அரசியல் கட்டுரைகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரது இலங்கை வருகையும் வெளிப்படுத்தப்படும் அரசியலும்?

இலங்கையின் அமைவிடம் சார்ந்து இந்தியாவின் முக்கியத்துவம் அதீதமானது. வலுவானதும் நீண்டதுமான ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய ஈழத்தமிழர்கள் இந்தியாவுடனான முரண்பாட்டினால் முழுமையான தோல்வியை எதிர்கொண்டனர் என்பது அதிக அனுபவத்தை தந்துள்ளது. மிகப்பலமான ஆயுதப் போராட்டம் என கணிக்கப்பட்ட ஈழத்தமிழரது போராட்டம் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றுசூம் ஐரோப்பிய நாடுகளது ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டதை அரசியல் சமூகமாக புரிந்து கொள்வது அவசியமானது. ஈழத்தமிழரது போராட்டத்தை அழிப்பதில் வல்லரசுகள் எவையும் பாரபட்டமாக நடந்து கொள்ளவில்லை என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியலாகும். இவை அனைத்துக்குமான அடிப்படை இந்தியாவுடனான ஆயுதப் போராட்டத்தின் அணுகுமுறை என்பதை நிராகரித்துவிட முடியாது. இத்தகைய நெருக்கடி தென் இலங்கைக்கு ஏற்படும் போதெல்லாம் லாவகமாக தென் இலங்கை இராஜதந்திரம் கையாண்டு வெற்றி பெறுவதையும் நினைவில் கொள்வது பொருத்தமானது. அவ்வகையான நகர்வென்றையே தற்போதும் இந்தியாவும் -தென்இலங்கையும் மேற்கொண்டு வருகின்றன. இக்கட்டுரையும் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரது விஜயம் ஏற்படுத்தியுள்ள அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.

இரு நாள் விஜயமாக (19,20.01.2023) இலங்கை வருகைதந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சார் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல தலைவர்களை சந்தித்ததுடன் தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள கட்சித் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். அவரது விஜயத்தின் நோக்கங்களில் இந்திய நலன்கள் அதீதமாக அமைந்திருந்தாலும் தென் இலங்கையும் தமிழர் தரப்புடனும் உரையாடல்களை மேற்கொண்டிருந்தமை கவனத்திற்குரியதாகும்.

தென் இலங்கையின் நகர்வுகள் ஒவ்வொன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை இராஜதந்திர ரீதியில் கையாள்வதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைப்பதிலும் மக்களுக்கு வழங்குவதிலும் இந்திய வெளியுறவுத் துறையமைச்சரை முதன்மைப்படுத்தியதுடன் திருகோணமலையில் கட்டமைக்கப்படவுள்ள மீள புதுப்பிக்கப்படும் சக்திவளத்திற்கான கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாடு ஒன்றினையும் உயர் பெறுபேறுகளைக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களின் வரையறைகளை நீடிப்பதற்கான உடன்பாட்டிலும் இரு தரப்பும் கைச்சாத்திட்டுள்ளன. 2017 இந்தியப் பிரதமர் வருகைதந்த போது அடிக்கல் நாட்டப்பட்ட கண்டிதலதா மாளிகையின் வளாகத்தில் கண்டிய நடனத்திற்கான பயிற்சி நிலையமொன்றை திறந்துவைத்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். இந்திய உதவித் திட்டத்தின் அனுசரணையுடன் காலி,கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இணையவழித் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அனுராதபுரம்,பதுளை மாவட்டத்திலும் அமைக்கப்படுள்ள மாதிரிக்கிராமிய வீட்டுத்திட்டமும் கையளிக்கும் அடையாள நிகழ்வும் நிகழ்ந்துள்ளது.இவற்றைவிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் எதிர்கட்சித் தலைவரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தென் இலங்கை இந்தியாவுடன் ஓர் இராஜதந்திர ரீதியான உறவை பலபட்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவே தெரிகிறது. அதே நேரம் இந்தியத் தரப்பாக தென் இலங்கையுடன் வலுவான கூட்டக் கட்டமைப்பதில் முன்னோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக மேற்கு முனையம், திருகோணமலை பிரதேசம் கண்டித்தலதா மாளிகை என் தனது திட்டங்களை விஸ்தரிப்பதுடன் இந்திய நாணயத்தை இலங்கைக்குள் புளக்கத்திற்கு விடுவதற்கான பூர்வாங்க வேலைகளை பொருளாதார சமூக அபிவிருத்தி என்ற அடிப்படையில் நகர்த்தி வெற்றி கண்டு வருகிறது. அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கையாளும் நோக்கில் பாரியளவான (3.9பில்லியன் அ.டொ2022 மட்டும்) கடன் உதவிகளையும் நன்கொடைகளையும் வழங்கியுள்ளது. தற்போதும் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்புககுரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது. தொடர்ந்தும் உதவும் என்பதை ஜெய்சங்கரின் பத்திரிகையாளருடனான சந்திப்பில் வெளிப்படுத்திய தகவல்கள் உறுதி செய்கின்றன. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியப் பிரதமரது வெளிப்பாட்டைக் கொண்டதாகவே இலங்கை விஜயம் அமைந்துள்ளதென ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கும் போது, இந்தியா இலங்கையின் நம்பகமான அயல் நாடு., நட்புனான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் எந்தத் தொலைவுக்கும் செல்ல தயாராக உள்ள நாடு என்றார். இவற்றுக்கு அப்பால் இலங்கை ஜனாதிபதியை இந்தியா வருகை தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை கையளித்திருந்தார். நீண்டகாலமாக நிலவிய இராஜீக விரிசலை ஜெய்சங்கரது விஜயம் முடிபுக்கு கொண்டுவந்துள்ளது. தென் இலங்கையுடனான இராஜீக விரிசலுக்குள் இந்தியா தனது நலன்களை அடைந்துவிட்டதாக கொள்ளலாமா என்பது முக்கியமான செய்தியாகவுள்ளது. இலங்கையுடன் இந்தியா அவ்வப்போது மேற்கொள்ளும் இராஜீக முறுகலானது தனது நலன்களை நிறைவு செய்வதாக உபாயமாகவே தெரிகிறது. தென் இலங்கைக்குள் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நகர்வுகளை இந்தியா அதிகமாக மேற்கொள்கிறது என்ற விமர்சனம் தவிர்க்க முடியாததாகவே தெரிகிறது. ஆனால் தென் இலங்கையின் உத்தி சீனாவை பலமான நட்புறவுக்குள் வைத்துக் கொண்டு இந்தியாவையும் பிற சக்திகளையும் கையாள்வதாகவே விளங்குகிறது.

