April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்தியப் பிரதமரது ஜப்பானிய விஜயமும் ஆசியாவின் அரசியல் பொருளாதாரமும்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் அணுகுமுறை புதிய உலகம் ஒழுங்குக்கான அரசியல் பொருளாதாரம் களத்தை கட்டமைத்து வருகிறது. அத்தகைய ஒழுங்கில் கீழைத்தேச நாடுகள் தமக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை பலப்படுத்தி வருவதோடு அதன் பின்னால் ஓர் அரசியல் அணியொன்றையும் உருவாக்கி வருகின்றது. பொருளாதாரவளர்ச்சி எதுவும் அரசியல் நலன்கள் இன்றி இயங்குவதில்லை. இதன் அடிப்படைக்குள்ளால் உலகம் பல நூற்றாண்டுகளாக பயணித்து வருகிறது. இதுவே மேற்குலகத்தின் வளர்ச்சிக்கும் கீழைத் தேசத்தின் தோல்விகளுக்கும் காரணமாக நோக்கப்படுகிறது. இதில் இந்தியாவின் சமகால அணுகுமுறை அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுடனா பொருளாதார உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை கையாள பின்பற்றும் அணுகுமுறையாகவே இந்தியாவின் சீனா, ரஷ்சிய, ஜப்பானிய நோக்கிய உறவினை புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. ஏற்கனவே இந்த நாடுகளுடன் இந்திய நெருக்கமடைந்திருந்தாலும் அதன் தனித்துவம் தற்போது மேலும் பலப்படுத்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே இந்திய பிரதமரது ஜப்பானிய விஜயம் பிரதான அங்கமாகவே தெரிகின்றது. இக்கட்டுரையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் ஏற்படுத்தவுள்ள அரசியல் பொருளாதாரம் விளைவுகளைத் தேடுவதாக அமையக்கப்படுகிறது.

இந்திய-ஜப்பானிய வரலாற்று ரீதியான உறவு கலாச்சார பரிவர்த்தனைக்குள்ளால் புரிந்து கொள்ளப்படக் கூடியது. நவீனவரலாற்று உறவானது அரசியல்,வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளுக்குள்ளால் இயங்கியலை கொண்டிருக்கின்றது. பௌத்தமத பாரம்பரியங்களை பின்பற்றுவதில் இரு நாடுகளுக்கும் இடையில் பாரம்பரியமான பரிமாணமென்று கலாச்சார ரீதியாக காணப்படுகிறது. 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமான ராஜீக உறவு ஆரம்பிக்கப்பட்டது. அக்கால பகுதியில் இருந்து சமகாலம் வரையில் இரு நாடுகளும் ஆசிய பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட பொருளாதார வர்த்தக உறவை பலமான கொண்டு பயணித்து வருகின்ற நாடுகளாக உள்ளன. 1957ஆம் ஆண்டு அன்றைய ஜப்பானிய பிரதமர் நோபுசுகே கிஷி (Nobusuke Kishi) இந்தியாவுக்கான அரச முறை பயணத்தை தொடங்கினார். 1958ஆம் ஆண்டு இரு நாட்டுக்குமான கடன் மற்றும் முதலீட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து இந்தியாவின் அரசியல்-பொருளாதார சீரமைப்பு கொள்கைக்கு பின்னர் தீவிரம் பெறத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டு ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரி (Yoshiro Mori) இந்தியாவுக்கான விஜயத்தின் போது புரிந்துணர்வு உடன்படிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டன. பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய பிரதமர் வாஜ்பாயின் மோரியும் சேர்ந்துGlobal Partnership between Japan- India எனும் பலமான உறவினை கட்டமைத்தனர். 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமி (Junichiro Koizumi) இந்திய வருகை ஜப்பானிய இந்திய ஆண்டு ரீதியான உச்சி மாநாடுகளுக்கு திட்டமிட்டது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானியப் பிரதமரும் இரு நாடுகளுக்கும் இடையில் Global and Strategic Partnership எனும் பரந்த அளவிலான உபாயங்களை நோக்கிய நட்புறவை ஆரம்பித்தனர். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அத்தகைய தந்திரோபாய உறவை மேலும் பலப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. 