அரசியல் கட்டுரைகள்

ஜெனீவாவில் இந்தியாவின் நடுநிலமையும் ஈழத்தமிழர் அரசியலும்!

இந்தியாவின் தென்னாசியப் பிராந்தியக் கொள்கையானது காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் ஆட்சியாளர்களால் மாற்றமடைந்து செல்கிறது. சுதந்திர இந்தியா நேரு-கிஷ்னமேனன் – பணிக்கர் கூட்டினால் அணிசேராமை என்ற கொள்கையை வடிவமைத்தது. அது பிராந்தியத்தைக் கடந்து ஆசிய ஆபிரிக்க மற்றும் இலத்தீனமரிக்க கண்டங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அது இந்திராகாந்தி காலத்தில் பிராந்திய மேலாதிக்க கொள்கையாக அமைந்தது. அதாவது பெரிய சகோதரர் (Big Brother) கொள்கையானது. அதன் தொடர்ச்சியை ராஜீவ் காந்தியும் கடைப்பிடிக்க முயன்ற போதும் முழுமையான தோல்வியை எதிர்கொண்டது. தற்போது ஆட்சியிலுள்ள நரரேந்திர மோடி அரசாங்கம் பிராந்திய நாடுகளுக்கு பாதுகாப்பில் முதலிடம் எனும் சகார் திட்டத்தை முன்மொழிந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படைக்குள்ளேயே இலங்கை அரசாங்கத்துடனான உறவை முதன்மைப்படுத்தும் இந்தியா ஜெனீவாவிலும் இலங்கைக்கான முதலிடத்தை பாதுகாத்துவருகிறது. இக்கட்டுரையும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலமை வகித்தமையின் அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.

06.10.2022 அன்று ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 51/1 தீர்மானம் அமெரிக்கா பிரித்தானியா உட்பட இருபது நாடுகளது ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக ஏழு நாடுகளும் நடுநிலைமையில் இருபது நாடுகளும் காணப்பட்டன. அதில் இந்தியா நடுநிலை வகித்திருந்தது. இன்னோர் வகையில் கூறுவதாயின் இந்தியா வாக்களிக்காது புறக்கணித்தது எனலால். ஏறக்குறைய 2012 முதல் 2022 வரையான காலத்தில் இந்தியா ஏழுதடவை வாக்களிக்காது நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டு வாக்களிப்பினை புறக்கணித்துள்ளது. இது இந்தியா கடைப்பிடித்துவரும் பொதுவான கொள்கையாகவே காணப்படுகிறது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் இந்தியா நடுநிலை எனும் தத்துவத்தை (Philosophy) பின்பவற்றி வருவதைக் காணமுடிகிறது. அதற்கான அடிப்படையை இந்தியாவின் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தென்றாகவே உள்ளது. அகிம்சை, நடுநிலை, சமாதானம் போன்றவற்றின் தோற்றுவாயாக சுதந்திரப் போராட்ட காலம் அமைந்திருந்தது. அதன் நீட்சியே அணிசேராமை என்ற கொள்கையாகும். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிபுக்கு வந்த பின்பும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு தசாப்தத்தை கடந்த போதும் மகாத்மாவின் கொள்கைகளை இந்தியா கைவிடாத நிலை காணப்படுகிறது.

