November 7, 2025
அரசியல் கட்டுரைகள்

இந்தியா- ஈழத்தமிழர் நெருக்கடியும் தென் இலங்கையின் அரசியல் உத்தியும்?

இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்குமான உறவு 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பலவீனமானதாகவே உள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் போரின் போதும் அதற்கு முன்னரான ஒரு தசாப்த்த காலப்பகுதிகளிலும் இந்தியா விடுதலைப்புலிகள் மீதான நடவடிக்கை அத்தகைய உறவின் விரிசலை அதிகரித்ததோடு அதன் பின்னான காலப்பகுதியில் புது டெல்லி-கொழம்பு உறவானது ஆழமான நெருக்கத்தைக் கொண்டிருக்கிறது. புதுடெல்லிக்கும் ஈழத்தமிழருக்குமான உறவினை பலவீனப்படுத்துவது கொழும்பு மையஅரசியலுக்கு அதிக பங்கு இருந்தது. அதன் வழியாகவே ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அடைய வேண்டிய அனைத்தையும் நெருக்கடி உள்ளாக்கியதோடு இந்தியாவின் ஈழத்தமிழர் உறவை கொழும்பு உத்தியாக கையாண்டிருக்கின்றது. இக்கட்டுரை சமகாலத்தில் ஈழத்தமிழர் இந்திய உறவுக்கான் நெருக்கடிக்கு காரணமான அரசியலை தேடுவதாக உள்ளது.

தென் இலங்கையின் தீவிர அரசியல்வாதியும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான சமிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) அண்மையில் தமிழக தலைவர்களும் ஈழத்து தமிழ் அரசியல் தலைமையும் விடுதலைப்புலிகளின் தலைமை அழிப்பதற்கு வழங்கிய ஒப்புதல்களை வெளிப்படுத்தியிருந்தார். அவர் வெளிப்படுத்திய மூன்று தலைவர்கள் தற்போது உயிருடன் இல்லை. அக்கால பகுதியில் எதனையும் வெளிப்படுத்தாது விட்டுவிட்டு தற்போது ஏன் அவ்வாறான உரையாடல் ஒன்றை முன் வைத்திருக்கிறார் என்பது பிரதான கேள்வியாகும். அது சார்ந்து ஈழத்தமிழர் அரசியல் பரப்பில் உரையாடல் ஒன்று அல்லது விவாதம் ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்து (18.09.2025) இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஐக்கியத்தையும் மாகாணசபைக்கான தேர்தலையும் வலியுறுத்தி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது தமிழ் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஈழத்தமிழரை மையப்படுத்தி உரையாடப்பட்ட இரண்டு உரையாடல்களின் உள்ளடக்கங்கள் நியாயமானவை என்பதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதனை ஆழமாக அவதானிப்பு அவசியமானது.

