அரசியல் கட்டுரைகள்

வடக்கு மாகாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள இந்திய-சீனப் போட்டியாளர்கள்!

இலங்கை அரசியலில் இந்திய – சீனப் போட்டி அதீதமான அரசியலாக மாறி வருகிறது. அதிலும் வடக்கு மாகாணத்தில் அதிகமான அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றதைக் காணமுடிகிறது. இரு நாட்டுத் தூதரகங்களும் மாறிமாறி செயற்படுவதுடன், அதனை மையப்படுத்திய ஊடகங்களும் அரசியல் செய்வதைக் காணமுடிகிறது. வெளிப்படையாக கூறுவதானால் தூதரகங்களை விட ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இரு தூதரகங்களின் அரசியலை அதிகம் முதன்மைப்படுத்துவதைக் காண முடிகிறது. வடமாகாணத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் கூட அத்தகைய அரசியல் நகர்வுகளுக்குள் அகப்படாது இயங்க முடியாதுள்ளன. இக்கட்டுரையும் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் அகப்பட்டுள்ள வடக்கு மாகாணம் எதிர்கொள்ளும் நெருக்கடியும், யதார்த்த நிலையையும் தேடுவதாக உள்ளது.

முதலில் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் இந்தியா பக்கமா, சீனா பக்கமா என்று கேள்வி எழுப்பப்பட்டால் வெளிப்படையாக இந்தியா பக்கம் என்பதற்கான ஆதரவு அதிகமானதாகவே தெரிகிறது. சீனா பக்கம் உள்ள ஆதரவை விட, இந்தியா பக்கம் ஆதரவு அதிகம் உள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். அதற்கு பல காரணங்களை அடையாளம் காண முடியும். அதற்காக இந்தியா பக்கம் நியாயமின்றி அல்லது காரணம் இன்றி தமிழ் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்பது போல் இந்தியா பக்கம் உள்ள குறைபாடுகளையும் முன்வைக்காத மக்கள் கூட்டமாக தமிழர் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இந்தியாவை விமர்சனத்துடனேயே அணுகும் வல்லமை கொண்டவர்கள் என்பது கடந்தகாலம் முழுவதும் வெளிப்படுத்திய நிலைப்பாடாகும். இனியும் அதனையே தமிழ் மக்கள் கொண்டிருப்பார்கள். இந்தியாவை ஆதரிப்பார்கள் ஆனால் இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். அது ஒரு தேசிய வலுவுடைய மக்கள் கூட்டத்தின் இயல்பாகும். மக்கள் கூட்டத்தின் திறனே தேசிய அதிகாரத்தின் மூலக்கூறாகும். அதனை தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். அகிம்சைப் போராட்டத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தது போல் ஒன்றையாட்சிக்குள் இருந்து கொண்டு சமஸ்டியையும், தனிநாட்டையும் ஆதரித்தவர்களாக தமிழ் மக்கள் உள்ளனர்.

இத்தகைய நிலையிலேயே இந்தியாவை தமிழ் மக்கள் ஆதரிப்பதன் நியாயப்பாடு உள்ளது. இந்தியா புவிசார் அரசியல் கூறாக உள்ளதுடன் இன, மத, கலாசார ரீதியில் தமிழ் நாட்டுடன் உள்ள உறவும் அவர்களை இந்தியாவுடன் பிணைத்துள்ளது. புதுடில்லியின் அரசியல் நலனுக்கு அப்பால் தமிழகத்துடன் கொண்டுள்ள உறவின் கனதி இந்தியாவை ஆதரிக்க காரணமாக உள்ளது. 1926 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் வருகையும் அதனை அடுத்து இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வருகை ஈழத்தமிழர்களது காலனித்துவ அடக்கு முறைக்கு எதிரான உணர்வையும், விடுதலை உணர்வையும் தீவிரப்படுத்தியது. அவ்வாறே 1962 இல் சீனா – இந்திய போரின் போதும் தந்தை செல்வா ஈழத்தமிழ் இளைஞர்களைத் திரட்டி சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக செயற்பட திட்டமிட்டமை என்பன இந்தியாவுடனான ஈழத்தமிழரது உறவினைக் காட்டுகிறது. தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் இந்தியாவுடனான உறவை முதன்மைப் படுத்தியே வந்துள்ளனர்.