2015 டிசம்பரில் அன்றைய ஜப்பானியப் பிரதமரான ஷின்சே அபே (Shinzo Abe) இந்தியாவுக்கு வருகை தந்தபோது பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்திய-ஜப்பானிய உறவு பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்திதோடு Indo-Pacific and the World எனும் மூலோபாய நோக்கு நிலையைத் தொடங்கி வைத்தார். அபே இந்திய ஜப்பானிய உறவின் 2025 காண இலக்கையும் கட்டமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் இரு நாடுகளுக்குமான உச்சி மாநாடுகள் இரு நாடுகளின் தலைநகரங்களிலும் மேற்கொள்ள வழிவகுத்தது. இத்தகைய மரபுக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 29-30.08.2025 களில் ஜப்பானுக்கான விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜப்பானிய ஆட்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை என்றுமில்லாதவாறு முதன்மைப்படுத்தியிருந்தனர். இது உலக அரசியலில் அதிக இடம் பிடித்த விடயமாகியது. இந்துத்துவ மரபுக்குள்ளும் இந்திய பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள் வரவேற்பபாக அமைந்திருந்தது. ஏறக்குறைய 54,000 புலம்பெயர் இந்தியர்கள் ஜப்பானில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் சார்ந்து சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வரவேற்பும் இந்திய பிரதமருக்கு தனித்துவமானதாக இருந்தது. ஜப்பானியர்கள் ஏன் இந்திய பிரதமர் ஒருவருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார் என்பது பிரதான கல்வி அதனை ஆழமாக தேடுதல் அவசியமானது.

முதலாவது இந்திய-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவில் ஏற்பட்டுவரும் விரிசல் இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் முக்கியத்துவமானதாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா ஜனாதிபதி வரிமுறைமை உலகில் உள்ள எல்லா நாடுகளையும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் வலுவான சந்தை வாய்ப்புகளைக் கொண்ட நாடுகளை நோக்கி ஜப்பானும் தனது வர்த்தகத்தையும் பொருளாதார கட்டமைப்பையும் விரிவாக்க திட்டமிடுகிறது. ஜப்பானியர்கள் எப்போதும் தூரநோக்குடன் செயல்படும் பிரிவினராக காணப்படுகின்றனர். பாரம்பரியமாக இந்தியாவோடு ஜப்பானியர்களுக்கு இருக்கும் கலாச்சார மற்றும் பொருளாதார வர்த்தக உறவு அதற்கான வாய்ப்பினை மேலும் அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளும் ‘2 + 2’ பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சார்ந்து பயணிப்பதோடு இந்தோ-பசுபிக் மற்றும் குவாட் போன்ற பிராந்திய பாதுகாப்பு அமைப்புகளிலும் பிராந்தியங்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் கரிசனை கொண்டு செயல்படுகின்றன. இத்தகைய அம்சங்கள் இரு நாடுகளுக்குமான உறவை பலமானதென்றாக மாற்றி வருகிறது.

இரண்டாவது இந்தியாவைப் பொறுத்த வரையில் அமெரிக்காவுக்கு பதிலான பொருளாதார வர்த்தக நட்புகளை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. சீனா நீண்ட கால பகமைப்புலம் கொண்ட நாடாக இருந்தாலும் இந்திய சீன பொருளாதார வர்த்தக உறவு முக்கியமானதென்றாகவும் அதன் நீட்சியை ஜப்பானுடன் வைத்துக் கொள்வதன் மூலம் சமநிலை தன்மையை பேண முடியும் எனவும் கருதுகிறது. ஜப்பானிய ஆட்சியாளர்கள் இந்தியாவோடு கொண்டிருக்கின்ற நெருக்கமான உறவின் அடிப்படை சீன தொடர்பில் ஆரம்பித்திருந்தது. ஆனால் தற்போது அது அமெரிக்க சார்ந்த விடயத்தில் மையம் கொண்டிருக்கிறது. எனவே இங்கு இந்தியர்களின் ஜப்பான் நோக்கிய செயல்பாடு என்பது வலுவான சக்திகளை எதிர்கொள்வதற்கான உத்திகளாகவே தெரிகின்றது. ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் நேரடி முதலீட்டு திட்டம் போன்றன இரு நாடுகளுக்கும் இடையில் பாரியளவில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு அத்தகைய ஒத்துழைப்புக்கள் அதிகம் அவசியமானதாக காணப்படுகிறது. ஜப்பானின் நேரடி முதலீட்டில் உலகளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா 2024ஆம் ஆண்டு மட்டும் 43.2 பில்லியன் அமெரிக்க டொலரினை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதனை மேலும் அதிகரிப்பது அதற்கூடாக பரஸ்பரம் இரு நாடுகளும் வர்த்தக பொருளாதார அரசியல் நெருக்கத்தை சாத்தியப்படுத்துவதும் இந்தியாவின் நோக்கமாக தெரிகின்றது. ஒரு அமெரிக்காவை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்கு ஆசிய நட்புக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. அதனை நோக்கி நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் பார்க்கப்பட வேண்டும்.

