அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் நோக்கிய இந்தியாவின் அணுகுமுறையும் அதன் தோல்விகளும்!

இந்தோ -பசுபிக் கட்டமைப்பு விருத்தியில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றிய கேள்விகளும் இலங்கை -இந்திய அமெரிக்க சீன உறவு பற்றிய உரையாடல்களும் பொது வெளியில் அவதானிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் போக்கினையும் இந்தியாவை அணுகும் எந்த நகர்வையும் நிராகரிக்கும் அத்தரப்புக்கள் ஈழத்தமிழரது அரசியலின் உண்மை நிலையை மேலும் பலவீனப்படுத்துவதில் கவனம் கொள்வதாகவே தெரிகிறது. ஏறக்குறைய ஒரு கற்பனாவாதத்திற்குள்ளால் ஈழத்தமிழர்களை இயக்க வேண்டும் என தற்போதும் முயலுகிறார்கள். இந்தியாவை அணுகுவதும் கையாளுவதும் இந்தியாவிடம் அடிமை கொள்வது பேன்றதல்ல. இலங்கைத் தீவின் புவிசார் அரசியலுக்குள் ஈழத்து தமிழர்களும் ஈழத்து சிங்களவரும் இந்தியாவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவது, இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீளவும் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதற்கான உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவதுடன் அது தொடர்பிலான உரையாடல்களை மேற்கொள்ளும் நோக்குடன் நிதியமைச்சின் செயலாளரும் இந்தியா செல்லவுள்ளதாக தெரியவருகிறது. இது இந்தியாவுக்கு நிதியமைச்சரின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது விஜயமாகும். அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்ததுடன் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரது இந்தியப் பயணம் நிறைவடைந்திருந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறக்கொட பதவி ஏற்ற பின்னர் இலங்கை இந்திய உறவு புதிய பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. அதற்கான அணுகுமுறைகளை மேற்கொண்டுவரும் தென் இலங்கைத் தரப்பானது ஜெனீவா அரங்கினை இந்தியாவுக்கூடாக கையாள அதிகம் முனைவதனைக் காணமுடிகிறது. அது மட்டுமன்றி ஈழத்தமிழர் மீதான அரசியலையும் அதிகாரப் பகிர்வையும் தனது எல்லைக்குள் வைத்து நகர்த்தும் உத்தரவாதத்தை பெறுவதில் கவனம் கொள்ளும் முனைப்பையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் இந்திய இராஜதந்திரிகளுடன் மெய்நிகர் சந்திப்பில் உரையாடிய போதே தெரிந்திருந்தது. இந்தியாவை திருப்திப்படுத்துவதில் இலங்கை ஆட்சியாளரின் அணுகுமுறை முதன்மையானதாகவே அமைந்துள்ளது. அண்மைக்காலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை பேணவும் எத்தகைய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியப்படுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கதாகும். அதாவது இந்தியாவுக்கூடாக உலகத்தைக் கையாள தென்இலங்கை ஆட்சியாளர்கள் மீண்டும் ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாவது, இலங்கைத் தீவில் நிலவும் நிதி நெருக்கடியை குறைப்பதற்கு உதவும் நோக்கில் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்  மெய்நிகர் மாகாநாட்டில் உரையாடும் போது தெரிவித்தார். அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கிய நிதி மற்றும் பொருளாதார உதவிகளையும் பட்டியலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பொருளாதார உத்தியை முதன்மைக்காரணியாக கொள்ளத் திட்டமிட்டுள்ளது. சீனாவிடமிருந்து இலங்கைத் தீவை பாதுகாப்பதே இந்தியாவின் பிரதான நோக்கமாகும். அதாவது தனது அதிகாரத்திற்குள் இலங்கைத் தீவு காணப்பட வேண்டும் அதற்காக எதனையும் மேற்கொள்ள இந்தியா முனையும். ஆனால் இந்தியாவின் நலனே முதன்மையே அடிப்படையானது. இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கமடைந்துள்ள இலங்கைத் தீவு தற்போதைய நெருக்கடியை கையாள இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதனையே தற்போது இலங்கைத் தரப்பு மேற்கொள்கிறது என்பது இந்தியத் தரப்பு உணராது செயல்படுவதாக கூற முடியாது. மாறாக அத்தகைய அணுகுமுறையை முற்றாக பலவீனப்படுத்த முடியாது விட்டாலும் நலன்கள் அடிப்படையில் இலங்கைத் தீவை இந்தியா பலப்படுத்திக் கொள்ளலாம் எனக்கருதுகிறது. ஆனால் அதனையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் தோற்கடித்து நெருக்கடியை கையாண்டு சீனாவுடனான உறவைப் பலப்படுத்திவிடுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு. சுதந்திர இலங்கையில் இந்தியா அத்தகைய தோல்வியையே இலங்கைத் தீவிடம் அடைந்துவருகிறது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமது உத்திகளை முதன்மைப்படுத்திக் கொள்வதையும் அதனூடாக நெருக்கடியை கையாளுவதிலும் கைதேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இதில் ஓரளவு வெற்றியை இந்தியத் தரப்பு எட்டினாலும் ஈழத்தமிழர்கள் முழுமையான தோல்வியையே அடைந்து வருகின்றனர். அரசுகள் என்ற அடிப்படையில் இருநாட்டுக்குமான உறவு ஏற்றமும் இறக்கமுமாக அமைந்தாலும் ஈழத்தமிழர்கள் முழுமையான தோல்விகளையே சந்தித்து வருகின்றனர். ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிர்த்த போதும் தோற்றார்கள். இந்தியாவை விட்டு மேற்கை அணுகிய போதும் தோற்றார்கள். என்பது தவிர்க்க முடியாத பதிவாக உள்ளது. அவ்வப்போது எழுச்சிகரமானதாக அமைந்தாலும் இறுதியிலும் இறுதியாக தோற்றுறள்ளனர்.