ஆனால் அத்தகைய நடுநிலமைத் தத்துவம் அரசியலிலும் ஏனைய துறைகளிலும் பேசிக்கொள்ளலாம். கடைப்பிடிப்பது கடினமானது மட்டுமல்ல. அத்தகைய தத்தும் என்பதே சாத்தியமற்றது. போலியானது. அதிலும் அரசியலில் முற்றாகவே சாத்தியமற்றது. ஒருபக்கமும் சாரதிருப்பதென்பது இரு தரப்பையும் திருப்திப்படுத்துவதாக கொள்ளப்பட்டாலும் மறுபக்கத்தில் ஏதாவது ஒரு தரப்பை தோற்கடிப்பதற்கானதாகவே தெரிகிறது. ஜெனீவா வாக்கெடுப்பில் 20 நாடுகள் வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஏதோ ஒரு தரப்பை வெளிப்படையாக திருப்திப்படுத்தவும் மற்றய தரப்பை மறைமுகமாக திருப்திப்படுத்துவதற்காகவுமே. அப்படியாயின் இந்தியா எந்தத் தரப்பை முதலில் திருப்திப்படுத்தியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முதலாவது, ரஷ்சிய -உக்ரையின் போருக்குப் பின்னர் அமெரிக்கா உட்பட மேற்குடனான முரண்பாடு ஒன்றை இந்தியா தவிர்க்க முடியாது எதிர் நோக்கிவருகிறது. மேற்குலகம் பலதடவை முயன்ற போதும் இந்தியா நடுநிலை என்ற அடிப்படையில் ரஷ்சியாவை ஆதரித்துவருகிறது. அவ்வப்போது உக்ரையின் பக்கமுள்ள நியாயப்பாட்டையும் வெளிப்படுத்த தவறாதுள்ளது. உக்ரையின் பக்கம் இந்தியா செயல்படுவதென்பது அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் திருப்திப்படுத்துவதாகவே தெரிகிறது. நடுநிலமை என்ற கொள்கையை வரிந்து கொண்டு செயல்படுவதென்பது இந்தியாவின் நீண்டகாலக் கொள்கையாகவும் அதன்வழி தீர்மானங்களை பலவீனப்படுத்துவதையும் காணலாம். அதனையே இலங்கை எதிரான தீர்மானம் வரும்போதெல்லாம் இந்தியா நடுநிலை என்ற கொள்கையை முன்வைப்பதன் மூலம் தீர்மானம் கொண்டுவரும் சக்திகளை திருப்திப்படுத்துகிறது. அது இந்தியாவின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கும் உபாயமாகவே தெரிகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்கா பிரித்தனியா போன்ற மேற்குலகத்துடன் உறவை வைத்துள்ள இந்தியா அதனை பேணவும் அதன் மூலம் தனது நலன்களை தக்கவைத்துக் கொள்ளவும் முயன்றதன் பிரதிபலிப்பாகவே நடுநிலமைக் கொள்கை பின்பற்றியுள்ளது.

இரண்டாவது, இலங்கைத் தீவு அயல்நாடாகவும் நீண்ட காலமாக இந்தியாவின் நலன்களுக்கு முரணான கொள்கையுடையதாகவும் உள்ளது என்பது இந்தியத் தரப்புக்கு தெரியாததென்றல்ல. பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடி இலங்கைக்கு ஏற்படும்போதெல்லாம் உதவுவதும் பாதுகாப்பதும் இந்தியாவாக இருந்தாலும் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாபக்கம் இருக்கவில்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதென்றல்ல. ஆனால் அதற்காக இந்தியா இலங்கைத் தீவை விட்டுவிட முடியாதுள்ளது. இலங்கை ஆட்சியாளருடன் தனிப்பட்ட நட்பும் உறவும் அதிகமுள்ளதுடன் புவிசார் அரசியலாக நெருக்கமுள்ள தீவாக இலங்கை உள்ளது. ஈழத்தமிழர் கருதுவது போல் இந்தியா ஈழத்தமிழரை தனியாகவும் ஈழத்துச் சிங்களவரை தனியாகவும் கருதவில்லை. புதுடில்லி இலங்கையை கையாளுவதில் வாய்ப்புக்களை நிர்ணயித்துவருகிறது. அதற்காக தென் இலங்கையிலுள்ள ஆட்சியாளருடன் உறவு கொள்ளுதல் என்ற கொள்கைக்குள்ளேயே இந்தியாவின் அணுகுமுறை அமைந்துள்ளது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் இந்திய நலன்களுடன் முரண்படும் போது ஏனைய தேசியங்களை அரவணைப்பதும் அதனூடாக தென் இலங்கை ஆட்சியாளரை மிரண்டுவதும் இயல்பான அரசியல் உபாயமாகவுள்ளதை இந்தியா ஈழத்தமிழரை அரவணைப்பதன் வாயிலாக கையாண்டுவருகிறது. புதுடில்லிக்கு ஈழத்தமிழர் ஒர் அரசியல் சக்தியே தவிர அரச உறவுக்குரிய சக்தியல்ல. அதனால் நடுநிலை என்ற கொள்கையின்கீழ் மேற்குலகத்தையும் ஈழத்தமிழரையும் கையாளும் உத்தியை நிறைவேற்றியுள்ளது. எதிர்காலத்திலும் நிறைவேற்றும் இயல்பைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

