மூனீர் காட்சிப்படுத்தியதாக தெரியவருகிறது. அவர் அமெரிக்காவுடனான கனிம மணல் வர்த்தகத்தை முழுமையாக எதிர்ப்பவர் எனத் தெரியவந்துள்ளது. இம்ரான்கான் 2019 இல் ஓவல் அரங்கில் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்தாலும் சீனாவுடனான நெருக்கத்தில் அதிகம் கவனம் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

எனவே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான படுகொலை (?) பாகிஸ்தானின் இராணுவ கலாச்சாரம் காரணமாக இருந்தாலும் அதன் வெளியுறவுக் கொள்கையும் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் விடயமாக தெரிகிறது. பாகிஸ்தான் உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான் அரசியல் கலாச்சாரம் ஜனநாயகத்தை நோக்கி திசை திருப்புவது என்பது நீண்டகாலத்திற்கு சாத்தியமற்றது ஒன்றாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)