மூன்றாவது, ஈழத்தமிழர்கள் தமது அரசியலை இந்தியாவுடனேயே ஆரம்பித்தார்கள். அதற்கு காரணம் ஈழத்துச் சிங்களவருக்கு இருந்தது போல் ஈழத்திழருக்கு உரியதாகக் காணப்பட்ட புவிசார் அரசியல் இருப்பு மட்டுமேயாகும். அதனை எதிர்கொள்வதில் ஈழத்து தமிழரைவிட சிங்களவர் முந்திக் கொண்டார்கள் என்பதை காலம் காலமாக அவதானிக்க முடிகிறது. ஆனால் அவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதமே அடிப்படையானது. ஆனால் அத்தகைய எதிர்ப்புவாதத்தை இந்தியாவுக்கு வெளிப்படுத்தாது இராஜதந்திரத்திற்கூடாக நகர்த்துகின்றனர். அதில் அவர்களது உத்தி மேலானதாகவே தெரிகிறது. அத்தகைய உத்திக்குள் இந்திய இராஜதந்திரிகளும் நிர்வாகிகளும் தோற்றுப் போகும் நிலையைக் காணமுடிகிறது. அந்த விதத்தில் இலங்கை இராஜதந்திரம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஈழத்தமிழரோ அவ்வகையான அணுகுமுறைக்குள் உணர்ச்சிகளுக்கு முதன்மை கொடுப்பதுடன் தீவிர எதிர்ப்புவாதத்தை முன்னகர்த்தி அழிவுகளையும் உறவுகளில் ஒட்டமுடியாத நிலையையும் ஏற்படுத்திவிடுவதைக் காணமுடிகிறது. அதுவே ஈழத்தமிழரது தோல்விகளுக்கான காரணமாக மாறியுள்ளது.

நான்காவது, ஈழத்தமிழரின் தலைமைகள் இரு வகையானவர்கள். ஒன்று நூறுவீதம் அடிமையாவது. அல்லது நூறுவீதம் எதிரியாவது. இதில் மிதவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கவேண்டிய நிலையே காணப்படுகிறது. இந்தியாவின் படையெடுப்பக்கு பின்னர் இந்தியா பற்றி ஈழத்தமிழர் கொண்டிருந்த நிலையும் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இந்திய இராஜதந்திரிகளும் நிர்வாகிகளும் கொண்டிருக்கும் மனோநிலை வேறு வேறானது. ஒன்றுக்கு ஒன்று எதிரானது. ஆனால் இருதரப்புமே சமதூரத்தில் தமது உறவை வைத்துக்கொள்ளும் புவிசார் அரசியலில் தான் உள்ளனர். அதனை அணுகுவதற்கான சூழலையே உருவாக்க இருதரப்பும் முன்வராத போக்கை கவனத்தில் கொள்ள வேண்டும். உலக அரசியல் மாற்றங்களும் புவிசார் அரசியல் மாற்றங்களும் இவ்விரு தரப்பையும் ஒன்றுசேர விடாது தென்இலங்கைத் தரப்பு சரியான உத்திகளுடன் கையாளுகையை திட்டமிட்டு நகர்த்துகிறது.

எனவே, ஈழத்தமிழரது இந்தியா பொறுத்த அணுகுமுறை மட்டுமல்ல இந்தியா பொறுத்த அணுகுமுறையும் மாற்றமடைய வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை தென் இலங்கை இராஜதந்திரிகளும் அவர்களின் வழிகாட்டலுக்குட்பட்ட தலைவர்களும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை மறுக்க முடியாத பதிவாகவே உள்ளது. ஆனால் இந்தியர்களும் சீனார்களும் அமெரிக்கர்களும் இலங்கைத் தீவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அதனைக் கையாளவும் கூட்டாக செயல்படுவார்கள். அதில் இந்தோ-பசுபிக் உபாயத்தையும் சுற்று மற்றும் பாதை முன்முயற்சியையும் ஒரே உறைக்குள் இலங்கை ஆட்சியாளர்கள் வைத்துக் கொள்ளும் திராணியுடையவார்களாக காணப்படுகின்றனர். அதனை அத்தகைய தரப்புக்களும் விரும்புகின்றனர். ரஷ்சியாவின் உக்ரையின் மீதான தாக்குதல் எழுச்சியானது சீனாவின் கூட்டைப் பலப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுவலமாக அமெரிக்கத் தரப்பினை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனதையும் அவதானிக்க முடிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)