இதன் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டமும் தமிழக – ஈழத்தமிழரது உறவினாலேயே வலுவடைந்தது. இலங்கை ஒரு தீவாக அமைந்த போதும், பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட போதும் தமிழகத்தின் நட்புறவே ஆயுதப் போராட்டத்தையும், அதற்கான பின்தளத்தையும் கொடுத்திருந்தது. அனைத்து ஆயுதப் போராட்ட இயக்கங்களும் தமிழகத்தை மையப்படுத்தியே தமது ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியிருந்தனர். அதன் பின்பே பாலஸ்தீனத்திலும், வடகொரியாவிலும் தமது போர்ப் பயிற்சிகளை கட்டமைத்தனர். அடிப்படையில் பின் தளமாக தமிழகமும், இந்திய மத்திய அரசின் ஆயுத தளபாடங்களும், பயிற்சிகளும் விடுதலைப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. வடக்கும், தமிழகமும் புவிசார் ரீதியில் அருகருகே அமைந்திருப்பதும், (32 மைல்) பாக்குநீரிணைக்கடற் பகுதி இந்திய அரசினது கண்காணிப்பிலிருந்தமையும் ஆயுதப் போராட்டத்தை எழுச்சியடையச் செய்தது. காந்தி, நேரு, பட்டேல், மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்களை தமது தலைவர்களாகக் கருதிய நிலை இந்திராகாந்தியின் மரணம் வரை நிலவியது. அத்தகைய உறவை தமிழர்கள் இன்னுமே மறுதலிக்காதுள்ளனர். ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரும் தமிழக – ஈழத்தமிழர் உறவு முற்றாக குலைந்து போகவில்லை. இன்றும் கூட ஆறு கோடித்தமிழரது பலம் ஈழத்தமிழருக்கு உண்டு என்பதை தென் இலங்கை ஆட்சியாளர்களும், மக்களும் கருதுகின்றனர்.

இத்தகைய பலத்தை தென் இலங்கை மட்டுமல்ல புதுடில்லியும், மேற்குலகமும் அச்சுறுத்தலாகவே நோக்குகின்றன. ஆனாலும் புதுடில்லி ஈழத்தமிழர் உறவை வேறு எந்த நாட்டுக்கும் விட்டுக் கொடுக்க முடியாது செயற்படுகிறது. அது இந்தியாவினது நலனாகவே தெரிகிறது. ஈழத்தமிழருக்காக அல்லாது புதுடில்லியின் நலனுக்கானதாகவே அத்தகைய விட்டுக் கொடுப்பற்ற போக்கினை இந்தியா கொண்டுள்ளது. அத்தகைய நலனில் தென் இந்தியா பக்கம் இந்தியா குவித்துள்ள அணுவாயுத கட்டமைப்பு, அண்டவெளி தொழிநுட்பம் மற்றும் தகவல் தொழிநுட்பங்களது பாதுகாப்பு முதன்மையாக அமையலாம் அல்லது இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு இன்னோர் அம்சமாக அமையலாம். எதுவாயினும் இந்தியாவினது நலன் சார்ந்ததாகவே ஈழத்தமிழர் புதுடில்லி உறவு காணப்பட வாய்ப்புள்ளது. இதில் ஈழத்தமிழரது பாதுகாப்பும் தங்கியுள்ளது. அதற்கு தமிழகம் பிரதான பங்கு வகித்தது. 2009 இல் ஈழத்தமிழர் கொல்லப்படுவதற்கு இந்திய மத்திய அரசின் பங்களிப்பு உண்டு என்பதை ஈழத்தமிழர் மட்டுமல்ல தமிழகமும் மறுக்கவில்லை. ஆனாலும் ஈழத்தமிழர் இந்தியா முழுமையாக பகை நாடாக கருதவில்லை. அதுவே ஈழத்தமிழர் – புதுடில்லி உறவாகும். இது தமிழகத்தினாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஈழத்தமிழர் புதுடில்லியை விட தமிழகத்தை அதிகம் நம்புவதுடன் நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டு செயற்பட முனைகின்றனர்.