இரண்டாவது முக்கியமான நகர்வாக இந்திய வெளியுறவுதுறை அமைச்சரது இலங்கை விஜயம் வடக்கு கிழக்கு சார்ந்த தமிழர் இனப்பிரச்சினைக்கான நகர்வாக அமைந்துள்ளது. அனைத்து தமிழ் கட்சிகளுடனான சந்திப்பும் அதில் ஜெய்சங்கர் வெளிப்படுத்திய தகவலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் என்ற அரசியல் தமிழர் தரப்பிலும் இந்தியத்தரப்பிலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. தமிழ் தரப்புடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எழுப்பிய விவாதத்திற்கு பதிலளிக்கும் போது அரசியலமைப்பிலுள்ளவற்றை அமுல்படுத்துவது தொடர்பிலும் அதனை தமிழ் கட்சிகள் ஓர் இடைக்கால நடைமுறையாகக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்திருந்தமை கவனத்திற்குரியது. ஆனால் தமிழ் தரப்பு நுட்பமான உரையாடலை வெளிப்படுத்தியதே அன்றி தத்துவார்தமாக உரையாடவில்லை என்பதை கண்டு கொள்ள முடிகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரிவினை என்பது வடக்கு கிழக்கு இணைப்பின் முறைமை சார்ந்து நீதிமன்றம் அளித்த தீர்பினை கவனத்தில் கொள்வதுடன் நிலப்பிணைப்பே தமிழரின் இருப்பும் இறைமையும் சுயநிர்ணயமும் தேசியமும் என்பதை கருத்தில் கொண்டு அத்தகைய விடயங்களை விவாதிக்கவில்லை என்பது தெரிகிறது. 13 ஐ புதிய வடிவத்துக்குள் தென் இலங்கை எப்படி பலவீனமாக்கியதோ அவ்வாறே அதனை இன்னோர் வடிவமாக தமிழர் தரப்பு மாற்றுவதற்கான விவாதங்களை கவனம் கொள்ளவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விவாதத்தை தமிழரசுக் கட்சி ஏற்றுக்ட கொண்டதே அன்றி அதனை மேலும் விரிவாக்க முயலவில்லை. அவ்வாறே ஏனைய தரப்புக்களும் செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஆளுநர் அதிகாரம் என்பன விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களாக அமைந்திருந்தன. அதற்கான உத்தரவாதங்களை கட்டமைப்பது பற்றி உரையாடியிருக்க முடியும்.