முதலாவது தென்னிலங்கை தீவிர அரசியல் வாதிகள் ஒருவரான சமிக்க ரணவக்க வெளிப்படுத்தி இருக்கும் செய்தி உண்மைத் தன்மையோ இல்லையோ என்பதை வைத்துவிட்டு அச்செய்திக்குப் பின்னால் இருக்கக்கூடிய அடிப்படைகளை தேடுதல் வேண்டும். மிக ஆழமாக அவதானித்தால் மகாவம்ச காலத்தில் இருந்து புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்குமான உறவு அவ்வப் போது முரண்பாடு உடையதாக தென்னிலங்கை தலைவர்களாலும் அரசியல்வாதிகளால் புலமையாளர்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மகாவம்சத்தின் சாரமும் உள்ளடக்கமும் இந்தியாவின் பெயரால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் அழிப்பதற்கும் ஆதாரப்பூர்வமான அடிப்படைகளை கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியா பொறுத்து இருக்கும் அச்சமே ஈழத்தமிழர் மீதான தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்பது கண்டுகொள்ள முடிகின்றது. இன்னொரு வகையில் குறிப்பிடுவதால் இந்தியாவின் நலன்களுக்காகவே ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுகின்றனர் அல்லது அவர்கள் மீதான அணுகுமுறைகள் தீவிர படுத்தப்படுகின்றது. குறிப்பாக பாக்குநீரிணையையும் புவிசார் அரசியல் நெருக்கமும் இந்திய ஈழத்தமிழர் உறவில் காத்திரமான பங்கை பெறுகின்றது. ஈழத்தமிழர் உடைய வாழ்விடம் அத்தகைய புவிசார் அரசியல் நெருக்கத்தின் மையத்தில் அமைந்திருக்கின்றது. அதுவே ஈழத்தமிழர் மீதான கொழும்பு அரசியலின் அடக்கு முறைக்கு வழிவகுத்த அம்சமாகும். இதனை இலங்கை இந்தியா உடன்படிக்கையிலும் ரணில்விக்ரமசிங்க பிரபாகரன் உடன்படிக்கையிலும் கடல் சார்ந்த எந்த முக்கியத்துவம் எதிலும் இல்லாததைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடியும். அவ்வாறெனின் 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையும் அதன் பின்னான இந்திய இராணுவத்தின் வருகையும் ஈழத்தமிழர் அரசியலில் நிரந்தரமான விரிசலுக்கு பின்னால் தென்னிலங்கையின் அரசியல் நோக்கி ஆழமாக திட்டமிடல் இருந்துள்ளது. அதனை அக்கால பகுதியில் ஆட்சியாளர் ஜேஆர்.ஜெயவர்த்தன முதல் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா வரை செயல்பட்டு உள்ளனர் என்பது தெளிவாகிறது. 2007 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போது அதற்கான தீவிர அணுகு முறையை ஜேவிபி.யே கொண்டிருந்தது. இதுவே புதுடில்லி ஈழத்தமிழர் உறவை நிரந்தரமான பிரிநிலைக்கு அல்லது முரண்பாட்டுக்குள் அல்லது பகைமைக்குள் வைத்திருக்க திட்டமிழட்டது என்பது தெளிவாகிறது. இதில் தென்னிலங்கை சக்திகள் கரிசனையோடு இருந்துள்ளனர். ஈழத்தமிழர்களுடைய இருப்பின் அதிக செல்வாக்கு பெற்றதும் முக்கியத்துவம் பெற்றதும் இந்தியா என்பதும் அதன் வாயிலாக இரண்டு தரப்பை உடைத்து விடுதல் என்பது அல்லது முரண்பாடு அடைய வைத்தல் என்பது தென்னிலங்கையின் அரசியலின் இருப்புக்கு ஆரோக்கியமானது என்ற எண்ணத்தோடு கையாளப்பட்டுள்ளது.