மறுபக்கத்தில் ஏன் சீனாவுடன் ஈழத்தமிழர்கள் உறவு பலமடையாதுள்ளது என்பது பிரதான கேள்வியாகும். குறிப்பாக சீனாவின் இந்திய எதிர்ப்பு உணர்வு அடிப்படையில் ஈழத்தமிழரது சீன விரோத உணர்வை தந்துள்ளது. அதாவது சீன கம்யூனிஸக் கொள்கையானது ஈழத்தமிழரது சமூகக் கட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகவே தெரிகிறது. ஈழத்தமிழர் மத்தியில் பொன். கந்தையாவைத் தவிர வேறு எந்த ஒர் இடதுசாரியும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. ஈழத்தமிழர் இயல்பால் நிலச்சுவாந்தர்களாகவும் சாதி, மத உணர்வுகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை உடையவர்கள். அவர்களது ஆயுதப் போராட்டமும் அத்தகைய மரபுகளை முற்றாக புறமொதுக்கியதெனக் கூறிவிட முடியாது. சோஸலிஸ தமிழீழத்தில் தொடங்கி முதலாளித்துவ தமிழீழத்திலேயே நிறைவு செய்தார்கள் என்பது மறுக்க முடியாதது. இத்தகைய சமூகத்தினது எண்ணத்தில் சீனாவின் சோஸலிஸமோ, கம்யூனிஸமோ உறவு கொள்வதென்பது கடினமானது. தற்போது சீனா சோஸலிஸத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும் அதனடிப்படையும் அரசியலும் சோஸலிஸமாகவே ஈழத்தமிழர் புரிந்து வைத்துள்ளனர்.

அது மட்டுமல்ல இந்தியா போன்று சீனாவும் 2009 ஈழத்தமிழர் அடைந்த துயரத்திற்கு காரணமாக இருந்தது என்பதை ஈழத்தமிழர் கொண்டுள்ளனர். ஆனால் அதனைக் கடந்து சீனா ஜெனீவா அரங்கிலும், மனித உரிமைப் பேரவையிலும், சீனா தென் இலங்கையையும், அதன் ஆட்சியாளர்களையும் பாதுகாத்து வருகிறது. ஈழத்தமிழர் மீது தென் இலங்கை மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கும், மனிதாபிமானச் சட்ட மீறலுக்கும் நிகழ்த்திய இன அழிப்புக்கும் எந்த கேள்வியுமின்றி சீனா ஆதரிக்கிறது என்பதை ஈழத்தமிழர் மறுக்க முடியாதுள்ளனர். ஆயுத தளபாடங்களைக் கொடுத்து போரை நடாத்தியது மட்டுமன்றி அதற்கு பின்னரும் தென் இலங்கையின் அனைத்து நகர்வுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு சீனா ஆதரிக்கிறது என்பதை ஈழத்தமிழர் மறக்க முடியாதுள்ளனர். சீனாவிடம் சனநாயகம் இல்லை என்பதும் மனித உரிமையும், மனிதாபிமான நடைமுறையும், இல்லை என்பதையும் ஈழத்தமிழர் நன்கு புரிந்து வைத்துள்ளனர். சீனா ஒர் இரும்புத் திரை அரசியலைக் கொண்டதென்பது தினமென் சதுக்கப்படுகொலையின் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதொன்றே. மனித உறவு மட்டுமல்ல நாடுகளுக்கிடையிலான உறவும் பொருள் சார்ந்ததென்றாலும் அது தனித்து பொருளாதாரத்தால் கட்டமைக்கப்படுவதல்ல. மாறாக மனித உணர்வினாலும், நட்புறவாலும், தராளவாதத்தாலும் கட்டமைக்கப்பட்டதென்பதை புரிந்து கொள்வது அவசியமானது. ஆனால் சீனாவோ பொருளாதாரமாக அனைத்தையும் நோக்கும் ஒரு தேசமாக உள்ளது என்பது ஈழத்தமிழருக்கு தெரியாததொன்றல்ல.