ஏன் தென் இலங்கை 13 பற்றிய விவாதத்தையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் தற்போது முதன்மைப்படுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது. இந்த 13 வது திருத்தமும் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழான நடவடிக்கையுமே இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புததூரில் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அத்தகைய படுகொலை என்பது ஈழத்தமிழரையும் இந்தியாவையும் முழுமையாக பிரித்து வைத்தது என்பதை நிராகரித்துவிட முடியாது. இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்தை ராஜீவ் மீதான படுகொலை ஏற்படுத்தியது. அதற்கு மூலகாரணமான அமைந்தது தென் இலங்கையின் அப்போதய ஆட்சியாளரின் தந்திரமான நகர்வாகதே உள்ளது. அத்தகைய முரண்பாட்டின் நீட்சி 13 க்குள்ளால் மீளவும் தொடக்கப்பட்டுள்ளது. இது ஈழத்தமிழர் இந்திய முரண்பாட்டுக்கான களமாகவே உள்ளது. ஏற்கனவே 13 ஐ உள்வாங்குவதற்கான தமிழர் தரப்பும் அதனை முழுமையாக எதிர்க்கும் தரப்பும் ஈழதமிழரது அரசியலில் காணப்படும் மையப்புள்ளியை கருத்தில் கொண்டு இந்தியாவுடனான உறவை மேலும் சிதைக்கு முயற்சியாக நகர்வுகள் அமைந்துள்ளன. 13 திருத்தம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுமல்ல. இடைக்கால நிர்வாக கட்டமைப்புமல்ல. மாறாக இந்திய-ஈழத்தமிழர் முரண்பாட்டுக்கான கட்டமைப்பாக கடந்த காலத்தில் செயல்பட்டது போல் தற்போது இலங்கையில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கான இடைக்கால வரைபு மட்டுமே. அதாவது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டும் வரையுமான நகர்வாகவே தென் இலங்கை 13 ஐ முதன்மைப்படுத்தி வருகிறது. அதற்கான இராஜதந்திர நகர்வாகவே இலங்கை-இந்தியத் தரப்புக்கள் 13 ஐ உச்சரிக்கிறது. ஆனால் தென் இலங்கை கையாளுவது போல் தமிழ் தரப்புக்களோ கட்சிகளே கையாள முயலவில்லை என்பதை கண்டு கொள்ள முடிகிறது. தமிழ் தரப்புக்கள் ஒன்றில் சரணடைவது அல்லது முழுமையாக எதிர்ப்பது என்ற நியதிக்குள்ளேயே இயங்குகின்றன. அல்லது ஒரு தரப்பு ஆதரிக்க மறுதரப்பு எதிர்ப்பதாக அமைவதாகவே காணப்படுகிறது. முழுமையாக அரசியல் சூழலை அவதானித்து கையாளுவதாக தெரியவில்லை.

எனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரது இலங்கை விஜயம் அதிக அரசியல் மாற்றங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஈழத்தமிழரது அரசியல் கட்சிகள் தேர்தலில் முரண்பாடடைந்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினையில் ஒன்றிணைய வேண்டும் என்பதில் அவதானிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியான நெருக்கடி காலப்பகுதி தென் இலங்கை வெற்றி கொண்ட பின் தமிழர் பிரச்சினையாக கருத்தில் கொள்ளப்படாது என்பதையும் தமிழர் தரப்பு புரியவேண்டியுள்ளது. அது மட்டுமல்ல இந்தியா தமிழருக்கு ஏற்படுத்திய அழிப்புகளையும் சிதைவுகளையும் பட்டியலிடுவதும் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழரது அரசியலை அழிவுக்குள்ளாக்கியதை உரையாடுவதாலும் எந்த மாற்றமும் தமிழர் அரசியலில் ஏற்படப் போவதில்லை என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். இரண்டாம் உலக போரில் ஜப்பான் மீது அணுவாயுதங்களை வீசிய அமெரிக்காவின் ஒத்துழைப்புடனும் உதவியுடனுமே ஜப்பான பொருளாதார வல்லரசாக எழுச்சியடைந்தது என்ற அனுபவத்தை ஈழத்தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஜப்பான் இராணுவ ரீதியில் முன்னோக்கி நகர்கிறது. அணுக்குண்டை வீசிய அமெரிக்காவை மலர்வளையும் வைக்கவைத்த ஜப்பானியரின் அரசியலை ஈழத்தமிழர்கள் வகற்றுக் கொள்வதும் பின்பற்றுவதும் அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)