மூன்றாவது, சமகாலத்தில் இந்தியா விரும்பாத இலங்கை ஜனாதிபதியினது நடவடிக்கைகள் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் இலங்கை -சீன நெருக்கமும் இந்தியா ஜெனீவாவில் நிச்சயமாக இலங்கையை எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்தியா ஏன் நடுநிலை வகித்தது. அத்தகைய நடுநிலமை தொடர்பில் இலங்கைக்கு ஒரு செய்தியை கொடுத்துள்ளது என வாதிப்பவரும் உண்டு. அத்தகைய செய்தியை கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு சொல்லிவருகிறது. ஆனால் அ;த்தகைய செய்தி எதற்கும் இலங்கை செவிசாய்ப்பதாக தெரியவில்லை. இலங்கை தனது பயணத்தில் தெளிவாக செயல்படுகிறது. ஒரு போதும் இந்தியாவுக்காக இலங்கை ஈழத்தமிழர் விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறது. அதில் ஆட்சியாளர் கட்சி அரசியல் என்ற எந்த வேறுபாடுமின்றி செயல்பட்டுவருகிறதைக் காணமுடிகிறது. ஈழத்தமிழரை எதிர்ப்பதில் தேசியமாக தென் இலங்கையர் செயல்படுகின்றனர். அப்படியாயின் இந்தியாவின் நடுநிலமை எந்தவிதத்திலும் இலங்கை ஆட்சியாளரை மாற்றத்திற்கு உள்ளாக்கவில்லையாயின் அதன் விளைவு எதுவாக அமையலாம். அதன் நேரடி புரிதல் பயனற்ற நடுநிலமை இலங்கைக்கு ஆதரவானதாக இல்லாது விட்டாலும் எந்த மாற்றத்தையும் தரக்கூடியதல்ல. அதுவே நடுநிலையின் உண்மையான தன்மை. அதனாலேயே நடுநிலமை எந்தவித கொள்கையாகவும் கருதுவதில்லை. அது ஒரு போதும் தத்துவார்த்த வெளிப்பாட்டைத் தரக்கூடியதல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த வலுவும் காணாமல் போவதில் நடுநிலமை பிரதான விளைபொருளாக உள்ளது. இந்தியாவின் மேல்நிலை வர்க்கம் தனது நலனையும் இயலாமையையும் மேலாதிக்கத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கிக் கொண்டதே நடுநிலைமை எனும் கொள்கையாகும். அது ஒட்டுமொத்த இந்தியாவையும் வலுவற்றதாக்கியுள்ளது. காந்தியின் படுகொலைக்கு நியாயம் சொன்ன கேட்சேயினது எண்ணங்களை பாரதீய ஜனதாக் கட்சியாலும் கூட இந்தியாவின் நடுநிலமைக்குள் இருந்து மீளமுடியவில்லை என்பதே பிரதான புரிதலாகும்.

நான்காவது, இந்தியாவின் நடுநிலமைக் கொள்கை எனபதன் மூலம் மனித உரிமை சார்ந்து உலகத்தில் பின்பற்றப்படும் கொள்கைகளின் இந்தியாவின் பக்கம் எதுவென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தனது நாட்டுக்குள் மட்டுமல்ல பிராந்திய நாடுகளிலும் மனித உரிமை மீறல்களையும் ஆதிக்கத்தையும் கடந்த காலங்களில் இந்தியா மேற்கொண்டுள்ளது என்ற விமர்சனம் தவிர்க்க முடியாது பாதுகாத்துள்ளதாகவே தெரிகிறது. அதனால் ரஷ்சியாவையும் சீனாவையும் மறைமுகமாக ஆதரித்துள்ளதாகவே நோக்கப்படுவது ஒன்றும் தவறானதாக தெரியவில்லை.

எனவே இந்தியாவின் நடுநிலமைக்குள்ளால் ஈழத்தமிழர் விளங்கிக் கொள்ள வேண்டியவற்றை அவதானிப்பது அவசியமானது. அத்தகைய நடுநிலமை ஈழத்தமிழருக்கு ஒரு சிறு வாய்ப்பினைத் தந்தாலும் அதன் நடைமுறை முழுவதும் தென் இலங்கையின் உறுப்பாட்டுக்கானதாகவும் மீள எழும் சிங்கள பெரும்பான்மை தேசியத்திற்கானதாகவுமே அமையவாய்ப்புள்ளது. ஈழத்மதிழர் எதிர்ப்பு என்பது இந்தியாவுக்கான எதிர்ப்பு என்பதே யதார்த்தமானது. அத்தகைய வரைபுக்குள் அதிக மாற்றத்தை இந்திய நடுநிலமை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அப்படியாயின் அது இலங்கை ஆட்சியாளருக்கும் அதிகாரவர்க்கத்திற்கு அதிக இலாபத்தைக் கொடுக்கக் கூடியதாகவே தெரிகிறது. இந்தியாவின் கொள்கையாக நடுநிமை காணப்பட்டாலும் அதனால் இந்தியாயும் ஈழத்தமிழரையும் விட தென் இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் அதிக பயனைக்கொடுத்துள்ளது.

-போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)