சீனா ஈழத்தமிழரது சுயநிர்ணயத்திற்கான, சமத்துவத்துவத்திற்கான, சுதந்திரத்திற்கான கோரிக்கை பற்றி எத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது என்பதை தீபெத்தியர் மற்றும் உர்குர் முஸ்லீம்கள் சார்ந்து புரிந்து கொண்டுள்ளனர். சீனாவின் வெளியுறவுக் கொள்கை ஈழத்தமிழரது சமஸ்டியையோ, அக – சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காது என்பதை ஈழத்தமிழர் புரிந்துள்ளனர். அது மட்டுமன்றி ஈழத்தமிழர் ஒரு தேசியமாகவோ, தேசிய இனமாகவோ சீனா கருதாது என்பதையும் புரிந்து வைத்துள்ளனர். ஆனால் எதிர்கால உலகம் சீனாவுக்குள் அடங்கிவிடும் என்ற சந்தேகமும் ஈழத்தமிழரிடம் இல்லாமலில்லை. இந்து சமுத்திரம் மீதான சீனாவின் செல்வாக்கு அதீதமாக வளர்ச்சியடைகிறது என்பதையும் இந்தியா பலவீனமான நாடாக உள்ளது என்பதையும் உணர முடிகிறது. இந்து சமுத்திரம் மீதான போட்டியே வடக்கு கிழக்கு மீதான இந்திய – அமெரிக்க-குவாட் எதிர் சீனப் போட்டியை உருவாக்கியுள்ளது என்பதையும் ஈழத்தமிழர் விளங்கிக் கொள்ளாமல் இல்லை என்பதும் கவனத்திற்குரியதாகும்.
இவையே சீனா மீதான ஈழத்தமிழரது உறவிற்கு தடையான விடயங்களாக உள்ளது. இந்தியாவை ஆதரிக்கவும், சீனாவை எதிர்க்கவும் பல காரணங்கள் உள்ள போதும் விமர்சனத்துடனே ஈழத்தமிழர் அனைத்தையும் நோக்குகின்றனர். ஈழத்தமிழரது மனித உரிமைக்கும், மனிதாபிமானத்திற்கும், சுயநிர்ணயத்திற்கும், சுயாட்சிக்கும் சீனா ஆதரவு வழங்குமாயின் ஈழத்தமிழருடனான உறவு சிறப்பானதாக அமையும். அதற்கான வெளிப்பாடுகளை சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் காட்டுமாயின் ஈழத்தமிழர் சீனாவுடன் நட்புறவு கொள்வதில் பின்னிற்க மாட்டார்கள். ஆனால் இரும்புத்திரை அரசியலை தனது நாட்டுக்குள் வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் முதலாளித்துவத்தில் பயணம் செய்து கொண்டு பொருளாதாரத்தையே பிரதான இலக்காகக் கொண்டு செயற்படுவதென்பது ஈழத்தமிழருக்கான அரசியலுக்கான தீர்வைத் தந்துவிடாது. ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது பொருளாதார அபிவிருத்தியால் தீர்ந்து விடாது. மாறாக அரசியல் அபிலாசையால் கட்டமைக்கப்படும் பொருளாதார விருத்தியாகவே அமைய வேண்டும். ஈழத்தமிழரது அரசியல் தீர்வு சாத்தியமானால் பொருளாதார விருத்தியை இயல்பாகவே கட்டமைக்கும் திறனுடையவர்கள்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)