இரண்டாவது ஈழத்தமிழரின் ஐக்கியத்தை பற்றிய உரையாடல் இலங்கைக்கான இந்திய தூதரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது காலம் காலமாக இந்திய தூதுவர்கள் முன்வைக்கும் உரையாடல் ஒன்றாகவே மாறி உள்ளது. கடந்த காலங்களிலும் இலங்கைக்கான இந்திய தூதர்கள் ஈழதமிழ் அரசியல் தலைமைகளின் ஐக்கியம் பற்றி உரையாடி இருப்பதோடு அத்தகைய ஐக்கிய மின்மையே மாகாண சபை பொறுத்து இந்தியா முடிவுகளை இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என தெரிவித்திருக்கிறன. இது ஒரு வகை தப்பிக்கொள்வதற்கான உத்தியாகவே தெரிகிறது. தமிழர் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் நலன்பாட்பட்டவை. முரண்பாகையை அதிகம் கொண்டவை. ஈழத்தமிழர்கள் சிறிய இனமாக இருந்தபோது அவர்களிடம் அதிகமான அரசியல் கட்சிகளும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதீதமாகவே காணப்படுகிறது. ஆனால் அவர்களுடைய ஐக்கியத்தை முன்னிறுத்திக் கொண்டு தீர்வுகளை பின் போடுவதும் சாத்தியமற்றதாக விவாதிப்பதும் மிகப் பலவீனமான வங்குரோத்தான அரசியலை வெளிப்படுத்துகிறது. இதனை எதிர்கொள்வதற்கு ஈழத்தமிழ் மக்கள் நோக்கி புதுடில்லியின் அணுகுமுறை மாறவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் போதும் மாகாண சபைக்கான தேர்தலை ஒத்தி வைக்கும் போதும் அதன் அதிகார எல்லைகளை பலவீனப்படுத்தும் போதும் இந்தியா அதிக மௌனம் கொண்டிருந்தது. அதிக மௌனத்தின் பிரதிபலிப்பு மாகாண சபை அரசியலமைப்பில் காட்டப்பட்ட அம்சங்களை அரசியல் அமைப்புக்கு உள்ளால் நீதி பொறிமுறைக்கு உள்ளாலும் பறிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்ட போது இந்திய அதிகம் மௌனம் காத்தது. இத்தகைய உடன்படிக்கை இந்தியாவுக்கு அவசியமானதாக நலன்பாட்பட்டதாக இருந்ததை அன்றே ஈழத்தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை அது கொண்டிருக்கவில்லை என்பதை அடையாளப்படுத்தி இருந்தது. அதன் நீட்சி இன்று வரை காணப்படுகிறது. மக்கள் சார்ந்து மக்களுக்கும் மக்களுக்குமான உறவு சார்ந்து இந்தியா ஈழத்தமிழர் உடனான வெளியுறவு முதன்மைப்படுத்தவில்லை என்பதை காட்டுவதாகவே தெரிகிறது. ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை விடுத்து விடுதலைப்புலிகளையும் அக்காலத்தில் இருந்த ஆயுதப் போராட்ட அமைப்பிலிருந்து அரசியலுக்கு வந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும் இந்தியா அல்லது புதுடில்லி தனது அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன் விளைவு இலங்கை தீவில் இருந்து இந்தியாவின் முக்கியத்துவம் அருகிபோவதற்கான அடிப்படைக தெரிகிறது. துணை தூதரகங்களும் அதனை மையப்படுத்திய இந்திய ஈழத்தமிழர் உறவும் நிரந்தரமான அரசியல் தீர்வற்ற அல்லது அதிக அரசியல் அதிகாரம் மற்ற அணுகுமுறையும் ஈழத்தமிழருக்கான வாய்ப்புகளை இழக்கச் செய்வதோடு புதுடில்லியின் வாய்ப்புகளையும் இல்லாமல் செய்கின்றது. ஈழத்தமிழர்களின் தென்னிலங்கையுடனான மோதல் என்பது இந்தியாவுக்கானது. இந்தியாவின் நலனுக்கானது. இந்தியாவின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் ஈழத்தமிழர்களின் இருப்பும் பாதுகாக்கப் படவேண்டும். அத்தகைய நிர்ணயம் ஈழத்தமிழர் தமிழக கடல் பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும். இதை மீறுகின்ற அல்லது நிராகரிக்கின்ற அரசியல் சமகாலத்தில் ஆரோக்கியமானதாக புதுடில்லி கருதலாம். ஆனால் இதனை எதிர்காலம் புதுடில்லியின் இருபுக்கும் அதன் தனித்துவத்துக்கும் நெருக்கடி மிக்க அரசியலை கொண்டு வந்து நிறுத்தும் என்பது கடந்த கால வரலாற்றின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எனவே ஈழத்தமிழர் புதுடில்லி உறவு அரசியல் தலைமைகளுக்கு புறம்பாக ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கும் ஆனதாக வடிவமைக்கப்படுவது அவசியமானதாக தெரிகிறது. அரசியல் தலைமைகளின் விவாதங்களும் உரையாடல்களும் நிரந்தரமற்றவை என்பது தெளிவானது. அத்தகைய அரசியல் வாதிகளின் அல்லது கட்சிகளின் இருப்புக்குள் ஈழத்தமிழர் புதுடில்லி உறவு கட்டி எழுப்பப்படுவதற்கான வாய்ப்புகளை முதன்மைப்படுத்தாது ஈழத்தமிழ் மக்களையும் தமிழக மக்களதும் அல்லது இந்திய மக்களின் உறவினூடாக அத்தகைய வாய்ப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும். புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதோடு அதற்கூடாக ஏற்படக்கூடிய புதிய யுகத்தை இந்தியாவும் ஈழத்தமிழர்களும் அரவணைத்துக் கொள்ளுதல் ஆரோக்கியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)