மூன்றாவது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலுக்காகவும் விஸ்தரிப்புக்காகவும் போட்டித்தன்மைக்காகவும் கட்டமைக்க ப்பட்டிருந்தது. தற்போது இலகுவான செய்முறைக்குள்ளால் பயணம் செய்வதற்கு வாய்ப்பான ஒரு களத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தோ-பசுபிக் உபாயம் முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே காலத்தில் தொடக்கிவைக்கப்பட்டது. அதன் கருநிலை எண்ணம் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலேயே தொடக்கப்பட்டது. அதனை பின்னர் அமெரிக்கர்கள் அல்லது ரொனால்ட் ட்ரம்ப் கையகப்படுத்தி கட்டமைத்து வலுவான நாடுகளை ஒன்றிணைத்து சீனாவுக்கு எதிராக அணி திரட்டலொன்றை மேற்கொண்டு இருந்தார். இந்தோ-பசுபிக் உபாயம் அடிப்படையில் சீனாவுக்கு எதிரானதாக இருந்தாலும் அது தற்போது ஆசியாவுக்குள் ஒரு வலுவான கூட்டை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர்க்க முடியாமல் இந்திய-ஜப்பானிய அரசியல் உறவை பலப்படுத்துவதோடு இந்தியர்களின் அமெரிக்க எதிர்ப்புவாத அரசியல் ஜப்பானியர்களால் ஈடு செய்யப்படுகின்றது என்றொரு நிலை கொள்கிறது. இதனையே இரு நாட்டுக்குமான அரசியல் உறவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜப்பானியர்கள் ஆசிய நாட்டவர் என்ற வரைவுக்கு அப்பால் காணப்பட்ட போதும் மேற்குலகத்தின் அணுகுமுறைகளால் இரண்டு உலகப் போரிலும் போருக்கு பின்னரும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டார்கள். ஆனால் அத்தகைய மேற்குலக அறிவியலுக்கு உள்ளாலே ஜப்பானியர்களது வளர்ச்சியும் எழுச்சியும் சாத்தியமானது. இரு நாடுகளும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் பரஸ்பரம் சுமூகமான உறவை அரசியல் ரீதியில் வைத்துக் கொண்டது தமது நாடுகளின் எல்லைக்குள் மட்டுமின்றி அதற்கு வெளியேயும் அத்தகைய சுமூக உறவு வலுவான உறவை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்தியப் பிரதமரது ஜப்பானிய விஜயத்தின் விளைவுகள் இந்திய வர்த்தக மற்றும் பொருளாதார உறவில் பலமான முதலீட்டுயும் ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப பாதுகாப்பையும் இந்தியாவுக்கு வழங்க வழிவகுத்துள்ளது. அரசியல் ரீதியில் ஆசியாவுக்குள் ஒரு பலமான ஒத்துழைப்பை கட்டமைத்தாலும் இது முழுமையாகவே அமெரிக்கா மேற்குலக வடிவங்களுக்கு அல்லது ஆதிக்கங்களுக்கு நெருக்கடியானதாகவே தெரிகின்றது. அமெரிக்காவுக்கு இணையான நாடாக இந்திய-சீன உறவு இந்திய-ஜப்பானிய உறவு இல்லாத போதும் ஆசிய யுகத்தின் எழுச்சியை கட்டமைப்பதற்கு இவ்வகையான ஒத்துழைப்புக்கள் அவசியமானவையாக காணப்படுகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமான ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமான நெருக்கமான உறவு மேற்குலக நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவது தவிர்க்க முடியாத அரசியல் பொருளாதாரமாகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)